“ஒரு சாதாரண வாழ்கையை வாழ்ந்த சாதாரணர் இவர் என்று தோன்றுகிறது இல்லையா?” என்று பிராங்க் மக்கோர்ட் பற்றி கேட்கிறார் அஜய், “60 வயது வரை சாதாரண வாழ்க்கை வாழ்ந்த மக்கோர்ட் தன் நூல்களின் வெற்றியால் பிரபலமாகிவிட்டார். வாழ்க்கை அனுபவங்களா, அவற்றைச் சொல்லும் முறையா அல்லது அவற்றை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதமா, எது ஒருவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது அல்லது அவர்களுடன் ஒன்ற வைக்கிறது?” . அவரது கட்டுரையைப் படிக்கும்போது மக்கோர்ட்டின் பால்யகால ஏழ்மையும் அவரது தாயின் போராட்டங்களும்தான் முக்கியமாகத் தெரிகின்றன. சமூக, பொருளாதார சீர்கேடுகளால் பாதிக்கப்படும் அம்மாக்களும் பிள்ளைகளும் உலகெங்கும் ஒன்று போலவே இருக்கின்றனர்.
பிராங்க் மக்கோர்ட் Academy of Achievement என்ற தளத்தில் அளித்த நேர்முகத்தில் அவர் தன் இளம் பருவ நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட பகுதிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழாக்கம் இது:
உங்கள் குழந்தைப்பருவம் எப்படிப்பட்டதாக இருந்தது?
ஒரு வகையில் செறிவானதாக இருந்தது. நாங்கள் மிகக் கடுமையான ஏழ்மை நிலையில் இருந்தோம். பொருளாதார தளத்தில் மிகத் தாழ்ந்த நிலைக்கும் கீழிருந்தாலும், நாங்கள் எப்போதும் உற்சாகமான மனநிலையில் இருந்தோம். எதிர்பார்ப்பதற்கு நிறைய இருந்தது, நம்பிக்கை வைப்பதற்கு நிறைய இருந்தது, அடைவதற்கு நிறைய இருந்தது, கனவுகாண நிறைய இருந்தது என்ற பொருளில் எங்கள் குழந்தைப்பருவம் மிகச் செறிவாக இருந்தது, ஆனால் பொருளாதாரச் சூழல் மிக மோசமாக இருந்தது. மழைக்கால கல்கத்தா என்று சொல்லலாம். கல்கத்தாவிலாவது வெம்மை இருக்கிறது.
சில காரணங்களால் எங்கள் நிலை மிக மோசமாக இருந்தது. என் அப்பா குடிகாரராக இருந்தார், என் அம்மா மிகக் குறுகிய காலத்தில் மிக அதிக குழந்தைகளுக்குத் தாயாகியிருந்தார், அயர்லாந்தில் யாருக்கும் வேலை கிடைப்பதாயில்லை – இது போன்ற விஷயங்கள். என் அப்பாவுக்கு வேலை கிடைத்தபோதும் அவர் தன் சம்பளத்தைக் குடித்தே தீர்த்தார்.
அதைத் தாண்டிப் பார்த்தால் எங்கள் பள்ளிக்கல்வி மிகக் கடுமையாக இருந்தது. பள்ளி ஆசிரியர்கள் பிரம்பைக் கொண்டு எங்களை அதிகாரம் செய்தனர். எங்கும் நிறைந்திருந்த, தப்ப முடியாத சர்ச்சின் இருப்பும் எங்களை எப்போதும் அச்சுறுத்திக் கொண்டே இருந்தது. அச்சம், ஈரம், ஏழ்மை, குடி, சர்ச்சைப் பார்த்து அச்சம், பள்ளியாசிரியர்களைப் பார்த்து அச்சம், பொதுவாகவே அச்சம்.
ஆனால் அதே சமயம் நாங்கள் பள்ளியை விட்டு வெளியே வந்தால், சர்ச்சை விட்டு தொலைவில் இருந்தால், வீட்டுக்கு வெளியே சென்றால், நாங்கள் தெருவில் இருக்கும்போது, அப்போதெல்லாம் எப்போதுமே உற்சாகமாக இருந்தோம். உன்னிடம் எதுவும் இல்லாதபோது புத்தகங்களைப் போன்ற சின்னச் சின்ன விஷயங்கள்கூட மதிப்பு மிகுந்தவையாகின்றன. அவ்வப்போது எங்கள் வீட்டில் ஏதாவதொரு புத்தகம் கிடைக்கும், நாங்கள் அதை வெறி பிடித்த மாதிரி வாசிப்போம். அந்த வகையில் மிகவும் செறிவான வாழ்க்கையாக இருந்தது.
