– எஸ். சுரேஷ் –
“ஹ்ம்ம். இந்தக் கவிதையில் மேக்கப் இல்லை
அனாவசியமான வார்த்தைகள் இல்லை
தேவையற்ற அணிகலன்கள் இல்லை
சொல்லாமல் விடப்பட்ட விஷயங்கள் பல இருக்கு
நம் சிந்தனை விரிய இடம் கொடுக்குது
கவிதைக்கு மிக முக்கியமாக இருக்க வேண்டிய
மௌனம் இதுக்குள்ள இருக்கு,” என்று கூறிவிட்டு
ஒரு நொடி மெளனமாக இருந்தபின்
“கனத்த மௌனம் இருக்கு
மொழியின் எல்லையைத் தாண்டுது
கவிதை இலக்கணத்தை மீறுது
பின்நவீனத்வ கோட்பாடுகளைக் கேள்வி கேக்குது
மொழியோட இசையை நிராகரிச்சி
வார்த்தைகளோட ஒலியை நிராகரிச்சி
வார்த்தைகளுக்கு இடையே இருக்கும்
மௌனம் வழியா நேரடியாப் பேசுது”-
“கவிதை” என்று தலைப்பு மட்டும் எழுதி
நான் கொடுத்த வெற்றுக் காகிதத்தை
இன்னொரு முறை உற்று நோக்கிவிட்டு
பத்திரிகையாசிரியர் என்னிடம் சொன்னார்,
“நம் எல்லா கோட்பாடுகளுக்கும் உட்பட்டிருக்கும்
இந்த கவிதைய அடுத்த வாரம் போட்டுடலாமா?”
