அமைதி பள்ளத்தாக்கு பயணம்

எஸ். சுரேஷ்

sv3

“பிரும்மாண்டமான கருநாகம் ஒன்று சொன்ன நேரத்திற்கு அந்த கற்கள் பின்னாலிருந்து வெளியே வரும். இங்கு அதற்காக அவர்கள் வைத்திருக்கும் பாலைக் குடித்துவிட்டு மறுபடியும் அந்த கற்களுக்கு பின்னால் சென்று மறையும்”.

இதைக் கேட்டதும் நாங்கள் இரண்டடி பின்னகர்ந்தோம். பாம்பு ஒன்றும் அங்கு கண்ணில் படவில்லை.

எங்களுக்கு இதைச் சொல்லிக் கொண்டிருந்தவரின் பெயர்தான் ‘பேபி’, அவரோ அறுபது வயது தாண்டியவர். மலையாளமும் தமிழும் கலந்து பேசினார். கறுத்த நிறம். முறுக்கிய தசைகள். உழைப்பாளியின் உடல்கட்டு. இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த நாடோடிகள் நடத்தும் ஒரு விழாவை விவரித்துக் கொண்டிருந்தார்.

“அப்படி வராவிட்டால்?” என்று ஹரிணி கேட்டாள். அவளுக்கு எப்பொழுதும் எல்லாவற்றிலும் சந்தேகம் இருக்கும்.

“வரும். நிச்சயம் வரும்,” என்றார் பேபி தீர்மானமாக.

ஹரிணி மெளனமாக இருந்தாள். அவளுக்கு அந்த பதிலில் அவ்வளவு திருப்தி இல்லை என்பது தெரிந்தது.

“வருடத்தில் ஒரு பௌர்ணமி அன்று இந்த விழா நடக்கும். பல இடங்களிலிருந்து நாடோடிகள் இங்கு வந்து கூடுவார்கள். இரவு முழுவதும் குடியும் கூத்தும் கும்மாளமும்தான். மாலை முழுவதும் தாரை தப்பட்டை ஒலி கேட்கும். இரவு வரை ஜனங்கள் இருப்பார்கள். இரவில்தான் கருநாகம் வெளியே வரும். அதுதான் இவர்களின் தெய்வம். இதுதான் அவர்களின் கோவில்” என்றார் பேபி. அவர் கோவில் என்று சொன்னது ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்படிருந்த கல் வரிசைகளை.

என் கற்பனையில் சூரியன் மறைந்து சந்திரன் முழு வீரியத்துடன் வெளியே வந்தான். அந்த மலை முழுவதும் அவனது ஒளி பரவியது. மரங்களும், செடி கொடிகளும் ஒரு அமானுஷ்ய தன்மை கொண்டவையாக இருந்தன. மெதுவாக மக்கள் கூட ஆரம்பித்தனர். ஒருவன் தன் கையிலிருந்த கஞ்சிரா போன்ற ஒரு வாத்தியத்தில் திஸ்ர நடையில் வாசித்தான். இரவின் சப்தங்களை அடக்கியது அவன் கஞ்சிரா ஒலி. அவன் பக்கத்தில் இருந்த ஒரு பெண் வசீகரமான நாட்டுப்புற பாடல் ஒன்றைப் பாட ஆரம்பித்தாள். கூடியிருந்தவர்கள் தாளகதிக்கு ஏற்ப ஆட ஆரம்பித்தார்கள்.

பேபீ ஏதோ பேச நான் கற்பனை உலகிலிருந்து மீண்டு வந்தேன்.

சுற்று முற்றும் பார்த்தால் மலைகளும் காடும் மட்டும்தான். மனித நடமாட்டம் எங்கும் இல்லை. கண்ணுக்கெட்டிய தூரத்தில் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்ற சாட்சி ஏதும் இல்லை. ஒரு வீடு, குடிசை, வாகனம் என்று எதுவும் கண்ணில் படவில்லை. ஏகாந்தமான மலைப் பிரதேசம் அது.

“இன்று இந்த இடம் வெற்றிடமாக இருக்கிறது. ஆனால் அந்த பௌர்ணமி இரவு இங்கு நிற்பதற்கு இடம் இருக்காது,” நான் யோசிப்பதை யூகித்தவர் போல் பேபி சொன்னார்.