ஒரு இளம் சிறுவனாக உங்களுக்கு முக்கியமான இருந்த புத்தகங்கள் உண்டா? உங்களை ஊக்குவித்த புத்தகங்கள், உங்கள்மீது ஏதோ ஒரு வகையில் தாக்கம் ஏற்படுத்திய புத்தகங்கள் உண்டா?
நான் முதலில் படித்த புத்தகம் Tom Brown’s School Days என்று நினைக்கிறேன். அதை என் அம்மா லிமரெக்கில் உள்ள வுல்வர்த்ஸில் ஆறு பென்ஸ் விலையில் வாங்கினார். சாணி காகிதத்தில் அச்சடித்த புத்தகம் அது. அதை நான் ஒரு பொக்கிஷம் மாதிரி வைத்திருந்தேன். அவ்வப்போது வேறு புத்தகங்களும் எங்கள் பகுதிக்கு வரும், ஆனால் நாங்கள் சும்மா வெளியே போய் அவற்றை விலை கொடுத்து வாங்கிவிட முடியாது. குழந்தைகளுக்கான நூலகமும் அங்கே கிடையாது. பெரியவர்களுக்காக ஒரு கார்னகி நூலகம் இருந்தது.
ஆனால் எங்களுக்கான புத்தகங்கள் இருக்கவில்லை. எனவே Huckleberry Finn வந்தபோது நான் – நான் டாம் சாயராக ஆசைப்பட்டேன். ஷன்னன் ஆற்றில் செல்ல ஆசைப்பட்டேன், அதன் கரைகளில் நின்றுகொண்டிருக்க விரும்பினேன். அதைச் செய்யவும் செய்தேன், அதை மிஸ்ஸிஸிப்பி ஆறு என்று கற்பனை செய்து கொண்டேன், ஒரு மிதவையை எடுத்துக் கொண்டு அதில் 60 மைல் சென்று கடலைச் சேர்வேன். டாம் சாயரையும் ஹக் பின்னையும் போல் சுதந்திரமாக இருக்க ஆசைப்பட்டேன். இந்தப் புத்தகங்கள் என்மீது பெரும் தாக்கம் ஏற்படுத்தியவை.
ஆனால் எங்கள் வாழ்வை நெறிப்படுத்திய முதன்மை இலக்கியம் என்றால் அது சர்ச்சின் இலக்கியம்தான்: Sunday missal, புனிதர்களின் வாழ்வுகள். புத்தகங்கள் மிகக் குறைவாக இருந்ததால், நான் படித்த புத்தகங்கள் அத்தனையும் நினைவில் இருக்கிறது. அவை பார்க்க எப்படி இருக்கும் என்பதும், அவற்றின் மணமும்கூட.
இதனால் அவற்றின் மதிப்பு மேலும் கூடியதா?
ஆமாம், எல்லாமே மிகவும் முக்கியமாக இருந்தன.
ஒரு லோஃப் ரொட்டி மிகவும் முக்கியமாக இருந்தது, அது அவ்வளவு குறைவாக இருந்ததால். வியன்னா லோஃப் என்று சொல்வார்களே, அதை என் அம்மா கொண்டு வருவார். குறிப்பிட்ட ஒரு லோஃப் இன்னும் என் நினைவில் இருக்கிறது, அந்த நேரத்தில் நாங்கள் அத்தனை பசியாக இருந்தோம். இப்போதும் என்னால் அதன் சுவையை உணர முடிகிறது. ஆம், ஏழ்மை பொருட்களை முக்கியமாக்குகிறது. அது அனைத்தையும் ஜுவல்ரி ஆக்குகிறது.
இவை எல்லாம் ஒரு பெருங்கதையின் துவக்கங்கள் என்று எப்போதாவது நீங்கள் நினைத்துப் பார்த்தது உண்டா?
