கவியின்கண் 15 – இறுதி கோஷம்

– எஸ். சுரேஷ் –

The last war slogan

“கின்ஸ்பர்க்”
– ஜூலியோ வைனோகிராட்

குற்றம் சொல்வதற்கில்லை. ஹௌலும் கட்டிஷும் எழுதிய எவரும்
மிச்சமிருக்கும் தங்கள் வாழ்நாளெல்லாம்,
எத்தகைய தவறும் செய்யும் உரிமை ஈட்டியவர்கள்.
என் குறை, இந்தத் தவற்றை அவரோடு நான் செய்திருக்க வேண்டாம் என்பதுதான்.
இது நடந்தது வியட்நாம் போரின்போது
அவர் ஒரு மாபெரும் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார், வாசித்தபடி
வாஷிங்டன் ஸ்கொயர் பார்க்கில் இருந்தார்,
அங்கிருந்து செல்ல யாருக்கும் விருப்பமில்லை,

எனவே கின்ஸ்பர்க்குக்கு இந்த ஐடியா தோன்றிற்று,
“நான் கோஷமிடுவேன், “போர் முடிந்து விட்டது,” என்று
என்னால் முடிந்த அளவு உரக்க,” என்றார்,
“நீங்கள் அனைவரும் ஓடுங்கள் ஊரெங்கும், வெவ்வேறு திசைகளில்
கத்துங்கள் போர் முடிந்து விட்டதென்று, ஆபிஸ்களில் கத்துங்கள்,
கடைகளில், எல்லா இடத்திலும், போதுமான மக்கள்
போர் முடிந்ததை நம்பிவிட்டார்கள் என்றால்
ஏன், அரசியல்வாதிகளாலும்கூட
அதைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்க முடியாமல் போகும்”

எனவே கின்ஸ்பர்க் கோஷமிட்டதும், ஓடினேன், சாலை நெடுக-
ஒரு வாசலுள் தலை நுழைத்தேன்,
மதிப்பான, ஆனால் அதிகம் ஆள் வராத ஒரு கஃபேடரியா,
நூலகர்களும் சாதாரண குமாஸ்தாக்களும் மதியம் சாப்படும் இடம்,
அங்கே கத்தினேன், “போர் முடிந்து விட்டது,” என்று.
அங்கிருந்த சிறிய உருவம் கொண்ட மூதாட்டி ஒருத்தி
நிமிர்ந்து பார்த்தாள்,
தான் உண்டு கொண்டிருந்த காட்டேஜ் சீசும் ப்ரூட் சாலடும் விட்டு.
அவள் மிகச் சாதாரணமாக இருந்தாள்,
அவள் கண்ணுக்கே தெரியாமல் போயிருப்பாள்-
ஆனால் பயங்கரமான அந்த ஒளி
அவள் மெல்லச் சொல்லச் சொல்ல அவள் முகத்தை நிறைத்தது,
“என் மகன். என் மகன் வீடு திரும்புகிறான்,” என்றாள் அவள்.
நான் அங்கிருந்து வெளியேறி ஏதோ செடிகள் மீது வாந்தி எடுத்தேன்.
அப்போதுதான் முதல் தடவையாக,
போர் நடந்து கொண்டிருப்பதை நம்பினேன்.

போர் என்பது தேசம், சமூகம், தனி மனிதன் என்று பல அடுக்குகளில் செயல்படும் சிக்கலான விஷயம். ஒரு பக்கம் போர் நமக்குத் தேவையான ஹீரோக்களையும் வில்லன்களையும் அளிக்கிறது. மறுபக்கம், மனிதனின் மிக மோசமான முடிவற்ற கொடூரம் போரில் வெளிப்படுகிறது. சக மனிதனைக் காப்பற்ற உயிர்த் தியாகம் செய்வது என்பது மனித உணர்வுகளில் உன்னதமானவற்றுள் ஒன்று. அதே சமயம் போர்தான் வதை, வன்புணர்ச்சி மற்றும் சகலவித குரூரங்களும் வெளிப்படும், நாம் நினைத்தே பார்க்க முடியாத கொடூர அவலமாகவும் இருக்கிறது. போரின் இந்த இருவேறு மாறுபட்ட முகங்கள் காரணமாகவே மக்களிடம் இது குறித்த ஒரு தெளிவின்மை நிலவுகிறது.

