அதிகாரத்தின் ஆடுகளமாகும் உறவுகள்

– அஜய் ஆர். – 

அதிகாரம் என்பது நாட்டின் தலைவராகவோ, அல்லது வேறு உயர் பதவியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்கையை மாற்றும் சக்தியோடு இருப்பதோ, ஒரு இனக் குழு மற்றொன்றின் மீது ஆதிக்கம் செலுத்துவதோ மட்டும்தான் என்றில்லை. ‘சாதாரண மனிதர்களான’ நாம், நம் அன்றாட வாழ்க்கையில், நம்மையறியாமலேயே சக மனிதர் மீது அதிகாரம் செலுத்துபவராக இருக்கிறோம். பிள்ளைகளின் நன்மைக்காக என்று சொல்லி, படிப்பு முதல் திருமணம் வரை தங்களின் ஆசைகளை தங்கள் குழந்தைகள் மீது திணிக்கும் பெற்றோர், மனைவியின் உடை, பேச்சு, வேலைக்கு செல்லும் அவள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் கணவன், தன் உயரதிகாரியின் அதிகாரத்திற்கு கூழை கும்பிடு போட்டு, அந்தக் கோபத்தை தனக்கு கீழ் வேலை செய்பவர்கள் மீது காட்டுபவர் என அதிகாரம் எல்லா உறவுகளிலும் பரவி உள்ளது.

ஜாய்ஸின் ‘A Little Cloud’ சிறுகதையில் வரும் சாண்ட்லர் ‘when he thought of life became sad and melancholy’ என்று நினைக்கும், அதிர்ந்து பேசாத, தன் மனைவிக்கு பரிசு வாங்க கடைக்கு சென்று, அங்குள்ள பெண்களிடம் பேசுவதற்கே மிகவும் கூச்சப்படும் ஒரு கவிஞன். தன் பால்ய நண்பனை நீண்ட நாள் கழித்து சந்திக்கும் அவன், ஒரே மாதிரி சென்றுகொண்டிருக்கும் தன் வாழ்க்கையையும், நண்பனின் சாகசம் நிறைந்த வாழ்க்கையையும் (என்று சாண்ட்லர் நம்புவதை) ஒப்பிட்டு சோர்வடைகிறான். வீட்டிற்கு சென்ற பின், மனைவி வெளியே செல்ல வேண்டியுள்ளதால், பைரனின் கவிதையை படித்துக்கொண்டே குழந்தையை தாலாட்டுகிறான். குழந்தை அதிகமாக அழ ஆரம்பிக்க, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து அதனைப் பார்த்து கத்துகிறான், அடுத்த நொடியே அதற்காக வெட்கி, குழந்தையை சமாதானம் செய்ய முயல்கிறான். சாதாரண சம்பவம் தான், இருந்தும் கவி மனம் கொண்ட ஒருவன், தன் மனைவி மீதோ, நண்பன் மீதோ காட்ட முடியாத தன் இயலாமையின் வெறுப்பை குழந்தை மேல் காண்பிக்கத தூண்டுவது, குழந்தை தனக்கு அடங்கிய ஒன்று என்ற எண்ணம் தானே?

ஜாய்ஸின் மற்றொரு சிறுகதையான ‘Counterparts’இல் வரும் ஃபாரிங்க்டன் (Farrington), கதை நடக்கும் நாளன்று அலுவகத்தில் மேலதிகாரியுடன் சண்டை போடுகிறார், அவர் வேலைக்கே ஆபத்து வருகிறது. வெறுப்படைந்து குடிப்பதற்காக கைகடிகாரத்தை அடகு வைக்கிறார், மதுபான விடுதியில் தன்னை விட வயதில் இளையவனிடம் ‘பலம் பார்க்கும் போட்டியில்’ தோற்கிறார். இன்று எந்த இடத்திலும் அவருடைய அதிகாரம் செல்லுபடியாவதில்லை. வீட்டிற்கு வரும் அவர், தன் இயலாமையின் வடிகாலாக தன் மகனை அடிப்பதோடு கதை முடிகிறது. ஒரு ஆண் சமூகத்தில்/ உத்தியோகத்தில் எந்த நிலையில் இருந்தாலும், வீட்டைப் பொருத்தவரை அவனே ராஜாவாக இருக்கிறான், பல நேரங்களில் சர்வாதிகாரி போல் நடந்தும் கொள்கிறான்.

