மைதானத்தின் மத்தியில் ஒரு கொலை

ஸ்ரீதர் நாராயணன்

கொலையா? இங்கேயா?’ சற்று அதிர்ச்சியோடு கேட்டான் வாசுதேவன். இன்றைக்கான இரண்டாவது அதிர்ச்சி அவனுக்கு.

முதல் அதிர்ச்சியை, அவன் மைதானத்திற்கு வந்ததுமே டேரல் அளித்துவிட்டார். அவனை ஆரவாரமாக வரவேற்றுக் கொண்டே ‘ஆஹ், நீங்கள்தானே வசு…. வசுதேவா… ‘ அதையும் ஒருமாதிரியாக வேசு என்றுதான் உச்சரித்தார். ‘வாருங்கள், வாருங்கள், தோ… இவர் கோச் ரோஜர், இவர்கள் கைல் மற்றும் எர்ல். கன்மாஸ் கவுண்ட்டியில் கோச்சாக இருக்கிறார்கள். இவர் கோச் ஜஸ்டின், இவர் கோச் ஹாரியட்’ என்று முறையாக அறிமுகப்படுத்திவிட்டு,

‘இவர்தான் கோச் வசு’. என்று அவனையும் அறிமுகப்படுத்தினார். வாசு-வைத்தான் அப்படி சுருக்கி சொன்னார் டேரல்.

வாசுதேவன் எவ்வளவு யோசித்தும் டேரல் எப்படி அவனை கால்பந்தாட்ட கோச்சாக நினைத்திருக்கக் கூடும் என்று புரியவில்லை. அவன் புதியதாக வேலைக்கு சேர்ந்திருந்த மாக்ஸோ நிறுவனத்தில் உடன் பணிபுரியும் சகா. ‘சிறுவர்களுக்கான சாக்கர் (Soccer) பயிற்சி முகாம் நடத்துகிறோம். தன்னார்வலர்கள் தேவை’ என்று அலுவலகத்தில் எல்லாருக்கும் மெயில் அனுப்பியிருந்தார். புதிய இடத்தைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வமும், செலவழிக்க நிறைய நேரமும் இருந்ததால் வாசுதேவன் தானும் வருகிறேன் என்று பதில் அனுப்பியிருந்தான். டிஷர்ட்டுகளை விநியோகிப்பது, இலக்கமிட்ட பட்டிகளை மாட்டிவிடுவது, தண்ணீர் பாட்டில்கள் கொண்டு கொடுப்பது, பெயர்களை பதிவு செய்வது போன்ற வேலைகளை செய்யச் சொல்வார்கள் என்றுதான் எதிர்பார்த்திருந்தான். ‘குழந்தைகளுக்கு என்ன சொல்லித் தரமுடியும் உங்களால்’ என்று டேரல் அடுத்த மெயிலை அனுப்ப, ஆர்வமேலீட்டால் சில பொதுப்படையான யோசனைகளை முன்வைத்து பதிலனுப்பியிருந்தான். அதற்கு பிரதிபலனாகத்தான் இன்று வந்ததும் ‘கோச்’ பட்டம் அளித்துவிட்டார்.

அடுத்த சில மணி நேரங்களிலே இதோ இந்தப் பெரியவர் ஏதோ இந்த மைதானத்தில் நடந்த கொலையைப் பற்றி சொல்லி வாசுதேவனுக்கு மற்றொரு அதிர்சசியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்..