அதெல்லாம் இல்லை. அதற்கு நேர்மாறாக நினைத்தோம். நாங்கள் இதை எல்லாம் நினைத்து வெட்கப்பட்டோம். நீங்கள் குடிசைப்பகுதியிலிருந்து வந்திருக்கிறீர்கள் என்று அறிவித்துக் கொண்டு வெளியுலகு புக மாட்டீர்கள். கெட்டோவிலிருந்தும் ஸ்லம்களில் இருந்தும் வந்த குழந்தைகள் தாங்கள் வளர்ந்த இடத்தைக் குறித்து பெருமையடித்துக் கொள்வதை உங்களால் பார்க்க முடியாது.
கரப்பான்பூச்சிகளோடு போராடிக் கொண்டிருந்த தன் அம்மாவைப் பற்றி ஜேம்ஸ் பால்ட்வின் எழுதியதைப் படித்தது நினைவிருக்கிறது. அவள் தன் சமையலறையைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும், ஹார்லமில் வளர்ச்சி காணவும் முயற்சி செய்து கொண்டிருந்தாள். “இதுதான், இவருக்குப் புரிகிறது,” என்று நான் சொல்லிக் கொண்டேன். காரணம், அமெரிக்க இலக்கியத்திலும் பிற இலக்கியத்திலும் நீங்கள் ஏழ்மை குறித்து மிகக் குறைவாகவே வாசிக்கிறீர்கள். டிக்கன்ஸ் இருந்தார்தான். ஆனால் டிக்கன்ஸ்- எனக்கு அவர்மீது சந்தேகம் வந்துவிட்டது, காரணம் அவர் கதைகளில் அத்தனை முடிவுகள் சந்தோஷமாக இருந்தன. ஆலிவர் டிவிஸ்ட் காசநோயால் செத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன், அல்லது டேவிட் காப்பர்பீல்ட் செத்திருக்க வேண்டும். அவர்கள் அத்தனை பேரும் அரச குடும்பத்திலோ அல்லது அந்த மாதிரி வேறு எதற்கோ உறவுக்காரர்களாக இருப்பதைக் கடைசியில் தெரிந்து கொள்வது எனக்கு அத்தனை ஆத்திரமாக இருந்தது. எனவே பால்ட்வின் வாசித்தபோதும் ஜார்ஜ் ஆர்வெல்லின் Down and Out in Paris and London என்ற புத்தகமும் The Road to Wigan Pier என்ற வேறொரு புத்தகமும் படித்தபோது, அவர்கள் – அவருக்குத் தெரிந்திருக்கிறது. அவருக்கு அத்தனை விபரமும் தெரிந்திருக்கிறது, ஏழ்மையின் நாற்றம் தெரிந்திருக்கிறது.
எனவே நான் வளரும் காலத்தில் அது பற்றி ஒன்றும் பெருமைப்படவில்லை. அதைவிட்டுச் செல்லும்போதும் நாங்கள் யாரும் அதுபற்றி பெருமைப்படவில்லை. லிமரிக்கிலும்கூட, நாங்கள் எங்கள் சந்தைவிட்டு வெளியே திரியும்போது, நாங்கள் வேறு பகுதிகளில் சுற்றும்போது, லிமரிக்கின் இன்னும் வளமான பகுதிகளில் இருக்கும்போது, பார்ப்பதற்கு சந்திலிருந்து வந்தவர்கள் போல் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை – ஆனால் ஒரு மைல் தூரத்திலேயே எங்களை நீங்கள் அடையாளம் கண்டுபிடித்துவிடுவீர்கள். சந்திலிருந்து வரும் தெருப்பொறுக்கிகள். எங்களைப் பார்த்தாலே அது தெரியும்.
பெரிய பெரிய நகரங்களில் சுற்றிக் கொண்டிருக்கும் சிறுவர்களைப் பாருங்கள். அமெரிக்காவில் நியூ யார்க், இன்னர் சிட்டிகள் என்று சொல்கிறார்களே, அங்கு சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் சிறுவர்களைப் பாருங்கள், கூட்டம் கூட்டமாகத் திரிகிறார்கள். அவர்களைப் பார்த்தாலே தெரியும். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதை உன்னால் சொல்ல முடியும். அவர்களை சுலபமாக அடையாளம் கண்டுகொள்ள முடியும். அவர்கள் சும்மாச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலரைப் பார்த்தாலே தெரியும்,அவர்களுக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை, வேறெங்காவது இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். அவர்கள் எதைக் கடந்து சென்று கொண்டிருக்கிறார்களோ, அதில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார்கள் – அழகிய சாலைகள், அகலமான அவென்யூக்கள்.