இப்படி யார் மீதும் காட்ட முடியாத கோபத்தை, தங்களை விட எளியவர் மீது காட்டுவதென்பது ஆண்/ பெண் இருவருக்குமே பொருந்தும் என்றாலும் ஆணிற்கு அதற்கான வெளிகள் அதிகம் உள்ளன. இமயத்தின் ‘குடும்பம்’ சிறுகதையில், கணவனால் அடிக்கப்படும் மனைவி ஓடி விடுகிறாள். அவளைத் தேடி அவள் மகன் செல்லும்போது, கணவன் அடித்த கோபத்தை, மகனைத் திட்டியும், மணல் வாரி இறைத்தும், கொட்டித் தீர்த்துக்கொள்ள முயல்கிறாள். ஆக குடும்பத்தில்கூட அதிகாரப் படிநிலை இருக்கிறது.

ஆண்கள் எப்போதும் மூர்க்கமானவர்களாக, குடும்பத்தை துன்புறுத்துபவர்களாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ‘The Corrections’ (Jonathan Franzen) நாவலில் வரும் ‘ஆல்ப்ரட்’ (Alfred) ஒரு ரயில்வே பொறியாளர். மூன்று குழந்தைகள் உடையவர். கடுமையாக உழைப்பவர், குடும்பத்திற்கு தேவையானதை ஈட்டியவர், தன் பணியின் நிமித்தம் செல்ல வேண்டிய பயணங்களில், வாய்ப்புகள் வந்தும் பிற பெண்களுடன் பழகாதவர். ஆனால் இவர்தான், தன் மனைவி தான் சொன்ன சிறிய விஷயத்தை செய்யவில்லை என்று அவரை அறைகிறார். தன் மகன், அவனுக்கு பிடிக்காத காய்கறியை உண்ண மறுக்கும்போது, அவன் அதை உண்டு முடிக்கும் வரை சாப்பாட்டு மேஜையை விட்டு எழக்கூடாது என்று அவனை பல மணிநேரங்கள் அங்கேயே உட்கார வைக்கிறார். ஒரு கருணையுள்ள சர்வதிகாரி (benevelont dictator) போலவே அவர் நடத்தை உள்ளது. ஆனால் இவரிடம் ‘நீங்கள் உங்கள் குடும்பத்தை சரியாக நடத்தவில்லை’ என்று கூறினால், ஆச்சர்யமும் கோபமும் தான் அடைவார். ஆண் எப்போதும் அதிகாரம் பண்ண வேண்டும் என்ற சமூக கருத்தாக்கத்தின் விளைவே அவர்- தான் செய்வதில் உள்ள நியாயமற்ற தன்மையை அவர் உணர்ந்திருக்கக்கூட மாட்டார்.

ஆணின் அதிகாரம் எல்லையற்றதாகத் தோன்றினாலும், அதன் அடித்தளம் பலவீனமானதே. பெண் குறித்த அச்சம், குறிப்பாக பாலியல் சார்ந்த அச்சம் அவனுக்கு எப்போதுமே உள்ளது, எனவேதான் இந்தச் சமூகம் பெண்களை எப்போதும் வேவு பார்த்துக்கொண்டே இருக்கிறது. பெண்களின் பாலியல்பு ஆண்களின் அதிகாரத்திற்கு எதிராக விடப்படும் அறைகூவலாகவே ஆணால் பார்க்கப்படுகிறது, அதை நசுக்க முயல்கிறான். ஜி.முருகனின், ‘கிழத்தி’, ‘இடம்’ சிறுகதைகளில், வேறொருவனின் மனைவியுடன் உறவு வைத்திருக்கும் ஒருவன், அவள் மேல் சந்தேகம் கொள்கிறான். அவள் தன் கணவனுடன் இருப்பது கூட தனக்கு பிடிக்கவில்லை என்று கூறுமளவிற்கு அவன் மனநிலை உள்ளது. இங்கு அவன் அதிகாரத்தோடு சொல்வது போல் தோன்றினாலும், அதில் அவனின் பயமே உள்ளது. பெண்ணை உடைமையாக பார்க்கும் சமூதாயத்தில், தன் உடைமை (என்று அவன் நம்புவது) பிறரிடம் செல்வதை ஆண் விரும்புவதே இல்லை, அது குறித்த பயம் அவனிடம் எப்போதும் உள்ளது.

