சரவண ரவி

வெ கணேஷ்

மனதில் அந்தப் பெயர் ஓடிக் கொண்டிருந்தது. சரவண ரவி. சரவண பவ எனும் திருமந்திரம் என்கிற கர்னாடக இசைப் பாடல் ஒன்று உண்டு. சாமி பேரை சொன்னாலாவது போகும் வழிக்கு புண்ணியம் உண்டு. அது என்ன பேர்! சரவண ரவி. ஐம்பது வருடத்திற்கு முன் அந்த பேரை கேள்விப்பட்ட பிறகு அந்தப் பெயர் கொண்ட வேறொருவர் யாரைப் பற்றியும் இன்று வரை கேள்விப்பட்டதுமில்லை ; சந்தித்ததுமில்லை..

சரவண ரவி! மிகவும் வித்தியாசமான பெயர் ; உச்சரிக்கும் தருணங்களிலெல்லாம் மாறாத புன்முறுவல் பூக்கும்.

சித்தார்த் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து தன் நண்பர்களின் போட்டோ மற்றும் குறிப்புகள் அடங்கிய ஒர் இணையப் பக்கத்தை பல மணி நேரங்களாக பார்த்துக் கொண்டு இருப்பானே! அவனிடம் சொல்லி இந்த பெயர் உடையவர்களை தேடச் சொல்ல வேண்டும். பேரன் கிருபாவிடம் சொல்லியாவது தேடச் சொல்ல வேண்டும்.

அன்றைய தினசரி மெத்தைக்கு அருகில் இருந்த ஸ்டூலின் மேல் இருந்தது. கையை நீட்டி எடுக்க கொஞ்சம் சிரமமாக இருந்தது. கழுத்துப் பக்கம் நல்ல வலி. அயர்ந்த கை மூட்டுகள் மிகவும் மெதுவாக வளைந்தன. பென்சிலொன்று படுக்கைக்கு பின்னிருக்கும் ஜன்னல் திட்டில் இருந்தது. அதிகம் எழுத்துகள் இல்லாமல் நாளிதழின் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்த ஒரு விளம்பரத்திற்குள் பென்சிலால் எழுதினேன்.

ச…… பென்சில் துண்டு உடைந்து போனது. பேப்பர் துண்டை கிழித்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். சரவணன் மிகவும் பொதுவான பெயர். குறைந்த பட்சம் ரவி என்ற பெயர்கொண்ட நபர்கள் பத்து பேரை எனக்கு தெரியும். தலை சுற்றல் வந்தது மாதிரி சரவண ரவி என்ற பெயர் மண்டையில் சுற்றிக் கொண்டே இருக்கிறதே!

கட்டிலுக்கு பக்கவாட்டில் சுவரோடு ஒட்டிய அலமாரிக்குள் இருக்கும் பழைய அலுமினியப்பெட்டிக்குள் இருந்த சில புகைப்படங்களை தூசி தட்டி வெளியே எடுத்தேன். பல புகைப்படங்கள் அப்பெட்டிக்குள் ஒழுங்கற்று சிதறி இருந்தன. சில புகைப்படங்கள் நிறமிழந்து கேவா கலர் பழைய திரைப்பட ஸ்டில்கள் போல தெரிந்தன. எந்த புகைப்படத்தை தேடுகிறேன்?

