முகத்தின் மறுபக்கம்

wagstrom-thomas
Karl Ove Knausgaard எழுதிய முகத்தின் மறுபக்கம் என்ற நீண்ட கட்டுரையின் தமிழாக்கப்பட்ட சிறு பகுதி: முழு கட்டுரையையும் இங்கே வாசிக்கலாம்

பின்னங்கழுத்தை நினைத்துப் பார்க்கும்போது முதலில் மனதில் தோன்றுபவை கில்லட்டின்கள், சிரச்சேதங்கள், மரணதண்டனைகள். இது சிறிது வினோதமாகவே இருக்கிறது – ஏனெனில் நாம் வாழும் தேசத்தில் மரண தண்டனைகள் விதிக்கப்படுவதில்லை – இங்கு கில்லட்டின்கள் இல்லை, எனவே நம் பண்பாட்டில் சிரச்சேதம் முழுமையாகவே ஒரு விளிம்புநிலை நிகழ்வாக இருக்கிறது. என்றாலும்கூட, பின்னங்கழுத்து என் நினைவுக்கு வரும்போது, வெட்டி வீசு என்று நினைத்துக் கொள்கிறேன்.

பின்னங்கழுத்தின் இருப்பு முகத்தின் நிழலின் மறைவில் என்பது இதற்கு காரணமாக இருக்கலாம் – நம்மைப் பற்றிய நம் சிந்தனைகளில் இது பிரதானமான ஒரு இடத்தை எடுத்துக் கொள்வதில்லை. மிகத் தீவிரமான கட்டங்களில் மட்டும்தான் மேடையேறுகிறது –  உலகில் நாமிருக்கும் பிரதேசத்தில் அரங்கேறுவதில்லை என்றாலும், நம் மத்தியில் பரந்துப்பட்டுக் கிடக்கிறது – புனைவுகளில் எண்ணற்ற சிரச்சேதங்கள் நடக்கின்றன என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். ஆனால் இது இன்னும் ஆழமான விஷயம் என்று நினைக்கிறேன். நம் உடலில் மிகவும் பாதுகாப்பற்ற, திறந்தமேனியாய் இருக்கும் இடம் இதுதான் என்றுகூடச் சொல்லலாம். நம் அனுபவத்தில் இதுதான் மிகவும் அடிப்படை விஷயம் – நம் கழுத்துக்குமேல் எந்தக் கத்தியும் தொங்கிக் கொண்டு இருக்கவில்லை என்றாலும். இந்த அர்த்தத்தில் பார்த்தால் இந்த அச்சம், பாம்புகள் அல்லது முதலைகள் குறித்த அச்சத்தோடு தொடர்பு கொண்டது – மத்திய ஆப்பிரிக்காவில் வாழ்பவனுக்கு உள்ள அச்சம் போலவே இது பின்மார்க்ஸ்விட்டா சமவெளியில் வாழ்பவர்களையும் அச்சுறுத்தக்கூடியது. இதைப் பேசும்போது, இந்த அச்சம் உயரங்களைக் கண்டு அஞ்சுவது போன்றது என்றும் சொல்லாம் – சமவேளிகளையும் மணல் திட்டுகளையும், புதைகுழிகளையும் சதுப்புகளையும், வயல்வெளிகளையும் புல்வெளிகளையும் தவிர வேறு எதையும் கண்டிராதவர்கள் உள்ளத்திலும் இந்த அச்சம் உறங்கிக் கொண்டிருக்கலாம்.

