மானுடம் குடியமர்ந்த கோள் : முதல்நிலை தகவலறிக்கைகள் – 1

– சிகந்தர்வாசி – 

நான் அணிந்திருக்கும் முகக்கவசத்தைப் பார்க்க சிரிப்பு வருகிறது, இல்லையா? பூட்டப்பட்டிருந்த பெட்டிகளில் ஒன்றில் இந்தக் கருவி இருந்ததை இன்றுதான் கண்டுபிடித்தோம். இதை அணிந்துகொண்டால் நம் கவனம் அதிகரிக்குமாம். ஆக்சிஜன் என்ற சமாச்சாரத்தை ஒரு குழாய் வழியாக மூக்கில் செலுத்துகிறார்கள். இதன் விளைவாக இதை அணிந்திருப்பவனது காது அடைத்துக் கொள்கிறது. இவ்வாறாக உலகிலிருந்து துண்டிக்கபட்ட நிலையில் இந்த முகக்கவசத்தில் இருக்கும் இரு சிறு கீறல்களின் வழியாக நாம் வாசித்துக் கொண்டிருக்கும் விஷயத்தில் முழு கவனம் செலுத்த முடிகிறது.

இப்போது இதற்கென்ன அவசியம் வந்தது என்று நீங்கள் கேட்கக்கூடும், என் கவனத்தைக் குவித்து நான் அப்படி என்ன ஆராய்ச்சி செய்கிறேன்? ஏன் எனக்கு ஒரு பதற்றமாக இருக்கிறது? ஏன் என் மனம் நிலைகொள்ளாமல் தவிக்கிறது? என் பதற்றத்துக்குக் காரணம் என்ன? இந்த முகக்கவசம் என் பதற்றத்தைக் குறைக்குமா? இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் நான் எங்கள் வரலாற்றைக் கொஞ்சம் அறிமுகம் செய்ய வேண்டும்.

எங்கள் மூதாதையர்கள் பூமி என்ற கிரகத்தைச் சேர்ந்தவர்கள். சூரியன் என்ற நட்சத்திரத்தைச் சுற்றி வந்த கோள்கூட்டத்தில் பூமியும் உண்டு. தங்களை சூரிய மண்டலம் என்று இவர்கள் அழைத்துக் கொண்டனர் என்று தெரிகிறது. எது எப்படியோ, இனி பூமியில் உயிர் வாழ்வது முடியாது என்று ஒரு நாள் அவர்களுக்குத் தெரிந்து விட்டது. ஏன் அப்படி ஆனது என்பதற்கு இதுவரை சரியான விடையில்லை.

தட்பவெப்பநிலை மாற்றங்கள்தான் இதற்கு காரணம் என்று சிலர் சொல்கின்றனர், சிலர் அணு ஆயுதப் போரில் பெரும்பாலானவர்கள் கொல்லப்பட்டனர் என்கிறார்கள், மக்கள்தொகை வளர்ச்சியைக் குற்றம் சொல்பவர்களும் உண்டு. இவை தவிர வனங்களை அழித்தது, இயற்கை வளங்களைச் சுரண்டியது என்று மானுட பேராசையைக் குற்றம் சொல்லும் காரணிகள் ஏராளம் இருக்கின்றன. எதனால் என்று தெரியாவிட்டாலும் இனி யாரும் அங்கு இருக்க முடியாத நிலை உருவானதை மட்டும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, விண்கலங்கள் என்று குறிப்பிடப்படுவனவற்றில் ஏறி இங்கு வந்தனர் மனிதர்கள். இதுவும் பூமியைப் போன்றதுதான் இங்கு வரக்காரணம் என்கின்றனர் எம் மூதாதையர்.

பயணம் எளிதாக இருக்கவில்லை. அது குறித்தும் நிறைய கதைகள் உண்டு. விண்கலன்களில் கூட்டம் கூட்டமாகப் பயணித்தனர். அவர்களுடன் விலங்கினங்களும் பயணித்தன. இதற்கு முன்னரே வேறொரு வெள்ளத்தில் நோவா என்று ஒருவர் தனது நீர்கலன் கொண்டு மக்களைக் காப்பாற்றிய கதை ஒன்று உண்டு என்று தெரிகிறது. பயணப்பாதையில் பல விண்கலன்கள் தொலைந்து போயின, சில விண்வெளியில் வெடித்துச் சிதறின. ஆக்சிஜன் இல்லாத காரணத்தால் வேறு சில விண்கலன்களில் இருந்த மனிதர்களும் விலங்கினங்களும் மாண்டனர் – பிணந்தாங்கிய கலன்கள் வந்திறங்கிய கதைகளும் உண்டு. அது ஒரு கடுமையான பயணம் என்பது மட்டும் தெரிகிறது, புறப்பட்டவர்களில் மிகச் சில விழுக்காடே உயிர் பிழைத்தனர்.