புல் தரையில் மூன்று பேர் உட்கார்ந்து இருக்கும் கறுப்பு-வெள்ளை புகைப்படம் கிடைத்தது. அதே மூன்று பேர் கை கோர்த்துக் கொண்டு புல் தரையில் நின்றவாறும் இன்னொரு புகைப்படம். மூன்றாவது புகைப்படத்தில் மூவரும் முட்டி போட்டு நின்றிருந்தனர். மூன்று புகைப்படங்களிலும் நடுவில் நின்றிருந்தவனை நன்றாக ஞாபகம் இருக்கிறது. கல்லூரி கால உயிர்த்தோழன் கோபால். கோவையில் ஆடிட் பிராக்டீஸ் அவனுக்கு. அவனை எப்போது கடைசியாகப் பார்த்தோம்? ஒரு முறை கோயம்புத்தூருக்கு விமானத்தில் சென்ற போது விமான நிலையத்தில் அவனை எதேச்சையாக சந்தித்தோம்… ஒரு முறை, 1986 என்று நினைக்கிறேன், மதுரையில் கடலோர கவிதைகள் என்ற திரைப்படம் காண சில உறவினர்களுடன் சென்ற போது, கறுப்பு டிக்கெட் விற்கும் ஒருவனுடன் பேரம் பேசும் கட்டாயம் ஏற்பட்டது. அப்போது தான் “நீ வெங்கடேசன் தானே?” என்று என் முதுகைத் தட்டி கேட்டான்….இதையெல்லாம் இப்போது ஏன் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்? அவன் என் கல்லூரித் தோழன். அவனைப் பல முறை சந்தித்திருக்கலாம். சித்தார்த்தின் திருமணத்திற்கு ம் வந்திருந்தான்.

இத்தனை சந்திப்பிலும் அவனிடம் ஒரு முறை கூட சரவண ரவி பற்றி ஏன் கேட்கவில்லை? சித்தார்த்தின் திருமணத்துக்கு வந்த போது அவனைக் கேட்டிருக்கலாம். வாழ்வில் எத்தனை சந்தர்ப்பங்களை இழந்திருக்கிறோம்? கோபாலின் போன் நம்பர் வேறு இல்லை. சித்தார்த்திடம் சொல்ல வேண்டும். கோபாலின் பிசினஸ் கார்ட் பரண் மேல் கட்டி வைக்கப் பட்டிருக்கும் மூட்டைகளுக்குள் இருக்கிறதா என்று பார்க்கச் சொல்ல வேண்டும்.

பொதுவாக மனிதர்களுக்கு முகங்கள் நினைவிலிருக்கும் ; ஆனால் பெயர் ஞாபகமிராது. ஆனால் எனக்கோ உல்ட்டா. சரவண ரவி என்ற பெயர் எனக்கு மறக்கவில்லை. ஆனால் அவன் முகமோ உருவமோ எதுவும் ஞாபகமில்லை. சுத்தமாக துடைத்துவிட்டாற் போலிருக்கிறது. பெயர் மட்டும் சுற்றிக் கொண்டே இருக்கிறது.

கையில் இருந்த முதல் புகைப்படத்தில் நடுவில் இருந்த கோபால் இளமையாய் இருந்தான். காதோர கிருதாக்கள் அதீத நீளமாக இருந்தன. பென்சிலில் வரைந்த மாதிரி மீசை.

மற்ற இருவரும் கோபாலை விட வயதாக இருந்தனர். இந்த புகைப்படத்தில் நான் இல்லாமல் போனதற்கான காரணம் எனக்கு நினைவில் இருக்கிறது. சித்தப்பா இறந்து விட்டார் என்று தந்தி வந்தது. செம்ஸ்டர் பரிட்சைக்கு நடுவில் இருந்த இடைவெளியில் மூன்று நாட்களுக்கு என் சொந்த ஊர் நாகர்கோவில் சென்று விட்டேன். மூன்றாவது வருடம் படிக்கும் பொள்ளாச்சி ஊர் நண்பர்களுடன் நான் ஊருக்கு சென்றிருந்த நாட்களில் எடுத்துக் கொண்ட போட்டோக்களை எனக்கு கோபால் என்க்கு மூன்றாம் வருடம் படிக்கும் போது தான் எனக்கு காண்பித்தான்.

இருவரில் ஒருவர் நல்ல கறுப்பு நிறம். தலையை படியப்படிய வாரியிருந்தார். கறுப்பு சட்டை அணிந்திருந்தார். நெற்றியில் திருநீறு பூசும் இடத்தில் மை பூசியது போன்று தோல் நிரந்தர கருமையுடன் இருந்தது. அவர் கண்ணாடியும் அணிந்திருந்தார். இன்னொருவர் நீளமான வெள்ளை நிற சட்டை போட்டிருந்தார். விக் வைத்துக் கொண்டிருப்பவர் போல அவர் முடி செயற்கைத்தனமாக புசுபுசு வெனத் தெரிந்தது. முன்னவருக்கு அழுத்தமான மீசை இருந்தது ; மற்றவருக்கு மீசை நன்கு மழிக்கப்பட்டிருந்தது.

