விரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்

– எஸ். சுரேஷ்

e a gardner

அத்தை பையனுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் நான் என் முதல் எனிட் ப்ளைட்டனைப் படித்து முடித்தேன். அவனோடு விளையாடுவதற்காக அத்தை வீட்டுக்கு ஒரு சனிக்கிழமையன்று கொஞ்சம் சீக்கிரம் போய் விட்டேன், ஆனால் அவன் பள்ளியில் அன்றைக்கு அரை நாள் வகுப்புகள் இருந்தன. அவன் வரும்வரை அவனுக்காக அங்கேயே காத்திருபப்து என்று முடிவு செய்தேன். அப்போது அங்கே எனிட் ப்ளைட்டன் எழுதிய சீக்ரட் செவன் புத்தகம் ஒன்று இருந்தது. அதை எடுத்து படிக்க ஆரம்பித்தவன், அது மிகவும் விறுவிறுப்பாக இருக்கவே அத்தை பையன் ஸ்கூல் விட்டு வருவதற்கு முன்னரே படித்து முடித்தும் விட்டேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்த முதல் புத்தக நினைவு இதுதான் என்று நினைக்கிறேன். அப்போது நான் நான்காவதோ ஐந்தாவதோ படித்துக் கொண்டிருந்தேன்.

செகந்திராபாத்தில் எனக்கு வாய்த்த உலகைவிட முற்றிலும் மாறுபட்ட உலகம் எனிட் ப்ளைட்டனின் பிரிட்டிஷ் உலகம். அதனால் அது அதிசயமாகவும் வசீகரமாகவும் இருந்தது. சின்னஞ் சிறுவர்கள் துப்பறியும் நிபுணர்களாக இருக்க முடியும் என்பதும் அவர்களால் குற்றங்களைத் துப்பு துலக்க முடியும் என்பதும் என் கற்பனையைக் கிளர்த்தின. வெகு விரைவிலேயே எனிட் ப்ளைட்டன் விவகாரத்தின் தவிர்க்க முடியாத அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டேன்: பேமஸ் பைவ், பைவ் பைண்ட்அவுட்டர்ஸ், யங் அட்வென்சரர்ஸ் இத்யாதி வகையறாக்களின் செயல்பாடுகளை தேடித்தேடி வாசித்தேன். பெண்கள் வாசிக்கும் மலோரி டவர்ஸ் போன்ற புத்தகங்களைத் தொடவில்லை என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

இப்போது திரும்பிப் பார்க்கும்போது அந்த காலத்தில் நான் அனுபவித்து வாசித்த கதைகள் உப்பு சப்பற்றவை என்று தோன்றுகிறது, ஆனால் அவைதான் எனக்கு வாசிக்கும் பழக்கம் உருவாகக் காரணமாக இருந்தன. பத்தாம் வகுப்பு படிக்கும் காலகட்டத்தில் எனிட் ப்ளைட்டனைத் துறந்தேன்.

என் பெண்களின் வாசிப்பு வரலாற்றை அவதானிக்கும்போது, அவர்கள் வெகு வேகமாகவே எனிட் ப்ளைட்டனை கடந்து சென்றுவிட்டதைக் காண்கிறேன். ஹாரி பாட்டர் வந்ததுதான் இதற்கு காரணமாக இருக்க வேண்டும். ஹாரி பாட்டர்கூடவே பெர்சி ஜாக்சன் புத்தகங்களும். எனிட் ப்ளைட்டன் கதைகளைவிட இவை எவ்வளவோ நன்றாக எழுதப்பட்டிருக்கின்றன. எனிட் ப்ளைட்டன் கதைகளைவிட இவை வேகமாக இருக்கின்றன என்பது மட்டுமல்ல, இவற்றில் தகவல்களும் அதிகம். தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது. எனிட் ப்ளைட்டன் உருவாக்க விரும்பிய பழங்காலத்து பிரிட்டிஷ் வசீகரங்கள் புது உலகில் பகட்டுக்கும் பளபளப்புக்கும் எப்போதோ வழிவிட்டு ஒதுங்கிக் கொண்டாயிற்று.