இந்த விண்கலன்களில் வந்திறங்கிய விஞ்ஞானிகள் நிலைவட்டு, இறுவட்டு முதலான பல்வகை மின்னணுவியல் கருவிகளில் தகவல்களைப் பதிவு செய்து எடுத்து வந்திருந்தனர். கணியன்களில் இந்த வட்டுக்களை இட்டபின் அவற்றில் பதிவு செய்து வைத்திருந்த ஆதாரக்கூறுகளைத் தொடுதிரைகளில் ஒற்றி எடுக்கும் தொழில்நுட்பம் அப்போது இருந்தது. இவ்வாறு எழுத்து வடிவிலும் வரைபடம் மற்றும் ஓவிய வடிவங்களில் மீட்டெடுக்கப்பட்ட ஆதாரக்கூறுகளை விரித்து அறிவாய் பெருக்கிக் கொள்ளும் வல்லமை அக்காலத்திய ஆய்வாளர்களுக்கு உண்டு. இவை தவிர மூவீக்கள் என்றழைக்கப்படும் அசைபிம்பங்களும் தொடுதிரையில் தோன்றி மகிழ்விப்பதுண்டு.

இவையனைத்தும் மின்னாற்றல் கருவிகள் என்றறியப்படுகின்றன. வளி எண்ணை என்றழைக்கப்படும் கருநிற திரவம் ஒன்று மின்னாற்றல் உற்பத்திக்கு உதவியது – இதை தீசலெண்ணெய் என்றும் அழைத்திருக்கின்றனர். மின்னியற்றி என்ற உருக்காலான ஒரு கருவியினுள் தீசலெண்ணெய்யை ஊற்றியதும் அது பெருத்த ஓசையுடன் இயங்கி அதனுடன் இணைக்கப்பட்ட அனைத்து மின் உபகரணங்களுக்கும் உயிரூட்டியது: நகர வேண்டியவை நகர்ந்தன, ஒளிர வேண்டியவை ஒளிர்ந்தன, குளிர வேண்டியவை குளிர்ந்தன- அவ்வக்கருவிகள் தத்தம் பணிகளைச் செவ்வனே செய்தன. இத்தனைக்கும் காரணமான மின்னியற்றி இன்றும் எம்முடன் உண்டு, ஆனால் இதன் மாயங்கள் கடைசி சொட்டு தீசலெண்ணெயுடன் அடங்கி விட்டன. எனவே இப்போது எங்கள் அருங்காட்சியகங்களை நிலைவட்டு, இறுவட்டு முதலான அறிவுப் பெட்டகங்கள் அலங்கரிக்கின்றன.

தீசலெண்ணெய் ஒரு நாள் இல்லாது போகும் என்பதை எம் அறிவியலாளர்கள் அறிந்திருந்தனர். இது அவர்களுக்கு மிகப் பெரும் துயராக இருந்தது, ஆனால் பொதுமக்கள் இந்த உண்மையை ஏற்றுக் கொள்வதாயில்லை. ஒரு வயோதிகர், “பெற்றோல் கிணறுகள் இல்லாத கிரகத்தில் ஏன் எங்களைக் குடியிருத்தினீர்கள்?” என்று பெரும்கோபத்துடன் கேட்டார். “உங்கள் திட்டமிடல் எப்போதும் போல் இப்போதும் எதிர்காலத்தைக் கணக்கில் கொள்ளவில்லை,” என்று கத்தினார் அவர், “ஒரு நாள் இத்தனை விளக்குகளும் அணைந்து போகும் என்கிறீர்களா?”

