The Ascender என்ற தளத்தில் டாமியன் வால்டர் எழுதியுள்ள Rebuilding the World என்ற கட்டுரையின் மொழிபெயர்க்கப்பட்ட பகுதிகள்:
இரு உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இங்கிலாந்தில் உள்ள கல்லூரி நகரான ஆக்ஸ்ஃபோர்டில், கற்பனையை மீட்டெடுக்கும் கதைகளைப் படைக்கும் நோக்கத்தில் சில எழுத்தாளர்கள் The Inklings என்ற குழுவாய் கூடினார்கள். அவர்களில் சி.எஸ். லூயிஸ் ஒருவர், அவரது நார்னியா நாவல்கள் ஒரு தலைமுறை குழந்தைகளை வசீகரிப்பதாக இருக்கும். ஜே.ஆர்.ஆர். டோல்கின் மற்றொருவர், இவரது மிடில் எர்த் இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கதையாக இருக்கும், இதைச் சிலர் ஏற்க மறுக்கலாம். தொழில் புரட்சி உலகில் ஏற்படுத்திய பெரும் மாற்றத்தைத் தன் குழந்தைப் பருவத்தில் கண்ணுற்றவர் டோல்கின். ,மனித வரலாற்றில் முதன்முறையாக உலகெங்கும் வெடித்த பெரும் யுத்தத்தின் கொடூரங்களைத் தன் இளம் பருவத்தில் எதிர்கொண்டு உயிர்பிழைத்தவர் அவர். இந்த இரட்டை அனுபவங்களைக் கொண்டு அவர் நவீன உலகுக்கான புதிய தொன்மம் என்று தான் கருதிய ஒரு கதையை உருவாக்குவார்.
மிடில் எர்த்தின் மூன்றாம் யுக அஸ்தமனத்தையும், ஒற்றை மோதிரத்தை அழித்து இருள்நாயகன் சௌரனைத் தோற்கடிப்பதற்கான போரை ஆவணப்படுத்தும் கதைதான் டோல்கினின் லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ். இந்தப் போராட்டத்தில் நிறைவு காண ஃப்ரோடோ பாகின்ஸ் என்ற ஹாப்பிட்டால் மட்டும்தான் முடியும். உடல் வலிமையைவிட ஆன்மசுத்திதான் அவனை ஒரு நாயகனாக வரையறுக்கிறது. அவன் தோற்பதானால், மிடில் எர்த்தின் கோகுல உலகம் (பாஸ்டரல் வர்ல்ட்) தீய சக்திகளால் வெற்றி கொள்ளப்படும், பசிய வயல்வெளிகள் புகையை உமிழும் தொழிற்சாலைகளாய் மாறும்.
டோல்கினைவிட பத்தாண்டுகளே இளையவர் ஜார்ஜ் ஆர்வல். அவரும் அதே பண்பாட்டிலும் வளர்ப்பிலும் உருவானவர்தான். சர்வாதிகாரத்தின் கொடூரத்தை விவரிக்கும் ஜார்ஜ் ஆர்வல்லின் பெரும்படைப்பு (மாஸ்டர்பீஸ்), நைன்டீன் எய்ட்டி ஃபோர், மேம்போக்கான பார்வையில் லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ் நாவலிலிருந்து மிகவும் மாறுபட்ட கதை போலிருக்கிறது. அது ஓசியானியா என்ற சர்வசக்திகளும் படைத்த சர்வாதிகார அரசின் உலகை விவரிக்கிறது. இந்தக் கதை வின்ஸ்டன் ஸ்மித்தின் வாழ்க்கையைத் தொடர்கிறது. அவன் கீழ்நிலை அரசு ஊழியன். சுய விடுதலையையும் ஜூலியாவைக் காதலிப்பதற்கான சுதந்திர வெளியையும் நாடுகிறான். ஜூலியாவும் அரசு அமைப்பால் சிறைபடுத்தப்பட்டிருக்கிறாள். ஆனால் தொன்மங்களின் நாயகர்கள் போல் அல்லாமல் பிக் பிரதரின் கொடுங்கோன்மை அரசை வெற்றிகொள்ள வின்ஸ்டன் ஸ்மித் மேற்கொள்ளும் முயற்சிகள் முழுமையாகத் தோற்றுப் போகின்றன. அவன் அறை என் 101ல் வதைக்கப்படுகிறான், தன் காதலியைக் காட்டிக் கொடுக்கிறான், நொறுங்கிய மனிதனாக விட்டுச் செல்லப்படுகிறான். சர்வாதிகாரத்தின் முரட்டு காலணிகளின்கீழ் நசுக்கப்பட்ட ஒரு உலகை நைன்டீன் எய்ட்டி ஃபோர் சித்தரிக்கிறது, இங்கு மீட்சியை நம்புவதற்கே இடமில்லை.
