லிண்டா லூவும் நானும் சி லிங்கின் குடிலை நோக்கி நடக்கத் துவங்கினோம். அவருக்கு நூறு வயது கடந்து விட்டிருந்தது. “நூறு வயதுக்கும் மேல் என்பது சரி, ஆனால் ஒவ்வொரு ஆண்டையும் எவ்வாறு கணக்கு செய்கிறாய்?” என்று கேட்டாள் லிண்டா.
“ஏன், நமக்குக் கற்றுக் கொடுத்தபடி கணக்கு பண்ணப் போகிறோம்,” என்றேன் நான், “689 நாட்கள் ஆனால் ஓராண்டு, இல்லையா?”
“அது செவ்வாய் ஆண்டு. சீனத்து ஆண்டுதான் பூமியின் ஆண்டு, 365 நாட்கள்”
“அப்படியானால் பூமி கனகுப்படிதான் அவருக்கு நூறாண்டுகள் ஆகின்றன என்று சொல்கிறாயா?”
“ஆமாம், அதுதான் சந்தேகமாக இருக்கிறது. எப்படி பார்த்தாலும் ஆச்சரியமான மனிதர்தான்”
உண்மையில் அவர் ஆச்சரியமான மனிதர்தான். அவரது தொல் சுருக்கங்கள் நிறைந்திருந்தது, கண்கள் குழியுள் ஆழ உட்சென்றிருந்தன, அவருக்கு கண்களே இல்லை என்பது போல் அவரது தோற்றம் இருந்தது. சி லிங் உயரம் குறைந்த மனிதர், கூன் போட்டிருந்ததால் இன்னும் குள்ளமாகத் தெரிந்தார். லிண்டா லூ உயரமான பெண், அவர் முன் அவள் மிக உயரமாகத் தெரிந்தாள். லிண்டா லூ அவரது பிரியத்துக்குரிய பெண், எனவே அவளைப் பார்த்ததும் அவர் சிரித்தார். வாயில் ஒரு பல் இல்லை. இந்த வயதிலும் அவரது பார்வை பழுதற்றிருந்தது, துல்லியமாகக் காது கேட்டது, சிரிக்கும் வாய்ப்பு எதையும் அவர் தவற விடவில்லை – குறிப்பாக, பெண்களிடம் நிறைய சிரித்துப் பேசினார்.
“ஐயா, நான் சில ஆவணங்களை\ வாசிக்க நேர்ந்தது. ஏதோ ஒரு பெரிய நிறுவனமொன்று இங்கே ஒரு காலனியை உருவாக்க முயற்சித்தது என்று தெரிய வருகிறது. ஏதோ ஒரு விபத்து நிகழ்ந்திருக்கிறது. அதன்பின் இங்கே காலனி ஒன்று அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டிருக்கிறது. பூமியில் உள்ள மனிதர்கள் சரியான ஆதரவு அளிக்கவில்லை என்று நினைக்கிறேன். அவர்களிடமிருந்து எந்த உதவியும் பெறாமல் நீங்கள் வாழ வேண்டியிருந்தது. என்ன ஆயிற்று? அதைப் பற்றி விளக்கமாகச் சொல்ல முடியுமா?” என்று கேட்டாள் லிண்டா.
சி லிங் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். அவரது முகம் இறுக்கமாக இருந்தது, அவரை இதுபோல் நான் பார்த்ததேயில்லை. வழக்கமாக அவர் உற்சாகமாக சிரித்துப் பேசிக் கொண்டிருப்பவ அவர்.
அமைதியாக இரு, என்று கண்களால் என்னைப் பார்த்து எச்சரித்தாள் லிண்டா. நான் எதுவும் பேசவில்லை. சி லிங் பதில் சொல்ல அமைதியாகக் காத்திருந்தோம். சற்று நேரம் கழித்து அவர் நீண்ட பெருமூச்சுக்குப் பின் தன் கதையைச் சொல்லத் துவங்கினார்.
பூமியில் நான் சீனா என்ற தேசத்தைச் சேர்ந்தவன். எங்கள் தேசம் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது, ஆனால் அதன் ஒவ்வொரு பகுதியும் சம அளவில் முன்னேறவில்லை. துரதிருஷ்டவசமாக, ஏழ்மை நிறைந்த பகுதியில்தான் நான் இருந்தேன், எங்களுக்கு எப்போதும் பணப்பற்றாக்குறை இருந்தது”.
“ஏழ்மையா?” என்று நான் குறுக்கிட்டேன், “பணம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் ஏழ்மை என்றால் என்ன?”
“எதையும் வாங்கவோ ஒழுங்காகச் சாப்பிடவோ எங்களுக்குத் தேவைப்பட்ட பணம் இருக்கவில்லை.”