இருவரில் ஒருவர் பெயர் தான் சரவண ரவி என்பது என் ஆழமான ஊகம். இருவரில் யார் சரவண ரவி? எங்களுடைய சீனியர்களான இவர்களுடன் நானும் கோபாலும் ஒரு வருடம் பழகி இருக்கலாம். நான் இவர்களுடன் பழகினேனா?

நாகர்கோவிலில் இருந்து நானும் பொள்ளாச்சியில் இருந்து கோபாலும் அந்த கல்லூரியில் வணிகவியல் இளநிலை சேர்ந்தோம். டிசம்பர் மாத விடுமுறையில் செல்லும் வரை பொள்ளாச்சிக்காரர்கள் எங்கள் கல்லூரியில் படிக்கிறார்கள் என்று கோபாலுக்கு தெரியாது. எல்லா ஊர்க்காரர்களும் குழுக்களாக ஜாலியாக இருக்கிறார்கள். நாகர்கோவிலில் இருந்தும் பொள்ளாச்சியில் இருந்தும் ஒருவரும் கல்லூரியில் சேரவில்லையே என்ற ஏக்கம் எங்கள் இருவருக்கும். டிசம்பர் மாத விடுமுறையில் இருந்து ஊர் திரும்பியவுடன் கல்லூரியின் மூன்றாமாண்டு படிக்கும் பொள்ளாச்சிக்காரர் ஒருவரை சந்தித்ததைப் பற்றி சொன்னான். அப்போது அவன் சொன்ன பெயர் தான் சரவண ரவி……

கல்லூரிப் படிப்பு முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குப் பிறகு டிகிரி சான்றிதழைப் பெறுவதற்கு தில்லியிலிருந்து தமிழ் நாடு சென்ற போது சரவண ரவி ஆர்ட்டிகிள்ஷிப் செய்யும் ஆடிட்டரிடமே தானும் சேர்ந்திருப்பதாக கோபால் சொன்னது நன்கு நினைவிருக்கிறது. இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு சரவண ரவி பற்றி கோபாலிடம் கேட்ட போது காட்டிலாக அதிகாரியாக வேலை பார்க்கிறான் என்று அறிந்தேன். காட்டிலாகா அதிகாரியாக வேலை கிடப்பதற்கு சி ஏ ஏன் படிக்க வேண்டும் என்று அன்றிலாத குழப்பம் இன்று ஏன் வந்தது?

புகைப்படத்தில் இருக்கும் கோபாலின் இரு நண்பர்களை ஒரு முறை கூட நான் சந்திக்கவில்லை என்பது இப்போது புதிராக இருக்கிறது. கோபாலாவது சந்திப்பை ஏற்படுத்தித் தந்திருக்கலாம். ஏன் செய்யவில்லை? அவன் செய்திருப்பான் ; நான் தான் போயிருக்க மாட்டேன். கோபாலின் இந்த மூன்று புகைப்படங்கள் தவிர என் கல்லூரி தினப் புகைப்படங்கள் எதுவும் என்னிடம் இல்லை. என் இளமைக்கால உருவத்தை காட்டும் ஒரு புகைப்படம் கூட மிஞ்சவில்லை. ஹாலில் சட்டமிட்டு மாட்டியிருக்கிற தம்பதி சமேதராய் நானும் காலமான என் மனைவியும் இருக்கும் ஒரே ஒரு கல்யாண போட்டோ தவிர!

