இரு பெண்கள். நிம்மதியற்ற இணை வாழ்வுகள். நெகிழ்வற்ற சமூக அமைப்புக்கு எதிராய்க் குமுறிப் போராடி உடையும் உயிர்கள். எஸ்தரும் காவேரியும்.
சில்வியா ப்ளாத்தின் பெருமையை எனக்கு உணர்த்திய நண்பருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அவரது துயர வாழ்வையும் முடிவையும் வாசித்தபோதுதான் ப்ளாத்தின் பெயரையே முதன்முறை கேள்விப்படுகிறேன். எழுத்தாளர் டெட் ஹ்யூஸுடன் அமைதியில்லாத மணவாழ்வு. ப்ளாத்தை அறியும் பயணம் இறுதியில் அவரது கிளாசிக் படைப்பான பெல் ஜாருக்கு என்னை இட்டுச் சென்றது (The Bell Jar). மேதைமையின் என்னவொரு அற்புதப் படைப்பு. அமைதியற்ற தன் உள்ளத்தின் இருண்ட பகுதிகளிலிருந்து அவர் எஸ்தர் கிரீன்வுட்டை உருவாக்கினார். எஸ்தரைப் பற்றி படிப்பதற்கு முன்பே எனக்கு அவளைத் தெரியும் என்ற உணர்வு ஏன் தொடர்ந்து இருந்து வந்தது? இந்த அனுபவம் எனக்கு முன்னரே ஏற்பட்டிருக்கிறது, இந்தப் பக்கங்களை நான் முன்னரே வாசித்திருக்கிறேன் என்ற ஆழ்ந்த உணர்வு ஏன் ஏற்பட்டது? பின்னர்தான் காவேரியின் சாயல்களைக் கொண்டவள் எஸ்தர் என்ற உண்மை புலப்பட்டது.
காவேரி, கன்னட மொழியின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கொண்டாடப்படும் ‘ஷரபஞ்சர’ (அம்புக் கூண்டு) என்ற நாவலின் நாயகி. எஸ்தரைவிட்டு பலபத்தாயிரம் மைல் தொலைவில் இருக்கிறாள். இருவேறு உலகங்கள். ஒன்று மேலை, மற்றொன்று கீழைத் தேசம். இருவருக்குமிடையே ஒரு சிறு சாயலும் இருக்கக்கூடும் என்று எப்படி என்னால் கற்பனை செய்து பார்த்திருக்க முடியும்? கன்னட எழுத்தாளர் திரிவேணியின் படைப்பு காவேரி, அவள் எபப்டி எஸ்தர் போலிருக்கவோ, அவளது உணர்ச்சிகளைக் கொண்டிருக்கவோ இயலும்? ஆனால் அதிசயம்தான் இது. இந்த இரு நாயகிகளும் ஒருவரிலொருவர் ஒன்றுபடுகின்றனர். இவர்களின் அசாதாரண உடன்நிகழ்வை நம்மால் தவறவிட முடியாது.
பெல் ஜாரும் அம்புக் கூண்டும், இரண்டுமே மூச்சுத்திணற வைக்கும் இறுக்கத்தின், சிறைப்படுதலின் குறியீடுகள். எஸ்தரும் காவேரியும், இருவருமே மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். இருவரும் 1950களில் வாழ்ந்தவர்கள். ஓரே சூழல். நாம் அவர்களது வாழ்வை நெருங்கிச் செல்கிறோம். எஸ்தர் ஓர் எழுத்தாளர், தனது எதிர்பார்ப்புகள் அனைத்தையும் இழந்த அவநம்பிக்கை. பெண்களின் லட்சியங்களை அவ்வளவாகப் பொருட்படுத்தாத சமூக அமைப்பால் ஒடுக்கப்பட்ட இருவர். வசதியான வாழ்க்கை, ஆபிஸ் செல்லும் கணவன், குழந்தை பிறந்தபின் காவேரியின் மனம் தறிகெட்டு அலைகிறது. அவளது மன அழுத்தத்தின் காரணம், திருமணத்துக்கு முன்னர், கடந்த காலத்தில் நிகழ்ந்த ஒரு பாலுறவு அனுபவம். மன அழுத்தம் சரியான பின்னும் காவேரி குடும்பத்திலும் சமூகத்திலும் பிறரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களின் மதிப்பீடுகளால் தண்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறாள்.