அப்படிதான் நானும் இருந்தேன். என்னைப் பார்த்தும் இவன் குடிசைப்பகுதியைச் சேர்ந்தவன் என்று அடையாளம் கண்டு கொள்ளப்படுவதை நான் விரும்பவில்லை. ஆனால் எனக்கு வேறு வழியில்லை. எங்களுக்கு போட்டுக்கொள்ள சரியான ஆடைகள்கூட இல்லை.
எனவே நியூ யார்க் வந்தபோது மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவன்போல் நடிக்க முயற்சி செய்தேன். அமெரிக்க சாயலில் பேசக்கூட முயற்சி செய்தேன். எதுவும் வேலைக்காகவில்லை. சில நாட்கள் முயற்சித்தேன். இப்போதுகூட நான் அமெரிக்க சாயலில் பேசுவதைக் கேட்கும்போது என் மனைவி விழுந்து விழுந்து சிரிக்கிறாள். நாங்கள் எல்லாரும் James Cagney போல் பேச ஆசைப்பட்டோம்.
ஆனால் நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்பதை யாரிடமும் சொல்லவில்லை, அதைக் குறித்து வெட்கப்பட்டோம். அந்த வெட்கத்துடன் கோபமும் இருந்தது. இதுபற்றி நியூ யார்க்கில் விளையாட்டாகப் பேசிக் கொண்டிருந்தபோது, நான் என் சகோதரனுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, என் அம்மா, “அதைப் பற்றி பேசுவதை நிறுத்துகிறீர்களா? அதெல்லாம் முடிந்த கதை,” என்று சொல்வார். ஒருவழியாக நாங்கள் வெட்கப்படுவதைக் கடந்து அந்த நாட்களைப் பேச ஆரம்பித்தோம். அதற்கு எனக்கு ரொம்ப நாளாயிற்று. நான் குறிப்பேடுகளில் அதை எழுத ஆரமபித்தேன், அது கடைசியில் நீண்ட நாட்களுக்குப்பின் Angela’s Ashes என்று வந்தது.
ஜேம்ஸ் ஜாய்ஸ் மாதிரி நான் என்று சொல்லிக்கொள்ள ஆசையாகத்தான் இருக்கிறது, அவர் எல்லா விஷயங்களையும் புரிந்து கொண்டார். அல்லது ஹெமிங்வே மாதிரி என்று சொல்லிக் கொள்ள வேண்டும், அவர் ஒவ்வொரு வாக்கியமாகச் செதுக்கினார். ஆனால் என்னைப் பொருத்தவரை என் எழுத்துமுறைதான் இதைச் சாத்தியப்படுத்தியது. எந்தக் கதையைச் சொல்ல ஆசைப்பட்டேனோ அதை நோட்டுப்புத்தகமும் பேனாவுமாக நோட்டின் வலப்பக்கத்தில் எழுதிக் கொண்டே, இடப்பக்கத்தில் இனி எழுத வேண்டும் என்று தோன்றிய விஷயங்களைக் குறித்து வைத்துக் கொள்வேன்.
என் அம்மாவும் அப்பாவும் நியூ யார்க் வருவதை விவரித்து முதல் 19 அல்லது 20 பக்கங்கள் இறந்த காலத்தில் எழுதினேன். அதன்பின் இடப்பக்கத்தில் ஒரு நாள் எழுதினேன்- நாளை என் மிக முந்தைய நினைவுகளைப் பதிவு செய்து என் கதையை எழுத வேண்டும் என்று எனக்குத் தெரிந்துவிட்டது. என் கதை. அப்போது நான் இதுதான் எழுதினேன், “பரூக்லின்னில் கிளாஸன் அவன்யூவில் என் சகோதரன் மலாச்சியுடன் ஒரு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறேன். அவனுக்கு இரண்டு வயது. எனக்கு மூன்று. நாங்கள் ஒரு சீ சாவில் விளையாடிக் கொண்டிருக்கிறோம். அவன் மேலே போகிறான், நான் கீழே போகிறேன். அவன் மேலே போகிறான், நான் கீழே போகிறேன். நான் இறங்கிக் கொள்கிறேன். அவன் கீழே வருகிறான், விழுகிறான், நாக்கைக் கடித்துக் கொள்கிறான், ரத்தமாக இருக்கிறது”. அதுதான் என் முதல் நினைவு. அடுத்த நாள் அதே நிகழ்கால தொனியை ஒரு மூன்று வயது குழந்தையின் பார்வையில் எடுத்துக் கொண்டேன். அது வசதியாக இருந்தது, அதே மாதிரியே தொடர்ந்து எழுதினேன். அது நான் அணிந்துகொண்ட கையுறை.
