
என் தங்கை வீட்டுக்காரன் சட்டையில்லாமல் வீட்டைச் சுற்றித் திரிவதை விரும்புகிறான். மார்ஷியாவைத் திருமணம் செய்து கொண்ட நாள் முதலே அவனுக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது.
நான் அடிக்கடி அவர்கள் வீட்டுக்குப் போய் நிற்பதில்லை. என் மகனைப் போலவே என் மருமகனும் ஒரு குழந்தைதான், அவனுக்கு எட்டு மாதங்கள்தான் ஆகின்றன, போன மாதம்தான் தவழ ஆரம்பித்தான்.
“தொழில் எப்படி போகிறது, சில்வியோ?” என்று என்னைக் கேட்கிறான். அவன் மஞ்சள் நிற கிண்ணம் ஒன்றில் ஓட்ஸ், வாழைப்பழம், தயிர் கலந்து கொண்டிருக்கிறான். குழந்தையின் கிண்ணம் போலிருக்கிறது.
“நன்றாகப் போகிறது. ஆனால் என் அப்பாவுடன் வேலை செய்வது கொஞ்சம் கஷ்டம்தான். அவர் மிக அதிகம் எதிர்பார்க்கிறார், அவருக்கு எதையும் கனகச்சிதமாகச் செய்தாக வேண்டும். சில சமயம் எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போய்விடலாம் பொலிருக்கிறது,” என்று ஒப்புக்கொள்கிறேன்.
என் மனைவி என் தங்கையுடன் கொஞ்சம் சுற்றிவிட்டு வருகிறோம் என்று கிளம்பிப் போனாள். குழந்தைகளையும் குழந்தைகளின் ஆயாக்களையும் அழைத்துக் கொண்டு போனார்கள். சனிக்கிழமைகளில் இது வாடிக்கை. வழக்கமாக அவர்கள் ப்ளாக்கைச் சுற்றி வருவார்கள். ஒவ்வொரு கடையின் கண்ணாடிக்கு முன்னும், மலர்ப்படுகையின் முன்னும், மைதானத்திலும் நின்று குழந்தைகள் களைத்துப் போய் அவர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டி வரும்வரை வேடிக்கை பார்ப்பார்கள். அதன்பின் ஒரு காப்பிக் கடையைத் தேர்ந்தெடுத்து அங்கு செல்வார்கள். அந்த நேரத்தை காபியும் மஃப்பினும் சாப்பிடப் பயன்படுத்திக் கொள்வார்கள். அப்போது சாக்லேட் கேக்கின் சிறுசிறு துண்டங்களைக் கொண்டு ஆயாக்கள் குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் என்ன பேசிக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. என் மனைவிக்கு என் தங்கைமேல் கொஞ்சம் பொறாமையுண்டு, அதை அவள் ஏற்றுக் கொள்ள மாட்டாள். ஆதர்ச கணவன் எப்படியிருப்பான் என்று கனவு காண்பார்கள் என்று நினைக்கிறேன்.
“உனக்குப் பதவி உயர்வு கிடைத்தது என்று மார்ஷியா சொன்னாள்,” என்று தொடர்கிறான் செர்ஜியோ. சாப்பிடுமுன் அவன் சில புஷ்-அப்களைச் செய்ய ஆரம்பிக்கிறான். அவன் வயிறு இறுக்கமாய் இருக்கிறது, அவன் கால்களின் தசைகள் தெரிகின்றன.
“உண்மைதான். அப்பாவிடம் வேலை செய்யும்போது இது நடப்பதுதான்,” என்று சொல்கிறேன், இது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்பதுபோல்.
“அப்படியா,” என்கிறான் அவன், கீழே குனிந்தவாறே.
“நான் என்னைச் சரியாக கவனித்துக் கொள்வதில்லை என்று பாட்ரிஷியா குறை சொல்கிறாள். இப்போது, குழந்தை வந்தபின், அது இன்னும் கஷ்டமாக இருக்கிறது. உன் நிலைமை எப்படி? இன்னும் ஜிம்மில்தான் வேலை செய்கிறாயா?” என்று கேட்கிறேன். கண்முன் அவன் செய்து கொண்டிருக்கும் எக்ஸர்சைஸ்களைப் பார்க்கவே தலை சுற்றுகிறது.
செர்ஜியோவுக்கு இருபத்து ஐந்து வயதுதான் ஆகிறது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக கம்யூனிட்டி சென்டரில் உள்ள ஜிம்மில் வேலை செய்து கொண்டிருக்கிறான். பிசியோதெரபி படிக்க ஆரம்பித்த அதே ஆண்டுதான் அங்கு வேலைக்குச் செல்லத் துவங்கினான்.
