– எஸ். சுரேஷ் –
படித்துறையின் கடைசி படியில் நின்றுகொண்டு
தும்பிக்கையை தண்ணீரில் விட்டு
“புடு புடு புடு புடு” என்று சப்தம் எழுப்பி
தண்ணீரை கொதிக்கவிட்டுக் கொண்டிருந்தது
குட்டி யானை
திடீரென்று தண்ணீரை பிளந்துகொண்டு
மீனொன்று மேலெழும்பி
“யார்ரா அது இங்க விளையாடறது?”
திடுக்கிட்ட குட்டி யானை “சாரி ப்ரதர்” என்றது,
“நீங்க இருக்கீங்கன்னு தெரியாது”
இன்னொரு மீன் எழும்பி, “விளையாட
வேற இடம் கிடைக்கலையா?” என்று கேட்டது.
குட்டி யானை தலை குனிந்து மௌனமாகியது.
சற்று நேரம் அப்படியே நின்றுகொண்டிருந்தது.
தண்ணீர் சமநிலைக்கு வந்த பிறகு மறுபடியும்
தும்பிக்கையை தண்ணீரில் விட்டு
“புட் புட் புட்” என்று செய்துவிட்டு
மீன்கள் வெளியே வருவதற்குமுன்
படியேறி ஓடிவிட்டது