இந்தக் கால புத்தகங்களின் ட்ரோப்புகளில் புதிதாக எதுவுமில்லை என்று சொல்லலாம், பாத்திரங்களின் ஆதிவகைப்பாடுகளில் மாற்றமில்லை என்று சொல்லலாம், ஆனால் இந்தக் கால எழுத்தாளர்களின் ஹைப்பர்வேகக் கற்பனைத் தெறிப்பைப் பார்க்கும்போது எனிட் ப்ளைட்டன் இளைஞர்கள் மத்தியில் சோபிக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. நாங்கள் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலத்துக்கு நீங்கள் வந்திருந்தால் எங்களில் பலரும் எனிட் ப்ளைட்டன் வாசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்க முடியும். ஆனால் இன்று ஏழாம் வகுப்பு தாண்டிய எந்த ஒரு பையனோ பெண்ணோ எனிட் ப்ளைட்டனைத் தொடுவதை உங்களால் பார்க்க முடியாது – ஆனால் இந்தக்காலத்தில் யாராவது அவர் எழுதியதை எல்லாம் படிக்கிறார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

அப்போதெல்லாம் எனிட் ப்ளைட்டனுக்கு அப்புறம் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், பெர்ரி மேசன் என்று எங்கள் வாசிப்பு விரியும். என் விஷயத்தில் பெர்ரி மேசன் கொஞ்சம் சீக்கிரமாகவே வந்து விட்டார் என்று நினைக்கிறேன். நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளரின் மகன் ராஜு என்னைவிட நான்கு வயது மூத்தவன். அவனும் அவனது அண்ணன் ரங்கனும் தீவிர பெர்ரி மேசன் விசிறிகள். எனவே, ஏழாவது படித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நான் ராஜுவிடம் ஒரு பெர்ரி மேசன் புத்தகத்தைக் கேட்டு வாங்கிப் படித்தேன். ஆனால் அதை நான் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அப்பா என்னை கடுமையாகக் கோபித்துக் கொண்டார். பெர்ரி மேசன் புத்தகங்களின் முன் அட்டையை அரைகுறை ஆடை அழகிகள் அலங்கரித்ததுதான் காரணம்! ஆனால் உண்மையைச் சொன்னால் பெர்ரி மேசன் புத்தகங்கள் மிகவும் ஆசாரமானவை. அவற்றில் முத்தம் கூட இருக்காது, நிர்வாண காட்சிகளுக்கு எங்கே போக?

பெர்ரி மேசன் கையாண்ட வழக்குகளின் போக்கு எதுவும் ஆரம்ப நாட்களில் எனக்குப் பிடிபடவில்லை என்பதை நான் ஒப்புக் கொண்டாக வேண்டும். ஆனால் இரண்டு மூன்று புத்தகங்களைப் படித்து முடித்தவுடன் எல்லாம் புரிய ஆரம்பித்து விட்டது. கோர்ட் ரூம் பரபரப்புகள், குறுக்கு விசாரணை, அப்ஜெக்சன் மைலார்ட், அப்ஜெக்சன் சஸ்டயிண்ட், ஹேபியஸ் கார்பஸ், க்ளைமாக்ஸ் குறுக்கு விசாரணையில் குற்றவாளியின் பொய்களை பெர்ரி மேசன் தோலுரிப்பது என்று சில முக்கியமான இடுபொருட்கள் இந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றிலும் உண்டு. எல்லா பெர்ரி மேசன் புத்தகங்களும் இப்படிதான் இருக்கும், பெர்ரி மேசன் எடுத்துக்கொண்ட வழக்குகளின் வாதிகள் அத்தனை பேரும் அப்பாவிகள்.

இப்போதெல்லாம் எனிட் ப்ளைட்டன் போல் பெர்ரி மேசனுக்கும் இளம் வாசகர்கள் இல்லை. ஆனால் பெர்ரி மேசன் புத்தகங்களை ரயில்வே ஸ்டேஷன் புத்தகக் கடைகளில் நிறைய பார்க்க முடிகிறது. மத்திய வயதினர்தான் இந்தப் புத்தகங்களை இப்போதும் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்- இளைஞர்கள் ஜான் கிரிஷாம், டேவிட் பல்டாச்சி, ஸ்டீவ் மார்ட்டினி என்று வேறு திசையில் போய் விட்டார்கள். இங்குள்ள பட்டியலை GoodReadshttps://www.goodreads.com/shelf/show/courtroom-drama பார்த்தால் இன்றைய தலைமுறை ஏர்ல் ஸ்டான்லி கார்ட்னரின் பெர்ரி மேசனைப் பொருட்படுத்துவதில்லை என்று தெரிகிறது. வெள்ளை மாளிகை வரை நீளும் இந்நாளைய சதித்திட்டங்களின் பூதாகர துணிச்சலோடு ஒப்பிட்டால் பெர்ரி மேசன் கதைகளில் தண்டிக்கப்படும் குற்றங்கள் அற்பமானவை. இன்றைய வாசகர்களுக்கு அவை தாத்தா பாட்டி காலத்து கதைகளாக இருக்கின்றன.