“அதற்கு எதற்கு பணம்? விலங்குகளை வேட்டையாடலாம், அல்லது வயல்களில் வளரும் நெல்மணிகளையும் கோதுமைக் கதிர்களையும் வேக வைத்துத் தின்னலாம். பணம் எதற்கு?
இம்முறை லிண்டா பெருமூச்செறிந்தாள். “உனக்கு இப்போது எதுவும் புரியாது, அப்புறம் விளக்கமாகச் சொல்கிறேன். சி லிங் பேசட்டும்”.
“ஹ்ம்ம்.. என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? ஆமாம், நாங்கள் ஏழைகளாக இருந்தோம். அல்லது என் அப்பா ஒரு ஏழை என்று சொல்லலாம். எனக்கு அப்போது வயது பதினாறு. ஒரு நாள் எங்கள் கிராமத்துக்கு சிலர் பெரிய கார்களில் வந்தனர். அவர்களின் கார்கள் பளபளப்பாக இருந்தன, புதிதாக இருந்தன, மதிய வெயிலில் பிரகாசித்தன. புழுதி கிளப்பிக் கொண்டு அவர்களின் கார்கள் ஊருக்குள் வந்தன. அதிலிருந்து கீழிறங்கிய மனிதர்கள் அழுக்கு படாத ஆடைகள் அணிந்திருந்தனர். எங்கள் ஊர்ப்பெரியவர்கள் யார் என்று கேட்டனர். அவர்களை அழைத்து வரச் சொன்னார்கள். ஊரில் இருந்த முதியவர்களில் ஆறேழு பேரை அழித்து வந்தோம். புதிதாய் வந்தவர்கள் அவர்களுடன் ஒரு தனி அறையில் நீண்ட நேரம் பேசினார்கள். அன்று இரவு என் அப்பா நிலைகொள்ளாமல் தவித்தார். ஓரிரு முறை என்னுடன் பேச முயற்சித்தார், ஆனால் அவர் நாவில் சொல் எழும்பவில்லை. என் தாய் என்ன பிரச்சினை என்று மீண்டும் மீண்டும் கேட்டார். இறுதியில் அந்தச் சந்திப்பில் என்ன நடந்தது என்பதை என் தகப்பனார் சொன்னார்.
“கார்களில் வந்தவர்கள் அரசுப் பணி ஊழியர்கள். அழ்ரசு உத்தரவு ஒன்றை அவர்கள் கொண்டு வந்திருந்தனர். எங்கள் கிராமமும் எங்கள் அருகிலிருந்த சில கிராமங்களும் இரட்டை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருந்தன. பூமி அதிர்ச்சி ஒரு பிரச்சினை, எங்கள் பகுதியில் உள்ள இளைஞர்களைக் கொன்று கொண்டிருந்த வைரஸ் கிருமித் தொற்று மற்றொரு பிரச்சினை. எங்கள் கிராமத்தில் உள்ளவர்களில் வெகு சிலரே கல்வியறிவு கொண்டவர்கள். எனவே, எது சொன்னாலும் நம்பக்கூடியவர்கள் நாங்கள்.
“எனவே அரசு ஊழியர்கள் ஒரு திட்டத்தை முன்வைத்தனர். எங்கள் பகுதியில் இருந்த இளைஞர்கள் அனைவரும் வேறு பகுதிகளுக்குச் சென்று உயிர் தப்ப வேண்டும். அரசு எங்கள் பெற்றோருக்கு உரிய உதவித் தொகை அளிக்கும். சாகும்வரை அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வாழ்வதற்கான வருவாய் அளிக்கப்படும். ஆண்டுக்கு ஒரு முறை உங்கள் குழந்தைகள் உங்களைப் பார்க்க வருவார்கள் என்றும் அவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது. புதிய இடத்துக்குப் போகும் இளைஞர்களுக்கு கணிசமான சம்பளம் வழங்கப்படும்”
“இதுவரை எங்கள் நலனில் எந்த அக்கறையும் கொள்ளாத அரசு இப்போது ஏன் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறது என்ற குழப்பம் எங்களுக்கு ஏற்பட்டது. அந்தக் கேள்வியும் கேட்கப்பட்டது. உலகில் உள்ள அனைவருக்கு அந்த வைரஸ் ஒரு அச்சுறுத்தல் என்றார் ஒரு அதிகாரி. எனவே இளைஞர்களை முதலில் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கிறது. சீனா எங்கும் கிருமி பரவி பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிப்பதைத் தவிர்க்க விரும்புகிறது அரசு. இதை எங்கள் கிராமப் பெரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
“பல வகைகளிலும் சீனா சிறப்பாகச் செயல்பட்டு வந்தாலும் தன் மக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை அதன் அரசு செலுத்துகிறது என்றும் சீன மக்களுக்கு சுதந்திரம் இல்லை என்றும் பிற அரசுகள் எப்போதும் குறை கூறிக் கொண்டிருந்தன. தன் மக்கள் வாழ்கிறார்களா சாகிறார்களா என்ற அக்கறையற்ற அரசு என்ற எண்ணம் உலக அரங்கில் இருந்தது குறித்த கவலை ஆட்சியாளர்கள் மத்தியில் இருந்தது. இப்போது, இளைஞர்களைக் காப்பாற்றுவதன்மூலம் சீனா உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்க முடியும், என்று ஒரு அதிகாரி சொன்னார். சீனா உலக அளவில் வர்த்தக உறவுகளை எவ்வித தடையுமின்றி தொடர இந்த நடவடிக்கைகள் உதவும். இதையும் எங்கள் கிராமப் பெரியவர்கள் புரிந்து கொண்டனர். அரசு பொருளாதாரம் சீர்கெடுவதை அனுமதிக்காது என்பது அவர்களுக்குத் தெரியும்.