வாசுதேவனின் குரலில் இருந்த திகைப்பை உணர்ந்தவர் போல அந்தப் பெரியவர் ‘உன்னைப் பார்த்தால் ஊருக்கு புதியவன் போலிருக்கிறாயே’ என்றுக் கேட்டார்.
அவன் நின்றுகொண்டிருந்த மரத்தடிக்கு தெற்கே, உள்ளடங்கிய நிழற்பகுதியில், அமர்ந்திருந்தார் அவர். உற்றுப் பார்த்தாலொழிய தெரியாத புராதனமும், ஏழ்மையை மறைக்கும் அளவுக்கு ஐரோப்பிய கனவான் போன்ற உடைத்தோற்றம். தலையிலிருந்த தொப்பியின் நுனியை தூக்கியபடி அவர் வாசுதேவனை நிமிர்ந்து பார்த்தபோது முகம் இன்னமும் தெளிவாகத் தெரிந்தது. எழுபது வயதாவது இருக்கலாம் என்று தோன்றியது. வாசுதேவனின் அலுவலகத்தில் பல முழுக்கிழங்கள் வழுக்கைத்தலை, பொக்கைவாய் என்று எந்த அடையாளமும் தெரியாதபடிக்கு மொட்டைத்தலையும், வற்றல் உடம்புமாய் அரைக்கிழமாக உருமாறி வலம் வருவார்கள். நேர்மாறாக, கல்லூரி முடித்து வரும் மாணவர்களோ ஆஜானுபாகுவாக பெரியமனுஷ தோரணையில் இருப்பார்கள். அமெரிக்கர்களின் வயதை அனுமானிப்பது வாசுதேவனுக்கு பெரும் சிக்கலாகவே இருந்தது. அவனை மேலும் யோசிக்கவிடாமல் பெரியவரின் குரல் எழுந்தது.

‘நீ அதிகம் கால்பந்து ஆடியதில்லையோ?’ என்றார்.

‘அஹ்… நான் பேஸ்கெட்பால்தான் அதிகம் விளையாடியிருக்கிறேன். சும்மா சின்னக் குழந்தைகளுக்கு கோச்சிங் காம்ப் என்று வாலண்டியராக வந்தேன்’
‘தெரிந்தது. நீ சொல்லிக் கொடுத்தது போல் அவர்கள் உதைத்தால் ட்ரிப்ளிங் கண்ட்ரோல் சுத்தமாக வராது’ என்றார். முகத்தின் வறண்ட புன்னகையில் இப்பொழுது இகழ்ச்சியும் கூடியிருந்தது.

வாசுதேவன் பதில் எதுவும் சொல்லாமல் மையமாக புன்னைகைத்து வைத்தான்.
‘பார்… பாதத்தை நேராக வைத்துக் கொண்டு உதைக்கக் கூடாது. இந்தக் கட்டைவிரல் கணு இருக்கிறது பார்… இங்கே… இப்படி அணைப்பாக உருட்ட வேண்டும். லெஃப்ட் விங் என்றால் இடது காலை திருப்பி கொஞ்சம் அதிக அழுத்தம். ரைட் விங்கில் இருப்பவருக்கு வலது பாதத்தை சாய்வாக வைத்து ஸ்டீரிங் செய்து கொண்டு போக வேண்டும்’

அவ்வளவு டெக்னிகலான அறிவுரையெல்லாம் அவனுக்கு அதிகம் புரியவில்லை. ஆனால் அவர் வெகுநேரமாக அவனை கண்காணித்துக் கொண்டிருந்தார் என்று மட்டும் புரிந்தது. சிரித்துக் கொண்டே ‘என் பெயர் வாசு. நீங்கள்?’ என்று அவர் அமர்ந்திருந்த பாறைக்கு அருகே சென்று கையை நீட்டினான்.

“ஸ்டான்லி” என்றவாறே பதிலுக்கு கையை நீட்டினார். அந்த மதிய வெம்மையிலும் அவர் கை குளிர்ச்சியாக இருந்தது.

‘அந்த டேரல்தானே இந்த கேம்ப்பை நடத்துகிறான். அவனும், அவனுக்கு பணம் தரும் க்ளிங்கர் கூட்டமும் வெறும் கண்துடைப்பு கூட்டம்’ என்றார். குரலில் இகழ்ச்சி பெருக்கெடுத்து ஓடியது.