அவர் குறிப்பிட்ட விளக்குகள் வட்ட வடிவிலும் உருளை வடிவிலும் பெரும்பாலும் இருந்தன. இரவில் அவற்றிலிருந்து பெருகும் ஒளி இருளைச் சுத்திகரித்து அவை இருக்கும் வட்டாரத்துக்கு வெளிச்சமிட்டது. இவை இப்போது எங்கள் அருங்காட்சியகங்களில் உள்ளன. மிகவும் மென்மையான கருவிகள் இவை, ஒரு குழந்தையின் கரம் தொட்டாலும் நொறுங்கிப் போகும். அந்த நாட்களில் இவற்றில் ஒன்றை உடைத்தாலும் பெரியவர்கள் தீச்செயல் செய்து விட்டதாகச் சினப்பது உண்டு – மானுட இனம் தழைப்பதன் சாத்தியக்கூறுகள் ஒளிக்கருவிகள் இல்லாமல் குறைந்து போகும் என்று அவர்கள் நம்பினர்.

இந்த புதிய கோளின் மண்ணை அகழ்ந்து எண்ணெய் எடுக்க வேண்டும் என்று சில அறிவியலாளர்களும் பொறியாளர்களும் விருப்பப்பட்டனர். திடகாத்திரமான ஆண்களையும் பெண்களையும் கொண்டு அதற்கான முயற்சிகளில் இறங்கினர். காலையும் மாலையுமாய் குழி தோண்டினார்கள். விடாது குழி தோன்றியதில் ஏற்பட்ட கிணறுகள் தண்ணீரால் நிறைந்தன. அதற்கு மேல் என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. இனி என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டதற்கு, “துளைகருவிகள் இருந்தால்தான் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியும்,” என்று சொல்லிவிட்டனர், “துளைகருவிகள் வேண்டும், மண் அகற்றும் யந்திரங்கள் வேண்டும், மின்சாரம் வேண்டும்.” ஆனால் இது எதற்கும் இங்கு வழியில்லாமல் இருந்தது.

துளைகருவிகளை வடிவமைக்க யாருக்குத் தெரியும்? கையேடுகளும் புத்தகங்களும் கொண்டு வந்திருந்தோம் என்பது உண்மைதான், ஆனால் அவை கருவிகளைப் பயன்படுத்தும் வழிமுறைகளைக் குறிப்பிட்டன. பூமியில் பொறியியல் கல்வி என்பது பெரும்பாலும் கருவிப் பயன்பாட்டைக் கற்றுத் தருவதாக இருந்தது. அடிப்படை அறிவியல் விதிகளில் துவங்கி கருவிகளை வடிவமைக்கும் கல்வி இவர்களுக்குத் தேவைப்படும் என்று யாரும் அக்காலத்தில் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. இந்த எதிர்பாராத புதிய நிலையில் பொறியாளர்களுக்கு எதுவும் பிடிபடவில்லை என்பதுதான் உண்மை.

ஓரிரு பொறியாளர்கள் நிலக்கரியிலிருந்தும் தண்ணீரிலிருந்தும் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று சொன்னார்கள். சரி, தண்ணீரிலிருந்து மின்சார உற்பத்தி செய்து கொடுங்கள் என்று கேட்டதற்கு, அவர்களில் ஒருவர், “இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் இடத்தில் ஒரு விசைச்சுழலியை நிறுவினால் போதும்,” என்றார். “ஐயா நம்மிடம் விசைச்சுழலி இல்லையே,” என்று அவருக்கு பதிலளிக்கப்பட்டது. இதைக் கேட்டு திகைத்து நின்ற அந்தப் பொறியாளர், “இப்போது உங்களால் ஒரு விசைச்சுழலி செய்ய முடியுமா?” என்று கேட்கப்பட்டதும் கண்ணீர் உகுத்தவாறு அங்கிருந்து அகன்றார்.

எங்களிடம் ஏராளமான தண்ணீர் இருந்தது. தண்ணீரை மண்ணிலிருந்து பிரித்தெடுக்கவும் எங்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் அதுகூட அவ்வளவு அவசியப்பட்ட தொழில்நுட்பமல்ல- நாங்கள் குடியேறிய இடத்தின் அருகிலேயே நதியொன்று சுழித்தோடிக் கொண்டிருந்தது. ஆனால் எங்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யத் தெரியவில்லை. ஒவ்வொன்றாக விளக்குகள் அணைந்தன, கணியன்கள் ஓய்ந்தன, வட்டுகளில் பத்திரப்படுத்தி வைத்திருந்த அறிவு அத்தனையும் அவற்றின் இலக்குமுறை கிட்டாங்கிகளின் புதையுண்ட ரகசியங்களாயின.