புகைப்படங்கள் மடியிலிருந்து விழுந்தன. ஒரு புகைப்படம் கட்டிலுக்கு கீழே விழவும்….அதை எடுக்க குனியவும்…..சரவண ரவி சரவண ரவி சரவண ரவியென மண்டைக்குள் யாரோ காட்டுக் கூச்சல் போடுவது போல் இருந்தது. உயரத்தில் இருந்து கீழே செல்லும் ராட்சத ரங்க ராட்டினம் போன்று ஏதோவோர் இருட்டுக்குள் நான் அதிவேகமாக ஊர்வது போன்ற உணர்வு. அச்சம் எனை ஆட் கொண்டது. அலறி யாரையாவது கூப்பிட வேண்டும். ஆனால் குரல் வெளி வரவில்லை. சுவாசக் குழாய்கள் திடீரென வெற்றிடமாகி உடல் அல்லாடியது. மனம் சரவண ரவி என்ற பெயரை எண்ணுவது இன்னும் நிற்கவில்லை. சரவண ரவி என்ற பெயரை எண்ணுவதை நிறுத்தினால் மனமும் நின்று போகுமோ? மனம் கரைந்து கொண்டிருந்த அந்த கணத்திலும் என்னுள் ஓர் ஆசை. மனம் சுவடின்றி இல்லாமல் போவதைக் காண ஆவல்…..! முடியுமா…….முடியுமா……ச..ச…ச……

+++++

“இத்தனை நாளா வெங்கடேசனை பார்க்க வரல,,,கடவுளாப் பாத்து அவன் காலமான நேரம் பாத்து என்னை தில்லி வரவச்சுருக்கார்….” – கோபால கிருஷ்ணன் நெகிழ்ச்சியுடன் பேசினார். இந்துஸ்தான் டைம்ஸ்-ஸில் வந்திருந்த நீத்தார் செய்தி அறிவிப்பை பார்த்து விட்டு சித்தார்த்துக்கு போன் செய்துவிட்டு வந்திருந்தார். தன் அத்தையின் பேரனுடைய திருமணத்திற்காக தில்லி வந்திருந்த அவர் எதேச்சையாக இந்துஸ்தான் டைம்ஸில் வெங்கடேசனின் போட்டோவைக் காண வைத்தது தெய்வச் செயல் தான் என்று திரும்ப திரும்பச் சொன்னார்.

அவருக்கு வயது அறுபத்தியெட்டு ஆகிறது என்று மதிக்க முடியாது. தலைமுடியும் மீசையும் தும்பைப்பூவாக வெளுத்திருந்தாலும் டிசைனர் ஹேர்-கட் பண்ணிக் கொள்பவர் மாதிரி திருத்தமாக தெரிந்தார். கறுப்பு கோட் போட்டிருந்தார். துக்கம் கேட்கத் தொடங்குமுன் கோட்டை கழட்டி மடியில் வைத்துக் கொண்டார். உதடு அவர் சிகரெட் புகைக்கும் பழக்கமுள்ளவர் என்று அடையாளம் காட்டிற்று.

“அவன் காலேஜ் காலத்துலர்ந்தே ரொம்ப ஷை டைப்…அதிகம் பேச மாட்டான். காலேஜில் அவனுடைய நெருங்கிய நண்பன் நான் ஒருத்தன் தான். ரொம்ப இன்ட்ராவர்ட். சினிமா அது இதுன்னு ஊர் சுத்த மாட்டான். ஆனா வேலைக்காக தில்லிக்குப் போனாலும் தமிழ் நாடு வரும் போதெல்லாம் என்னைப் பார்க்க பொள்ளாச்சிக்கோ கோயம்புத்தூருக்கோ தவறாம வருவான். பத்து பதினைஞ்சு வருஷமா தான் அதிகமா சந்திச்சுக்கல. கடைசியா அவன பாத்தது உன்னோட கல்யாணத்துல தான்.”

வெங்கடேசனுக்கு வந்த நோய் பற்றி சித்தார்த் விவரமாகச் சொன்னான்.