‘ஓ…. அப்படியா சொல்கிறீர்கள்…. உள்ளூர்காரர்களின் ஒத்துழைப்பு அவ்வளவு இல்லை போலவே. அவர் மிகவும் பிரயத்தனப்பட்டுத்தான் செய்துகொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்”.

‘இவர்களின் பம்மாத்து விஷயம் இங்கிருக்கும் எல்லோருக்கும் தெரியும். நீ எந்த ஊரிலிருந்து வருகிறாய்? ‘ என்றார்.

‘நான் மூன்று மாதங்கள் முன்னாடிதான் கலிஃபோர்னியாவிலிருந்து வந்தேன். டேரலுடன்தான் வேலை செய்கிறேன். சிறுவர்களுக்கான கேம்ப். வாலண்டியராக வாயேன் என்றார்’

‘வேறு எவன் வருவான்? இப்படியாகவா அநாமததாக இருந்தது இந்த இடம்? எவ்வளவு கொண்டாட்டமான இடம் தெரியுமா? பெரும் களியாட்டங்கள் போல மேட்சுகள் நடந்து கொண்டிருந்தது. ஸ்டேடியத்தையும் இடித்து தள்ளிவிட்டு, இந்த துண்டு இடத்தில் குழந்தைகளுக்கு சாக்கர் கேம்ப் நடத்துக்கிறேன் என்று ஏமாற்றுகிறார்கள்’ சற்று நிறுத்திவிட்டு சொன்னார். ‘இதே மைதானத்தில் ஆளை மட்டுமா கொலை செய்தார்கள்? மொத்த கால்பந்தையும் கொலை செய்துவிட்டார்கள்’
‘ஸ்டேடியமா? இங்கேயா… ‘ வாசுதேவன் நம்பமுடியாமல் சுற்றி சுற்றிப் பார்த்தான். கிழக்குப்பக்கம் சற்று ஏற்றமான மலைப்பகுதியில் ஏதோ குடியிருப்புகள் இருப்பது போல் தெரிந்தது. அப்படியே அரைவட்டமாக சுற்றி வந்தால் பெரிய ஷாப்பிங் மால் ஒன்றின் வாயில் வரும். அதனுள்ளே அங்காடிகளும், பெரும் கடைகளுமாய் தனி நகரமே இருந்தது. இந்தப்புறம் ஏழடுக்கு பார்க்கிங் கட்டிடத்தின் பின்புறமாய் அரைமைல் தொலைவில் சிறிய மைதானத்தின் நடுவே நண்டும் சிண்டுமாய் பல குழந்தைகள் கூடியிருக்க டேரல் மளமளவென கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டிருந்தார். மைதானத்தின் மறுகோடியில் மரநிழலில் கார்களை நிறுத்தி வைத்துவிட்டு குழந்தைகளின் பெற்றோர் கூடிநின்று குளிர்கண்ணாடிகளும், அரைநிஜார்களுமாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

‘ஆமாம். 83 லீக்வரை, ஃபிலடெல்ஃபியா ஸ்டோனர்ஸ் அணிக்கு, ஜேஸ்டன்வில்தான் ஹோம் கிரவுண்ட். என்ன ஒரு திருவிழாக்கோலம் தெரியுமா… கால்பந்திற்கான பொற்காலம் அல்லவா. அது..’

அவனை நிமிர்ந்து பார்த்தவர் வெறுப்பு தோய்ந்த குரலில் ‘நீயும் அந்த க்ளிங்க்ர்கள் கம்பெனியில்தானே வேலை பார்க்கிறாய்… அவர்கள் இருக்கும்வரை இங்கே கால்பந்து டீம் என்று ஒன்று உருவாகவே உருவாகாது. ஊரை ஏய்க்க இப்படி கணக்கு காட்டி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்’

‘ஹ! அப்படியா சொல்கிறீர்கள்… இப்போதுதான் பெரிய ஐஸ் ஹாக்கி ஸ்டேடியம் ஒன்றை கன்மாஸ்ஸில் கட்டிக் கொண்டிருக்கிறார்களே… ஃபுட்பால் மேல் என்ன பாரபட்சம் இருக்கப் போகிறது?’

