கவியின் கண் 17 – சாவின் நூற்பு நார்கள்

– எஸ். சுரேஷ் –

சிறிய சதுக்கம்

என் வாழ்க்கை ஒரு சிறு சதுக்கத்தின் வடிவம் பெற்றுவிட்டது
உன் மரணத்துக்கான ஏற்பாடுகள் கவனமாகச் செய்யப்படும் அந்த இலையுதிர்காலம்
நீ நேசித்ததால் நான் அந்தச் சதுக்கத்தைப் பற்றிக் கொண்டிருந்தேன்
சிறிய கடைகளின் அலங்காரமற்ற, பழைய நினைவுகளில் ஆழ்த்தும் மானுடம்
ரிப்பன்களையும் துணிகளையும் மடித்துப் பிரிக்கும் அதன் கடைக்காரர்கள்
நான் நீயாக நினைத்தேன், நீ சாகப் போகிறாய் என்பதால்
அங்கிருந்த என் வாழ்வெல்லாம் எனக்குரியதல்லாது போகும் என்பதால்
நீ சிரிப்பது போல் நான் சிரிக்க முயற்சித்தேன்
செய்தித்தாள் விற்பவனிடமும் சிகரெட் விற்பவனிடமும்
வயலெட்கள் விற்றுக் கொண்டிருக்கும் அந்தக் கால்களற்ற பெண்ணிடமும்
காலற்றவளிடம் உனக்காகப் பிரார்த்திக்கச் சொன்னேன்
அந்தச் சதுக்கத்தின் மூலையில் இருக்கும் சர்ச்சுகளின்
பீடங்கள் அனைத்திலும் மெழுகுவர்த்திகள் ஏற்றினேன்
என் கண்களைத் திறந்ததும் கண்டேன், வாசித்தேன்
உன் முகத்தில் நித்தியத்தின் சேவகம் எழுதப்பட்டிருப்பதை
தெருக்களை அழைத்தேன், இடங்களை, மனிதர்களை,
உன் முகத்தின் சாட்சிகளாக இருந்தவர்கள் அனைவரையும்
உன்னை அழைப்பார்கள் என்று, உன்னை அவிழ்ப்பார்கள் என்று
உன்னைச் சுற்றி சாவு நூற்றுக் கொண்டிருந்த நார்களையும் என்று

சோபியா டி மெல்லோ பிரெய்னர் அன்ட்ரீசன்
போர்ச்சுகீசிய மொழி கவிதையின் ஆங்கில மொழியாக்கம் , ரூத் ஃபெய்ன்லைட் (1994)

இத்தொடரின் துவக்க கட்டுரைகள் ஒன்றில் ஔவையார் தன் நேசத்துக்குரிய நெடுமான் அஞ்சி என்ற குறுநில மன்னனின் பிரிவுக்கு இரங்கி இயற்றிய பா ஒன்று கண்டோம். அதில் ஔவை காலம் அஞ்சியை மறக்கும் என்று சினந்திருந்தாள். சோபி டி மெல்லோ என்ற போர்ச்சுகீசிய கவிஞர் எழுதிய இந்தக் கவிதையும் ஒரு இரங்கற்பாதான், ஆனால் ஔவையின் பிரிவாற்றாமையோடு ஒப்பிடும்போது இந்தக் கவிதைக்கு வேறொரு தன்மை உள்ளது என்று உணர்கிறோம். தன் நேசத்துக்குரியவரின் மரணம் தவிர்க்க முடியாது என்ற நிலையில் அவரது நினைவுகளின் உயிர்ப்பைப் பாதுகாக்க இவர் முயற்சிக்கிறார்.

இவர் நினைவுகளை இரு வகைகளில் உயிர்ப்பிக்கிறார். முதலாவது, தன் நேசத்துக்குரியாவர் விரும்பிய காரணத்தால், சதுக்கத்தில் அவர் பற்றுதல் வைத்திருக்கிறார். இந்தச் சதுக்கத்தின் சாதாரணர்களை அவர் நேசித்தார். இவர் அவர்களைத் தேடிச் சென்று சந்திக்கிறார், அவர்களைக் கொண்டு அவரைக் காண்கிறார். அவளைக் கண்டதும் சதுக்கத்துக்குரியவர்கள் அவரைப் பற்றி விசாரிப்பார்களோ என்னவோ? அல்லது, அவர்களோடு பேசும்போது, அவர் இதற்கெல்லாம் எப்படி பதில் சொல்லியிருப்பார் என்று அவள் நினைத்துப் பார்ப்பாளோ? அவள் அவரைச் சதுக்கத்தில் எங்கும் காண்கிறாள்.