இதன்பின் வந்தார் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், குற்றப்புனைவுகளின் மன்னன் – அப்படிதான் அந்தக் கால வாசகர்கள் சொல்லிக் கொண்டார்கள். சேஸ் ஏராளமான நாவல்கள் எழுதினார், அவற்றில் சில விற்பனையில் சாதனை படைத்தன. ஆனால் அவரது நாவல்களிலும் வழமையான குற்றக்கலவைதான் இருக்கும் – வங்கிக் கொள்ளைகள், கொலைகார வில்லன்கள், எட்டப்பன்கள், அழகிகள், கொஞ்சம் போல் தூவப்பட்ட செக்ஸ். சேஸ் நிறைய எழுதினார், கடைகளில் அவர் எழுதிய புத்தகங்கள் நிறைய இருந்தன, நிறைய பேர் சேஸ் வாசித்தார்கள். ஆனால் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சேஸ் வாசிப்பதில் ஆட்சேபம் இருந்தது- அவர் குற்றச்செயல்களை விலாவரியாக விவரித்தார் என்ற ஆட்சேபம் அவர்களுக்கு இருந்தது.

காலப்போக்கில் சேஸ் சாலையோரம் விட்டுச் செல்லப்பட்டார். அவர் இடத்தை சிட்னி ஷெல்டன், ஜெப்ரி ஆர்ச்சர் போன்றவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். இப்போது யாரும் சேஸ் படிப்பதாகத் தெரியவில்லை. இளைஞர்கள் அவரைப் படிப்பதற்கே வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது. தங்களுக்குத் தேவைப்படும் குற்றங்களின் சாகச நாடகத்தை அவர்கள் சினிமாவிலும் டிவியிலும் பெற்றுக் கொள்கின்றனர்.

அந்நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட எழுத்தாளர்களில் மிக முக்கியமான இன்னொருவர் அலிஸ்டர் மக்லீன். கன்ஸ் ஆப் நவரோன், வேர் ஈகில்ஸ் டேர் போன்ற அவரது துவக்ககால படைப்புகள் மிகவும் பிரபலமானவை, வெற்றி பெற்ற திரைப்படங்களாகவும் ஆயின. உளவாளிகள், ராணுவ வீரர்கள், போர், போதைப் பொருட்கள் என்று ஒரு பிரத்யேக உலகை அலிஸ்டர் மக்லீன் நாவல்கள் சித்தரித்தன. அவரது ஆங்கிலத்தை நாங்கள் கொண்டாடினோம். அந்த விஷயத்தில் அவரை அடிப்பதற்கு ஆள் கிடையாது என்று நினைத்துக் கொண்டிருந்தோம். அவரது பிளாட்லைன்கள் தெளிவாக இருக்கும், கதையின் வேகம் கச்சிதமாக இருக்கும், நிகழ்வுகளின் பரபரப்புக்குக் குறைவிருக்காது. இவை அனைத்துக்கும் மேலாக அவர் நம்மை ஹங்கேரி, பாரிஸ் போன்ற வித்தியாசமான இடங்களுக்கு அழைத்துச் சென்றார். அவர் எங்களுக்கு அலாஸ்காவைக காட்டினார், ஆழ்கடலை அறிமுகப்படுத்தினார். அவர் எழுதிய முதல் சில நாவல்கள் அளவுக்கு இறுதிக்கால நாவல்கள் அதே தரத்தில் இருக்கவில்லை என்றாலும் அவர் எழுதிய அத்தனை நாவல்களையும் நான் படித்துவிட்டேன் என்று நினைக்கிறேன்.