இக்காலகட்டத்தில் பல அறிவியலாளர்களும் பொறியாளர்களும் புத்தி பேதலித்துப் போயினர். அறிவியலாளர்களுக்கு அவர்கள் கற்றிருந்த அறிவே சுமையானது. அதை அடுத்த தலைமுறை மாணவர்களுக்குக் கைமாற்றிக் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பின் அழுத்தத்தில் அவர்கள் பணியாற்றினர், ஆனால் அதைச் செய்வதற்கான கருவிகள் அவர்களிடம் இல்லை. அவர்கள் எதுவெல்லாம் அடிப்படையான, எப்போதும் இருக்கும் விஷயங்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தனரோ, அவை அனைத்துமே அசாத்தியமான சாதனைகளாகக் கருதப்படும் நிலையை இப்போது எட்டிவிட்டன.

அக்காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு விஞ்ஞானி தன் நாட்குறிப்பில் இவ்வாறு பதிவு செய்து வைத்திருக்கிறார்: “நாம் உண்மையாகவே அறிவியல் வளர்ச்சியற்ற சமுதாயமாக இருந்திருந்தால் என்னை எல்லாரும் ஒரு மேதை என்று கொண்டாடுவார்கள். ஆனால் இப்போது நிலைமை வேறு விதமாயிருக்கிறது. எனக்கு முந்தைய தலைமுறையினர் எட்டிய உயரங்களைத் தொட நான் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது, அதை என்னால் சாதிக்க முடியுமா என்பது எனக்கே சந்தேகமாக இருக்கிறது. நான் எதைக் கண்டுபிடித்தாலும் அது முந்திய கண்டுபிடிப்பின் மீட்டெடுப்பாகவே இருக்கும். இந்த முயற்சியில் நான் தோற்றுப்போனால் என் அறிவு அத்தனையும் என் முன்னோர் சென்ற தூரம்கூட செல்லும் தகுதியற்றது என்று பொருட்படும். என் மூதாதையரின் அறிவு என்னைக் கொன்று கொண்டிருக்கிறது”.

மேற்குறிப்பிட்ட விஞ்ஞானி தன் எண்ணங்களை இவ்வாறு பதிவு செய்த சில மாதங்களில் சித்த சுவாதீனமிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரைப் போன்ற இன்னொரு விஞ்ஞானி, “நான் ஒரு விண்ணுலக விஞ்ஞானி. நான் ஒரு விண்ணுலக விஞ்ஞானி. ஹா ஹா ஹா. ஹா ஹா ஹா. நான் ஒரு விண்ணுலக விஞ்ஞானி,” என்று தெருக்களில் பாடித் திரிந்தார். ஆனால் அவரது கொண்டாட்ட மனநிலை வெகு விரைவில் மாற்றம் கண்டு, பெருஞ்சோகத்தில் அவரை ஆழ்த்தவும் செய்யும். “ஆனால் நான் கற்காலத்தில் வாழ்கிறேன். ஆனால் நான் கற்காலத்தில் வாழ்கிறேன், நான் ஒரு விண்ணுலக விஞ்ஞானி,” என்று சொல்லியபடி திடீரென்று ஒரு குழந்தையைப் போல் கேவிக்கேவி அழத்துவங்கி விடுவார்.

மருத்துவர்களும் இந்தப் பாதையில்தான் பயணித்தனர். இந்தக் கோளுக்கு வந்திறங்கும்போது அவர்கள் தங்களுடன் ஏராளமான மருந்துகள் எடுத்து வந்திருந்தனர். “குப்பிகள், மாத்திரைகள், சிரப்புகள் என்று பல்வகை மருந்துகள் அவர்களிடம் இருந்தன. மருந்தூசிகள், கத்திகள், சாவணக் குரடுகள் என்று பல மருத்துவ உபகரணங்களும் வைத்திருந்தனர். இவை தவிர ஏராளமான உயர் அறிவியல் கருவிகளும் அவர்கள் பயன்படுத்தினர், அவற்றின் பெயர்களே பிரமாதமாக இருந்தன: குறுக்குவெட்டு வரைவு, காந்த அதிர்வலை வரைவு என்று வெவ்வேறு வகைகளில் உடலின் இயக்கங்களைப் பதிவு செய்து நோயறியப் பயன்படுத்தினர். அவர்களின் நடையே பிற மனிதர்களிடமிருந்து தங்களைப் பிரித்துக் காட்டுவதாக இருந்தது. பொதுமக்களிடமிருந்து விலகி வாழ்ந்த மருத்துவர்கள் சாதாரண மனிதர்களுக்கு தெய்வங்கள் போலிருந்தனர்.