‘ஐஸ் ஹாக்கி ஸ்டேடியமா… அதுவும் இதுவும் ஒன்று என்கிறாயா நீ?’
பெரியவர் மிகவும் கோபமாகிவிட்டார் எனத் தெரிந்தது. வேகமாக எழுந்திருக்க முடியாமல் எழுந்து நின்று அவனை உறுத்துப் பார்த்தார்.

‘ஒன்று என சொல்லவில்லை. அதற்கெல்லாம் எங்கள் கம்பெனிதானே பிரதானமான பங்களிக்கின்றனர்.’

‘ஏன் சொல்லமாட்டாய்… கால்பந்து என்னும் கலாச்சாரம் பற்றி உங்களுக்கு என்ன தெரியப் போகிறது. எங்களைக் கொன்றுவிட்டு புதியதாக எதையாவது கொண்டு வந்து நட்டுவிடப் பார்க்கிறீர்களா? நானும், இந்த மைதானமும், இந்த மரங்களும், இதில் உள்ள ஒவ்வொரு புற்களும் இருக்கும்வரை அனுமதிக்க மாட்டோம். இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த ஏமாற்று வேலை நடக்கும் எனப் பார்த்துவிடலாம்.’ தடுமாறியபடி நடந்தவர், இடுப்பு பெல்ட்டை இறுக்கிக் கொண்டு விலகி செல்ல ஆரம்பித்தார்.

‘ஏதும் உதவி தேவையா? உங்களை வீட்டுக்கு கொண்டு விடவா? எங்கே செல்ல வேண்டும் நீங்கள்’ என்றான் வாசு.

‘கவலைப்படாதே. இங்கே பக்கம்தான். நடந்தே போய்விடுவேன். நான் வேறெங்கே போகமுடியும் சொல்லு… இனி நேராக சுடுகாடுதான்’ என்று சொல்லிவிட்டு மைதானத்தின் எல்லையில் இருந்த சரிவில் இறங்கி, மரங்களடர்ந்த, அதிகம் பராமரிக்கப்படாத தெருவில் நடக்கத் தொடங்கினார்.

‘கோச் வசு, கொஞ்சம் இப்படி வந்து இந்த கோல் போஸ்ட்டை மாற்றி வைக்க முடியுமா’, டேரல் கூப்பிட மீண்டும் மைதானத்திற்குள் ஓடினான்.
ஆறிலிருந்து எட்டு வயதுவரை இருக்கும் ஒரு டஜன் குழந்தைகளுடன் டேரல் மைதானத்தின் கிழக்கு மூலையில் இருந்தார். எதிரும்புதிருமாக இரு வரிசைகளில் குழந்தைகளை நிறுத்தி வைத்துவிட்டு, பந்தை எப்படி எதிரிலிருப்பவருக்கு பாஸ் செய்வது என்று பாடம் எடுத்துக் கொண்டிருந்தவர், அடுத்ததாக ஃப்ரீ கிக் சொல்லிக் கொடுப்பதற்காக சிறிய வலையுடன் கூடிய கோல் போஸ்ட்களை நடுவில் நட்டு வைத்துக் கொண்டிருந்தார். பிக்டெய்ல் பின்னலுடன் வந்திருந்த எமிலி, மூக்குறிஞ்சிக்கொண்டு துள்ளித்துள்ளி ஓடும் ரெனால்டு, குண்டு கன்னங்களுடனான லூபின் என்று குழந்தைகளின் உற்சாகம் அவனையும் தொற்றிக் கொண்டது. கைலும் எர்லும் அண்ணன் தம்பிகளோ, மாமன் மச்சான்களாகவோ இருப்பார்கள் போலிருந்தது. மாற்றி மாற்றி விடாமல் பேசிக்கொண்டே பெரிய பையன்களுக்கு, ட்ரிப்ளிங், பிளாக்கிங், டிஃபென்ஸ் என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வளவு அடர்த்தியான ஆப்பிர்க்கன் அக்செண்ட் மத்தியிலும் அவர்களின் பலவருட பயிற்சி அளிக்கும் அனுபவம் பளிச்சென தெரிந்தது. ரோஜரும் அவனுமாக சின்னக் குழந்தைகளை வரிசையில் நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கும்போது அவன் கேட்டான்,