இதில் ஒரு விஷயம் சொல்ல வேண்டும், தன்னை ஒரு நாவலாசிரியர் என்று யாரும் விவரிப்பதை அலிஸ்டர் மக்லீன் வெறுத்தார். தான் ஒரு கதைசொல்லி என்றுதான் அவர் எப்போதும் சொல்லிக் கொண்டார். அவருக்கு நன்றாகக் கதை சொல்லும் ஆற்றல் இருந்தது என்பதும் உண்மைதான். டெஸ்மாண்ட் பாக்லி அவரது க்ளோன், அலிஸ்டர் மக்லீன் பாணியில் அவர் எழுதிய சில நாவல்களும் பரவலான வரவேற்பைப் பெற்றன.

ஆனால் துரதிருஷ்டவசமாக மக்லீனை அவருக்குப் பிந்தைய தலைமுறை புறக்கணித்து ராபர்ட் லட்லமின் ஆரவார நாவல்களில் நாட்டம் கொண்டது. உலகளாவிய சதித்திட்டங்கள், பனிப்போர் கால உளவாளிகள், வில்லன்களின் சர்வதேச ஆதிக்கவெறி, தீவிரவாதத்தின் வளரும் அச்சுறுத்தல்: லட்லம் போன்றவர்களின் புதிய உளவுத்துறை சாகசங்கள் மக்லீனின் ஒப்பீட்டளவில் சாமானிய லட்சியங்களைவிட வசீகரமானவையாக இருந்தன. உளவுத்துறை சாகச ழானரில் புகழடைந்த மற்றொரு எழுத்தாளர் டாம் கிளான்ஸி.

உளவுத்துறை பற்றி கதைகள் எழுதுபவர்களில் அன்று முதல் இன்று வரை ஓரளவு கணிசமான வாசகர்களுக்கு விருப்பமானவராக இருப்பவர் பிரெடரிக் பார்சித். அவரது ஒடேசா பைல், டே ஆப் தி ஜாக்கல் என்ற இரு நாவல்களும் இன்றும் புகழ் மங்காமல் போற்றப்படுகின்றன. இந்த இடத்தில் நான் ரசித்து வாசித்த முதல் உளவாளி கதை என்ன என்று சொல்ல வேண்டும்- 39 ஸ்டெப்ஸ் இன்றும் ஒரு செவ்வியல் படைப்பாகக் கொண்டாடப்படுகிறது. சாமானிய மனிதன் ஒருவன் சதிகளும் போராட்டங்களும் நிறைந்த வேறொரு உலகில் சிக்கிக்கொள்வது வாசிக்க சுவாரசியமான கதையாக இருக்கிறது. பிற்காலத்தில் இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு எண்ணற்ற ஹாலிவுட் படங்கள் செய்தார்கள் (ஹிட்ச்காக் இந்தக் கதையைப் படமாக்கினார். அதன் முடிவு நாவலின் முடிவிலிருந்து வேறுபடுவதாக இருக்கும்).

ஆர்தர் ஹைலியின் பார்முலா தனித்தன்மை கொண்டது, அதாவது, அந்தக் காலத்தில் அது தனித்தன்மை கொண்டதாக இருந்தது. அவர் ஏதோ ஒரு துறையை எடுத்துக் கொள்வார், அது பற்றி ஏராளமான தகவல்களை அளித்து, அதை ஒரு வலுவான பின்புலமாகக் கொண்டு தன் நாவல்களை எழுதினார். ஏர்போர்ட் என்ற நாவல் விமானத்துறை பற்றியது, வீல்ஸ் என்ற நாவல் ஆட்டோமொபைல் இன்டஸ்ட்ரி பற்றியது, ஓவர்லோட் மின்துறை பற்றியது, பைனல் டயக்னோசிஸ் மருத்துவத்துறை சார்ந்த நாவல்- இது போல் பல நாவல்கள். இது நல்ல ஐடியாவாக இருந்தது, கதை படிக்கும்போதே நம் அறிவாற்றலைப் பெருக்கிக் கொள்ளவும் நாலு விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் இந்த நாவல்கள் உதவின என்று நினைத்துக் கொண்டு பலரும் ஆர்தர் ஹைலியை விரும்பிப் படித்தனர். அப்போதெல்லாம் ஆசிரியர்களும்கூட மாணவர்களிடம் ஆர்தர் ஹைலி நாவல் படிக்கச் சொல்லி ஊக்குவிப்பதுண்டு. ஆய்வுகள் நன்றாக இருந்தாலும், இவரது பெரும்பாலான நாவல்கள் சலிப்பூட்டும் கதைகள் என்பது என் கருத்து.