இந்த பலவீனம் பெண்களுக்கு சாதகமாகவும் உள்ளது. எம்.கோபாலகிருஷ்ணனின் ‘நிலைக்கண்ணாடி’ சிறுகதையில், கணவன் (மாதவன்) வெளியில் சென்றவுடன் இன்னொருவனைப் பார்க்க மனைவி செல்கிறாள். அவளை பார்த்தவுடன் விஸ்வம் பரவசமாகிறான். அதைப் பார்க்கும் அவள் அவனை சீண்டுவதற்காக நாம் பிரிந்து விடலாமா என்கிறாள். அவன் பதட்டத்தை ரசிக்கிறாள். அலங்காரத்தமாள் அப்புவை வேதம் படிக்க அனுப்பவதற்கு அனுமதி பெறவும் பாலியலே துணை புரிகிறது.

நாற்பதாண்டு கால, கணவன் மனைவி உறவில் ஏற்படும் மாற்றங்களை ‘ஜான் அப்டைக்கின்’ (John Updike)’ நான்கு நாவல் தொகுப்பான ‘Rabbit Angstrom’ நாவல்களில் காணலாம். முக்கிய இழையாக இல்லாமலிருந்தாலும், இதை நுட்மாக சுட்டிச் செல்கிறார் அப்டைக். முதல் நாவலான ‘Rabbit Run’இல், ராபிட் கர்ப்பவதியான தன் மனைவியை (ஜாநிஸ்/Janice) விட்டு மனம் போன போக்கில் போகிறான், பிறகு அவளுடன் மீண்டும் சேர்கிறான். உயர் மத்தியத்தர/ பணக்கார குடும்பத்தில் பிறந்த பெண்ணான ஜாநிஸ், இந்த முதல் நாவலில் கணவனை அண்டி இருப்பவளாகவே உள்ளாள். இரண்டாம் நாவலான ‘Rabbit Redux’இல் ஜாநிஸ் தன் தந்தை அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்து , அங்கு இன்னொரு ஆணுடன் உறவு ஏற்பட்டு அவனோடு வாழச் செல்கிறாள். இறுதியில் மீண்டும் ராபிட்டுடன் சேர்ந்து வாழத் தொடங்குகிறாள். ஆனால் இப்போது இவர்களின் உறவில் சமநிலை ஏற்படுகிறது. ஜாநிஸ் இப்போது ராபிட்டையோ, அவள் தற்காலிகமாக உறவு கொண்டிருந்தவனையோ அண்டி இருப்பவள் அல்ல, தனக்கென்ற சுயம் இருப்பதை உணர்ந்தவள். அடுத்த இரு நாவல்களின் இதுவே தொடர்கிறது. மூன்றாவது நாவலான ‘Rabbit Is Rich’இல் நான்கு தம்பதியர் விடுமுறைக்காக செல்கின்றனர். அங்கு ஓர் இரவு மட்டும் இணைகளை மாற்றிக் கொள்ள முடிவு செய்து, அதன்படி நடக்கின்றனர். ஆனால் இதில் ராபிட் தான் விரும்பிய பெண்ணுடன் சேர முடியவில்லை, அவனுக்கு அந்த வருத்தத்தை விட,தான் கூட விரும்பியப் பெண் வேறொருவனுடன் இணைகிறாள் என்பதும், தன் மனைவி இன்னொருவனுடன் ஓர் இரவை கழித்தாள் என்பதுமே பெரிதாகத் தோன்றுகிறது. ஜாநிஸ் அந்த நிகழ்வை ஒரு மாறுதல் என்பதாகவே எடுத்துக்கொள்ள, ஆணின் இயல்பான அதிகாரத்தின் வேட்கை ராபிட்டை அப்படி இருக்கச் செய்வதில்லை.