அச்சம் தொல் உணர்வு. அது உடலில் பதியப்பட்டிருக்கிறது, தன் தூய வடிவில் எண்ணத்தால் தீண்டப்பட முடியாதது. அது நம்மை உயிரோடு காப்பற்றி வைத்திருக்கவே நம்மோடிருக்கிறது. உடலில் பாதுகாப்பற்ற வேறு பகுதிகள் இருக்கின்றன, இவற்றில் இதயம் எல்லாருக்கும் தெளிவு, ஆனால் இதயத்தை நினைக்கும்போது நான் அது வேலாலோ ஈட்டியாலோ தோட்டாவாலோ துளைக்கப்படுவதாக நினைப்பதில்லை; அது அபத்த கற்பனையாக இருக்கும். இல்லை, இதயம் என் நினைவுகளை உயிர் மற்றும் ஆற்றலின் எண்ணங்களால் நிறைக்கிறது. பாதுகாப்பின்மையும் அச்சமும் இது தொடர்பாய் இருக்கிறதென்றால் அது ஒரு சிறு கவலையாக மட்டுமே இருக்கிறது – ஒரு நாள் இதயம் துடிப்பதை நிறுத்திக் கொள்ளலாம். இதயம் நம் உடலின் முன்பகுதியை ஆக்கிரமித்திருப்பதால்தான் இது இப்படி இருக்க வேண்டும். இந்த முன்பகுதியை நாம் உலகை நோக்கித் திருப்புகிறோம், எப்போதும் கவனத்தில் இருத்தி வைத்திருக்கிறோம். நம் முன் இருப்பதை நாம் பார்க்க முடியும், வருவதை நாம் காண முடியும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இதயம் பாதுகாப்பாக உணர்கிறது. பின்னங்கழுத்தும் அது போன்றே பாதுகாப்பாக இருக்கிறது, நம் உலகில் யாரும் கத்திகளை ஏந்தித் திரிவதில்லை- ஆனால் அந்த உண்மை நாம் பாதுகாப்பற்று இருப்பதான உணர்வை மாற்றுவதில்லை. இந்த அச்சம் தொல் உணர்வுதான், உடலின் பின்பகுதிக்கு உரியதாக இருக்கிறது என்ற உண்மையோடு நெருங்கிய தொடர்பு கொண்ட உணர்வு இது, பின்னங்கழுத்து எப்போதும் நம்மால் பார்க்க முடியாத, நம்மால் கட்டுப்படுத்தப்பட முடியாத திசையை நோக்கித் திரும்பி நிற்கிறது. நாம காண முடியாத அனைத்து விஷயங்களின் அச்சமும் பின்னங்கழுத்தில் குழுமுகின்றன, பண்டை காலங்களில் இது உடல் மீதான வன்முறையோடு தொடர்பு கொண்ட அச்சமாக இருந்தால் இப்போது இதற்கு மிகவும் அழுத்தம் கொடுக்கும் தொடர்பு உவம உவமேயப் பொருளில் உள்ளது. இந்த வன்முறை சமூக தளத்தில் இருக்கிறது, பின்னாலிருந்து தாக்கப்படுதல், கழுத்தில் வாங்குதல், உன் முதுகை கவனி, தலைக்குப் பின்னால் கண்கள் இருத்தல் மற்றும் புறம் பேசுதல்.

ஆனால் பின்னங்கழுத்தில் தோன்றி விரியும் குறியீட்டு மொழியும் பின்னங்கழுத்தில் குவியும் தொடர் எண்ணங்களும், தாக்கப்படுதல் குறித்து மட்டுமல்ல. அது, எதிர்பாராத ஒரு தாக்குதலில் ஏதும் செய்வதற்கில்லாமல் பலியாவதுமாகும். அல்லது உன்னிடமிருந்து ஏதோ ஒன்று பறித்துக் கொள்ளப்படுதல் குறித்த விஷயமும் அல்ல. அதன் எதிரிடையும் உண்டு, இங்கே பாதுகாப்பின்மை என்பது வலிந்து அளிக்கப்படுகிறது – நாம் ஒருவருக்கு மரியாதை செலுத்தும்போது, அவருக்கு பணிவு காட்டும்போது, அவர்களை வணங்குகிறோம். வேறு வார்த்தைகளில் சொன்னால் நாம் நம் பின்னங்கழுத்தைக் வெளிக்காட்டுகிறோம். நம் நம்பிக்கையை வெளிப்படுத்தும் வழி அது, அடுத்தவனுக்கு உன்னில் உள்ள ஏதோ ஒன்றை வழங்குதல் அது. பகுத்துப் பார்த்தலின் பண்டைய அமைப்பில் அனைத்தினும் உயர்ந்த ஒன்றன்முன் நீ தாழவும் நீளவும் வளைந்து வணங்குகிறாய், ஒரு அரசன் அல்லது மரியாதைக்குரிய பிறரிடம் செய்வது போல். அது மட்டுமல்ல, மண்டியிட்டு உன் சிரசைத் தரையில் தாழ்த்தி வைக்கிறாய், ஒரு சன்னதியிலோ பிரார்த்தனைப் படுகையிலோ செய்வது போல். இந்தச் செயல் மிகவும் அடக்கமானது, தன்னை அர்ப்பணித்துக் கொள்வது, இதன் பொருள் உன் உயிரைப் பிறர் கைகளில் ஒப்படைப்பது.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.