“நல்லவேளை. எனக்கு எக்ஸர்சைஸ் பண்ணும்போது கிடைக்கும் எனர்ஜி மிகவும் பிடித்திருக்கிறது. என்னோடு வேலைக்குக் கூட்டிப் போகவே இன்னொரு பையன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இருக்கிறேன். அங்கே ரொம்ப வேகமாக எல்லாம் நடந்து கொண்டிருக்கும், ஆனால் அது வேண்டியதுதான். நீ ஒரு தடவை அந்தப் பக்கம் வாயேன்,” என்று சொல்கிறான் செர்ஜியோ. அவன் முகம் மலரச் சிரிப்பது என்னைக் கொஞ்சம் சங்கடப்படுத்துவதாக இருக்கிறது.
பிற ஆண்கள், அதிலும் குறிப்பாக வசீகரமானவர்கள் அருகில் இருக்கும்போது எனக்கு கொஞ்சம் அசௌகரியமாக இருக்கிறது. செர்ஜியோவை பலரும் வெறித்துப் பார்ப்பார்கள், ஆண்கள் பெண்கள் என்று இருபாலாரும் என்பதை நானறிவேன். என்னை யாரும் கவனிப்பதில்லை, என் கைகள் வெண்ணிறமாக இருக்கின்றன, என் சருமத்தில் கைச்சட்டையின் நிழற்கோடு இருக்கிறது.
“என்னால் வர முடியுமா என்று தெரியவில்லை,” என்று சொல்கிறேன், வெட்கப்பட்டுக் கொண்டு.
“முதலில் அப்படிதான் இருக்கும். என் கிளையண்ட்டுகள் அவர்கள் உடம்பைப் பார்த்து வெட்கப்படுகிறார்கள், அசிங்கமாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆண்களுக்கு தைரியம் தேவைப்படுகிறது. பெண்கள் செய்து விடுகிறார்கள், பைத்தியம் பிடித்தது போல் எக்ஸர்சைஸ் செய்கிறார்கள். நீ உன் மனைவியைப் பார்க்க வேண்டும். அவள் கடுமையாக முயற்சிக்கிறாள்,” என்று ஆமோதிக்கிறான். முகம் துடைக்கும் துணியால் தன் வியர்வையைத் துடைத்துக் கொள்கிறான்.
“அப்படியா?” என்று கேட்கிறேன். இன்னொரு ஆணுடலின் இருப்பிலிருந்து என் கவனத்தைக் கலைத்துக் கொள்ள ஏதாவது வாசிக்கக் கிடைக்குமா என்று தேடுகிறேன். சிறிது நேரத்தில் அவன் உள்ளே போகிறான், குளித்துவிட்டு வருகிறேன் என்று சொல்கிறான்.
வாசல் அறையில் ஓட்ஸ் கிண்ணம் காலியாக இருக்கிறது. அதுவும் அவன் சில நிமிடங்களுக்கு முன்னர் சாப்பிட்டிருந்த வேறு பல வைட்டமின் பாட்டில்களும் அங்கே கிடக்கின்றன. அந்த அபார்ட்மெண்ட் ஒரு உடற்பயிற்சி அறை போலிருக்கிறது, குழந்தைகளுக்கான பொம்மைகளுக்கிடையே உடற்பயிற்சிக் கருவிகள் கிடக்கின்றன.
ஆணின் நெருக்கத்தில் சேர்ந்துகொள்ளும் பழக்கம் எனக்குக் கிடையாது. பெண்களால் வளர்க்கப்பட்டவன், என் அப்பாவுக்கு அவர் சத்தம் போடும்போது மட்டும்தான் மென்மையாய் நடந்து கொள்வது எப்படி என்று தெரியும். அன்பான ஆண் இருந்ததே கிடையாது, அதனால்தான் நான் என்னில் கொஞ்சம் பெண்மையை உணர்கிறேன், திடகாத்திரமான, வீரியமான பிற ஆண்களிலிருந்து வேறுபட்டவனாக உணர்கிறேன்.
“என்ன படித்துக் கொண்டிருக்கிறாய்?” செர்ஜியோ என்னைக் கேட்கிறான். அதற்குள் பளிச்சென்று சுத்தமாக வந்துவிட்டான், ஒரு ஜாக்கிங் டி ஷர்ட்டும் அதே கலரில் ஒரு புல்ஓவரும் போட்டுக் கொண்டிருக்கிறான்.
“குப்பை,” என்று சொல்கிறேன். கையிலிருக்கும் தடிமனான புத்தகத்தை சுவற்றில் சாய்த்து வைக்கிறேன். “எனக்கு வியர்த்துவிடுவது பிடிக்காது,” என்று தொடர்கிறேன். அவனது இருப்பு என்னைத் திணறடிக்கிறது. “உனக்கு புத்தகம் படிக்கப் பிடிக்குமா?”
ஆனால் அதற்குள் செர்ஜியோ சமையலறைக்குப் போய்விட்டான், அவன் இப்போது ஏதோ ஒரு காய்கறியை ஜூஸாக்கிக் கொண்டிருக்கிறான். அதுதான் மதிய வேளைக்கான ஸ்நாக் போலிருக்கிறது. எனக்கும் சிறிது தருகிறான். “நான் படிக்க வேண்டும். யுனிவர்சிட்டியில் திங்கட்கிழமை எனக்கு ஒரு டெஸ்ட் இருக்கிறது,” என்று சிரித்துக் கொண்டே சொல்கிறான்.