குடும்பத்தில் பெரியவர்களின் கோபதாபங்களுக்கு குழந்தைகள்/ பதின் பருவத்தினர் வடிகாலாகின்றனர். ஆனால் அது ஒரு பக்கமே. ‘Lord of the Flies’, ‘A Clockwork Orange’ நாவல்களில் வரும் சிறு/பதின் வயதினர், அவர்களுக்குள் உருவாகும் குழுக்கள், அவற்றுக்கு தலைமை ஏற்பவர்கள், போன்றவற்றை பார்க்கும்போது அவர்களுக்குள்ளேயும் அதிகார படிநிலை இருப்பது வெளிப்படுகிறது. நம் பள்ளிப் பருவத்தில் இதை அனுபவப்பட்டிருப்போம்.

மனிதர்கள் விரும்பாவிட்டாலும் சமூகம் சில அதிகார வரம்புகளை அவர்கள்மீது திணிப்பது நடக்கிறது. பூமணியின் அஞ்ஞாடி நாவலில் வரும் ஆண்டி/ மாரி இருவரின் நட்பு ஒரு உதாரணம். வேறு வேறு பொருளாதார/ சாதிய படிநிலைகளில் உள்ள ஆண்டியும் மாரியும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள், மாரி ஓடிச் சேற்றில் சிக்கிய ஆண்டியை காப்பாற்ற உதவுவதிலிருந்து ஆரம்பிக்கும் இந்த நட்பு அவர்களின் மறைவு வரை நீடிக்கிறது. அவர்களிடையே எந்த வேறுபாடும் இருப்பது போல் தெரிவதில்லை, அவர்கள் பேசிக்கொள்வது, ஒருவர் மற்றவர் மீது வைத்திருக்கும் அன்பு அலாதியானது. ஆனால், மாரி ஒரு முறைகூட ஆண்டியின் வீட்டில் நுழைவதில்லை, அவன் மனைவியும் ஆண்டியின் வீட்டு வாசலில் நின்றே உணவு/ பொருள் வாங்கிச் செல்கிறார். இருவருக்கிடையே உள்ள அன்பையும் மீறி, ஆண்டி அதிகாரம் உடையவனாகவும், மாரி அவனுக்கு அடங்கியவனாகவும் இருப்பதைப் போன்ற தோற்றத்தை சமூக கட்டமைப்பு ஏற்படுத்துகிறது. ஆனால் அவர்களிடையே அது குறித்த பிரக்ஞை இருப்பது போல் இல்லை, மாரிக்கு இது குறித்த வருத்தமிருப்பது போல் தெரியவுமில்லை. சாதிய கருத்தாக்கங்களின் அதிகாரம் செய்யும் வேலை இது. நாவலின் காலகட்டத்தை வைத்து நோக்கும்போது சாதி/ பொருளாதாரத்தைக் கடந்த இந்த நட்பு புரட்சிகரமானதே. ஆனால் உறுதியான நட்பாக இருந்தாலும், சமூகத்தின் தளைகளைத் உடைக்கும் அளவிற்கு வலுவானதாக இல்லை.