“படிப்பு முடிஞ்ச அடுத்த மாதத்துலர்ந்து அவருக்கு வேல கிடைச்சுட்டது. வேலை, குடும்பம் என்றே இருந்தார். சொல்லிக் கொள்ளும் படியா சோஷியல் லைஃப் ஒண்ணும் கிடையாது. அஞ்சு வருஷத்துக்கு முன்ன அம்மா காலமான பிறகு அவருடைய தனிமை அதிகமாச்சு. நானும் தீபாவும் அவரோட குவாலிடி டைம் ஸ்பெண்ட் பண்ணாலும் அம்மாவ அவர் ரொம்ப மிஸ் பண்ணினார். அடிக்கடி என் க்ளோஸ் ஃப்ரெண்ட் கோபால்ன்னு உங்களப்பத்தி பேசுவார்..கடைசி இரண்டு மாதங்களில் அவரோட டிமென்ஷியா மிகவும் முற்றி விட்ட நிலையை அடைஞ்சுட்டதுன்னு டாக்டர் சொன்னாரு…24 மணி நேர நர்ஸ் வச்சு அவரப் பார்த்துகிட்டோம்…மூணு நாள் முன்னாடி தரையில கிடந்ததை பொறுக்க நினைச்சு அப்படியே குப்புற விழுந்துட்டாரு. இன்டெரஸ்டிங்லி அவரு எடுக்க நினைச்சது உங்க காலேஜ் டேஸ் போட்டோ!”

தீபா உள்ளே போய் மூன்று புகைப்படங்களை எடுத்து வந்தாள்.

“நடுவுல இருக்கறது நீங்க தானே அங்கிள்” என்றாள்.

“ஆமா….நானும் வெங்கடேசனும் ஒரு ஃபோட்டோ கூட காலேஜுல எடுத்துக்கல….எங்கிட்ட இருந்த இந்த போட்டோக்கள அவனுக்கு நாந்தான் குடுத்தேன்…இஃப் ஐ ரிமெம்பர் கரெக்ட்லி, ஒரு போட்டோவுக்கு பின்னால இந்த போட்டோல இருக்கறவங்க பேரை நான் எழுதியிருப்பேன்.”

கருத்துபோன மேட் ஃபினிஷ் போட்டோவின் பின் புறத்தில் சிவப்பு மையில் எழுதப்பட்டு எழுத்துகள் மங்கிப் போயிருந்தன. முத்து சரவணன், கோபால், ரவிக்குமார்.

“கண்ணாடி போட்டுட்டு நிக்கறது முத்து சரவணன். பொள்ளாச்சில எங்க வீடு இருந்த தெருவுலய இவன் வீடும் இருந்தது. விலங்கியல் படித்து விட்டு அரசாங்கத் தேர்வு எழுதி மாநில வனத்துறையில சேர்ந்தான். ரிடயரான பிறகு ஏற்காட்டுல செட்டிலாகிட்டான். கல்யாணம் பண்ணிக்காத கட்டை பிரம்மச்சாரி. இன்னொருத்தன் ரவிக்குமார். நானும் இவனும் ஒரே ஆடிட்டர் கிட்ட ஆர்ட்டிகிள்ஷிப் பண்ணினோம். அதே பார்ட்னரா ஒண்ணா வேல செஞ்சோம். கோயம்புத்தூர்ல எங்க ஃப்ளாட்டும் அவன் ஃப்ளாட்டும் பக்கத்துல பக்கத்துல….உங்க அப்பா எப்போ சந்திச்சாலும் ஒன்னோட சரவணன் & ரவி அன் கம்பெனி எப்படியிருக்காங்கன்னு தான் கேப்பான்….” இளமைக்காலத்தை பரவசத்துடன் நினைவு கூர்ந்தார்.

தீபா கொண்டு வந்து கொடுத்த தேநீரைப் பருகும் போது ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவராக அமைதியுடன் இருந்தார். சித்தார்த்தின் மகன் கிருபா சில நண்பர்களுடன் வீடு திரும்பினான். சித்தார்த் சொன்னவுடன் “ஹாய் அங்கிள்” என்று கை குலுக்கினான். கூடவே அவன் வயது சிறுவர்கள் சிலரும் வீட்டுக்குள் நுழைந்தனர். சித்தார்த் கிருபாவை நண்பர்களுடன் மொட்டை மாடிக்கு சென்று விளையாடும்படி கேட்டுக் கொள்ளவும் “ஸீ யூ அங்கிள்” என்று சொல்லி விட்டு அகன்றான். “கிருபாவிடம் வெங்கடேசனின் ஜாடை இருக்கிறதோ?” என்று கேட்டு விட்டு பதில் எதிர்பார்க்காதவர் போல தோளைக் குறுக்கி காலிக் கோப்பையை தீபா வாங்கிக் கொள்ளும் வரை நோக்கிக் கொண்டிருந்தார். கோபால் திரும்பப் பேச துவங்கும் வரை அங்கு அமைதி நிலவியது.