‘ரோஜர், இங்கே பெரிய ஸ்டேடியம் இருந்ததா முன்பு? அதை இடித்து விட்டுத்தான் இந்த ஷாப்பிங் மால்கள் எல்லாம் வந்தனவா?’

‘ஓ! கென்னடி ஸ்டேடியம் இங்குதான் இருந்தது. அதொரு பழைய கதை. 83லோ 85லோ பெரிய மியூசிக் ஃபெஸ்டிவெல் ஒன்று…. அதுதான் கடைசி நிகழ்ச்சி என்று நினைக்கிறேன். அதற்கப்புறம், பொதுமக்கள் உபயோகத்திற்கு ஆபத்தானது என்று முடிவு செய்து மொத்தமாக இடித்து தள்ளிவிட்டார்கள்’

அதற்குள் அங்கு வந்த டேரல் இடைமறித்து ‘நீங்கள் அந்த நிகழ்ச்சிக்கு போயிருந்தீர்களா ரோஜர்? எனக்கு அப்போது பத்து வயது என்று நினைக்கிறேன். என் அம்மா எங்கள் யாரையும் போகக்கூடாது என்று சொல்லிவிட்டார். அதுவும் அந்த சபிக்கப்பட்ட மேட்ச்சிற்கு அப்புறம் பலரும் பயந்துகொண்டு இந்த ஸ்டேடியம் பக்கமே வந்ததில்லை’

‘நான் அப்போது பத்தாவது கிரேடு படித்துக் கொண்டிருந்தேன். 83ம் வருடம்தான் அது. நன்றாக நினைவிலிருக்கிறது.. நான் அந்த மேட்ச்சை ஹாமில்டன் ஸ்டேண்டிலிருந்து பார்த்தேன். என்னவொரு மேட்ச் அது. துரதிர்ஷ்டவசமாக முடியும்போது….’ சுற்றிலும் இருக்கும் குழந்தைகளின் காதில் விழாதவாறு ‘…. அந்தக் கொலை நிகழ்ந்துவிட்டது. இதோ இந்த இடத்தில்தான்’ என்றார்.

‘ஹ! ஆஸ்பிடலுக்கு கொண்டு போய் டிவியில் பேட்டியெல்லாம் எடுத்ததை காட்டினார்களே ரோஜர். அப்புறம்தானே இறந்து போனார். எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது’

‘சேச்சே… ஆஸ்பிடலில் பேட்டி கொடுத்தது அவருடைய மனைவி. இல்லை இல்லை… அம்மா என்று நினைக்கிறேன். இங்கேயிருந்து ஸ்ட்ரெச்சரில் தூக்கும்போதே உயிர்பிரிந்து விட்டதே. என் சித்தப்பா அப்பொழுதே சொன்னார்’
இப்பொழுது வரிசையிலிருந்த குழந்தைகள் பந்தை அவர்களாகவே உதைத்து விளையாட ஆரம்பிக்க, டேரலும் ரோஜரும் பழைய மேட்ச்சை வாசுதேவன் பொருட்டு மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியிருந்தனர்.

‘அநியாயமான முடிவு அது. நாங்கள் மேற்கில் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தோம். பந்து தெளிவாக கோட்டிற்கு வெளியேதான் பவுன்ஸ் ஆகியது’ டேரல் ஏதோ சொல்லிக் கொண்டிருக்க, ரோஜர் தீவிரமாக மறுத்தார்.