ஆனால் ஒரு நாள் மின்சாரம் காணாது போனதும்தான் மருத்துவர்கள் தாமும் மனிதர்களே என்பதை உணர்ந்தனர். அவர்களின் கையிருப்பில் இருந்த ஆற்றல் மிக்க மருந்துகளின் எண்ணிக்கை குறைந்தன. அவற்றுக்காக ஆங்காங்கே வன்முறை வெடித்தது. சில நாட்களில் அத்தனை மருந்துகளும் தீர்ந்து போயின. இப்போது மருத்துவர்களிடம் புத்தகங்கள் மட்டுமே இருந்தன. அவர்களின் தலைக்குள் அத்தனை அறிவும் பாதுகாப்பாக இருந்தது, ஆனால் அவ்வளவு அறிவும் மருந்தும், மருத்துவக் கருவிகள் இருந்தால்தான் செயல்பட்டன. இந்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர் மருத்துவர்கள். இவர்களில் சிலர் மரப்பட்டைகள், வேர்கள், இலைகள் முதலானவற்றைக் கொண்டு மருந்து தயாரிக்க முயற்சித்தனர். பிறர் தம்மிடம் சிகிச்சைக்கு வந்த துயரர்களைச் சினந்து விரட்டினர், சிலர் காட்டுக்குள் ஓடி மறைந்தனர்.

பூமியிலிருந்து இங்கு வந்தவர்களில் உயர்பணியில் இருந்தவர்களில் குறிப்பிடத்தக்க அதிகாரம் கொண்டவர்கள் தங்களை மேலாண்மைத் துறையினர் என்று அழைத்துக் கொண்டனர். அவர்களது வேலை பிறரிடம் வேலை வாங்கிவிட்டு அதற்கான பெருமையைத் தமக்குரியதாக கோருவதாக இருந்தது. அவர்கள் ஒரு குழுவை அமைத்தனர். குவிமையம், முன்னூக்கச் செயலாக்கம், முதலீட்டின் வரத்து என்று என்னென்னவோ பேசினர். அவர்கள் பேசுவது யாருக்கும் புரியாத காரணத்தால் மக்கள் அவர்கள்மீது பெருமதிப்பு வைத்திருந்தனர். தீசலெண்ணெய் முடிவுக்கு வந்ததும் அவர்கள் அறிவியலாளர்களிடம் உள்ள தரவுகள் அனைத்தையும் தொகுத்து அவற்றைப் பதினெட்டு வகை அட்டவணைகளாகவும் வரைபடங்களாகவும் பகுப்பாய்வு செய்து தீசலெண்ணெய் குறித்து இனி எதுவும் செய்வதற்கில்லை என்று அறிக்கை சமர்ப்பித்தனர்.

ஏற்கனவே தன் பிரச்சினைகளால் மிகுந்த அழுத்தத்தில் இருந்த ஒரு விஞ்ஞானி இந்த ஆய்வறிக்கை முடிவுக்கு வந்ததும் சில மேலாண்மைத்துறை ஆய்வாளர்களைக் கடுமையாகத் தாக்கி விவாத அறையைவிட்டு வெளியே வீசி எறிந்தார். முடிவில் இவர்களின் சிறப்புப் பயிற்சி சமையல் அடுப்புகளுக்குத் தேவையான சுள்ளி பொறுக்கத் தக்க வகையில் அவர்களைத் தயார் செய்து வைத்திருக்கிறது என்று முடிவெடுக்கப்பட்டு, தினந்தோறும் காலை ஆறு முதல் மாலை எட்டு மணி வரை காடுகளில் மரம் வெட்டி சுள்ளி கொண்டு வரும் பணியில் மேலாண்மைத்துறையினர் அனைவரும் அமர்த்தப்பட்டனர்.

(தொடரும்)

Image Credit : Laughingsquid.com