சங்க இலக்கியம் போன்ற தொன்மைய ஆக்கங்கள் போரைக் கொண்டாடுகின்றன. புறநானூறு, பதிற்றுப் பத்து முதலிய தொகுப்புகளில் உள்ள கவிஞர்கள் பிற அரசர்களைக் கொன்றதைப் பாராட்டி வெற்றி பெற்ற அரசனைப் பாடுகின்றனர். வேந்தர்கள் எதிரியின் நீர்நிலைகளை அழித்ததற்கும், வசிப்பிடங்களை தீயிட்டுக் கொளுத்தியதற்கும் பாடப்படுகின்றனர். இதைக் கேட்கும்போதே அக்கால யுத்தங்கள் எவ்வளவு இரக்கமற்றைவையாக இருந்தன என்று தெளிவாகத் தெரிகிறது. எந்த ஒரு அரசனுக்கும் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. கைப்பற்றப்படுவது என்பது மரணத்தைவிடக் கொடுமையானது என்னும் நிலையில் போர்க்களத்தில் வீர மரணம் தழுவுவதில் ஒரு வசீகரம் இருக்கவே செய்கிறது.

இன்றும் நாம் ஒரு எதிரியை நேருக்கு நேர் எதிர்கொண்டு வாழ்வா சாவா என்ற போராடுவது ஒரு சாகசச் செயல் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம், அந்த வீரத்தை ஒரு நற்குணமாகவே கருதுகிறோம். ஹிட்லரின் வீரத்தைப் பலர் புகழ்வதைக் கேட்க முடிகிறது. இவர்கள் ஏதோ தீவிர வலதுசாரி நாஜிக்கள் அல்ல.அரசியல் சார்புகள் எதுவும் இல்லாத சாதாரண மக்கள். அடிப்படையில் ஹிட்லர் ஒரு கோழை என்பதை வெளிப்படுத்தும் ஆவணங்கள் இருந்தால்தான் என்ன? ‘Rise and Fall of the Third Reich’ என்ற புத்தகத்தில் பல ஆவண ஆதாரங்களுடன் வில்லியம் ஷைரர் இதை நிறுவியும் என்ன பயன்? உலகு அத்தனையையும் ஒற்றை ஆளாக எதிர்த்து நின்றான் என்ற பிம்பம்தான் நமக்கு முக்கியமாக இருக்கிறது.

வீரத்தை நாம் ஒவ்வொருத்தரும் மதிக்கிறோம். இதனால்தான் நம்மால் நம் அச்சங்களை வெற்றி கொள்ள முடிகிறது. இருப்பதிலேயே பெரிய அச்சம் மரண பயம்தான். அந்த மரணத்தையே நேருக்கு நேர் எதிர்கொண்டு நம்மால் நம் மன உறுதியைக் காட்ட முடிகிறது என்றால் அதன்பின் எந்த அச்சம்தான் நம்மை தொல்லை செய்ய முடியும்? எனவேதான் போர் வீரன் மிகவும் மதிக்கப்படுகிறான், போர் அவனது வீரம் வெளிப்படும் களமாகிறது. இது தவிர முன்னமே சொன்னதுபோல் சக மனிதனைக் காப்பாற்ற உயிர்த்தியாகம் செய்கிறான் என்ற கருத்துருவாக்கமும் அவன் புகழுக்கு புகழ் சேர்க்கிறது.

பல தேசங்களின் வரலாற்றையும் போரும் போர் எதிர்ப்பும்தான் உருவாக்குகிறது. ஒவ்வொரு சரித்திரப் புத்தகமும் போர்களையும் வெற்றிகளையும் பேசுகிறது. பள்ளி மாணவர்களில் பலருக்கும் சரித்திர நாயகர்கள் படையெடுத்து போரில் வெற்றி கொண்டவர்களும் படையெடுத்து வந்தவர்களை எதிர்த்து போரிட்டவர்களும்தான். அலெக்சாண்டர், நெப்போலியன், செங்கிஸ் கான், சத்திரபதி சிவாஜி, ரானா பிரதாப் என்று முடிவற்றது இந்தப் பட்டியல். போர் நினைவுகள் தேசிய உணர்வில் மகத்துவமான இடத்தில் இருக்கின்றன. ரஷ்ய இலக்கியத்தில் பல இடங்களில் நெப்போலிய யுத்தங்கள், ஸ்டாலின்கிராட் யுத்தம் முதலானவற்றைப் பார்க்க முடிகிறது.