“முதலில் நாம் புல்வெளி வழியாகச் செல்வோம். அதற்குப் பிறகு காட்டிற்குள் நுழைவோம். அருவியைப் பார்த்துவிட்டு டீ எஸ்டேட் வழியாக நம் இருப்பிடத்திற்கு போய் சேருவோம்,” என்று நாங்கள் ட்ரெக் செல்லவிருக்கும் பாதையை விவரித்தார் பேபி.

புல்வெளி என்றவுடன் சுவிட்சர்லாந்துக்கு உங்கள் கற்பனை சென்றால் நான் அதற்கு பொறுப்பல்ல. இது ஆள் உயரம் இருக்கும் புல். மென்மையான புல் அல்ல. புல் ஓரம் முள் போல் குத்தும். இந்தப் புல் ஊடே நாங்கள் நடந்து செல்ல, முள் எங்கள் கைகளை பதம் பார்த்தது.

“நாம் நிசப்தமாகச் சென்றால் முள்ளம்பன்றியை இங்கு காணலாம்” என்றார் பேபீ. ஆனால் ஹரிணியால் பேசாமல் இருக்க முடியவில்லை. “முள் குத்துகிறது”, “இங்கிருந்து எப்பொழுது வெளியே வருவோம்”, “இன்னும் எவ்வளவு நேரம் இதே போல் நடக்க வேண்டும்”, “இந்த ட்ரெக் வேண்டாம். திரும்பி சென்று விடுவோம்” என்று ஓயாது பேசிக்கொண்டே வந்தாள்.

புல்வெளியை விட்டு வெளியே வந்தபிறகு, ஹரிணியைப் பார்த்து பேபி சொன்னார், “நான் கேட்டதெல்லாம் ஐந்து நிமிட மௌனம்தான். அப்படி மெளனமாக இருந்திருந்தால் முள்ளம்பன்றியை பார்த்திருப்போம்”.

ஹரிணி அவர் சொல்வது புரியாததுபோல் வேறு எங்கோ பார்த்தாள். இதைப் பார்த்து பேபி புன்னகைத்துக் கொண்டார்.

இப்பொழுது எங்கள் முன் திறந்தவெளி இருந்தது. காட்டுக்கு நடுவில் இதுபோன்ற திறந்தவெளி இருப்பது சகஜம்தான். இந்தத் திறந்தவெளியில் ஒரு சின்ன வீடு இருந்தது.

“இது ஒரு நாடோடியின் வீடு,” என்றார் பேபி. அந்த வீட்டிற்கு கதவு இல்லை. ஒரே ஒரு அறைதான். வீட்டிற்கு அருகில் ஒரு காய்கறித் தோட்டம். அதன் பக்கத்தில் ஒரு ஒல்லி நாய் சோர்ந்து படுத்திருந்தது.

“இந்த வீட்டுக்குக் கதவே இல்லை. மழை வந்தால் இவர்கள் என்ன செய்வார்கள், இவர்களுக்குக் குளிராதா?” என்று காயத்ரி கேட்டாள்.

“கதவு இல்லாத அந்த ஒரே ஒரு அறையில் இவர்கள் எப்படி குடும்பம் நடத்தி பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறார்கள்” என்று நான் நினைத்தேன், ஆனால் அந்த கேள்வியை கேட்கவில்லை.

“இவர்கள் இயற்கையுடன் ஒன்றிவிட்டவர்கள்” என்றார் பேபி, காயத்ரியைப் பார்த்து. “நகரங்களில் இருப்பவர்களுக்கு இது புரியாது. உங்களுக்கெல்லாம் காற்று கண்டிஷனாக இல்லை என்றால் தூக்கம் வராது,” என்றார். உண்மைதான்.

இப்பொழுது நாங்கள் ஒரு பள்ளத்தாக்கை நோக்கி கீழிறங்கிக் கொண்டிருக்கிறோம். ஓடும் நதியின் ஒலி எங்கள் காதில் விழுந்தது. நான் ஒரு இடத்தில் உட்காரப் போனேன். பேபி என்னை தடுத்து நிறுத்தினார்.

