– எஸ். சுரேஷ் –

வல்லூறுகள் என்றும் தாம் குற்றம் புரிந்ததை ஏற்பதில்லை
சிறுத்தைகளுக்கு நியாய அநியாயம் தெரிவதற்கில்லை
தாக்கும்போது பிரான்ஹாக்கள் வெட்கப்படுவதில்லை.
பாம்புகளுக்குக் கையிருந்தால், கறைபடாத கரங்களைக் காட்டும்.
நரிகளுக்கு வருத்தம் என்றால் என்னவென்று புரியாது.
சிங்கங்களுக்கும் உண்ணிகளுக்கும் பாதையில் தடுமாற்றமில்லை,
அவசியமென்ன, எது சரி என்று நன்றாகத் தெரிந்தபின்னே?
திமிங்கலங்களின் இதயங்கள் ஒரு டன் எடை இருந்தாலும்,
பிற அனைத்து வகைகளிலும் கனமற்றவை.
சூரியனின் இந்த மூன்றாம் கோளில்
மிருகத்தனத்தின் அடையாளங்களில்
சுத்தமான மனசாட்சிக்கே முதலிடம்.
– விஸ்லாவா ஸிம்போர்ஸ்கயா
தெரிந்துதான் சொல்கிறார் விஸ்லாவா. மிகப்பெரும் கொடூரங்கள் இழைக்கப்பட்ட ஒரு தேசத்தில்தான் அவர் வாழ்ந்திருந்தார். அங்கு இனத்தின் பெயராலும், தேசயத்தின் பெயராலும் அரசியல் கொள்கைகளின் பெயராலும் படுகொலைகள் அரங்கேறின. அவற்றை நிகழ்த்திய சர்வாதிகாரிகளுக்கோ பாசிஸ்ட்டுகளுக்கோ மனசாட்சியின் உறுத்தல் இருக்கவில்லை – ஒன்றில்லை என்றால் வேறொரு கொள்கை அவர்களுடைய மனசாட்சியைச் சுத்தமாக வைத்திருந்தது.
உலகெங்கும் இப்படிதான். இருபதாம் நூற்றாண்டின் வரலாறு நெடுக இரக்கமில்லாமல் பல பத்தாயிரக்கணக்கான மக்களைக் கொன்ற ஆட்சியாளர்களின் பெயர்கள் ஒரு நீண்ட பட்டியல். இவர்களில் எவரும் தங்கள் செயலுக்கு வருந்தவில்லை. ஒவ்வொருவரும் மிருகத்தனமாக நடந்து கொண்டனர், ஆனால் அனைவருக்கும் அப்பழுக்கற்ற மனசாட்சி இருந்தது.
எப்படி அவர்களது மனசாட்சி குற்றமற்று இருந்திருக்க முடியும்? தன் தேசத்து மக்களில் 25 சதவிகிதத்தினரை அழித்த போல் பாட் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தபின் எப்படி அமைதியாக மரணமடைய முடிந்தது? இடி அமின் பற்றி விக்கிபீடியாவில் இப்படி இருக்கிறது, “நாடு கடத்தப்பட்டு சவுதி அரேபியாவில் வாழ்ந்த காலத்தில் அவர் அளித்த நேர்முகங்களில் உகாண்டா மீண்டும் தன் ஆட்சியை நாடுகிறது என்றார் அமின், தன் ஆட்சிகாலம் குறித்து அவர் சிறிதும் வருத்தம் தெரிவிக்கவில்லை”. இவை இரு உதாரணங்கள்தான். மிருகத்தனமாக நடந்து கொண்ட எந்த ஒரு சர்வாதிகாரியும் பிற்காலத்தில் தன் செயல்களை நினைத்து வருந்தியதாய் இதுவரை நான் படித்ததேயில்லை.
தாங்கள் ஏதோ ஒரு வகையில் இந்த பூமியை ஆளத் ‘தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்’ என்ற பேரதிகாரவெறியால் ஏற்பட்ட நம்பிக்கையின் காரணமாக இவர்களுக்கு எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாதிருக்கலாம். பல காரணங்களில் இது ஒரு காரணம்தான். மனசாட்சியைச் சுத்தமாக வைத்துக் கொள்ள எண்ணற்ற வழிகள் இருக்கின்றன – சமயம், தேசம், சாதி, இனம், அரசியல். ஒவ்வொன்றும் மனிதனின் மிருகத்தனத்துக்கு இணக்கமான மாசு மருவற்ற மனசாட்சிக்கு ஒரு தளம் அமைத்துக் கொடுக்கின்றன.