நினைவுகளைக் காக்கும் இரண்டாம் வழி, தான் நேசிப்பவரின் நினைவாகத் தன்னை மாற்றிக் கொள்வது: “நான் நீயாக நினைத்தேன், நீ சாகப் போகிறாய் என்பதால்”. இனி அவள் தன் கண்களால் மட்டும் இவ்வுலகைப் பார்க்க முடியாது, அவர் அவளுள் இருக்கிறார், அவள் அவரோடு பார்க்கிறாள், இந்தச் சதுக்கத்தையும் அதன் மக்களையும். அவளது நினைவுகளில் நீக்கமற அவர் நிறைந்திருக்கிறார். சதுக்கமும் அவர் நினைவுகளோடு கலந்திருக்கிறது, பிரிக்க முடியாமல்.

இதில் நான் பிரிவாற்றாமை மட்டும் பார்க்கவில்லை. சிறு சதுக்கம் என்பது நம் வாழ்வின் பிரதிபிம்பம்தான். நம் நேசத்துக்குரியவர்களை அவர்களது மகத்தான சாதனைகளுக்காக நினைத்துப் பார்க்கப் போவதில்லை. நாம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட கணங்கள்: தெருவில் பானிபூரி சாப்பிட்டது, முதல் முறையாக ரோலர் கோஸ்டரில் பயணித்தது, மலைவாயில் விழும் அந்திச் சூரியனைப் பார்த்து இருவரும் வியந்தது, இது போன்ற நினைவுகள்.

இதைச் சொல்லியிருக்கிறேனா தெரியவில்லை, ஆனந்த் என்ற ஒரு ஹிந்திப் படத்தில் அழகான பாடல் ஒன்றுண்டு – ‘chotichoti baton kihaiyaadenbadi’ என்று அதன் பாடலாசிரியர் எழுதியிருப்பார். சின்னச் சின்ன விஷயங்கள்தான் மறையாத நினைவுகளை விட்டுச் செல்கின்றன. நண்பர்கள், ‘என் குழந்தைகளோடு க்வாலிட்டி டைம் செலவு செய்ய வேண்டும்,’ என்று சொல்லும்போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அப்போதெல்லாம் “உனக்குப் பிடித்தவர்களுடன் கொஞ்ச நேரம் உடன் இரு, அது போதும், உனக்குத் தெரியாமலேயே நினைவுகள் உருவாகும்,” என்று பதில் சொல்லத் தோன்றுகிறது. உடனிருந்தாலே போதுமானது, “மறக்க முடியாத தருணங்களை” திட்டமிட்டு பெற வேண்டியதில்லை.

சிறு சதுக்கம் என்பது வேறு வகையிலும் நம் வாழ்வை விவரிப்பதாக இருக்கிறது. நம் வாழ்வில் நமக்கென்று உருவாக்கிக் கொள்வதுதான் சிறு சதுக்கம். நாம் நம் வாழ்ககைப் பயணத்தில் ஆயிரக்கணக்கானவர்களைச் சந்திக்கிறோம், ஆனாலும்கூட கையளவுதான் நமக்கு நெருக்கமான உறவுகள் இருக்கின்றன என்பது வியப்பாக இருக்கிறது. நல்ல நண்பர்கள் என்று ஒரு சிலரை மட்டுமே சொல்லிக் கொள்ள முடியும். ஒரு சிலரை மட்டுமே ஆழமாக நேசிக்கும் இந்தச் சிறிய சதுக்கத்தை நம்மால் ஏன் கடந்து செல்ல முடிவதில்லை, நம்மால் ஏன் பிறர்மீதும் இத்தகைய அக்கறையையும் அன்பையும் காட்ட முடிவதில்லை? சில விதிவிலக்குகள் இருக்கலாம், ஆனால் பலரும் ஒரு சிறு சதுக்கத்துக்குள்தான் சிறைப்பட்டிருக்கின்றனர். இதில் என்ன ஒரு முரண்நகை என்றால், வயதாக வயதாக சதுக்கத்தின் பரப்பு குறைந்து கொண்டே வருகிறது.

இந்தச் சிக்கலான விஷயத்தை விளக்குவது கடினம். முதலாவதாக, அன்பு ஒருவழிப் பாதையல்ல. நாம் பிறரை எத்தனை நேசித்தாலும் அவர்களின் நேசத்தை அது பெற்றுத் தரும் என்பது உறுதியல்ல. இரண்டாவதாக, வயதோடு வேறு சில கவலைகளும் சேர்ந்து கொள்கின்றன, புதிய நண்பர்களை அறிமுகப்படுத்திக் கொள்வது கடினமாகிறது. குடும்பக் கவலைகள் அதிகரிக்கின்றன, சதுக்கம் குடும்ப உறுப்பினர்களால் நிறைகிறது, புதிய உறவுகளுக்கு இடமில்லாமல் போகிறது. இறுதியில், நம் மரணப்படுக்கையில் நமக்குத் துணையாக வேண்டப்பட்டவர்கள் இருந்தால் போதும் என்று நினைக்க ஆரம்பித்துவிடுகிறோம். ஏனைய பிறர் ஒரு பொருட்டேயல்ல.