நான் உட்கார இருந்த இடத்திற்கு பின்னால் ஒரு சிறிய மண்பாதை இருந்தது. அதைக் காட்டி பேபீ சொன்னார், ”இது காட்டுப்பன்றி வரும் பாதை. நீங்கள் குறுக்கில் இருந்தால் உங்களை முட்டிக்கொண்டு சென்றுவிடும்”. நான் சட்டென்று அங்கிருந்து நகர்ந்தேன்.

ரஞ்சனி அந்த பாதையை கூர்ந்து பார்த்தாள். ஹரிணியும் பக்கத்தில் வந்து பார்த்தாள். இருவரும் சற்று நேரம் பாதையை உற்றுப் பார்த்தபின் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஹரிணி பேபியைப் பார்த்து, “காட்டுப்பன்றியைக் காணோம்?” என்ற கேள்வி எழுப்பினாள்.

“நீங்க உட்காருங்க, அது வரும்” என்றார் பேபீ.

ரஞ்சனியும் ஹரிணியும் ஒருவரை ஒருவர் மறுபடியும் பார்த்துக் கொண்டனர். “நோ” என்றாள் ஹரிணி. பேபி மறுபடியும் புன்னகைத்துக் கொண்டே கிளம்பினார்.

நாங்கள் இப்பொழுது நதியின் கரையில் இருந்தோம். “நேற்று இங்குதான் யானைகள் இருந்ததாக யாரோ சொன்னார்கள்” என்றார் பேபி. எனக்கு தூக்கிவாரிப் போட்டது.

“ஐயையோ யானையா?” என்றாள் காயத்ரி.

“ஒ ஸோ எக்சைட்டிங்” என்றார்கள் ரஞ்சனியும் ஹரிணியும்.

யானைகள் என்றால் எனக்கு என்றைக்கும் மரியாதையும் பிரியமும் உண்டு. ஆனால் அது யானைகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பேபீ ஆள்காட்டி விரலை வாயில்விட்டுச் சப்பினார். விரலை வாயை விட்டு வெளியே எடுத்து ஆள்காட்டி விரலால் ஆகாயத்தைக் காட்டியப்படி கையை உயர்த்தினார். “இப்படிச் செய்தால் காற்று எந்த பக்கத்திலிருந்து வீசுகிறது என்பது நமக்குத் தெரியும். யானை நம்மை மோப்பம் பிடிக்காமல் இருக்கவேண்டும் என்றால், நாம் காற்று எந்த பக்கம் வீசுகிறது என்று தெரிந்துகொண்டு, நம் வாசனையை காற்று யானையிடம் கொண்டு செல்லமுடியாத வகையில் நகர வேண்டும்” என்றார்.

நான் சுற்று முற்றும் பார்த்தேன். யானை எங்கும் கண்ணில் படவில்லை. அதையே காயத்ரி உரக்க சொன்னாள், “இங்க யானை எதுவும் கண்ல படல”.

ரஞ்சனி, “அப்பா, யானைய பாத்த நல்லா இருக்கும்” என்றாள்.

“அங்கிள், யானை வருமா?” என்று ஹரிணி பேபியிடம் கேட்டாள்.

இந்த முறை அவரால் தீர்மானமாக பதில் சொல்ல முடியவில்லை. “வரலாம்” என்றார்.

யானை வரவில்லை. நாங்கள் மெதுவாக இப்பொழுது மேலே ஏற ஆரம்பித்தோம். காயத்ரிக்கு சற்று வெறுப்பாக இருந்தது. முதலில் முட்கள் குத்தியது, பிறகு பூச்சிக் கடி. இப்பொழுது கடினமான நடை. “இதுபோல் ட்ரெக் வேண்டாம் என்றால் நீங்கள் கேட்கமாட்டீர்கள்” என்று என்னைக் கடிந்துகொண்டாள்.

“மேடம், நம்ப ஊர் லேடீஸ் இப்படிதான். நம்பளால நடக்க முடியாது. அதுவே வெளிநாட்டுலேர்ந்து வராங்களே அவங்க காலேல ஆறு மணிக்கு கிளம்பி சாயந்தரம் ஆறு மணி வரை நடப்பாங்க. நானே பல பேர கூட்டிக்கொண்டு போயிருக்கேன்” என்றார் பேபி.

