– சிகந்தர்வாசி –

கருவில் சில இறக்கின்றன,
சொல்லோடு பொருள் கூடாமல்
தரிப்புக்கேற்ற உருவம் கிடைக்காமல்,
கவிஞன் கவிதையைக் கொல்கிறான்.
சில காகிதம் சேர்கின்றன,
கவிஞனின் கரங்களைக் கடந்து.
ஆனால் அவற்றில் தெம்பில்லை,
இங்கொரு சொல் ஊட்டி
அங்கொரு வரி கூட்டி
கவிஞன் ஆகக்கூடியதைச் செய்கிறான்-
அவை உரம் பெற்று
உயிர்த்திருக்க-,
இருந்தும் வளராமல்
மெல்ல உயிர் இழக்கின்றன.
சில உருவம் பெற்றுச் செல்கின்றன
மெய்யுலகில் போராட:
மொழியைக் கொண்டு மருந்திடுகிறான்.
விழுப்புண்களுடன் திரும்பும் கவிதைகளுக்கு
சொல்லை மாற்றி, சொல்லின் பொருள் மாற்றி,
சொல்லின் இடம் மாற்றி, அழுகிய சொற்களை வெட்டி,
அழகிய சொற்களை கூட்டி;
குணம் பெற்று போர்க்களம் திரும்பும் அவற்றில்
சில உயிர் பிழைக்கின்றன. பலவும்,
எடிட்டரின் கத்தரியால் துண்டாக்கப்பட்டு
மரிக்கின்றன.
உயிர் பிழைப்பவை, சில ஆண்டுகள்
மெய்ம்மையில் நடமாடுகின்றன.
சிலரால் மட்டுமே அறியப்பட்டு
மெல்ல காலத்தால் மறக்கப்பட்டு,
பலவும் இயற்கை மரணம் எய்துகின்றன.
அதிர்ஷடமிருந்தால் நம் கவிதையும்
ஒரு மாபெரும் கவிஞன் ஆக்கத்தின் அருகில்
புதைந்து கிடக்கலாம்-
அவை உரையாடிக் கொள்ளலாம்,
தங்கள் காயங்களைப் பரிமாறிக் கொள்ளலாம்,
உரமற்ற கரங்களைப் பற்றிப் பேசிக் கொள்ளலாம்-
நினைவின் பிடிநழுவிய கவிதைகளை
நினைத்துப் பார்க்கலாம்.
நல்ல கவிதைகள் சிரஞ்சீவிகளாய்
வாழ்ந்துக கொண்டிருக்கின்றன,
விவாதிக்கப்பட்டு, வாசிக்கப்பட்டு,
ஊக்கமூட்டிக்கொண்டு.
புதியன பிறகும் வாசல்கள் ஆகின்றன.
பிற கவிதைகள்,
மரணத்தில் சமத்துவம் அடைகின்றன,
மனிதர்களைப் போல்.