
ஆல்பெர் காம்யுவை pied-noir என்று சொல்வார்கள், பிரெஞ்சு அல்ஜீரியாவில் வாழ்ந்த பிரெஞ்சுக் குடிபிறப்பு. 1913ல் பிறந்தவர், தன் 25ஆவது வயதில் பிரான்சுக்குத் திரும்பினார். அங்கே அவர் பிரெஞ்சு தேசிய போராளிகளுடன் இணைந்தார், அதிகார அமைப்பை எதிர்த்து Combat என்ற செய்தித்தாளில் எழுதி அதன் பதிப்பாசிரியராக இயங்கினார். பின்னர் அவர் குறிப்பிடத்தக்க புகழ் பெற்ற எழுத்தாளரானார், 1960ல் ஒரு கார் விபத்தில் இறக்கும்வரை பெரும்பாலான காலம் பிரான்சில் வாழ்ந்தார்.
இந்நூலில் ஜாரெட்ஸ்கி விவரிப்பதுபோல், காம்யுவின் குழந்தைப் பருவகாலத்தில் அல்ஜீரியாவில் ஊடாடிய அழகும் வன்முறையும் பரவலான திசைகளில் விரிந்த அவரது சிந்தனை எங்கும் அழிக்க முடியாத தடயத்தை விட்டுச் சென்றது. காம்யுவின் சிந்தனையின் பல்வகைப்பட்ட பகுதிகள் துல்லியமாக வெவ்வேறு கூறுகளாகப் பிரிக்கப்பட முடியாதவை என்பது ஏன் என்று காட்டுகிறார் என்பது ஜாரெட்ஸ்கி என்பது இந்த நூலின் மிகப் பெரிய சாதனை. சுட்டெரித்த அல்ஜீரிய சூரியனின் கீழ் காம்யு தனக்கென வார்த்துக்கொண்ட திண்ம மெய்ம்மைக்கு அசாதாரண வகையில் விசுவாசகமாக எப்போதும் நடந்து கொண்டார் என்பதில்தான் இவை அனைத்தும் துவங்குகின்றன. யோசித்தால் மட்டும் போதாது என்று தீர்மானமாக இருந்தார் காம்யு, பார்க்கவும் வேண்டும். இதுதான் காம்யுவின் மகோன்னதத்தின் ரகசியம்.
சிந்தனையாளராக இருக்கும் எவரும் கருத்துநிலைச் சிந்தனையை முழுமையாகத் தவிர்ப்பது முடியாத காரியம். ஏன், மொழியைப் பயன்படுத்தும் எவராலும் அது முடியாது. ஆனல காம்யு மிகையான அருவ, கருத்துநிலையாக்கத்தின் ஆபத்துகளை ஆழமாக அறியக்கூடிய தன்மை கொண்டவராக இருந்தார். இது நம் பார்வையில் ஒரு நாயக இயல்பாக இல்லாமல் போகலாம், ஆனால் காம்யுவின் காலத்தில் அது ஒரு பெரிய சாதனையாக இருந்தது. காம்யுவின் சகாக்கள், சென்ற நூற்றாண்டின் மத்திமகாலத்துச் சிந்தனையாளர்கள், அருவச் சிந்தனையில் திளைத்தனர். லெப்ட் பாங்க்கின் பியான் பான்சோக்கள், ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர, உட்கார்ந்த இடத்திலேயே சிந்திக்கும் மாபெரும் மார்க்சிய ஆளுமைகள். அவர்கள் தொழிலாளிகளின் சுவர்க்கம் என்ற தங்கள் தெய்விக கனவு சோவியத் கட்டமைப்பில் வாழ்ந்த நிஜ மனிதர்களைக் கொடூரமாகக் காவு கொள்வதை திரிகோணங்களில்தான் அறிந்திருந்தனர். ஆனால் உண்மை தெரிந்தும் அதனால் சிறிதும் சஞ்சலப்படாத ஆனந்த நிலையில் இருந்தனர். காம்யு பொதுவெளியில், கோபமாக அவர்களைச் சாடினார் – தங்கள் அழகிய கருத்துருவாக்கங்களைத் தவிர வேறு எதிலும் நாட்டமற்ற மயக்கத்தில் இருக்கின்றனர் அவர்கள் என்றார் அவர். இதன் காரணமாக, தாம் மிகவும் நேசித்த உழைக்கும் வர்க்கத்தினர் மேல் திணிக்கப்பட்ட தங்கள் கருத்துருவாக்கங்கள் அவர்களை எப்படிப்பட்ட அவல நிலைக்குக் ஆளாக்கி அவர்களிடம் எத்தகைய விலை கோருகிறது என்பதை உணர முடியாதவர்களாக இருக்கின்றனர் என்றார் அவர். உண்மையைச் சொன்னால், காம்யு சொன்னது தவறென்று இப்போது சொல்வதற்கில்லை, ஏன் அப்படி நினைத்தே பார்க்க முடியாது.
