“நாவலில் காலம் ஒரு பாத்திரம்” – லோரி மோர் நேர்முகத்தின் சில பகுதிகள்

Anagrams, Who Will Run the Frog Hospital?, A Gate at the Stairs என்று மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார் லோரி மோர். இவரது சிறுகதைகள் Self Help, Like Life, Birds of America, Bark என்று நான்கு தொகுப்புகளாக வெளியிடப்பட்டிருகின்றன. இவை தவிர புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி பற்றி ந்யூ யார்க் ரிவ்யூ ஆஃப் புக்ஸில் இவர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். தற்போது நாஷ்வில்லில் உள்ள வான்டர்பில்ட் யுனிவர்ஸிட்டியில் புனைவெழுத்துக் கலை கற்பிக்கிறார்.

யுவர் ஹிட்டன் செல்ஃப் என்ற தளத்தில் பதிப்பிக்கப்பட்ட நேர்முகத்தின் சில பகுதிகள் இங்கு தமிழாக்கம் செய்து அளிக்கப்படுகின்றன. நேர்முகம் கண்டவர் – டீர்ட்ரி

நீங்கள் இந்தக் கதைகளை எழுதுவதற்கான உந்துதல் என்ன?

எனக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. உண்மையில் இது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி வந்தன. நபகோவ் கதையைப் பொருத்தவரை, மீண்டும் “Signs and Symbols” வாசித்தேன். ஆசிரியையாக ஒவ்வொரு மறுவருடமும் நான் அதைப் படித்துக் கொண்டிருக்கிறேன் போலிருக்கிறது. இப்போது திடீரென்று நான் அதில் வெவ்வேறு பல விஷயங்களை கவனித்தேன். அதைத் தொடர்ந்து என் மனதில் ஒரு கதை நிழலாடத் துவங்கிற்று. ரே கார்வார் கதைக்கு நாதன் இங்க்லாண்டர் இதைச் செய்தது எனக்கு உந்துதல் அளித்திருக்கலாம். கார்வர் கதைக்கு நெருக்கமான நிழலாக இல்லாத ஒரு கதையை அவர் எழுதினார். நான் எந்தக் கதையைச் சொல்கிறேன் என்று தெரிகிறதா?

“What We Talk About When We Talk About Anne Frank” என்று ஒரு கதை அவர் எழுதினார். அருமையான கதை அது. எனக்கு மிகவும் பிடித்த கதை. அதில் கார்வரின் மொழிநடையைக் கொஞ்சம் பயன்படுத்தியிருந்தார், அதை வாசிப்பது பரவசப்படுத்தும் ஓர் அனுபவம். கார்வ்ர் கதையில் உள்ள ஒரு சூழலை எடுத்துக் கொள்கிறார். தம்பதியர் டின்னருக்கு சந்திக்கின்றனர். சில இடங்களில் அவர் கார்வரின் நடையைக் கண்ணில் காட்டுகிறார், ஆனால் மற்றபடி அவர் தனது கதையைதான் சொல்கிறார்- இது வேறு கதை.

நான் நபகோவ் கதைக்கு மிகவும் நெருங்கித் தொடரும் கதையை எழுதியிருக்கிறேன். இதில் அவர்கள் மகனைப் பார்க்கப் போகிறார்கள், நபகோவ் கதையில் அதைச் செய்வதில்லை. என் கதையில் தம்பதியர் மணமாகாதவர்கள். ஆனால் நபகோவ் கதையைப் போன்ற அதே கதைதான் என்னுடையதும். இதெல்லாம் சரியா என்றுகூட எனக்கு சந்தேகமிருந்தது. இப்படியெல்லாம் ஒருத்தர் செய்யலாமா? தெரியவில்லை. நாதன் ஒரு வகையில் இதைச் செய்தார், நான் மூலக் கதைக்கு மிகமிக நெருக்கமாகச் செய்தேன், எனக்கு அது சரியா என்று தெரியவில்லை. அப்புறம், சரி விடு இதையெல்லாம் உலகம் தீர்மானித்துக் கொள்ளட்டும், என்று நினைத்து விட்டுவிட்டேன்.

நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள் என்று சொல்ல முடியுமா? நீங்கள் பாடம் வேறு எடுக்கிறீர்கள். எழுதுவதற்கு எவ்வளவு நேரம் உங்களுக்குக் கிடைக்கிறது? எழுதுவதற்கான விஷயம் எப்படி கிடைக்கிறது? குறிப்பெடுத்து வைத்துக் கொள்வதுண்டா?

ஆமாம், குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளும் பழக்கம் உண்டு. அதை கோப்புகளில் தொகுத்து வைத்துக் கொள்வதும் உண்டு. என் மேஜையிலேயே நிறைய குறிப்புகள் இருக்கும். இப்போது எனக்கு மேஜை என்று எதுவும் இல்லை. வாடகைக்கு ஒரு இடத்தில் இருக்கிறேன். இங்கு டைனிங் ரூம் டேபிளில்தான் எழுதுறேன். அது தவிர பாடம் நடத்துவதும் நேரம் எடுத்துக் கொள்கிறது. மாடிசனில் எனக்கு ஒரு அறை இருக்கிறது, அங்கு எனக்கு என்று ஒரு மேஜை இருக்கிறது. அது எழுதுவதற்கு மட்டும்தான்.

நாஷ்வில்லில் புதிதாய் ஒரு இடம் வாங்கியிருக்கிறேன், அங்கு குடிபுகக்கூட இதுவரை நேரம் கிடைக்கவில்லை. அந்த வீட்டில் எதுவும் நிறைய இல்லாமல் காலியாகதான் இருக்கிறது. எனவே, இதுதான் நமக்குச் சரி என்று நினைத்தேன். திரையில் எழுத வேண்டியதுதான்! நாஷ்வில்லில் ஏதாவது வாங்கப் போகும்போது வழியில் பர்னிச்சர் கடை எதுவாவது தென்பட்டால் உள்ளே போய் அங்கிருக்கும் மேஜைகளை ஒரு நோட்டம் விடுவதுண்டு. அங்கு ஏதாவது என்னை ஈர்க்கிறதா என்று பார்ப்பேன், ஆனால் இதுவரை எதுவும் என்னை வசீகரித்தது கிடையாது. கிடைப்பது இருக்கட்டும் என்றுதான் இப்போதைக்கு இருக்கிறது.

நான் குறிப்பெடுத்துக் கொள்ளாத வாரம் என்று ஒன்றே இருக்காது. ஆனால் நான் ஒரு பக்கம்கூட எழுதாமல் ஒரு வாரம் போயிருக்கலாம். அது நல்லதில்லை. புத்தகம் விற்க ஊர் ஊராகச் சுற்றும்போது நம்மால் சுத்தமாக வேலை செய்ய முடியாது. சத்தியமாக அந்த வேலைக்காக நான் இங்கு வரவில்லை.

எனக்கு ஒரு எழுத்தாள நண்பர் இருக்கிறார். அவரைப் புகைப்படம் எடுக்கவேண்டி வரும்போது, அவர் படம் எடுப்பவரிடம் இப்படிச் சொல்வதுண்டு – “எழுதாதபோது நான் பிணம். எனவே என்னைப் படம் எடுக்கும்போது நீ பிணத்தைப் படம் எடுத்துக் கொண்டிருக்கிறாய்’. வந்தவர் சீக்கிரம் போய் விடுவார்!

ஆனால் எந்தக் குறுக்கீடும் இல்லாமல் நீண்ட நேரம் எழுதுவது? அப்படியும் இருந்ததுண்டு. அது பற்றி மங்கலாக நினைவிருக்கிறது. மீண்டும் அது போன்று நேர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் இப்படித்தான் என்று நிலையாக எதுவும் கிடையாது. காரணம், அளவுக்கு அதிகமாகவே குறுக்கீடுகள் இருக்கின்றன. திட்டமிட்ட வாழ்க்கை என்றே இல்லாமல் போய் விட்டது.