‘அப்படி சொல்லித்தான், கட்டுக்கதையெல்லாம் கிளப்பி விட்டார்கள். அது சரியான கோல்தான். க்ளிங்கர் பையன் கோணலாக ஆடி மானத்தை வாங்கி விட்டான். அவனால்தான் கவைக்குதவாத அந்த ரெவ்ஸ் அணி ஃபைனல்ஸ் வரை போனது’
டேரல் மிகவும் எமோஷனலாகிவிட்டார். ‘தெரியும்யா.. தெரியும். சுற்றி சுற்றி க்ளிங்கர் மேலேதான் குற்றம் சொல்வீர்கள் என்று…. இன்னும் க்ளிங்கர்கள்தான் ஃபுட்பாலை வளரவிடாமல் செய்கிறார்கள் என்றெல்லாம் கதை கிளப்பி விடுகிறீர்கள். எவ்வளவு செலவழித்தும் இந்த அவப்பெயர் போகவே போகாது அவர்களுக்கு. என்ன மக்களோ… என்ன லாஜிக்கோ’

டேரலை தவிர்த்து வாசுதேவனிடம் திரும்பிய ரோஜர் ‘நீயே சொல்லு, லெஃப்ட் விங்கில் வேகமாக பந்தை கொண்டு வருபவனை எப்படி ப்ளாக் செய்வாய்? பந்தை திருப்பி கோலியிடம் தட்டிவிட்டாலேப் போதுமல்லவா. இவன் என்ன செய்தான் தெரியுமா…’ இவன் என்பது அந்த இடத்தில் டேரல் வக்காலத்து வாங்கும் ஒருவனைப் பற்றியது என்ற அளவிற்கு வாசுதேவனுக்குப் புரிந்தது.

‘பந்தை ஓங்கி வெளியில் உதைக்கிறான். எப்படிப் போனாலும் அது கார்னர் போய்விட்டிருக்கும். அன்றைக்கு என்று துரதிர்ஷ்டம் பார், அந்த ரெவ்ஸ் டீம் பையன் வேகமாக பந்தின் பின்னாடியே வந்துவிட்டான். க்ளிங்கர் வெளியில் உதைத்த பந்து அந்த ரெவ்ஸ் டீம் பையைன் காலில் பட்டு அப்படியே பலூன் போல உயரேப் போய் மூன்றடி முன்னால் வந்துவிட்டிருந்த கோலியைத் தாண்டி ஒரே பவுண்ஸில் கோலுக்கு போய்விட்டது. அதுவும் எப்படி… நேரே கோல் போஸ்ட்டின் மேல் கம்பில் பட்டு உள்ளே விழுந்து ஸ்பின் ஆகி வெளியே வந்துவிட்டது. இன்றுவரை அது ரெஃப்ரியின் தவறு என்று இவர்கள் அழுகுணி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட அதொரு செல்ஃப் கோல். மடத்தனமாக விளையாடி மொத்த டீமிற்கும் சமாதி கட்டிவிட்டான்.’

‘சான்ஸே இல்லை. அந்த ரிக்கார்டிங்கை இப்போது கூட என் அப்பா வீடியோ கேசட்டில் வைத்திருக்கிறார். அது கோல் போஸ்டிற்கு வெளியேதான் விழுந்தது. ‘
‘அடப் போங்கப்பா. அந்த லீகோடு ஈஸ்டன் நகரத்து ஃபுட்பால் சரித்திரமே முடிஞ்சு போச்சு’