சோபாவின் பக்கவாட்டு மேசையில் வைத்த மூன்று புகைப்படங்களையும் கையில் மீண்டும் எடுத்துக் கொண்டார்.

“மூணாம் வருஷ முடிவில் நடந்த ஃபேர்வல் பார்டி எதுலயும் வெங்கடேசன் பங்கெடுத்துக்க முடியல. உங்க சின்னத் தாத்தாவுக்கு ஒரு டெர்மினல் டிஸீஸ். கடைசி செமஸ்டர் எக்ஸாம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி வரைக்கும் லீவு எடுத்துக்கிட்டு ஊருக்கு போயிட்டான். க்ரூப் போட்டோல கூட அவன் இல்ல. எங்கிட்டருந்து வாங்கிட்டுப் போன இந்த மூன்று போட்டோவ தன்னோட கடைசி நாள் வரைக்கும் வெங்கடேஷ் பத்திரமா வச்சுகிட்டிருக்கான்…எங்கிட்ட இருந்த நூத்துக்கணக்கான காலேஜ் டேஸ் போட்டோக்கள்ள ஒண்ணு கூட பாக்கி இல்லாம எல்லாம் தொலைஞ்சு போச்சு”

கையில் இருந்த போட்டோவின் முனையை நக இடுக்குக்கு நடுவில் வைத்துக் கொண்டு விரலை அங்குமிங்குமாக மெதுவாக நகர்த்தினார். அவர் விழிகள் ஈரமானதை சித்தார்த் கவனிப்பதை உணர்ந்த கோபால் பாக்கெட்டில் இருந்த கைக்குட்டையால் தன் கண்களை ஒற்றியெடுத்தார். சித்தார்த் பரிவுடன் பக்கத்தில் வந்து அவர் தோளைத் தொட்டான்.

“டின்னருக்கு என்ன சமைக்கட்டும்? உங்களுக்கு என்ன புடிக்கும்?” என்று தீபா கேட்டதும் இறுக்கம் விலகிடவும் “இல்ல தீபா…தேங்க்ஸ்..அடுத்த முறை வரும் போது கண்டிப்பா சாப்பிடறேன்…..எனக்கு கெளம்பணும்…ஒரு காக்டெய்ல் பார்டிக்கு போக அழைப்பு இருக்கு…தில்லி பார்டி சர்க்யூட் எப்படி இருக்குன்னு பாக்க வேணாமா?” என்று சொல்லி கலகலவென சிரித்தார்.

நண்பனின் குடும்பத்திடமிருந்து விடை பெற்றுக்கொண்டு கிளம்பியவர் பார்டி நடைபெறும் இடத்திற்குச் செல்லாமல் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு திரும்பினார். அவருடைய கைத்தொலைபேசி சிணுங்கிக் கொண்டேயிருந்தது. குறுந்தகவல் தொனி ஒலித்துக் கொண்டே இருந்தது. அவற்றையெல்லாம் சட்டை செய்யாமல் சித்தார்த்துக்கு தெரியாமல் கோட்டுக்குள் வைத்துக் கொண்ட “மூன்று நண்பர்கள்” புகைப்படத்தை எடுத்து ஒரு பழைய ஓவியத்தை பார்ப்பவர் போல வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.

00000

image credit: UC Irvine Today

2 comments

  1. மனித மனத்தின் இந்த விந்தை அரிப்பின் அவஸ்தையை மிக நுணுக்கமாகக் கையாண்டிருக்கிறீர்கள். அவர் தேடலுக்கு விடை கிடைத்துவிடாதா என்று பச்சாத்தாபப்பட வைத்துவிட்டீர்கள். நல்ல நடை. வாழ்த்துகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.