சலாம் குலாமு

– எஸ். சுரேஷ் –

தொப்பி அணிந்து நின்று கொண்டிருந்த
மனித குரங்கு கதவை எனக்காகத் திறந்தது
உள்ளே நுழைந்து ஒரு அறைக்குள் சென்றேன்
இரண்டு சிறுத்தைகள் மான் கறி தின்று கொண்டிருந்தன
கோட் சூட் அணிந்த ஒரு யானை என்னிடம் வந்து
“நீங்க வெஜ்ஜா நான்-வெஜ்ஜா” என்று கேட்டது
“இன்றைக்கு நான் வெஜ்” என்றேன்
“இங்கே வாருங்கள்” என்று வேறொரு அறைக்கு அழைத்து சென்றது

என் பக்கத்து மேஜையில் ஒரு பூனையும் நாயும்
கோப்பையிலிருந்த பாலை நக்கிக்கொண்டிருந்தன
“ஏன் நீங்கள் நான்-வெஜ் சாப்பிடவில்லை?” என்று கேட்டேன்
பூனை என்னை மெளனமாய் முறைத்தது
“இன்றைக்கு சனிக்கிழமை” என்று நாய் கூறியது

சாப்பிட்டுவிட்டு வெளியே வரும்போது
தொப்பி அணிந்திருந்த மனித குரங்கிற்கு
பத்து ரூபாய் டிப்ஸ்ஸாகக் கொடுத்தேன்
உடனே அது “சலாம் குலாமு குலாமு சலாம் குலாமு”
என்று ஒரு முறை குதித்துப் பாடி பணத்தை பெற்றுக்கொண்டு
சலாம் போட்டு என்னை வழியனுப்பி வைத்தது.

 

image credit – Tabatha Yeatts, The Opposite of Indifference

3 comments

  1. என் வாழ்க்கையில் நான் படித்த மிக நல்ல கவிதையான இதை எழுதிய எஸ்.சுரேஷ் அவர்களின் முகவரியை எனக்குக் கொஞ்சம் அனுப்ப முடியுமா?

    1. எஸ். சுரேஷ்,
      ஹைதராபாத் குறுக்குத் தெரு,
      ஹைதராபாத்!

    2. வாழ்த்துகளுக்கு நன்றி சுகா அவர்களே. என் முகவரியை உங்களை நேரில் பார்த்து கொடுக்கிறேன்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.