
…சிறிது தேடலுக்குப்பின் இறுதியில் நான் லிண்டா லூ இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தேன். அவள் ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தாள். நான் கண்டுபிடித்ததை எல்லாம் பரபரப்பாக அவளிடம் சொல்லிவிட்டு என் கையில் இருந்த காகிதங்களையும் மின் அஞ்சல் பரிமாற்றங்களின் அச்சு ஆவணங்களையும் அவளிடம் காட்டினேன்.
அவை அனைத்தையும் பொறுமையாக படித்துப்பார்த்த லிண்டா, சிறிது நேரம் மௌனமான, ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்தாள். அதன்பின், “என் குழப்பங்கள் சிலவற்றுக்கு இவை விளக்கம் அளிக்கின்றன,” என்றாள் அவள்.
“உனக்கு குழப்பமாக இருந்த விஷயங்கள் எவை? இப்போது என்ன புரிந்தது?|
“புரிந்து விட்டது என்று சொல்ல முடியாது, ஆனா மெல்ல மெல்ல கடந்த காலத்தில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதைப் பற்றிய ஒரு சித்திரம் கிடைக்கிறது,” என்று சிரித்தாள் லிண்டா.
“என்ன நடந்திருக்கும் என்று நீ நினைக்கிறாய்? இதில் சில விஷயங்கள் எனக்குப் புரிகின்றன, ஆனால் செவ்வாய் பயணம் இங்கு எங்கு வந்தது?”
“இதை ஒவ்வொரு அடியாக யோசிப்போம். முதலில் பூமி என்ற கோள். அங்குதான் நம் மூதாதையர் வசித்திருந்தனர். இங்கிருந்து இரவில் நாம் பூமியைப் பார்க்க முடியும்…”
“உனைத் தவிர யாருக்கும் அறிவியல் விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் ஆரவம் இருக்கவில்லை, இல்லையா? அறிவியல் கோட்பாடு என்று எத்தனை பேசினாலும் அது எதையும் விளக்கப் போதுமான சொதனைக்கூடங்கள் இங்கு இல்லை. எனவே நாம் அறிவியல் கணக்கு போன்ற துறைகளில் ஆர்வம் இழந்தோம். கோள்களைப் பற்றிச் சொல்,” என்றென்.
“அடிப்படைகள் மிக எளிமையானவை. நாம் சூரியனை அறிந்திருக்கிறோம். சூரிய மண்டலத்தில் எட்டு கோள்கள் இருக்கின்றன. இவை சூரியனைச் சுற்றி வருகின்றன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு திண்மம் கொண்டிருக்கிறது, தமக்கென தனித்தனி சுழற்சிப் பாதையை வகுத்துக் கொண்டிருக்கின்றன.”
“நாமும் சூரியனைச் சுற்றி வருகிறோம்”
“ஆம், நாமும் சூரியனைச் சுற்றி வருகிறோம். நாம் சூரியனின் நான்காம் கோள். பூமியை நீ சிறு வயதில் புத்தகங்களில் கண்டிருப்பாய், அது எப்படி இருக்கும் என்பது உனக்குத் தெரியும். நம்மை பூமியில் இருந்தவர்கள் செங்கோள் என்று அழைத்தனர். இங்கு பல முறை வந்திருக்கின்றனர். ஆனால் அந்தப் பயணங்களில் மனிதர்கள் பண்கேற்றதில்லை, இயந்திரங்கள் மட்டுமே வந்து சென்றிருக்கின்றன. அவை கண்டெடுத்த புகைப்பட, மற்றும் மண்வள, வாயுவெளி ஆதாரங்களின் அடிப்படையில் இங்கு மனிதர்களால் வாழ முடியுமா என்று தீர்மானித்தார்கள்”
“என்ன சொல்கிறாய் நீ, செவ்வாயில் வாழ்வதா?”
“உலகில் உள்ள ஒவ்வொரு கோளும் வாழத் தகுந்தவையல்ல”
“வாழத் தகுந்தவை?”
“சொல், நீ உயிர் வாழ என்னென்ன தேவை?”
“உணவு? பாதுகாப்பான இடம்?”
லிண்டா உரக்கச் சிரித்தாள். “உணவு ஒன்று, பாதுகாப்பான இடம் மற்றொன்று. காற்று வேண்டும், அதில்தான் நாம் சுவாசிக்க முடியும். அந்த காற்றில் பிராணவாயு இருக்க வேண்டும், நம் உடலுக்கு பிராண வாயு தேவைப்படுகிறது, அது இல்லாமல் நாம் இறந்து போவோம். இப்போது அந்த பில்லியனர்ஸ் கடிதம் உனக்குப் பிடிபடுகிறது என்று நினைக்கிறேன். அவர்கள் பிராண வாயு இல்லாதிறந்தார்கள். அதனால்தான் அந்த அச்சம், பீதி…”
“காற்றில் இருப்பதல்லவா பிராண வாயு?”