பெல் ஜார், ஷரபஞ்சர இரு நாவல்களின் முடிவும் வாசகர்களை வருத்தப்பட வைக்கிறது. அது அத்தனையின் இருளும் கீழ்மையும். எஸ்தரின் மனம் தன்னிலை இழப்பதும் மீள்வதுமாக இருக்கிறது. காவேரியோ அவளது உரத்த மறுப்பையும் மீறி மனநல மருத்துவமனைக்கு பலவந்தமாகக் கொண்டு செல்லப்படுகிறாள். ஆம், இம்முறை மீட்சிக்கு இடமில்லாமல் அவள் புத்தி பேதலித்தவளாகிறாள்- அவளைச் சுற்றி உள்ள சமூக அமைப்பின் தீர்மானங்களையும் அவள் மிகவும் நேசித்தவனின் துரோகத்தையும் அவளால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.
இரு நாவல்களுக்கும் இடையிலுள்ள ஒற்றுமைகள் இவை மட்டுமல்ல. திரிவேணியின் இயற்பெயர் அனுசூயா சங்கர். நவீன கன்னட இலக்கியத்தின் முதல் சில பெண்ணிய எழுத்தாளர்களில் ஒருவர். 1963ஆம் ஆண்டு, 35ஆம் வயதில் பிரசவித்தபின் மரணமடைந்த அவரது குறுகிய வாழ்வில் பல உளப்பகுப்பாய்வு ஆக்கங்களைச் செய்துள்ளார், அவை பரவலான வரவேற்பும் பெற்றுள்ளன.
அதே ஆண்டுதான், ப்ளாத் தன்னை மாய்த்துக் கொண்டார். மிகக் கொடூரமாக, வினோதமாக, ஓவனுக்குள் தன் தலையைக் கொடுத்து இறந்தார். தொடர்ந்து மன அழுத்தத்தாலும், சுயம் குறித்த எதிர்மறை எண்ணங்களாலும் பீடிக்கப்பட்ட அவரது உள்ளம் அதன் மேதைமையோடு போராடியது, தனக்கேயுரிய அச்சங்களோடும் துரோகங்களோடும் முரண்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் ப்ளாத் என்று எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால் பாவம், என்ன பயன். ராண்ட், யோங்குக்கு இணையான தலைசிறந்த பெண்ணிய இலக்கிய குரலாக இருந்திருக்கக்கூடிய ஒரு வாழ்வை அவர் முப்பதாம் வயதில் முடித்துக் கொண்டார்.
எஸ்தர், காவேரி இருவரையும் வாசிக்கையில் ஓர் ஆழ்ந்த புரிந்துணர்வு என்னுள் தோன்றுகிறது. வலி. பெண்ணாயிருப்பதன் பெருந்துயர். இந்தப் பாத்திரங்களைப் படைத்தவர்கள், இயல்பில் வெவ்வேறு வாழ்க்கை வாழ்ந்திருப்பதாகத் தெரியலாம், ஆனால் அவர்களின் பாத்திரங்கள் ஒரே பொது யதார்த்தத்தைப் பிரதிபலிக்கின்றன.
ப்ளாத்தும் சங்கரும் ஒரே நிறப்பிரிகையின் இரு முனைகளாக இருக்கின்றனர் என்பது தெளிவு. சங்கர் ஆதர்ச உலகில் நம்பிக்கை கொண்டிருந்தார், அவரது சொற்களில் ஒரு பாமரத்தன்மை இருந்தது. தன் காலத்துக்குரிய சமூக விழுமியங்களில் ஆழங்கால் பதித்திருந்த அவரது உலகில் வெண்மை மிகுந்திருந்தது. ஆனால் இதற்கு மாறாக, ப்ளாத் இருளும் வெளிச்சமும் கலந்த உலகிலிருந்து இருண்மையை நோக்கிச் செல்பவராக இருந்தார். தன் காலத்தின் சமூக ஒழுங்கை எதிர்த்துப் போராடியவர், ஆனால் தனக்கு வாய்த்த வாழ்வில் திருப்தியடையாத பெண்ணுக்கு மரணத்தைத் தவிர வேறு வழியில்லை என்று வலியுறுத்திய சமூக அமைப்புக்கு பலியானவர்.