‘இது ஆகாத பேச்சு ரோஜர். மேயர் தெளிவாகச் சொல்லியிருந்தார். ஸ்டேடியம் ஏகப்பட்ட உடைசல்களுடன் தள்ளாடிக் கொண்டிருந்தது அப்பொழுது. ரெனொவேட் செய்ய ஆகும் செலவுக்கு புதிய ஸ்டேடியமே கட்டிவிடலாம். மேலும் மைதானத்தின் மத்தியிலே கொலை வேறு நிகழ்ந்து எக்கசக்கமாக மக்கள் பயந்து போயிருந்தார்கள்’
‘ஆமாம். இதாண்டா சமயம் என்று மொத்தமாக வளைத்துப் போட்டு மால் கட்டிவிட்டு இலாபம் பார்த்துவிட்டீர்கள். ஒட்டுமொத்த டவுன்டவுன் கடைத்தெரு வியாபாரத்தையே காலி செய்துவிட்டீர்களே. அப்போதைய ஈஸ்டன் எவ்வளவு ரம்மியமாக இருந்தது தெரியுமா’ ரோஜர் விடாமல் பொருமிக் கொண்டிருந்தார்.

வாசுதேவனுக்கு லேசாக புரியத் தொடங்கியது. க்ளிங்கர்கள் குடும்பத்திற்கு ஈஸ்டன் நகரத்தில் எக்குதப்பான சொத்து உண்டு எனத் தெரியும். ஆனால் இவர்கள் சொல்வதைப் பார்த்தால் ஏகப்பட்ட செல்வாக்கு இருக்கும் போல. இடிந்து போன ஸ்டேடியம் ஒன்றை அப்படியே கபளீகரம் செய்து ஊருக்கு ஒதுக்குபுறமாய் பெரிய ஷாப்பிங் மால், பார்க்கிங் கட்டிடம் என்றெல்லாம் கட்டி, ஈஸ்டன் நகரத்தின் முகத்தையே மாற்றி விட்டிருக்கிறார்கள். பெரிய தொழில்போட்டியின் ஓரங்கமாக கால்பந்து விளையாட்டும் ஆகி விட்டது.

இதற்கு மத்தியில் ஏதோ ஒரு க்ளிங்கர் பையன் ஃபுட்பால் ஆடி ஒரு மேட்ச் தோற்க காரணமாகவும் ஆகிவிட்டிருக்கிறான். அதுதான் ரோஜர் போன்ற கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு பயங்கர கடுப்பாக இருக்கிறது. அதனால்தான் க்ளிங்கர் நிறுவனம் முன்வந்து ஃபுட்பால் கேம்ப் நடத்தினால் கூட அது வெறும் கண்துடைப்பாகவே அவர்களுக்கு தெரிகிறது.

‘ஹ! இதெல்லாம் அந்த ஈஸ்ட்வுட் ஷூ கம்பெனிக்காரர்கள் கிளப்பிவிட்ட புரளி. அவர்கள் பிஸினெஸ் பிளானிங் செய்யாமல் அகலக்கால் வைத்து வரிசையாக கடைகளாக கட்டிக் கொண்டே போனார்கள். புதிய வாய்ப்புகள் எல்லாமே புறநகரங்களில்தானே பெருக்கெடுத்து ஓடியது… டவுன்டவுன் தெருக்களின் வியாபாரம் படுத்துவிட்டதற்கு நாங்கள் என்ன செய்வது’

அதற்கு மேல் ரோஜர் ஒன்றும் பேசவில்லை. ஏதோ டேரல் மூலமாக வரும் கொஞ்சநஞ்ச வாய்ப்புகளையும் கெடுத்துக் கொளவதா என்பது போல பதிலேதும் சொல்லாமல் நிறுத்திவிட்டார்.

‘இந்த ஊருக்கு மீண்டும் ஒரு கால்பந்து மறுமலர்ச்சி ஏற்படும் என்று எனக்கு நம்பிக்கையில்லை. என் அப்பா காலத்தவர் சிலர் இன்னமும் அதிசயம் ஏதும் நிகழாதா என்று நப்பாசையோடு இருக்கிறார்கள். அதெல்லாம் ஒன்றும் நடக்காது பாருங்கள்’ என்பதோடு முடித்துக் கொண்டு விட்டார். வாசுதேவனுக்கு சற்று முன்பு உத்வேகத்தோடு வாதிட்ட பெரியவர் நினைவு வந்தது.