ஒரு குழுவாய் கூடுவதும், சில குறிப்பிட்ட அடையாளங்களை உருவாக்கிக் கொள்வதும் இயற்கையான உந்துதல்தான் என்பதை நாம் புரிந்து கொண்டாக வேண்டும். பல விஷயங்களில் இது போன்ற அடையாளங்கள்தான் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்திருக்கின்றன. அதே சமயம், ஒவ்வொரு அடையாளமும் உள்ளார்ந்த அபாயம் கொண்டது – இந்நாட்களில் வேற்றுப்படுதல் என்று நாம் அதை அழைக்கிறோம். இந்தப் போக்கைத் தீவிரமாக எடுத்துச் சென்றால், மிக அதிக அளவில் சேதம் விளைவிக்கும்.
சாதியை எடுத்துக்கொண்டால், ஆதிக்க சாதியினர் தம்மால் தாழ்த்தப்பட்ட சாதியினரை மோசமாக நடத்துவதற்கான நியாயத்தை அது அளிக்கிறது. சாதி அமைப்பே அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மக்களை எந்த வருத்தமும் இல்லாமல் ஆதிக்க சாதியினர் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தும் உரிமையைக் கடவுளே அனுமதிப்பதாக நம்பும் வகையில் உருவாக்கப்பட்டது.
அல்லது சமய அமைப்பை எடுத்துக் கொள்ளலாம். மதத்தின் பெயரால் எண்ணற்ற போர்கள் நடைபெற்றிருக்கின்றன, இன்றும் மிருகத்தனமாக நடந்து கொள்கிறோம். இருந்தாலும் எல்லாருக்கும் களங்கமற்ற மனசாட்சி இருக்கிறது – காரணம், பிறரைச் சகித்துக் கொள்ளாத மதம் அவர்களது செயல்களை நியாயப்படுத்துகிறது.
இதேதான் அரசியல் கொள்கைகள் விஷயத்திலும். பல்லாயிரக்கணக்கான மக்களை சைபீரியாவுக்கு அனுப்பி கொலை செய்தது குறித்து ஸ்டாலின் வருத்தப்படவேயில்லை. அவர் தன்னை ஒரு தத்துவக் கோட்பாட்டின் பாதுகாவலராக நினைத்துக் கொண்டிருந்தார்.
தேசியமும் போரும் இன்னும் சிக்கலான விஷயங்கள். மக்கள் விருப்பப்பட்டு தேசியத்தின் பெயரால் மிருகத்தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர். தன் தேசத்தவர் ஏதோ ஒரு வகையில் இனக்கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளாமல் ஹிட்லரால் அவ்வளவு யூதர்களைக் கொன்றிருக்க முடியாது.
காலனியம் கொண்ட பலிகள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன, ஆனால் காலனியாதிக்கத்தை நடைமுறைப்படுத்திய எவரும் அதற்காக வருந்தவில்லை – தாம் உயர்ந்தவர் என்ற நம்பிக்கை அவர்களது மனசாட்சியைச் சுத்தமாக வைத்துக் கொண்டது.
சமய நம்பிக்கை உள்ள ஒவ்வொருவனும் மதவெறியன் அல்ல என்பதையும் சொல்லிவிடுகிறேன். ஒவ்வொரு வெள்ளையனும் இனவாதியல்ல, ஆதிக்க சாதியினர் அனைவரும் சாதி வெறியர்கள் அல்ல – விதிவிலக்குகள் ஏராளம் உண்டு. என்றாலும், தீவிர உணர்வுகளுக்கு இத்தகைய அடையாளங்கள் நியாயமான் காரணங்களை அளித்து குற்றவுணர்விலிருந்து பாதுகாப்பு கொடுக்கின்றன என்பதைச் சுட்ட வேண்டும்.