பெல் ஜாரில் வரும் இந்த வாக்கியத்தை வாசிக்கும்போதெல்லாம் என் முதுகுத் தண்டு சில்லிட்டுப் போகிறது- “பிரச்சினை என்னவென்றால், என்னிடம் எப்போதும் ஒரு போதாமை இருந்தது, அதைப் பற்றி நான் நினைத்தே பார்த்திருக்கவில்லை என்பதுதான் விஷயம்”. காவேரி தன் கணவன் ஆளுக்கொரு நியாயம் என்று வைத்திருப்பதை அவனது சொற்களைக் கொண்டே கேலி செய்கிறாள், “மலிவாகக் கிடைத்தாலும் வேசியை ஒருவனும் விரும்பமாட்டான்”. அண்மைக் காலத்தில் எழுதப்பட்ட இந்திய இலக்கியத்தில் ஒரு பெண் பாத்திரத்தால் பேசப்பட்ட வசனங்களில் மிக அழகானது என்று இதைக் கருத முடியும்.
எஸ்தர் ஒரு விவிலிய அவதாரம். காவேரி ஒரு நதி. இருவரும் இளமையின், தூய்மையின், கற்பின் குறியீடுகள். எங்கே யாரிடம் தன் கன்னிமையை இழப்பது என்று தொடர்ந்து கவலைப்பட்டுக் கொண்டே இருந்தவள் எஸ்தர் – அவள் தன் கால சமூகத் தடைகளின் வலியை மிகத் தீவிரமாக உணர்ந்திருந்தவள். கற்பைக் கட்டிக்காத்த ஆசாரமான சமூக அமைப்புக்கு பலியானவள் காவேரி. இருவரும் தங்களைச் சுற்றிலுமிருந்தவர்களின் இரக்கமின்மையை எதிர்கொண்டவர்கள். இவர்களது நுட்பமான மனநிலையை விவரிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல், பைத்தியம் என்பதுதான் – தறிகெட்டு ஓடிய மனங்கள், நொறுங்கிப் போன மனங்கள், ஆறுதலும் அமைதியும் நாடிய மனங்கள்.
இரு பெண்கள். நிம்மதியற்ற இணை வாழ்வுகள். நெகிழ்வற்ற சமூக அமைப்புக்கு எதிராய்க் குமுறிப் போராடி உடையும் உயிர்கள். எஸ்தரும் காவேரியும்.
ஐந்து வயது குழந்தையாய் ஷரபஞ்சர திரைப்படத்தைக் காண்பது மனதில் தழும்பை விட்டுச் செல்லும் அனுபவம். ஆம், புட்டண்ண கனகல் அற்புதமாய் இயக்கிய திரைவடிவம் அக்காலத்துக்கு உரிய நாடகீயத் தன்மை கொண்டிருந்ததுதான். ஆனால், அது ஒரு தேர்ந்த திரைப்படம் என்பதில் சந்தேகமில்லை. புத்தகம் அந்த அளவு வலிக்கவில்லை, காரணம், ஏற்கனவே திரைப்படம் தன் கடமையைச் செய்து விட்டிருந்தது. இப்போது பெல் ஜார் வாசிக்கையில் திரைப்படத்தை மீண்டும் பார்க்கத் தோன்றுகிறது – திரையில் எஸ்தர் எப்படி இருக்கிறாள் என்று பார்க்க வேண்டும்.
என் வளர்பருவத்தின் பெரும்பாலான ஆண்டுகள் திரிவேணி எழுதிய நாவல்களின் தாக்கத்தைக் கொண்டிருந்தன. அந்த வயதில்தான் கன்னட இலக்கியத்தை அறிமுகப்படுத்திக் கொண்டேன். ப்ளாத் கண்டுபிடிக்கக் காத்திருந்த புதுக்காதல். இவர்கள் இருவரைப் பற்றியும் இன்னும் நிறைய எழுதுவேன் என்றுதான் தோன்றுகிறது – இதுவரை யாரும் இந்த இரு பாத்திரங்களையும் ஒப்பிட்டு எழுதவில்லை எனபது இன்னொரு பெரிய ஆச்சரியம்.
(கட்டுரையாளர் ஷாந்தேரி மல்லையா பங்களூருவைச் சேர்ந்த ஊடகவியலாளர். 8 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இவர் நாடகம், புத்தகங்கள், இசை, எழுத்து என்று பல்முனைப்பு கொண்டவர். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இவரது கட்டுரையின் தமிழாக்கம் இங்கு அளிக்கப்பட்டிருக்கிறது).