அதிகாரத்தால் பாதிக்கப்படுபவர்கள், தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது, தாங்கள் பட்ட துன்பத்தை எண்ணி கருணையோடு நடந்து கொள்ளாமல், மற்றவர்கள் மீது அதே அதிகாரத்தை பிரயோகிப்பது ஒரு நகை முரண். கண்மணி குணசேகரனின் ‘நெடுஞ்சாலை’ நாவலில், பேருந்து பணிமனையில் நடக்கும் சம்பவங்கள் குறித்த விரிவான சித்தரிப்பு உள்ளது. பெருகி வரும் ஜனத்தொகையை சமாளிக்க முடியாத பேருந்துக்களின் எண்ணிக்கை, இருக்கும் பேருந்துகளை செலுத்த, பராமரிக்க ஆள் பற்றாக்குறை போன்ற சூழ்நிலையில், வேலைப் பளு அதிகமாக இருப்பதால் பணிமனையில் உள்ள பணிச் சூழல் மிகவும் மன உளைச்சலைத் தருவதாக இருக்கிறது (மற்ற இடங்களைப் போல இங்கும் சிலர் வேலை செய்வதை தவிர்க்க முயல்வதும் நடக்கிறது). எனவே, வழித்தடத்தில் பேருந்து நின்று விடுவதோ, அல்லது பராமரிப்பு பணி சற்று சுணங்கி விடுவதோ (ஆள் பற்றாக்குறையால்), இப்படி எது நடந்தாலும், அது வேலை செய்பவர்களின் உளைச்சலுக்கு ஒரு வடிகாலகிறது, என்ன ஒன்று, இந்த வடிகால், யார் சரி/தவறு என்று பாராமல் எப்போதும் மேலிருந்து கீழ் மட்டுமே பாய்கிறது. கிளை மேலாளர் (Branch Manager), துணை மேலாளரை (Deputy Manager) விரட்டுகிறார், அவர் தன் ஆற்றாமையை, பணிமனையில் உள்ள மெக்கானிக், ஓட்டுனர், நிரந்தரம் செய்யப்படாத வேலையாட்கள் (Casual Laborer) இவர்களிடம் காட்டுகிறார். பதவி நிரந்தர ஆணை பெற்றவர்கள், நிரந்தரம் செய்யப்படாத வேலையாட்கள் மீது தங்கள் கோபத்தை காட்ட, அவர்கள் மட்டும் தங்கள் இயலாமையை மற்றவர்களிடம் வெளிக்காட்ட முடியாமல், பணி நிரந்தர ஆணையைப் பெற அனைத்தையும் பொறுத்துக்கொண்டிருக்கிரார்கள். அது கிடைத்து விட்டால்? பிறகென்ன அவர்கள் தங்களுக்கு பின் வருபவர்கள் மீது பாய ஆரம்பிப்பார்கள். பணிமனையிலும், அரசியல் செல்வாக்கு பெற்றவர்கள் மீது மேலாளர்களின் பாய்ச்சல் நடப்பதில்லை. அவர்கள் சொந்த வேலைக்காக ‘OD’ எடுத்துக் கொண்டு சென்றாலும் ஒன்றும் செய்ய முடிவதில்லை . அந்தக் கோபமும் மற்றவர்கள் மீதே செலுத்தப்படுகிறது. மேலும் பதிலடி தருகிற ஊழியர்களிடமும் இந்த பாச்சா பலிப்பதில்லை.

அதிகாரம் என்பதை மற்றவர்களை உளவியல் ரீதியாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புவதைப் பற்றி ‘ழானர்’ புனைவுகளில் பார்க்கலாம். ‘Gone Girl’ (Gillian Flynn) நாவலின் மையமும் இதுவே. உளவியல் ரீதியான குற்றப்புனைவுகளில் இதை அதிகம் காணலாம். (Patricia Highsmithஇன் ‘The Talented Mr.Ripley’ மற்றவர்களை தனக்கேற்றார் போல் வளைத்து (manipulation) அவர்களை உபயோகிக்கிறார்.)

Political power grows out of the barrel of a gun என்கிறார் மாவோ. கணவன்/ மனைவி, பெற்றோர்/ பிள்ளைகள், பதின்-பருவத்தினர், நட்பு போன்ற உறவுகளில், அதிகாரத்தை பெற, துப்பாக்கி தேவை இல்லை, ஏன் உடல் சார்ந்த வன்முறை கூட அத்தியாவசியம் இல்லை. அது பாலியல் சார்ந்த அதிகாரமாக இருக்கலாம், மன ரீதியான வன்முறையாகக் கூட இருக்கலாம். எதுவாக இருந்தாலும், எந்த உறவிலும் அதிகாரத்தின் ஆசை நுழையும்போது, அந்த உறவு வெளி/ உள் காயங்கள் கொண்ட ‘ரத்த உறவாக’ மாறுகிறது.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.