இப்படிப்பட்ட நாவல்கள் எழுதுவதில் ஒரு ஆபத்து, இந்தத் துறைகள் ஒவ்வொன்றும் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கின்றன என்பதுதான். தொலைதொடர்புத்துறை 1970களில் எப்படி இருந்தது, அதன் நுணுக்கங்கள் என்னென்ன என்ற விவரணைகளை இப்போது வாசித்தால் அவ்வளவாக ரசிக்காது. இக்காலத்துக்கு பொருந்தாது என்னும்போது ஒரு நாவல் இயல்பாகவே தன் வாசகர்களை இழக்கிறது. ஆர்தர் ஹைலியின் நாவல்களுக்கும் இதுதான் நடந்திருக்கிறது என்று நினைக்கிறேன். இன்றைய வாசகர்களுக்கு அவை பழங்கதைகளாக இருக்கும். ஹைலியின் நாவல்களை சைபர் கிரைம் விவரணைகள் கொண்ட ஹைடெக் நாவல்கள் பிடித்தன – டான் ப்ரௌனின் டிஜிடல் ஃபோர்ட்ரஸ் இதற்கு ஒரு உதாரணம்.

எங்கள் பாலியல் நாட்டங்களுக்குத் தீனி போட நிக் கார்ட்டரும் ஹரோல்ட் ராபின்சும் இருந்தனர். உண்மையைச் சொல்வதானால் ஆங்காங்கே உள்ள சில உஷ்ணமான பக்கங்களைத் தவிர நான் ஹரோல்ட் ராபின்ஸ் அதிகம் படித்ததில்லை. நிக் கார்ட்டர் கொஞ்சம் ஜேம்ஸ் பாண்ட் பாணி உளவாளி. நிக் கார்ட்டர் தொடரில் வந்த கதைகளை எந்த ஒரு எழுத்தாளரும் தனியாக எழுதவில்லை என்று விக்கிப்பீடியா சொல்கிறது. நிக் கார்ட்டர் கதைகளின் ஒரே சுவாரசியம் கதையில் வலிய புகுத்தப்பட்ட ஒளிவுமறைவற்ற செக்ஸ் சீன்கள்தான். ஹரோல்ட் ராபின்ஸ் நாவல்களும் இக்காரணத்துக்காக உலகப் புகழ் பெற்றவை. அவருக்கு இப்படி ஒரு புகழ் இருந்த காரணத்தாலேயே எனக்கு அவரது நாவல்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. வீட்டிலும் கல்லூரியிலும் விஷயம் தெரிந்தால் தவறாக நினைப்பார்கள் என்று பயம் எனக்கு இருந்தது. ஹரோல்ட் ராபின்ஸ் அருமையான கதைகள் எழுதினார் என்று சத்தியம் செய்து கொடுப்பவர்களும் இருக்கிறார்கள், அவரது கதைகளில் உள்ள செக்ஸ் சும்மா ஒரு கூடுதல் சுவாரசியத்துக்குதான் என்று அவர்கள் சொல்கின்றனர். நல்ல கதை எழுதினாரோ இல்லையோ, அவர் பெரிய அளவில் வெற்றி பெற்ற எழுத்தாளர்.

இங்கே நான் இன்னொன்றும் சொல்ல வேண்டும். என் நட்பு வட்டத்தில் ஜேம்ஸ் பாண்ட் நாவல்கள் வாசித்தவர்களும் மிகக் குறைவு. ஜேம்ஸ் பாண்ட் நாவல்கள் படு போர் என்று பேசிக் கொண்டோம், சினிமாதான் நன்றாக இருக்கும் என்பதில் எங்களிடையே ஒரு கருத்து ஒற்றுமை இருந்தது.