எத்தனைதான் போர்ப் பெருமிதங்கள் இருந்தாலும், போர் கோரும் விலை எப்போதும் மிக அதிகம், அதிலும் மனித உயிரிழப்புகள் துக்கமானவை. பாக்லாந்து தொடர்பாக இங்கிலாந்தும் அர்ஜென்டினாவும் குட்டியாக ஒரு சண்டை போட்டுக் கொண்டார்கள். அந்த சமயத்தில் டைம் இதழில் ஒரு கட்டுரை வந்தது. துவக்கத்தில் போர் குறித்து பிரிட்டிஷ் மக்கள் பெருமைப்பட்டாலும், தங்கள் கப்பல்கள் அழிக்கப்பட்டபோதுதான் போரின் நிஜம் அவர்களைத் தாக்கியது. இரு உலக யுத்தங்களில் ஏற்பட்ட உயிரிழப்பு பற்றி சொல்லவே வேண்டாம்.

உலக யுத்தங்களும் கிழக்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட அதன் பின்விளைவுகளும் ஐரோப்பிய சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இவற்றில் சில நேரடியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன, பலவும் மறைமுகமாக இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவேதான் போரின் விலை குறித்து நிறைய புத்தகங்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை. எரிக் மரியா ரிமார்க்கின் ‘All Quiet on the Western Front’ மிகச் சிறிய புத்தகம், அப்படிப்பட்ட ஒன்றுதான். சில வாசகர்கள் அது மிகவும் வரண்ட புத்தகமாக இருப்பதாகக் குறை சொல்கின்றனர், ஆனால் அந்த உணர்வை அளிக்க வேண்டும் என்றுதான் அது அப்படி எழுதப்பட்டிருக்கிறது. இதில் போரின் ஒப்பனைகள் களையப்பட்டு அதன் இயல்பு வெளிப்படுகிறது. முதல் உலகப் போர் பற்றி பேசும் இந்த நாவலில் அடுத்த குண்டு எங்கே விழும் என்று காத்துக் கொண்டு போர் வீரர்கள் பதுங்கு குழியில் உட்கார்ந்திருக்கின்றனர். இதில் ஹீரோயிசம் எதுவும் கிடையாது, அச்சம் மட்டும்தான் இருக்கிறது. இவர்கள் பாவம் என்ற ஒரு பரிதாப உணர்வு வருகிறது, போரின் அபத்தம் குறித்த எண்ணங்கள் எழுகின்றன. போரைப் பின்புலமாகக் கொண்டு எர்னஸ்ட் ஹெமிங்வே இரு நாவல்கள் எழுதியுள்ளார். ‘Farewell to Arms’ முதல் உலகப் போரைப் பின்புலமாகக் கொண்டிருக்கிறது, “For Whom the Bells Toll” ஸ்பானிஷ் யுத்தத்தைத் தன் களமாகக் கொண்டுள்ளது.

இரண்டாம் உலகப் போர் ஹோலோகாஸ்ட்டுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கிறது, ஸ்டாலினியம் ரஷ்யாவில் வளர்ந்ததும் கிழக்கு ஐரோப்பாவில் மனித உரிமைகள் நசுக்கப்பட்டதும் அதன் பின்தான். இது நாவல்களிலும் கவிதைகளிலும் பிரதிபலிக்கிறது. ஹோலோகாஸ்ட் தொடர்பான சில அருமையான புனைவுகளை பிரைமோ லெவி செய்திருக்கிறார். வில்லியம் ஸ்டைரானின் ‘Sophie’s Choice’ தனிமனிதன்பால் ஹோலோகாஸ்ட் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பேசுகிறது. இந்த நாவலின் நாயகி சோஃபி தொகுப்பு முகாமில் தனக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளச் செய்யப்படுகிறாள். இது அவளைச் சாகும்வரை துன்புறுத்துகிறது. இதில்தான் நான் மறக்க முடியாத ஒரு உரையாடலை வாசித்தேன் – “ஆஷ்விட்ஸில் கடவுள் எங்கிருந்தார்?” என்ற கேள்விக்கு, “ஆஷ்விட்ஸில் மனிதன் எங்கிருந்தான்?” என்ற பதில் வரும். ஜோசப் ஹெல்லரின் காட்ச்-22 போரின் அபத்தத்தை மிக அருமையாகச் சித்தரிக்கும் படைப்பு. இருள் நகைச்சுவையைக் கொண்டு போரின் அபத்தத்தையும் ராணுவத்தின் அபத்தத்தையும் அவர் பேசுகிறார். ராபர்ட் கிரேவ்ஸ் எழுதிய ‘Goodbye to All That’ இன்னொரு முக்கியமான போர் எதிர்ப்பு நாவல் என்று சொல்கிறார்கள், இன்னும் அதை நான் படிக்கவில்லை.

