உறவுகள் – ஓஸு

An Autumn Afternoon (1962) – Michael Wood

 

 

இனி தந்தைவழி மாட்சிமையின் அமைதியால் மிகவும் அச்சுறுத்தும் சில காட்சிகள் தொடர்கின்றன. மிச்சிகோவாக நடிக்கும் சிமா இவாஷிட்டாவுக்குப் பொருத்தமான மணமகன் குறித்து அவளது சகோதரனும் தந்தையும் விவாதிக்கின்றனர். உடன் படித்த நண்பன் சொல்லும் ஆள் இருக்கிறான் (திரைப்படத்தின் இறுதியில் வரும் அடையாளம் காட்டப்படாத மணமகன் அவன்தான்), அவள் விரும்புகிறாள் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் ஆள் இருக்கிறான். அதன்பின் அவளது சகோதரன் முதலாமவனிடம் பேசிப் பார்க்கிறான் – இருவரும் நிறைய பீரும் சகேயும் குடிக்கின்றனர். ஆனால் இப்போது இதைப் பேசுவதற்கான காலம் கடந்துவிட்டது, அவன் ஒரு பெண்ணை மணம் புரிய ஒப்புக்கொண்டு விட்டான். ஒருவேளை, இவர்கள் முன்னரே வந்திருந்தால்….

அப்பாவும் சகோதரனும் தான் விரும்பியவனை அவளால் மணம் செய்து கொள்ள முடியாது என்பதை மிச்சிகோவிடம் விளக்குவதில்லை. அவனைத்தான் அவள் விரும்புகிறாளா என்றுகூட அவர்கள் அவளைக் கேட்பதில்லை. அவர்களாகவே செய்துகொண்ட யூகம் இது. இப்போது அந்த இன்னொருத்தனைத் திருமணம் செய்து கொள்வாளா என்று அவளிடம் கேட்கிறார்கள். அவள் சிறிதுகூட சலனமின்றி சரி என்று சொல்கிறாள். அவள் அந்தக் காட்சி நெடுக சலனமற்று இருக்கிறாள். ஆச்சரியப்படும்வகையில் எல்லாம் நல்லபடி பேசி முடித்தோம் என்று ஆண்கள் இருவரும் சொல்லிக் கொள்கிறார்கள் (அவள் அழலாம் அல்லது வேறெதாவது செய்யலாம் என்று இத்தனை நேரம் நினைத்திருந்தார்கள்). இப்போது இளைய சகோதரன் வருகிறான், தன் அக்காவுக்கு என்ன ஆயிற்று என்று கேட்டுக் கொண்டு. அவள் அழுதுகொண்டிருக்கிறாள். அப்பா அவள் நன்றாக இருக்கிறாளா என்று பார்க்க அவளது அறைக்குப் போகிறார். அவள் நன்றாக இருக்கிறேன் என்று சொல்கிறாள், ஆனால் அதைச் சொல்லும்போதே திரும்பிக் கொள்கிறாள்.

ஓஸுவின் படங்கள் ஆளற்ற காரிடர்களுக்கும் தாழ் கோணங்களுக்கும் புகழ் பெற்றவை. அவரது ஷாட்கள் ஆர்சன் வெல்ஸிடமிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்கள் போலிருக்கின்றன, அவற்றின் நாடகத்தன்மை நீக்கப்பட்ட மேற்கோள்கள். பொதுவாக அறை அலங்காரங்களில் ஒத்த உருவங்களாக பாத்திரங்கள் தோன்றுகின்றனர், வாழும் காலத்திலேயே வாழ்வைச் சுற்றி வரும் ஆவிகள். ஆனால் An Autumn Afternoon, இந்த தொனியையும் பாணியையும் பின்பற்றினாலும், அவர்களுக்கு கொஞ்சம் வண்ணம் சேர்க்கிறது, வழக்கத்தைவிட இன்னும் கொஞ்சம் சரித்திரம் அளிக்கிறது.

ஹிராயமா ஜப்பானிய கடற்படையில் ஒரு காப்டனாக இருந்தவன். ஒரு முறை அவன் பெட்டி ஆபிசராக இருந்த தன் பழைய சகாவைப் பார்க்கப் போகிறான், அவன் இப்போது ஒரு மோட்டார் மெக்கானிக். அவர்கள் இருவரும் ஒரு பாருக்குச் செல்கின்றனர். அதன் உரிமையாளர் இவர்களுக்காக தேசபக்தி நிறைந்த ஜப்பானிய ராணுவ இசை ஒன்றை ஒலிக்கச் செய்கிறான். முன்னாள் பெட்டி ஆபிசர் இப்போது முன்னும் பின்னுமாய் நடந்து செல்கிறான், சல்யூட் அடித்தபடி, இசைக்குத் தகுந்த சொற்களை அரைகுறையாகப் பாடியபடி. ஹிராயமா சிரித்துக் கொண்டே அவனுக்கு பதில் சல்யூட் செய்கிறான். பார் நடத்தும் பெண்மணியும் சல்யூட் வைக்கிறாள். இருவரும் போரில் ஜப்பான் வெற்றி பெற்றிருந்தால் என்னவாகி இருக்கும் என்று பேசிக் கொள்கிறார்கள். ஹிராயமா, ஜப்பான் தோல்வியடைந்ததுதான் நல்லது என்று தீர்மானமாகச் சொல்கிறான்.