இப்போதெல்லாம் இணையத்திலும் புத்தகங்களிலும் செக்ஸ் கணக்கு வழக்கற்று காணக் கிடைக்கிறது. த்ரோன் ஆப் கேம்ஸ் போன்ற மிகுபுனைவுகளில் தேவைக்கு அதிகமாகவே செக்ஸ் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இக்கால இளைஞர்கள் இதற்காக அதிகம் கஷ்டப்பட வேண்டியதில்லை. யாருக்கும் பயப்படாமல் அப்பட்டமான பாலியல் வர்ணனைகளையும் அனுபவங்களையும் ஏராளமான புத்தகங்களில் அவர்களால் வாசிக்க முடிகிறது.

அண்மைக்காலத்தில் அதிக அளவில் கவனம் பெற்றுள்ள ழானர் எது என்று பார்த்தால் அது டீன் ரொமான்ஸ் மற்றும் பதின்ம வயதினருக்கான பிற வகை நாவல்கள்தான். இளைஞர்களின் வாசிப்புப் பழக்கத்தில் சொல்லத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதில் இந்த வகை நாவல்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. ட்விலைட், ஹங்கர் கேம்ஸ் முதலிய நாவல்கள் இதற்கு அருமையான உதாரணங்கள். எனக்குத் தெரிந்த பதின்ம வயதினர் அனைவரும் இந்த நாவல்களை வாசித்துக் கொண்டிருக்கின்றனர், இந்தப் படங்களைப் பார்க்கவும் தவறுவதில்லை. விடலைக்காதல், ஓநாயாய் மாறும் மனிதர்கள், கொலைகள், விளையாட்டுகள் என்றும் இன்னும் என்னென்னவோ கிறுகிறுக்கும் சமாசாரங்களும் இவற்றில் இருக்கின்றன. ஹாரி பாட்டர், பெர்சி ஜாக்சன் தொடர்களுடன் இவைதான் பதின்பருவத்தினரின் வாசிப்பை நெறிப்படுத்துகின்றன.

வைல்ட் வெஸ்ட் நாவல்கள் இப்போதெல்லாம் வருவதில்லை. ஆனால் எங்கள் கற்பனையைக் கைப்பற்றிய நாவல்கள் இவை. ஒரு காலத்தில் வைல்ட் வெஸ்ட் நாவல்களும் திரைப்படங்களும் மிகப் பிரபலமாக இருந்தன. நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் வைல்ட் வெஸ்ட் படங்கள் வருவது குறைந்தாலும் ஜான் வெய்ன், கிளின்ட் ஈஸ்ட்வுட் படங்களை விரும்பி பார்த்தோம். கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கியை எடுத்துச் சுட்டுத் தள்ளும் தங்க மனசுக்கார லோன் ரேஞ்சர் அந்த வகை படங்கள் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருந்தது. கிளின்ட் ஈஸ்ட்வுட் இந்த வேடத்துக்கு கச்சிதமாகப் பொருந்தியவர். நாவல்கள் என்று எடுத்துக் கொண்டால் லூயி லா’ஆமூர்தான் இந்த வகை கதைகளுக்கு மிகப் பிரபலமான எழுத்தாளர். எண்ணற்ற நாவல்கள் எழுதியவர் இவர்.

ஆலிவர் ஸ்ட்ரேஞ்ச் எழுதிய சட்டன் தொடர் நாவல்களும் விரும்பிப் படிக்கப்பட்டன. ஹீரோ மிக வேகமாகத் தன் துப்பாக்கியை எடுத்துச் சுடக்கூடியவன் என்பதால்தான் அவனுக்கு அந்தப் பெயர். கண் சிமிட்டும் நேரத்தில் உன்னைச் சுட்டுக் கொன்று விடுவான் அவன். இந்த நாவல்கள் ஒன்றுவிடாமல் படித்திருக்கிறேன், ஆனால் துரதிருஷ்டவசமாக அத்தனை இருந்தாலும் அதில் ஒரு கதையும்கூட நினைவில்லை.

