புலியின் வாயில் – ராண்டோ

 

புலியின் வாயில் சிக்கிய முள்கரண்டி.
வாய்மூட முடியாதபடி படுவேதனை.
மரத்தடியில் இளைப்பாறிய புலி
சங்கடவிழிகள் மின்னுவதை
ஊரார் கண்டனர்.

அன்று ஒரு நாளைக்கு
அடர்கானகம் சற்றே தளர்ந்தது.

நீர் சொட்டி சடைதரித்த
பக்கத்து காட்டுப் புனுகுப்பூனை
அடங்கமாட்டாமல் சிரித்தது.

தலையைத் தூக்கி முதலைகள் விசாரித்தன.
இளைய இருமுயல்கள்
சற்றே கூடிநின்று ஒளிமணி மூக்கு
சுழித்துச் சென்றன.

மரக்கிளைமேல் குரங்கு;புதர் மறைவில் மான்
ராச்சுற்றி திரும்பிய ஓநாய்.

சில நிமிட சிரிப்புக்குப்பின்
எல்லாவற்றுக்கும் ஒரே கேள்வி
மீதமிருக்கும் கேக் எங்கே?

(ரா கிரிதரன்)

புலியின் வாயில் சிக்கிய
புல்லிதழ்கள் அரைபட்டுக்கொண்டிருக்கிறது

வறண்டு கிடக்கும் பன்றியின் சடலத்தை
எலும்பு வாளி மேல்
குப்புறத்தள்ளுகிறது.

பெருவயிறை சரித்துக்கொண்டு
தரையைக் கீறியபடிக்கு
புரண்டு படுக்கிறது

கிறங்கி செருகிய இமைகளுக்கு பின்னால்
இளஞ்சூட்டு மாமிசத்தை துரத்திப் பிடிக்கும்
சாகசப் புலியொன்று
எட்டடி வேலியைத்தாண்டிக் குதித்து
ஓடுகிறது

(ஸ்ரீதர்)

புலியின் வாயில் சிக்கிய
கவிதையொன்று விடாது தொந்தரவு செய்ய

பற்களிடையே அகப்பட்டுக் கொண்ட
கவிதையை முழ நீள நாக்கால் வெளித்தள்ள
முயன்று முயன்று தோற்றுப் போய்
உதவிக்கு ஆள் தேடியது

தான் ஒரு புலி என்ற பலவீனம் உணர்ந்தது
கவிதை ஊறிப்போய்
ஒரு காலையில் தானாக வெளிவந்தது
காடே கொண்டாடியது
’அடப்போங்கடா’ என்றது புலி

(அதிகாரநந்தி)

புலியின் வாயில் சிக்கிய
வார்த்தைகள்
நாக்கின் மேல் நழுவி சென்று
தொண்டையில் மாட்டிக்கொண்டன

வார்த்தைகளை தேடி வந்த
கவிஞன் புலிக்கு பயப்படாமல்
அதன் வாயை அகலத் திறந்து
பற்கள் கையை கீற, உள்ளிருக்கும்
வார்த்தைகளை வெளியே எடுத்தான்

இரண்டு கைகளிலும் நிரம்பி வழியும் ஈர
வார்த்தைகளை ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருக்கிறான்-
அவனை ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருக்கிறது புலி.

(சுரேஷ்)

புலியின் வாயில் சிக்கிய
பந்தொன்று உருண்டுகொண்டே
இருக்கிறது,
உள்ளேயும் செல்லமுடியாமல்,
வெளியேயும் செல்லமுடியாமல்.

உளியின் நுனியில் சிக்கிய
புலி, இன்னும்
உறுமிக்கொண்டேயிருக்கிறது
விழுங்கவும் முடியாமல்
உமிழவும் முடியாமல்.

(அனுகிரஹா)

அனுபந்தம்:

புலியின் வாயில் சிக்கியதை
பிளாட்டில் பத்திரமாய்
வார்த்தைகளின் வலையில்
கவிதையெனக் கண்டெடுத்த
சாகசத்தைக் கொண்டாடும்
கேக்குண்ணும் கவிகளைக்
கண்டு மிரண்டு
கவிதையும் புலியும்
வேலியைத் தாண்டி
காட்டிற்கு குதித்தோடுவதை
நினைத்துப் பார்க்கையில்
தன்னையே
எழுதிக் கொண்டது.

(நம்பி கிருஷ்ணன்)

image credit: liveinternet.ru

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.