போர் எதிரொலிகள் கவிதையிலும் உண்டு. பல கவிஞர்கள் தங்கள் போர் எதிர்ப்பு நிலைப்பாட்டைத் தெளிவாக்கியுள்ளனர். பால் எலுவர்ட், லூயி அர்கன் முதலான பிரஞ்சு கவிஞர்கள் போர் அனுபவம் உள்ளவர்கள், ஆக்கிரமிப்பை எதிர்க்கும் கவிதைகள் எழுதியவர்கள். வில்பிரட் ஆவன் மகத்தான போர் எதிர்ப்பு கவிதைகள் சில எழுதியுள்ளார். ஹெர்பர்ட், சிம்போர்ஸ்கா, ரோஸ்விக்ஸ், மிலோஸ் முதலான பல போலிஷ் கவிஞர்களின் படைப்புகள் போர் உணர்வு கொண்டவை, ரஷ்யாவின் ஒடுக்குமுறையைப் பதிவு செய்பவை. போரின் தாக்கத்தை எழுதிய மற்றொரு கவிஞர், பால் செலான். அண்மைய காலத்தில், மிகச் சிறந்த பாலஸ்தீன கவிஞரான மஹ்மூத் தார்விஷ் போர் எதிர்ப்புக் கவிதைகளும் ஆக்கிரமிப்புக்கு எதிரான கவிதைகளும் எழுதியிருக்கிறார்.

போர் இழப்புகள் கடுமையானவை என்ற காரணத்தால் போர் தவிர்க்கப்பட வேண்டும் என்றுதான் பலரும் விரும்புவார்கள். போர் எதிர்காலத் தலைமுறையினரையும் பாதிக்கிறது. ஆனால் சில சமாயம் போர் தவிர்க்க முடியாததாகப் போகிறது, அமைதியைக் காட்டிலும் போரே மேலானது என்ற நிலை உருவாகிறது. ஜெர்மனி மீது போர் தொடுப்பதற்கான நடவடிக்கைகளில் பிரிட்டன் முனைப்பு காட்டியிருந்தால் ஹிட்லர் ஆஸ்திரியா, போலந்து தேசங்களின்மீது படை எடுத்திருக்க மாட்டார் என்று நிறுவுகிறார் வில்லியம் ஷைரர். முதலாம் உலகப் போர் அனுபவத்தின் காரணமாக யாரும் மற்றொரு போரை விரும்பவில்லை. போரைத் தவிர்க்க என்னவெல்லாம் இயலுமோ அது அத்தனையையும் பிரிட்டன் செய்தது. இதுவே ஹிட்லருக்கு துணிவு அளித்து, இரண்டாம் உலகப் போர் நிகழக் காரணமும் ஆனது. இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்தால், 1971 பங்களாதேஷ் போரை நாம் தவிர்த்திருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும்.

பிற எவரையும்விட போர் அன்னையரை மிகக் கடுமையாக பாதிக்கிறது. சங்கச் சித்திரங்கள் புத்தகத்தில் ஜெயமோகன் ஔவை பாடல் ஒன்றைக் குறித்து எழுதுவார். அதில், போர் தொடுக்க ஒரு அரசன் முடிவெடுத்ததன் காரணமாக தன் மகன் பலியானான் என்று ஒரு அன்னை வருந்துவாள். இது ஆச்சரியமான கவிதை. ஏனெனில் வழக்கமாக சங்கக் கவிதைகள் போர் வீரர்களைப் போற்றிப் பாடுகின்றன, குறிப்பாக களப்பலியாவதைத் துதிக்கின்றன. இந்தப் பாடல்களில் அன்னையர் தங்கள் மக்கள் களப்பலியானதைக் கூறி பெருமைப்பட்டுக் கொள்வதுதான் வழக்கம். சங்கக் கவிதைகளில் வீர மரணம் இவ்வளவு சிறப்பித்துப் பாடப்படுவதால், இந்த அன்னையின் புலம்பல் ஒரு ஆச்சரியமாக இருக்கிறது. இது மரபார்ந்த வழக்கங்களை அகற்றி காயமடைந்த தாயின் இதயத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

ஜூலியா வினோகிராட்டின் இந்தக் கவிதை நமக்கு அப்படிப்பட்ட ஒரு தாயைக் காட்டுகிறது – இவள் தன் மகன் திரும்பி வர வேண்டும் என்று கவலையுடன் காத்திருக்கிறாள். கஃபேவில் காத்திருக்கும் தாயின் முகம் போர் முடிந்து விட்டது என்ற செய்தியைக் கேட்டதும் ஒளிர்வது அன்னையர் போருக்குக் கொடுக்கும் விலையையும் போரின் குரூரத்தையும் சித்தரிப்பதாக இருக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.