இந்தக் காட்சிகளின் கருத்து போரல்ல, கடந்த காலம், அது எப்படிப்பட்டதாக இருந்திருந்தாலும். இந்த உலகில் நிகழ்காலம் கடந்த காலத்துக்கு இணையாக இருக்கவே முடியாது, எதிர்காலம் இதைவிட மோசமாகவே இருக்கும். தன் பெண்ணின் திருமணத்துக்குப் பின் ஹிராயமா இந்த பாருக்கு வரும்போதுதான் நமக்கு இந்த விஷயம் பிடிபடுகிறது. அவன் நல்ல போதையில் மீண்டும் ராணுவ இசை கேட்கிறான். திரைப்படம் முடியும்போது அவன் தன் பிளாட்டில் குடிபோதையில் அந்த ராணுவ இசையின் சில வரிகளைப் பாடிக் கொண்டு அமர்ந்திருக்கிறான், அவனது மகளும் மருமகனும் விடைபெறுகின்றனர். அவனது இளைய மகனும் உடனிருக்கும் ஓரே ஆளும் அதிருப்தியுடன் தூங்கப் போகின்றனர். எந்த சக்தியுமில்லாத ஒரு பெண்ணின் பிரிவு இப்படிப்பட்ட சீர்குலைவை உருவாக்கும் என்று யார் நினைத்திருக்க முடியும்?

இவனை நாம் வேண்டிய அளவு பார்த்துவிட்டோம், சகுமாவைப் போல் இவனும் தப்பிப்பானா என்ற யோசனை நமக்கு ஏற்படுகிறது. இவன் புத்திசாலி, உணர்வுகளைப் புரிந்து கொள்பவன், பொதுவாக கௌரவமாக நடந்து கொள்பவன். இன்று போலல்லாமல் மற்ற நாட்களில் இவன்பால் தன்னிரக்கம் போன்ற உணர்வுகளல்ல, வேறு உணர்ச்சிகள்தான் ஆதிக்கம் செலுத்தும். இருந்தாலும் உன் பெண்ணை உன்னோடு வைத்துக் கொள்ளும் சாத்தியமிருந்தும் அவளைப் போக விடுவதென்பது இப்படி அழ வைக்கிறது என்றால் இதில் ஏதோ ஒரு பொன்மொழித்தன உணர்வு இருக்கிறது என்றுதான் பொருள்.

இந்தத் திரைப்படத்தில் மிகவும் மன நெகிழ்ச்சியளிக்கும் காட்சி, மறக்க முடியாத காட்சி, எல்லாரும் நல்லபடியாக நடந்து கொள்ளும் அந்தக் காட்சிதான். ஹிராயமா மிச்சிகோவிடம் நீ திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்கிறான். அதனால் பரவாயில்லை, என்கிறான் அவன், நானும் உன் சகோதரனும் சமாளித்துக் கொள்வோம். இந்த உரையாடலின் முடிவில் அவளது அடக்கமான தொனியும் பொறுமையும் உடைகின்றன, அவள் சத்தம் போடும் நிலைக்கு அருகில் போகிறாள். அவள் சத்தம் போடக்கூடியவளே அல்ல. ஹிராயமாவிடம், “நீங்கள் எப்படி இவ்வளவு அலட்சியமாக நடந்து கொள்ள முடியும்?” என்று கேட்கிறாள். பாவம், ஹிராயமா இப்போதுதான் தான் மிகவும் பிரிவாகவும் புரிதலோடும் நடந்து கொள்வதாக நினைத்துக் கொண்டிருக்கிறான், நாமும்கூட அப்படிதான் இவ்வளவு நேரம் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இப்படி ஆதுரத்துடன் பேசி ஏமாற்றி அவளை வீட்டிலேயே நிரந்தரமாக வைத்துக் கொண்டிருக்க இப்படிச் செய்கிறான் அவன் என்று நினைக்கிறாள் மிச்சிகோ. தன் அப்பா உண்மையாக இப்படிச் சொல்வதாக அவள் நம்பவில்லை. ஆனால் இதுவும் இந்தப் படத்தின் வெறுமை நிறைந்த சோகத்தின் ஒரு பகுதிதான், முற்போக்குத்தனமாகச் சொல்லப்படும் தீர்வும் அப்படி ஒன்றும் மேம்படுத்துவதில்லை. திரைப்படம், இன்னாரென்று நமக்குக் காட்டக்கூட தாளாத யாரோ ஒருவனை மணந்து கொள்வதைவிட, அவள் தன் அப்பாவிடயே ஒட்டிக் கொண்டிருந்திருக்கலாம்.

மேலும் வாசிக்க : London Review of Books

புகைப்பட உதவி : Ummagumma 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.