ஒரு விஷயத்தை எழுதலாம் என்று நீங்கள் யோசிக்க ஆரம்பிக்கும்போது எது அதை ஒரு நாவலாகவோ சிறுகதையாகவோ ஆக்குகிறது?

அடிப்படையில் நாவல் ஒரு ஸ்டீரியோஃபோனிக் விஷயமாக உள்ளது என்று நினைக்கிறேன். இப்போது ஒரு நாவலைப் பற்றி நான் சொல்வது எல்லாமும் ஆலிஸ் மன்ரோ கதைக்கும் பொருத்தமாக இருக்கப் போகிறது!

காலத்தைப் பற்றியதே நாவல் என்று நினைக்கிறேன். நாவலில் காலம் நிஜமான ஒரு பாத்திரம். காலத்தின் ஆற்றலைச் செலவழிக்க அதில் உங்களுக்கு இடம் இருக்க வேண்டும். காலம் ஒரு பாத்திரமாக இயங்குவதால்தான் நீங்கள் இன்னும் நீண்ட ஒரு வடிவத்தில் வேலை செய்கிறீர்கள். இதில் ஸ்டீரியோஃபோனிக் அம்சம் இருப்பதால் வெவ்வேறு மாறுபட்ட பார்வைகளில் உங்களால் கதை சொல்ல முடியும். வெவ்வேறு காலங்களில் இயங்க முடியும். இப்படிச் செய்து அந்தப் பகுதிகளை ஒன்றுடனொன்று பேசிக்கொள்ளச் செய்ய முடியும்.

ஆனால் சிறுகதைகள் மிகவும் குறுகியவையாக இருப்பதால் அது இதற்கெல்லாம் இடம் கொடுக்காது, அதில் இதையெல்லாம் செய்தால் தாங்காது. அது தவிர, நாவல் ஒரு உலகை விவரிக்க விரும்புகிறது என்று நான் நினைக்கிறேன். எனவே அது உலகை மீண்டும் படைக்க விரும்புவதால் அதைச் செய்வதற்கான இடம் அதற்குத் தேவைப்படுகிறது.

வாசகர்களுக்கு ஓரளவு ஏற்கனவே பழக்கமான உலகத்தில் இருந்து பேசுவதற்கு சிறுகதைகள் பொருத்தமானவை என்று நினைக்கிறேன். புதிய உலகுக்குத் தேவையான களத்தை உருவாக்கி வெளிப்படுத்துவதற்கான அவகாசம் சிறுகதைக்குக் கிடையாது. எனவே சமகால வாழ்க்கையை விவரிக்கும் கதைகளுக்கு சிறுகதை சிறந்த வடிவமாக இருக்கிறது.

சிறுகதையை வடிவம் என்றுகூடச் சொல்லக்கூடாது, ழானர் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், சிறுகதைக்கு என்று ஒன்றும் அதற்கென்ற தனி வடிவம் கிடையாது. நாவலை விட குறுகியதாக இருக்கிறது என்று மட்டும்தான் அதன் வடிவத்தைப் பற்றிச் சொல்ல முடியும்.

வரலாற்றுப் புனைவைச் சிறுகதைகளில் செய்வது இன்னும் கடினம். இப்படித்தான் இருக்கும் என்று ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட உலகைத் தவிர வேறொரு உலகைச் சிறுகதைகளில் வெளிப்படுத்தி அங்கிருந்து கதையை மேலே தள்ளிச் செல்வது சிரமமான விஷயம். உங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு உலகைக் கண்டு, உருவாக்கும் அளவுக்கு நேரம் இருந்தால் அதை ஒரு நாவலில் செய்வதுதான் சரியாக இருக்கும்.

நேர்முகத்தை முழுமையாக வாசிக்க: Your Hidden Self http://www.yourhiddenshelf.com/2014/03/26/lorrie-moore-interview/

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.