பிரெஞ்சு தத்துவவியலாளர் மெஹ்லு பொன்ட்டியை மேற்கோள் காட்டுகிறார் ஜாரெட்ஸ்கி. அவர் ஸ்டாலினிய கொடூரங்களைப் பற்றி ரத்தத்தை உறையவைக்கும் நிதானத்துடன் எழுதுகிறார், வரலாற்றின் விரிவாக்கம் மட்டுமே நமக்கு, “குறிப்பிட்ட ஒரு தன்மையிலான வன்முறைக்கான நியாயத்தைக் குறித்த இறுதி தீர்ப்பு அளிக்கும்” என்கிறார். இதன் எதிர்வினையாக தார்மீகக் கோபத்துடன் காம்யு எழுதினார், “மனிதன் முழுமையாகவே வரலாற்றின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டு விட்டான்… ஏனெனில் நாம் கருத்துநிலைச் சிந்தனைகளின் உலகில் இருக்கிறோம், அரசு எந்திரங்களின் உலகில் இருக்கிறோம், பூரண கருத்துருவாக்கங்கள் நிறைந்த நுண்மைகளற்ற ரட்சக உலகில் இருக்கிறோம்,” என்று. ரத்தத்தை உறிஞ்சும் ஸ்டாலினிய கருத்துநிலைச் சிந்தனையை காம்யு நிராகரித்ததால் அவர் தன் சகாக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டார். இதில் குறிப்பாக, அவருக்கு ஒரு காலத்தில் மிகவும் நெருங்கிய நண்பராக இருந்த சார்த்தர், காம்யு தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதைக் கண்டனம் செய்தார்.
காம்யு சோவியத் கோட்பாடு தன் மெய்ம்மை குறித்து கொண்டிருந்த கச்சிதமான உறுதிப்பாட்டை மட்டும் எதிர்க்கவில்லை. அவர் வாழும் காலத்தில், அவர் பிறந்த அல்ஜீரியா காலனியாதிக்க பிரெஞ்சு மக்களிடையே நேர்ந்த நீண்ட, கசப்பான போராட்டத்தில் சிதைக்கப்பட்டது. பிரெஞ்சு காலனியாதிக்கம் செய்தவர்கள் கொஞ்சமும வெட்கமின்றி அல்ஜீரிய மண்ணுக்குரியவர்களுக்கு எதிராகக் கொடூரங்களை நிகழ்த்தினர். அல்ஜீரிய தேசியவாதிகள் பிரெஞ்சுக்குடியில் பிறந்து அல்ஜீரியாவில் வாழ்பவர்களுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் லெப்ட் பாங்க்கில் இது ஒருதலைப்பட்சமான யுத்தமாகப் புரிந்து கொள்ளப்பட்டது. அறச்சார்பு கொண்ட விடுதலை வீரர்களுக்கும் இரக்கமற்ற காலனிய கொடுங்கோலர்களுக்கும் இடையிலான யுத்தம் இது என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தனர்.
வசதியான நிலையில் இருந்த பிரெஞ்சு சிந்தனையாளர்கள் விவரித்த கருப்பு வெள்ளைச் சித்திரத்தை அல்ஜீரிய மண்ணில் பிறந்து வளர்ந்த காம்யுவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இருபுற வன்முறையையும் அவர் கண்டித்தார். இரு தரப்பினரும் அமைதியாய் இணைந்து வாழ வேண்டும் என்று வலியுறுத்தினார். 1957ல் அவருக்கு வழங்கப்பட்ட இலக்கியத்துக்கான நோபல் பரிசை ஏற்றுக்கொள்ள ஸ்டாக்ஹோம் சென்றிருந்த காம்யுவை ஒரு இளம் அல்ஜீரிய தேசியவாதி நேரடியாகக் கேட்டார், காம்யு ஏன் எந்த ஒரு நிபந்தனையுமற்று தெளிவாக அல்ஜீரிய தேசியவாதத்துக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கவில்லை என்று கேட்டார் அவர். அதற்கு காம்யு சொன்ன பதில் பிரசித்தம்: “அல்ஜியர்ஸின் டிராம் பாதைகளில் இப்போது குண்டு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் ஒன்றில் என் தாயும் பயணித்துக் கொண்டிருக்கலாம். இதுதான் நீதி என்றால், எனக்கு என் தாயே போதும்”.
பிரபலமான இன்னொரு உதாரணம் உண்டு: காம்யு மரண தண்டனையைத் தீவிரமாக எதிர்த்தார். ஆனால் அரசுக்குரிய கடமைகள் எவை, தண்டனையின் சமூகப் பணிகள் எவை என்றெல்லாம் வெறுமே வாதிட்டுக் கொண்டிருக்காமல், அவர் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இடங்களுக்குச் சென்று அங்கே நடப்பதை வலிமிகுந்த நுண்விவரணைகளுடன் ஒரு கட்டுரையாக, “கில்லட்டின் குறித்த சில எண்ணங்கள்” என்று விவரித்து எழுதினார். அந்தக் கட்டுரையை முதலில் ஒரு விளக்கத்துடன் துவக்குகிறார், “ஆற்றுப்படுத்தப்பட வேண்டிய ஒரு துயரத்தை, முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டிய ஒரு அநீதியை, தொடர உதவும் வகையில் சொற்களைக் கொண்டு ஏமாற்றும்போதும் எங்கும் மௌனம் நிலவும்போதும் பேசுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. வார்த்தைகளின் போர்வை மறைந்திருக்கும் அசிங்கங்களைக் வெளிக்காட்டியாக வேண்டும்’. ஒரு பெண்கைதியின் தலை கில்லட்டினில் துண்டிக்கப்பட்டபின் அவளது கன்னங்கள் சிவந்தன என்று பதிவு செய்கிறார் காம்யு. “நீதி வழங்கப்பட்டது என்று செய்தித்தாளில் வாசித்துக் கொண்டே காப்பி அருந்துபவன், மிகக் குறைவான விவரணைகளை அறிந்தாலும் அதை அப்போதே துப்பிவிடுவான்,” என்று தீர்மானமாகச் சொன்னார் காம்யு.
மேலும் வாசிக்க – The American Conservative
புகைப்பட உதவி : Harvard University Press