
அவன் நிறைய சம்பாதித்தான்- என்று
பேசிக் கொள்கிறார்கள், எவ்வளவு
என்று யாருக்கும் தெரியவில்லை
அவன் துவங்கிய கம்பெனியை, ஏதோ
ஒரு நிறுவனம் வாங்கிக் கொண்டது-
32 வயதில் வேலையை விட்டான்
ஜெயநகரில் ஒரு பார்க்கின் அருகில்
வீடு வாங்கிக் கொண்டான், தினமும்
மாலையில் கிரிக்கெட் விளையாடுகிறான்
பணம் இருப்பதாய் காட்டிக் கொள்வதில்லை
அக்கம்பக்கத்தில் இருக்கும் சிறுவர்கள்
விளையாட வருகின்றனர்.
அவன் எந்த இயக்கத்திலும் சேரவில்லை
எந்த இடத்திலும் பணம் போடவில்லை
எந்த சாமியாரிடமும் போகவில்லை
புதுப்புது ஊர்களைப் பார்க்கவில்லை
திருமணம்கூட செய்யவில்லை, எப்போதும்
தன் வீட்டில் ஓய்வாய் இருந்தான்
எப்போதாவது சினிமா போவான், அல்லது
டிவியில் ஸ்போர்ட்ஸ் பார்ப்பான், தினமும்
மாலையில் கிரிக்கெட் விளையாடுவான்
இது என்ன பிழைப்பு, என்று
நினைத்தார்கள், ஒரு லட்சியம்
இல்லாமல், குழந்தை குட்டி இல்லாமல்
வெட்டியாய் தின்பதும் தூங்குவதும்
தினமும் விளையாடுவதுமாய்
வாழ்வதில் யாருக்கு என்ன புண்ணியம்
என்று அக்கம்பக்கத்தில் பேசிக் கொண்டது
அவனுக்குக் கேட்டிருக்குமா, தெரியவில்லை,
ஆனால் ஒவ்வொரு நாளும் மாலை
ஐந்தரை மணிக்கு, மழை
பெய்யாத ஒவ்வொரு நாளும், கிரிக்கெட்
விளையாட வந்துவிடுகிறான்.
புகைப்பட உதவி: 3pointmagazine.gr