லிண்டா மீண்டும் சிரித்தாள். “காற்று ஓரளவு உயரமே நம் கோளை நிறைக்கிறது, அதன் பின் பூமியைப் போல் இங்கும் காற்றில்லாத வெளிதான்”
“அப்படியானால் அங்கு என்னதான் இருக்கிறது?”
“எதுவுமில்லை. ஆகாயம் ஓர் வெறுமை. அங்கு காற்றில்லை, அங்கு தூலப் பொருட்கள் கிடையாது. செவ்வாய் கோளின் காற்று மண்டலத்தைக் கடந்தால் ஏதுமற்ற வெளியை நீ அடைவாய்”
“நினைத்தே பார்க்க முடியவில்லை”
“ஆம். விண்வெளியைக் கற்பனை செய்ய முடியாது. அது போகட்டும், நம் கதைக்கு வருவோம். உயிர் வாழ காற்று தேவை, நீர் தேவை, உணவு தேவை. எனவே பூமியின் மக்கள் செவ்வாயில் இது அனைத்தும் உள்ள ஓரிடத்தைக் கண்டறிந்தார்கள் என்று இந்த ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. நீயே பார், நாம் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம், நம்மைச் சுற்றலும் நீர் இருக்கிறது. நதிகள் நிறைந்திருக்கின்றன, நமக்குப் போதுமான உணவு கிடைக்கிறது. இந்த உணவே பூமியில் இருந்து வந்ததுதான். விண்கலங்களில் இங்கு வந்த நம் மூதாதையர் தானியங்களைக் கொணர்ந்தனர், அவை நாம் உண்ணும உணவைப் பயிர் செய்யும் விதையாகின. அவர்கள் விலங்குகள் பலவும் எடுத்து வந்தனர். அவை இங்கு இனப்பெருக்கம் செய்தன, நமக்கு உணவும் ஆகின்றன. நாம்தான் இங்குள்ள நீரில் மீன்களை அறிமுகப்படுத்தியது, இன்று நீரும் நமக்கு உணவளிக்கிறது. திட்டமெல்லாம் நன்றாகதான் போட்டார்கள், எங்கேயோ தப்பு நடந்திருக்கிறது, நாம் இங்கு சிக்கிக் கொண்டிருக்கிறோம்”.
“என்ன தப்பு நடந்திருக்கும்?”
“இந்தக் கடிதத்தைப் பார்த்தால் இன்னும் நிறைய பேர் இங்கு வருவதாக திட்டம் இருந்தது என்று அறிகிறோம். ஆனால் யாரும் வரவில்லை. பூமியிலிருந்து வருவார்கள் என்றுதான் நம் மூதாதையர்களும் சொல்லிக் கொண்டிருந்தனர், ஆனால் யாரும் வரவில்லை”.
“நான் கேள்விப்பட்ட விஷயம் இதுவல்ல. போர் துவங்கியதால்தான் நாம் இங்கு வந்தோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். சிலர் சுற்றுச்சூழல் மாசுபட்டதைக் குற்றம் சொல்கின்றனர், சிலர் வெப்பமயமாதல் ஒரு காரணம் என்று சொல்கின்றனர்”
“ஆம், அப்படிதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அதெல்லாம் ஆதாரமற்ற கதைகள். செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்ப அது ஒரு காரணமாக இருக்கலாம், இது போன்ற அச்சங்கள் இல்லாமல் யார் இங்கு வருவார்கள்? பில்லியனர்கள் மட்டுமே உண்மையை அறிந்திருந்தனர், பிறர் அனைவரும் அழிவிலிருந்து தப்பிச் செல்வதாக நினைத்துக் கொண்டிருந்திருக்கின்றனர். அறிவியலாளர்களுக்கு உண்மை தெரியும், ஆனால் அதை அனைவரிடமும் சொல்லவில்லை. உண்மை தெரிந்தால் மக்கள் கொந்தளித்திருப்பார்கள், அறிவியலாளர்கள் கொலை செய்யப்பட்டிருப்பார்கள்”
“உனக்கு எப்படி இது எல்லாம் தெரியும்? இது உண்மையோ பொய்யோ!”
“சீனன் சீ லிங் தெரியுமா?”
“ஆம்”
“அவர் நாம் நினைப்பதைவிட் அறிவாளி, அவருக்கு நூறு வயது கடந்து விட்டது. ஆனாலும் ஆரோக்கியமாக இருக்கிறார். உண்மையை அறியும் ஆசை இருந்தால் அவரிடம் பேசிப் பார்”
“சரி, வா போகலாம்,” என்றென்.
நாங்கள் இருவரும் சீ லிங் வீட்டை நோக்கி நடந்தோம்.