மிகவும் வேறுபட்ட கதைகளாகத் தெரிந்தாலும் ஆர்வெல் மற்றும் டோல்கினின் கதைகள் இரண்டுமே ஒத்த பண்பாட்டு அனுபவங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட கற்பனையின் ஆக்கங்கள்தாம். இவை இரண்டுமே உலகங்களை விவரிக்கின்றன, அந்த உலகங்களின் விதியை விவரிக்கின்றன. இந்தச் சித்தரிப்பில் நம் உலகின் இயல்புகளை வெளிப்படுத்துகின்றன. நைன்டீன் எய்ட்டி ஃபோரின் பிக் பிரதருக்கும் லார்ட் ஆஃப் த ரிங்க்ஸின் இருள்நாயகன் சௌரனுக்கும் உள்ள அடக்குமுறை அதிகாரம், நம் உலகின் மெய்ம்மையின் ஆரோக்கியத்தை ஒடுக்க முனையும் நிஜமான அடக்குமுறை அதிகாரங்களை எதிரொலிக்கின்றது. அசிமோவ் மற்றும் லெ குவின் முதற்கொண்டு அறிவியல் புனைவு வடிவில் தேர்ச்சி பெற்றுள்ள இன்றைய எழுத்தாளர்களின் ஆயிரக்கணக்கான சிறந்த அறிவியல் புனைவுகளைப் போலவே இவை கற்பனையைக் கொண்டு வேறெந்த வழியிலும் நாம் காண்பதற்கில்லாத நம் உலகை விவரிக்கின்றன.
அச்சுப் பக்க துவக்கங்களைக் கடந்து அறிவியல் புனைவு வளர்ந்து விட்டது. திரைப்படங்கள், தொலைகாட்சி, படக்கதைகள் மற்றும் பிற கதைகூறு ஊடகங்களில் பரவலான பொழுதுபோக்கு அடையாளங்களாக அறிவில் புனைவுகள் இருக்கின்றன. ஸ்டார் வார்ஸ், டெர்மினேட்டர், ஹாரி பாட்டர். ஹங்கர் கேம்ஸ். மாட்ரிக்ஸ், எளிய நிஜத்திலிருந்து தப்பும் வாய்ப்பளிக்கும் பொழுதுபோக்கு திரைப்படம் என்று பலரால் புறக்கணிக்கப்பட்டபோதும், அறிவியல் புனைவுகள் மற்றும் மிகுகனவுக் கதைகள் (fantasy stories) பெரிய அளவில் பெற்றுள்ள வெற்றி, தர்க்கத்தின் பாற்பட்ட இவ்வுலகில் கற்பனை மீண்டும் வெளிப்படுவதையே குறிக்கிறது. பெருவாரி மக்களின் பயன்பாட்டு ஊடகங்களைக் கொண்டு அறிவியல் புனைவுகள் உலகளாவிய காட்சியாளர்களைச் சென்றடைகின்றன, கோள் அளவு விரிந்த பார்வையில் நம் உலகைப் புரிந்து கொள்ள நமக்கு உதவுகின்றன.
சமகால அறிவியல் புனைவுகள் நம் கோளின எதிர்காலம் குறித்து மேலும் மேலும் சிக்கலான தோற்றங்களை புனைகின்றன. சார்லஸ் ஸ்ட்ரோஸின் அக்ஸலராண்டோ ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறைகளின் கதை வாயிலாக ‘தொழில்நுட்ப ஒருமைப்புள்ளி” (technological singularity) எட்டப்பட்ட பின் பூமியின் எதிர்காலம் எத்தகைய மாற்றங்களுக்கு உள்ளாகிறது என்பதை விவரிக்கிறது. மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத கட்டத்தை தொழில்நுட்பத்தின் உந்துவிசையால் நிகழும் மாற்றங்கள் எட்டிவிடுகின்றன. இந்தப் புள்ளியை நாம் இப்போதே தொட்டாயிற்று என்று சிலர் கூறலாம்.
லாரென் ப்யூக்ஸின் ஜூ சிட்டி ஜோகானஸ்பர்க்கில் நிகழும் வேறொரு எதிர்கால சாத்தியத்தை விவரிக்கிறது. இங்கு குற்றவாளிகள் ‘மிருகமாக்கப்பட்ட’ ஒரு நிழற்சமூகமாய் வாழ தண்டிக்கப்படுகின்றனர், அவர்களை ஒத்த மிருகங்களுடன் மந்திரத்தன்மை கொண்ட பிணைப்பு ஏற்படுத்தப்பட்டு வாழ்கின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியால் செலுத்தப்பட்ட முதன்மை உலகு குறித்த அனுமானங்கள் இல்லை என்பது ப்யூக்கின் கோள்கொள் பார்வையின் தனித்தன்மை. இதைச் செய்வதைத் தவிர்த்து அவர் வளரும் பொருளாதார அமைப்புகளின் இயல்பினூடாக எதிர்காலத்தைக் கணிக்கிறார்.