“வேறு வழியில்லை, என்றார் என் அப்பா. அவர்களையும் எங்கள் கிராமத்தையும் விட்டு நாங்கள் வெளியேறி அரசு அழைத்துச் செல்லும் இடத்துக்குப் போக வேண்டியதுதான். இது எனக்கு ஒரு ரகசிய சந்தோஷமும் அளித்தது. இந்தச் சிறிய கிராமத்தைவிட்டுத் தப்ப இது ஒரு வாய்ப்பு என்று நான் நினைத்தேன். ஏதோ ஒரு பெரிய நகருக்குச் சென்றால் நான் வாழ்வில் முன்னேற முடியும்: பெய்ஜிங் அல்லது ஷாங்காய் போனால் நன்றாக இருக்கும் என்ற ஒரு கனவு எனக்கு உண்டு, அதை என் தந்தையிடம் சொன்னதில்லை.
“நான் பிரிவதை என் அம்மாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எங்களுக்கு என்று ஒரு சிறு இடம் இருக்கிறது, அங்கு பயிர் செய்யாமல் நான் ஏன் வேறு இடம் போக வேண்டும் என்று அன் அம்மா கேட்டாள். எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு அன்னையும் கேட்ட கேள்வி இது. முதியவர்கள் கூடிப் பேசினார்கள். அதில் அரசுப்பணியாளர்களும் பங்கேற்றனர். பல கேள்விகள் எழுப்பப்பட்டன, குரல்கள் உரத்து ஒலித்தன, பெண்கள் அழுதார்கள், ஆண்கள் அடித்துக் கொள்ளப் பார்த்தார்கள். என்றாலும் கடைசியில் அரசுப்பணியாளர்கள் சொன்னபடிதான் நடந்தது. இளைஞர்கள் கிராமங்களை விட்டு வெளியேற வேண்டும். அந்தக் கூட்டத்தில் அரசு அளித்த கணிசமான உதவித் தொகையும் பிரச்சினைக்கு முடிவு காண உதவியது.
“எனவே நான் என் பெற்றோரிடமிருந்து விடை பெற்றேன். என் அம்மா அழுது கொண்டிருந்தாள், அப்பா வருத்தமாக இருந்தார், ஆனால் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். உள்ளூர ஆசைப்பட்ட சாகச வாய்ப்பு இது. என் கனவுகளில்கூட நான் பிறந்த கிராமத்தை விட்டு வெளியேறி ஏதோ ஒரு பெரிய ஊரில் எனக்கென்று ஒரு பெயர் பெற முடியும் என்று நினைத்ததில்லை. இது ஒரு அசாதாரண வாய்ப்பு. ஆனால் பின்னர்தான் என் கனவு பலிக்கவில்லை என்பதை புரிந்து கொண்டேன். எனக்காகக் காத்திருந்தது ஒரு கொடுங்கனவு. ஆனால் அதையும் நான் பிழைத்து உயிர் வாழ்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்”
பேச்சை நிறுத்திவிட்டு அவர் எதுவும் பேசாது அமைதியாக இருந்தார். தண்ணீர் குடிக்க டம்ளரை எடுத்தவர் அதைக் கையில் சுழற்றிக் கொண்டிருந்தார். அவர் கண்கள் தொலைவில் எதையோ வெறித்தன.
“அடுத்து என்ன நடந்தது?|” என்று கேட்டாள் லிண்டா.
சி லிங் தன் எண்ணங்களிலிருந்து ஒரு உதறலோடு மீண்டார். “என்னென்னவோ நடந்து விட்டன. எனக்கு சற்று ஓய்வு தேவைப்படுகிறது, அப்புறம் சொல்கிறேன்,” என்றார் அவர்.
தரையில் நெடுஞ்சாண்கிடையாகப் படுத்தவர் உடனே பெரும் குறட்டை ஒலியோடு தூங்கிப் போனார்.
000
image credit : Chinese Avant-garde artprints