ஏழ்மையையும் இல்லாமையையும் எதிர்த்துப் போராடி வெற்றி பெறும் இந்தக் கதையில் இன்னும் நகைச்சுவையும் கருணையும் இருக்கிறது. உங்கள் கதைக்கு இது இரண்டும் எத்தனை முக்கியமாக இருக்கின்றன?
துன்பத்தை எதிர்த்துப் போராடிய எவரைக் கேட்டாலும் நகைச்சுவை உணர்வுதான் அவர்கள் தொடர்ந்து போராடக் காரணமாக இருந்தது என்று சொல்வார்கள். லிமரிக்கின் சந்துகளிலும் குடிசைப்பகுதிகளிலும் அப்படிதான் இருந்தது. எத்தனை ஏழைகளாக இருந்தாலும் நாங்கள் பாடினோம், கதை பேசினோம், சிரித்தோம். அக்கம்பக்கத்தில் இருந்தவர்களைப் பற்றி பேசிச் சிரித்தோம். அயர்லாந்தில் லிமரிக் திறந்தவெளி பைத்தியக்கார மருத்துவமனை என்று அழைக்கப்பட்டிருக்கிறது. அதன் தெருக்களில் கொஞ்சம் புத்தி சரியில்லாதவர்கள் திரிகின்றனர். அமெரிக்காவில் அவர்களை உள்ளே தள்ளிப் பூட்ட ஒரு நிமிஷம்தான் ஆகும்.
நாங்கள் எங்கள் ஆசிரியர்கள் போல் பேசிக் காட்டுவோம். ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச் முடிந்ததும் வீட்டுக்குப் போவோம், அன்றைக்குப் பிரசங்கம் செய்தவர் உணர்ச்சிகரமாகப் பேசியிருந்தால் நீங்கள் நான் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு பிரசிங்கிப்பதைப் பார்த்திருக்கலாம். “இறங்குடா இடியட்,” என்று என் அம்மா சொல்லிக் கொண்டிருப்பார். ஆனால் சில சமயம் அவள் உட்கார்ந்து என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருப்பாள்.
ஆசிரியர்கள் போல் பேசிக் கொண்டே வீட்டுக்கு வருவோம். போலீஸ்காரர்கள், உதவித்தொகை வழங்கும் அரசு அலுவலர்கள் என்று எல்லாரைப் போலவும் பேசி கேலி செய்வோம். எங்களைப் போலவே பேசியும் கேலி செய்து கொள்வோம். நான் அயர்லாந்தில் சிரித்ததை நினைத்துப் பார்க்கிறேன், அதுபோல் அதன்பின் வேறு எங்குமே சிரித்தது கிடையாது.
தெருவில் சுற்றித் திரியும் நாங்கள் சாலையில் நடந்து செல்வோம், ஷன்னோனில் நீந்துவோம். கதை சொல்லிக் கொண்டே விளையாட்டாகப் பொழுது கழியும், சிரித்து சிரித்து நிஜமாகவே தரையில் உருண்டு புரள்வோம். வாழ்க்கையில் ஒரு பரபரப்பும் ஆனந்தமும் இருந்தது, எங்கள் எதிர்பார்ப்புகள் மிகக் குறைவாக இருந்தது. ஒரு ஸ்லைஸ் ரொட்டியும் ஜாமும் இருந்தால் போதும், திருப்தியாக இருந்தது. அது போதும். அப்போது எங்களுக்குத் தெரியவில்லை, நகைச்சுவை உணர்வுதான் நாங்கள் உற்சாகமாக வாழ உதவியது.
தொகுப்பு முகாம்களில்கூட குடிசைகளில் சின்னச் சின்ன நாடகங்கள் போட்டு, அதன் காவல்காரர்களைப் போல் பேசி நடித்து கேலி செய்வதுண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நகைச்சுவை உணர்வு இல்லை என்றால், அதற்குத் தேவைப்படும் அந்தக் குறிப்பிட்ட ரசாயனம் உனக்கு இல்லையென்றால், நீ செத்துப் போக வேண்டியதுதான்.
ஒளிப்பட உதவி – விக்கிபீடியா