இங்குதான் நாம் காந்தியின் மகத்தான சாதனையை உணர்கிறோம். உலகின் பன்னாட்டுத் தலைவர்களும் பல்வேறு காரணங்களைக் கண்டுபிடித்து எதிரிகளை எப்படியாவது அழிப்பதற்கான சமாதானங்களை உருவாக்கினர். சுத்தமான மனசாட்சியோடு எத்தகைய கொடுமைகளை இழைக்கவும் தங்கள் ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் நியாயங்களை அளித்தனர். சிறிது வருத்தமும் இல்லாமல், பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு வன்முறைச் செயல்களை இத்தலைவர்கள் நிகழ்த்தினர். ஆனால் காந்தியோ மக்களைக் குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தினார்.
பள்ளியில் இந்திய வரலாறு பற்றி படித்தது இன்னும் நினைவிருக்கிறது. 1920களில் காந்தி சத்தியாகிரக போராட்டம் அறிவித்திருந்தார். ஆனால் அப்போது எங்கோ ஓரிடத்தில் வன்முறை வெடித்து மக்கள் ஒரு காவல் நிலையத்தை தீயிட்டுக் கொளுத்திவிட்டனர். இதையறிந்ததும் காந்தி உடனே சத்தியாகிரக போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டார். இதைப் படித்தபோது நான் மிகவும் ஆத்திரப்பட்டேன். மக்களின் கோபத்தைப் பயன்படுத்திக் கொண்டு சுதந்திரப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தாமல் அதற்கான பாதையில் தடைகளை எழுப்பியிருக்கிறார் காந்தி என்று நினைத்தேன்.
ஆனால் வெகு நாட்களுக்குப் பின்னரே காந்தியின் மதிப்பை உணர்ந்தேன். காந்தி அன்று செய்தது சரி என்று இப்போது எனக்குத் தெரிகிறது. நாம் ரத்தம் சிந்தாமல் விடுதலை பெற முடிந்தது என்றால் அதற்குக் காரணம் காந்தி தொடர்ந்து நம் மனசாட்சியைத் தூண்டிக் கொண்டே இருந்ததுதான். அன்று காந்தி அவ்வாறு செய்ததால்தான் நாம் இன்னும் ஜனநாயக நாடாக இருக்கிறோம். நம்மைச் சுற்றியுள்ள தேசங்களில் உள்ள பிரச்சினைகளைப் பார்க்கும்போது காந்தி மீதான மதிப்பு உயர்கிறது.
சக்திவாய்ந்த அமைப்புகளுக்கு எதிராக ஒரு தனி மனிதன் என்ன செய்துவிட முடியும் என்று நாம் நினைப்பதுண்டு. கொடூரமாக நடந்து கொள்ளும் எவரும், அவர் எப்பேற்பட்டவராக இருந்தாலும், குற்றமற்ற மனசாட்சியோடு இருக்க விடக்கூடாது என்று நாம் உறுதி செய்து கொண்டால் தீய சக்திகளின் ஆற்றல் குறைந்துவிடும். குற்றவாளிக்குத் தேவையான சமாதானங்களை உருவாக்கி அவருக்கு ஆதரவு அளிக்கும்போது நாம் மிருகத்தன்மைக்கு ஆதரவளிக்கத் துவங்குகிறோம்.
நாம் எவருக்கு ஆதரவாக இருந்தாலும் சரி, எந்த அடையாளம் கொண்டிருந்தாலும் சரி, மிருகத்தன்மையைக் கண்டிப்பதில் மட்டும் எப்போதும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. யார் தவறு செய்தாலும் அவர்களது மனசாட்சி அவர்களை உறுத்த வேண்டும் என்ற வகையில் செயல்படுபவர்களில் நாம் ஒருவராக இருக்க வேண்டும். இதைச் செய்யத் தவறினால், “மிருகத்தனத்தின் அடையாளங்களில்/ சுத்தமான மனசாட்சிக்குதான் முதலிடம்.,” என்று விஸ்லாவா எச்சரிப்பதை மறந்தால், சுத்தமான மனசாட்சியின் நாளைய பலி நாமாக இருக்கக்கூடும்.
image credit: story.gala.pl