“அவங்க இதுக்காகவே பயிற்சி எடுப்பாங்களோ என்னவோ. இந்த ஏத்த இறக்கம்லாம் நமக்கு கஷ்டம்தான்,” என்றாள் காயத்ரி.

“அதுவும் சரிதான்,” என்றார் பேபி.

அருவியைப் பார்த்தவுடன் எல்லோருக்கும் எல்லா வலியும் மாயமாய்ப் பறந்து போனது. வெள்ளை வெளேர் என்று பாயும் அருவியைப் பார்த்தவுடன் புது தெம்பு வந்தது. ரஞ்சனியும் ஹரிணியும் முன்னே ஓடினார்கள். அங்கு நிறைந்திருந்த பெரிய கற்கள் மேல் உட்கார்ந்துகொண்டு ஓடும் நதியில் காலை ஆட்டிகொண்டும், தண்ணீரை கையால் ஒருவர் மேல் ஒருவர் இறைத்துக்கொண்டும் விளையாடத் தொடங்கினார்கள்.

sv1sv2

“இந்த அருவிக்குப் பெயர் இல்லை. யாராவது பார்க்க இருந்தாதானே பெயர் வைப்பதற்கு. அது விழுந்துக்கொண்டே இருக்கும், யார் பார்க்கிறார்களோ இல்லையோ,” என்றார் பேபீ. இங்கு மனிதர்கள் வருவது குறைவு. அதனால் சுற்றுப்புறம் சுத்தமாக இருந்தது. வழக்கமாக அருவிகள் அருகே பார்க்கும் ‘லேஸ்’ பாக்கெட், ‘பிரூட்டி’ சாஷே, பீர் பாட்டில் என்று எதுவும் இல்லை.

அருவியின் ஓசை ஒரு தனி இசைதான். “இங்கேயே பல மணி நேரம் ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்திருக்கலாம் போலிருக்கு” என்றாள் காயத்ரி. எங்களைச் சுற்றி மலைகள், அருகில் அருவி, காலுக்கு அடியில் ஓடும் பெயரற்ற நதி, மிதமான வெயில். இந்த காட்சியைப் பார்த்து “சொர்க்கத்தில் வாசற்படி” என்று பாட தோன்றியது.

பேபீ என்னையும் காயத்ரியையும் கூப்பிட்டார். “இதோ பாருங்கள்,” என்றார்.

கீழே மரவட்டை போன்ற ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது. மரவட்டை போலல்லாமல் இது மஞ்சள் நிறத்தில் இருந்தது. “இத பிடிச்சி உங்க கைல தரட்டா?” என்று காயத்ரியை பார்த்து கேட்டார் பேபி.

“ஐயையோ,” என்றாள் காயத்ரி.

“உங்களுக்கு?” என்று என்னைக் கேட்டார். நான் பதில் சொல்வதற்கு முன் அதைக் கையில் எடுத்து கை மூடிக்கொண்டார். அவர் கையைத் திறந்தபோது ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. மரவட்டை போன்ற ஒன்று இருக்க வேண்டிய இடத்தில் ஒரு சிறிய மஞ்சள் பந்து இருந்தது. ஒன்றும் புரியாமல் விழித்த எங்கள் முகங்களைப் பார்த்து பேபீ சிரித்தார். “ஹ ஹ ஹ. இந்தப் பூச்சி இப்படிதான். எதாவது அபாயம் என்றால் அது பந்து போல் சுருண்டு கொள்ளும். இதைத் தொட்டு பாருங்கள்” என்றார்.

நான் அதைத் தொட்டேன். ஏதோ கட்டையைத் தொடுவது போல் இருந்தது. காயத்ரி தொட மறுத்தாள். பேபி அந்தப் பந்தை கீழே வைக்க, சிறிது நேரம் கழித்து பந்து மரவட்டையாக மாறியது. இயற்கையின் கோடிக்கணக்கான அதிசயங்களில் இதுவும் ஒன்று.

அரைமணி நேரம் அருவியில் கழித்துவிட்டு மறுபடியும் மலையேறத் தொடங்கினோம். சற்று தூரம் சென்ற பிறகு பேபி எங்களை நிறுத்தி இரு பெரிய மரங்களுக்கு நடுவே இருந்த வெற்றிடத்தைக் காட்டி, “அங்கே பாருங்கள். என்ன இருக்கு?” என்று கேட்டார்.