இப்படிப்பட்ட ஒரு குறுக்கம் வாழ்வின் அத்தனை தளங்களிலும் ஏற்படுகிறது. ஜெயமோகனுடன் ஒரு நேர்முகத்தில் பேராசிரியர் ஜேசுதாசன், விவிலியத்தையும் கம்ப ராமாயணத்தையும் தவிர பிற நூல்கள் வாசிப்பதை தான் நிறுத்திவிட்டதாகக் கூறியதாகப் படித்தேன். நாம் பார்க்கும் சினிமாவை கவனமாகத் தேர்ந்தெடுக்கிறோம், நமக்குப் பிடித்தமான இசையைத் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறோம். என்ன புத்தகம் படிக்கலாம், எந்த வழியாக காலை நடை செய்யலாம் என்பது எல்லாமே திட்டம் போட்டு செய்யும் விஷயங்கள் ஆகின்றன. உலகம் நமக்கு அளிக்கும் தேர்வுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வேகத்தில் நம் தெரிவுகள் குறைகின்றன.

நம் அழகுணர்வு கூர்மையாக இருக்கிறது என்று நாம் சொல்லிக் கொள்ளலாம், ஆனால் புதிதாக என்ன செய்தாலும் திருப்திப்படுத்த முடியாதவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னாலும் தப்பில்லை. எல்லாம் அலுத்துவிட்டது, புதுசாய் ஒரு விஷயத்தைத் தேர்ந்தெடுக்கும் ஆசை போய் விட்டது என்று சொல்லுங்கள், அது நியாயம். இருப்பது போதும், இல்லாத ஒன்று புதுசாக வேண்டாம் என்று சொல்லும் நிலைக்கு நாம் வந்துவிடுகிறோம்.

நெருக்கமாக இல்லாதவர்கள் அயலாகி மறக்கப்படுவதால்தான் ஏதோ ஒரு வகையில அவர்கள் நினைவை உயிரோடு வைத்திருக்க முயற்சிக்கிறோம். மூதாதையர் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் செய்யப்படும் சமயச் சடங்குகளைச் சொல்லலாம். இவற்றைக் கடைபிடிப்பதால் மூதாதையர் வாழ்த்துவார்கள் என்று நாம் சொன்னாலும், உண்மையில் அவர்களை நாம் மறவாதிருக்கவே இவை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்று நம்புகிறேன். ஒரு நாளேனும் அவர்களை நினைத்துப் பார்க்கிறோமல்லவா? ஒவ்வொரு பண்பாட்டிலும் இது வெவ்வேறு வகைகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

கவிதை ஒரு சிறு சதுக்கத்தைப் பேசினாலும், அதில் உள்ள பெருங்கூட்டதின் நேசத்தை கவனப்படுத்துகிறது. நெருங்கிய ஒரு சிலரோடு நினைவை குறுக்கிக் கொள்ளாமல், நினைவின் எல்லைகளையும் உறவின் எல்லைகளையும் விரிப்பதாக இருக்கிறது. பிரிந்து மறையப்போகும் உறவை நினைக்கச் சொல்லி அனைவரையும் அழைக்கிறது, இதைக் கொண்டு மரணத்தைத் தாமதப்படுத்துகிறார் கவிஞர்.

கவிதையின் தணிந்த குரலே அதன் அழகு. கவிஞரின் வலியை நாம் அறிகிறோம், பிரிவின் நினைவை மட்டுமல்ல, உறவின் காலத்தையும் நீட்டிக்க அவர் விரும்புகிறார் என்று நாம் அறிகிறோம். ஆனாலும் அவர் உரக்க ஓலமிடுவதில்லை. உயிர் காப்பதில் அவர் உறுதியாய் இருப்பதே நம் புரிந்துணர்வை அவருக்குப் பெற்றுத் தருகிறது. சாவு நூற்றுக் கொண்டிருக்கும் நார்கள் மெல்ல விலகும் என்று நாமும் நினைக்கத் தலைப்படுகிறோம்.

தமிழாக்க உதவி – பீட்டர் பொங்கல்

ஒளிப்பட உதவி – randomtruth via nature of a man

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.