‘ஆமாம் யாரோ மைதானத்தின் நடுவில் கொலையானதாக சொல்கிறீர்களே… யார் அது? அந்த க்ளிங்கர் பையனா?’

டேரல் மறுதலிப்பாக தலையாட்டிக் கொண்டே ‘இல்லை… இல்லை… அதை கோல் என்று தீர்ப்பளித்த ரெஃப்ரியைத்தான் போட்டுத் தள்ளிவிட்டார்கள். மேட்ச் முடிந்து ஃபைனல் விசில் ஊதியதும், யாரோ குரூப்பாக ஸ்டேடியத்திலிருந்து தாவி ஓடிப் போய் ரெஃப்ரி மீது பாய்ந்து விட, சுற்றிலும் ஒரே குழப்பமாகி விட்டது. நாங்கள் தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தபோது, ஏதோ தள்ளுமுள்ளு சண்டை என்றுதான் நினைத்தோம். ஆனால் பாரா மெடிக்கலெல்லாம் வந்து ஸ்ட்ரெச்சரில் அள்ளிப் போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடின போதுதான் விஷயமே தெரிந்தது. அந்த ரெஃப்ரி பெயர் கூட…..’ டேரல் யோசிக்க, ரோஜர் சொன்னார் ‘ஏதோ ஒரு ஸ்டேன்லி என்று வரும். பாவம். இவர்களின் அராஜகத்துக்கு அவர் பலியாகிவிட்டார்’
‘கோர்ட்டு தீர்ப்பில் என்ன வந்தது தெரியுமா’, ‘அந்த வெறியாட்கள் கூட்டத்தில் க்ளிங்கர் ஃபேக்டரி ஆட்கள் இருந்தார்களே’ என்று அடுத்த ரவுண்டு விவாதத்திற்கு டேரலும் ரோஜரும் தயாராக, வாசுதேவனுக்கு ரோஜர் சொன்ன பெயர் நடு முதுகில் பனிக்கட்டியை வைத்து தேய்த்தது போல சிலீரென இருந்தது.

அடுத்த நாள் ஞாயிறு காலை, எழுந்திருக்கும்போதே வாசுதேவனுக்கு காய்ச்சல். நூற்றியிரெண்டு டிகிரிக்கு அனலடித்தது. அவனுக்கு நன்றாகத் தெரியும். அன்று பயிற்சி முகாமிற்கு போனால், அந்தப் பெரியவர் மைதானத்தின் மூலையில் அமர்ந்து கொண்டு குழந்தைகள் ஆடும் கால்பந்தாட்டத்தை பார்த்துக் கொண்டிருப்பார் என்று. அந்த மைதானத்தில் கால்பந்தாட்டத்தை நேரில் காண அவருக்கு வாய்த்த வெகு சில சந்தர்ப்பங்களில் அதுவும் ஒன்று. அந்த சபிக்கப்பட்ட கடைசி மேட்ச்சைப் பற்றி இன்னமும் நிறைய தகவல்கள் அவருக்கு தெரிந்திருக்கும். ரோஜர் மற்றும் டேரலின் கதைகளைப் போல் மூன்றாவது கதை ஒன்றை அவரும் சொல்லலாம். க்ளிங்கர் பையன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் அது கோல்தானா இல்லையா என்ற தீர்ப்பை விளக்கலாம்.

ஆனால் வாசுதேவன் போகவில்லை. மூன்று வாரங்களில் வேலையை மாற்றிக் கொண்டு கலிபோர்னியாவுக்கு போய்விட்டான்.

Picture courtesy:- http://i1.ytimg.com/vi/NeKATPh1Nrs/hqdefault.jpg

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.