நான் உற்றுப் பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை.

“ஒ மை காட்” என்று ஒருகுரலாக ரஞ்சனியும் ஹரிணியும் கத்தினார்கள். “அப்பா கான்ட் யூ சீ!”.

“ஒ ஓ” என்றாள் காயத்ரி.

எனக்கு அப்பொழுதுதான் அந்த பிரும்மாண்டமான சிலந்தி வலை கண்ணில் பட்டது. ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரம் வரை சிலந்தி வலை விரிந்திருந்தது. அதன் நடுவில் பிரும்மாண்டமான சிவப்பு கருப்பு கோடு போட்ட சிலந்தி ஒன்று இருந்தது. இவ்வளவு பெரிய சிலந்தியை என் வாழ்க்கையில் நான் பார்த்ததில்லை. சற்று தூரம் சென்றபின் இன்னொரு பிரம்மாண்டமான வலையைப் பார்த்தோம். இதில் கருப்பு- மஞ்சள் வரி போட்ட சிலந்தி இருந்தது.

“இந்தச் சிலந்திகள் விஷச் சிலந்திகள். ஆனால் அதிகம் விஷம் இருக்காது. அவை நம்மைக் கடித்தால் உயிர் போகாது, ஆனால் ரொம்ப வலி எடுக்கும். சில சிலந்திகள் கடித்தால் ஒரு வருடம் வரை நமக்கு அரிப்பு எடுத்துக்கொண்டே இருக்கும். அதற்கு மருந்து கிடையாது. வேறொரு சிலந்தி இருக்கிறது. அது கடித்தால் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அரிப்பு நின்று விடும். ஆனால் சரியாக ஒரு வருடம் கழித்து மறுபடியும் இரண்டு அல்லது மூன்று நாள் அரிப்பு எடுக்கும்” என்று பேபி விளக்கினார். இயற்கையின் கோடிக்கணக்கான அதிசயங்களில் இன்னும் ஒன்று.

இதற்கு பிறகு எல்லோரும் மேலே பார்த்துக்கொண்டே நடந்தோம்.  மெதுவாக மலையேறி டீ எஸ்டேட் வந்து சேர்ந்தோம்.

விரிவான பாதையை கண்டவுடன் காயத்ரிக்கு ஒரே மகிழ்ச்சி. நடையில் வேகம் கூடியது. “பூச்சி இல்லை. முட்கள் இல்லை. காட்டு மிருகம் வந்துவிடும் என்ற அபாயமும் இல்லை. நமக்கு டீ எஸ்டேட்டில் நடப்பதுதான் பெஸ்ட்” என்றாள்.

“உங்களையெல்லாம் திருத்த முடியாது. நகர வாழ்க்கை எல்லோரையும் கெடுத்திருக்கு” என்றேன் நான்.

“அப்பா, நாம்ப எந்த அனிமலும் பார்க்கலையே,” என்று ஹரிணி கேட்டாள்.

“அனிமல் முக்கியம் இல்ல. காடுதான் முக்கியம். காட்டைப் பார்த்தோம், அது போதும்” என்றேன். ஆம், அதுதான் உண்மை. என் மனம் முழுதும் காடு வியாபித்திருந்தது.

“அடுத்த முறை நிறைய மிருங்கங்கள் பார்க்கலாம்” என்று ஹரிணியைப் பார்த்து பேபி கூறினார். “ஆனால் நீ ஒரு அஞ்சு நிமிஷமாவது சைலண்ட்டா இருக்கணும், சரியா?”

சைலண்ட்டாக இருந்தாள் ஹரிணி.

இப்படியாக எங்கள் அமைதிப் பள்ளத்தாக்கு ட்ரெக் முடிவடைந்தது.

One comment

  1. கடைசில எதுனா வந்துருமோன்னு நினச்சேன் 🙂

    நன்றாக இருந்தது. சில இடங்களில் stating the obvious, ’தான்’ பிரயோகங்கள், இன்னும் கொஞ்சம் வேகம் தேவை என பட்டது.

    சிலந்தி படம் போட்டிருந்தீங்கன்னா டக்கரா இருந்திருக்கும் :>

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.