
கீழ்வானம் சிவக்க,
இங்கொன்றும் அங்கொன்றுமாய் விளக்குகள் எரிய
வாகனங்களின் சப்தமும் கீச்சு கீச்சு என்ற பறவை ஒலியும்
சேர்ந்து கொள்ளும் சந்தி வேளையில்
நாங்கள் சாலையில் நடந்து கொண்டிருக்கிறோம்
எதையோ யோசித்துக் கொண்டிருக்கும் அவர்
அடுத்துச் சொல்லப்போவது எனக்கு தெரியும்-
“நாகராஜன் ஹார்ட் அட்டாக்ல நேத்து போயிட்டார்”
மெளனமாய் நடக்கிறோம்
“அடுத்தது நான்தானோ?
என் வயசுக்காரா ஒவ்வொருத்தரா போயிண்டு இருக்கா,
அடுத்தது என் முறை.
பேஸ்மேக்கர் எவ்வளவு நாள்தான் என்னைக் காப்பாத்தும்?”
பெட்டிக் கடைக்காரன் எங்களை பார்த்து புன்னகைக்கிறான்
இரண்டு வருடங்களாக இதே சந்திப் பொழுதில்
இதே தெருவில் தினமும் நடக்கிறோம்.
“பட் ஐ ஹாவ் நோ ரிக்ரெட்ஸ்
எனக்கு எந்த வருத்தமும் இல்லை
வாழ்கையை நல்லா அனுபவிச்சாச்சு. வேற என்ன வேணும்?”
சூரியன் சோர்வடைய, சிவப்பு கரைய
மேற்கு திசையை இருள் கவ்வ
வீதி விளக்குகள் வெளிச்சத்துக்கு வருகின்றன
வீடு திரும்பும் வாகனங்களின் ஹார்ன் காதைத் துளைக்க
பறவைகளின் கூக்குரல்கள் அடங்க
இன்னொரு நாளும் கழிந்தது.
ஒளிப்பட உதவி – Finnsticks blog