ஜேன் கிரே நாவல்களைக் குறிப்பிட வேண்டும். வெஸ்டர்ன் நாவல்கள் என்று வந்தால் ஊர் பேர் தெரியாதவர்கள் யார் எதை எழுதினாலும் படித்து விடுவோம். குற்றவாளிகள், ஷெரீப், ஷெரீப்புக்கு உதவ ஊருக்குள் வரும் அன்னியன், தங்க வேட்டை, துப்பாக்கிச் சண்டை, கண் கண்டதும் தோட்டாவைச் செலுத்திப் புகையும் துப்பாக்கிகள் : இவை ஒவ்வொன்றும் எங்கள் ஆர்வத்தை தூண்டுவதாய் இருந்தன. எங்களை மட்டுமல்ல, தமிழ் தெலுங்கு திரைப்பட இயக்குனர்களையும் வசீகரிக்கும் கதைக்களமாக இது இருந்தது. தமிழ் படங்களில் ஜெய்சங்கர் கௌபாய் பட ஹீரோவாக இருந்தால் தெலுங்கில் கிருஷ்ணா இதைக் கச்சிதமாகச் செய்தார். ஹீரோவும் வில்லன்களும் கௌபாய்களுக்குரிய தொப்பி ஜீன்ஸ் போட்டுக் கொண்டிருக்கும்போது ஹீரோ ஹீரோயினின் அம்மா அப்பாக்கள் ஒன்பது கஜ புடவை வேட்டி என்று இந்திய பாரம்பரிய உடை அணிந்திருந்தது எங்களை உறுத்தவே இல்லை.

சினிமாக்களிலும் நாவல்களிலும் வெஸ்டர்ன் கதைகள் காலப்போக்கில் இயற்கை மரணம் எய்தின. இன்றைய தலைமுறை மிகுபுனைவுகளிலும் சைபர் கிரைமிலும் மயங்கிக் கிடக்கிறது, அவரகளைக் கிறங்கடிக்கச் செய்ய வெஸ்டர்ன்களில் எதுவும் இல்லை போலிருக்கிறது.

இந்தக் கட்டுரையை ஆண் பார்வையில்தான் எழுதியிருக்கிறேன். பெண்கள் வேறு வகை புத்தகங்கள் வாசிக்கின்றனர். அவர்கள் ஆர்தர் ஹைலியும் பிரடெரிக் பார்சித்தும் வாசித்தனர் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் மில்ஸ் அன்ட் பூன்ஸ் மற்றும் பார்பரா கார்ட்லாண்ட்டும் வாசித்தனர், அவற்றை நாங்கள் தொடக்கூட மாட்டோம். முந்திய தலைமுறை பெண்கள் தங்கள் காலத்தில் விரும்பி வாசிக்கப்பட்ட புத்தகங்களும் எழுத்தாளர்களும் யார் எவை என்று எழுதி, இன்றைய வாசிப்பிலிருந்து அது எவ்வகையில் வேறுபடுகிறது என்று எழுதினால் நன்றாக இருக்கும். எவை மறைந்தன, எவை பிழைத்தன.

கடந்த இரு பத்தாண்டுகளில் ஜனரஞ்சக புனைவுகள் மிக அதிக மாற்றங்களைக் கண்டிருக்கின்றன. மத்திய வயதினன் ஒருவன் ஏதோ ஒரு பழைய புத்தகத்தை நினைத்து நாஸ்டால்ஜியா ஆகும்போது இதெல்லாம் என்ன என்று இளைஞர்கள் அதிசயிக்கும் அளவுக்கு பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. உலகில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மக்களின் ரசனை மாறிக் கொண்டே இருக்கிறது, விற்பனைச் சாதனை படைக்கும் புனைவுகளின் இயல்பும் மாறிக் கொண்டே இருக்கிறது. நாம் எதைப் படிக்கிறோம், எதற்கு ஏங்குகிறோம் என்பதும் நம் குழந்தைகள் எதைப் படிக்கிறார்கள் என்பதும் தலைமுறை இடைவெளி என்றால் என்ன என்பதை மிகத் தெளிவாக வெளிப்படுத்தும். வேகமாய் மாறும் உலகில் நாம் எவ்வளவு பின்தங்கி உள்ளோம் எனபதற்கும் ஒரு சான்றாக இப்புதினங்கள் இருக்கின்றன.

(தமிழாக்க உதவி – பீட்டர் பொங்கல்)

2 comments

  1. //தொலைதொடர்புத்துறை 1970களில் எப்படி இருந்தது, அதன் நுணுக்கங்கள் என்னென்ன என்ற விவரணைகளை இப்போது வாசித்தால் அவ்வளவாக ரசிக்காது. இக்காலத்துக்கு பொருந்தாது என்னும்போது ஒரு நாவல் இயல்பாகவே தன் வாசகர்களை இழக்கிறது. // Very true. Nice article!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.