சைனா மெல்வில் தன் பெர்டிடோ ஸ்ட்ரீட் ஸ்டேஷன், த சிட்டி, அண்ட் த சிட்டி, எம்பஸிடவுன் போன்ற நாவல்களின் விரிவான அசாதாரண பார்வை (baroque, fantastical vision)v கொண்டு ஜே ஆர் ஆர் டோல்கினின் மிகுபுனை உலகம் முதற்கொண்டு ஐசக் அசிமோவின் விண்வெளி ஒபேராக்கள் வரை அறிவியல் புனைவுகளின் முந்தைய சித்தரிப்புகள் பலவற்றைத் திருத்தி அமைக்கிறார். மெல்வில்லின் கோள்கொள் பார்வை அதற்கு முற்பட்ட பலவற்றை வலுவிழக்கச் செய்கிறது, நாம் காணும் மெய்ம்மையை நம்மால் என்றேனும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியுமா என்ற கேள்வியை எழுப்புகின்றது.
அறிவியல் புனைவின் செய்தி அதன் உள்ளடக்கம் அல்ல. அதைவிட, அந்த ஊடகமே அதன் செய்தியாகவும் இருக்கிறது. நவீன கற்பனையின் சிறந்த படைப்பு என்று அறிவியல் புனைவைச் சொன்னால், அந்தக் கற்பனைதான் நம் கவனத்தின் திசையையும் செலுத்துகிறது. இன்று கற்பனைக்கும் நமக்கும் உள்ள உறவு சிக்கலான ஒன்று. நவீன சமுதாய அமைப்பை உந்திச் செல்லும் அத்தனை பொருட்களையும் கண்டுபிடிப்புகளையும் நாம் மதிக்கிறோம், அதே நேரம் அவற்றின் ஆதாரமாக இருக்கும் கற்பனையை குறைத்து மதிப்பிடுகிறோம். நாம் புத்தொளிகால சட்டகத்தில் தேங்கி நிற்கிறோம், நம் கற்பனையிலிருந்து அன்னியப்பட்டவர்களாக, அர்த்தமற்ற பொழுதுபோக்குக்கும் போக்கற்ற தப்பித்தலுக்குமான குறுக்குச் சந்தாக அதைக் கருதுகிறோம்.
ஆனால் பல தலைமுறைகளாக நம் கதைகள் கற்பனையே தரிசனத்துக்கும் புரிதலுக்குமான ஆதாரம் என்ற அழைப்பு விடுத்தவாறு இருந்திருக்கின்றன. ஜே. ஆர்.ஆர். டோல்கின், உர்சுலா லெ க்வின், ஐசாக் அசிமோவ், ஜார்ஜ் ஆர்வெல், லாரென் ப்யூக்ஸ், சைனா மெல்வில் முதலான ஆயிரக்கணக்கான அறிவியல் புனைவு எழுத்தாளர்கள் கற்பனையில் உதித்த ஆற்றல் மிக்க, வீரியமான காட்சிகளை நமக்கு அளித்திருக்கின்றனர். அறிவியல் புனைவு நமக்கு கொடுக்கக்கூடிய ஓரே ஒரு செய்தி என்று ஒன்று இருக்குமானால், அது நம் உலகின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் கற்பனைக்கு சொல்லில் அடங்காத முக்கியத்துவம் கொண்ட ஒரு பங்கு இருக்கிறது என்பதுதான். பொருண்ம உலகையும், இவ்வுலகின் சமூக, அறிபுல, பேரண்ட அமைப்புகளையும் நாம் நுட்பமாகப் பகுப்பாய்வு செய்ய முடிகிறது. ஆனால், கற்பனையைக் கொண்டு மட்டுமே அத்தனை அறிவையும் ஒன்று திரட்டி முழுமையான புரிதலாக உருவாக்கிக் கொள்ள முடியும். அத்தகைய அறிவுடன் கூடிய கற்பனையில்தான் அறிவியல் புனைவின் கோள்கொள் தரிசனங்கள் கிட்டுகின்றன. நீல வண்ண கோலிக்குண்டு போலிருக்கும் இந்த கோளின பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு அவற்றுக்கு ஒரு வடிவம் அளிக்க வேண்டுமாயின், அறிவியல் புனைவுகளை கவனிப்பது நல்லது.