“நான் பாட்ரிஷியாவுக்குத் துணையாகதான் வந்தேன். குழந்தை இருந்தபோதும்கூட அவளுடன் இன்னும் அதிக நேரம் இருக்கப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உனக்குத்தான் இதெல்லாம் தெரியுமே,” என்று அழுத்திச் சொல்கிறேன்.
ஆனால் பதில் எதுவும் இல்லை. எங்களை ஒன்று சேர்ப்பது எதுவுமில்லை, எங்கள் வாழ்வின் இந்தத் தற்செயலும்கூட அல்ல. இது போன்ற தருணங்களில் வேறெதுவும் செய்வதற்கில்லை. இப்போது அவனது அப்பாவின் நினைவு வருகிறது, அவனது பதின்பருவத்தில் அவர் இறந்திருந்தார்.
“கேட்கிறேன் என்று தவறாக நினைத்துக் கொள்ளாதே, உனக்கு அப்பா இல்லாமல் கஷ்டமாக இல்லையா?” என்று விசாரிக்கிறேன், நிறைய புகைப்படங்கள் கொண்ட கனமான புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கும் செர்ஜியோவின் படிப்பில் குறுக்கிட்டு.
வேறொருவனின் வார்த்தை முகமற்றது. வேற்று உடல் மீதான பொறாமை என் உயிர்பைக் கெட்டிக்கிறது. அது மூச்சுத் திணறச் செய்கிறது.
“ஏன், உனக்கு உன் அப்பா வேண்டுமா?” என்று கேட்கிறான், பதில் சொல்லாமல்.
“என் அப்பாவுடன் இருப்பது கொஞ்சம் அலுப்பாக இருக்கிறது,” என்று உண்மையைச் சொல்கிறேன்.
“ஆமாம், என் அப்பா இளம் வயதிலேயே இறந்துவிட்டார். சிறு வயதில் இழப்புகள் எனக்குத் தெரியவில்லை. ஆனால் இப்போது நானே அப்பாவானபின், குழந்தையிடம் நெருக்கமாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பது புரிகிறது. வெம்மை கொடு, வாழ்க்கையில் ஒரு திசை காட்டு, யாருக்குத் தெரியும் சொல், இதைப் பற்றியெல்லாம் நான் அதிக நேரம் யோசிப்பதில்லை. அவர் இறந்தபோது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் அதெல்லாம் நடந்து ரொம்ப காலம் ஆகிவிட்டது,” என்று விளக்கம் சொல்கிறான்.
வெளியை வெறுமை நிறைக்க அனுமதிக்கிறது மௌனம். நான் டெலிவிஷனை ஆன் செய்கிறேன், மிகச் சன்னமான ஒலியில் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் மனைவி திரும்பி வரும்வரை வீட்டிலேயே இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அது முடியாது. என் சகோதரியுடன் அவள் சிரித்துக்கொண்டே அபார்மெண்ட் வந்து சேரும்போது, எனக்கு பெரிய விடுதலையாக இருக்கிறது. என் திருமணம், பலவகைகளில், பிற ஆண்களிடமிருந்து எனக்குப் பாதுகாப்பளிக்கிறது.
என் சகோதரியின் கணவனிடம் கைகுலுக்கி விடைபெறும்போது, அவனைக் கட்டியணைத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. அவனது உயிர்ப்பாய் இருக்கலாம், அல்லது தனது தந்தையின் மரணத்திலிருந்து மீளும் வலிமை அவனுக்கு இருந்தது என்பதாக இருக்கலாம், ஏதோ ஒன்று என்னிடம் தாக்கம் செலுத்தியிருக்கிறது. அவனது இருப்பு என் ஆவலைக் கூராக்குவது ஏன் என்று தெரியவில்லை. நான் லிப்ட்டுக்குச் செல்கிறேன், என் மகனின் அழுகுரல் கேட்கிறது. சாயல்களைத் தேடுகிறேன்.
“இவன் என்னைப் போலிருக்கிறானா?” என்று பாட்ரிஷியாவிடம் கேட்கிறேன். தன் நண்பியைச் சந்தித்த மகிழ்ச்சியில் இருக்கிறாள் அவள்.
“சந்தேகமேயில்லை, இவன் உன்னைப் போல்தான் இருக்கிறான்,” என்று சொல்கிறாள், குழந்தையின் தலையை மெல்லத் தடவிக் கொடுக்கிறாள்.
இதன் பொருள் என்ன என்று தெரியவில்லை என்பதுதான் இதில் எனக்குப் புரியாத விஷயம்.
நன்றி: Avatar Review இணைய இதழில் வெளிவந்தச் சிறுகதையின் தமிழாக்கம்
ஒளிப்பட உதவி – ARTIT