கவிதைக்கும் வாசகனுக்கும் இடையிலான உறவு எப்படிப்பட்டதென்று கருதுகிறீர்கள்?
கவிதைக்கும் வாசகருக்குமிடையிலான உறவு என்பது எப்போதும் முரண்பாடானதாகவே இருக்க வேண்டும் என்று விரும்புபவன் நான். வாசகன், கவிதைப் பிரதியோடு போராடி முடிவற்ற ஒரு வினையை செயலுக்கு கொண்டுவர வேண்டுமென்றும் விரும்புபவன்.
இலக்கியப் பிரதிகள் தம்மிடம் ஏதோவொரு அர்த்தத்தை கொண்டிருக்கிறது என நம்பும் ஒவ்வொருவரும் முதலில் வாசகராக மாறிவிடுகிறார். அடுத்ததுதான் இலக்கியப் பிரதியோடு எப்படி வினையாற்றுவதென்ற விசயமாகும். இலக்கியப் பிரதிகள் அதனதன் இயல்பிலேயே பெரும்பாலும் மறைமுகமாக எதையோ பேசுவதாகவே இருக்கும். அதிலும் கவிதைப் பிரதி கொஞ்சம் ஆழமாக இதை செய்துவிடும். அப்படிச் செய்வதினூடாகத்தான் தன்னை அது கவிதைப் பிரதியாக தக்கவைத்துக்கொள்கிறது. இலகுபடுத்தி இதை விபரிப்பதென்றால், சூழலில் சாதாரணமானது என கருதப்படும் ஒரு விசயத்தை நாம் இதுவரை சந்தித்திராத அசாதாரணமான ஒன்றாக மாற்றி உருப்பெறச் செய்வதுதான் கவிதைப் பிரதி. இது மிக அடிப்படையான ஒன்று. இதை விரிவாக பின்னர் சந்தர்ப்பம் கிடைத்தால் பேசுவோம். யதார்த்தத்தை பிரதிபலிக்கின்ற ஒன்றாக கவிதைப் பிரதி நெடுங்காலமாக இங்கு பயிலப்படுகிறது. அதன் மீது பெரும் விமர்சனம் எனக்குண்டு.
நாம் அறிந்து வைத்திருக்கின்ற உண்மைகளை, நமது நம்பிக்கைகளை மேலும் உறுதிப்படுத்துபவைகளை, நாம் அடிக்கடி உணரும் ஒன்றை இந்தப் பிரதி கதையாடுகிறது என உணரவைப்பதே கவிதைப் பிரதி என்றும் அதன் பணி என்றும் கருத முயற்சிப்பவரே இங்கு வாசகர் என ஆகிவிட்டிருக்கிறது. உண்மையில் வாசகர் என்பது அப்படியும் இருக்கலாம் என்பதே ஆகும். ஆனால், அப்படி மட்டுமிருப்பதே வாசகர் அல்ல. எழுத்து எவ்வளவு பன்மையானதோ அந்தளவு பன்மையானதாக பெருகிக் கிடப்பதே வாசகர் என்ற ஒரு மனநிலையாகும். ஆம், வாசகர் என்பது நபர்கள் அல்ல. குறிப்பிட்ட தருணங்களில் அதாவது பிரதிகளை எதிர்கொள்ளும் தருணங்களில் நபர்களிடம் தோன்றும் ஒருவகை மனநிலையைத்தான் வாசகர் என்று அழைக்க முடியும். மற்றப்படி ரசிகர் என்பதைத்தான் வாசகர் என நாம் பாவிக்கிறோம்.
நமது நம்பிக்கைகள், நமது கருத்துநிலைகள், நமது கவித்துவம் குறித்த புரிதல்கள், ஏன் நாம் கவிதை என பொதுவாக உருவாக்கியிருக்கும் அது குறித்த மனநிலை வடிவங்கள் போன்றவற்றை கலங்கடிப்பதாக, சந்தேகிக்க வைப்பதாக கவிதைப் பிரதி இருக்க வேண்டும். அல்லது இப்படி இருக்க வேண்டுமென்றால், நாம் கவிதைப் பிரதியோடு முரண்பட வேண்டுமென்றும் தோன்றுகிறதல்லவா? ஆகவே, கவிதை என்பது நமது கருத்துக்களை, கவித்துவமென்று பொதுவாக சந்தேகமின்றி உருவாக்கி வைத்திருக்கும் பொதுஉளவியலை, அழகான சொற்களில் சுமந்து வந்து நம்மை ஆறுதல் படுத்துவதாக இருக்க முடியாது என்று இங்கு எடுத்துக்கொள்ளலாம்.
கவிதை என நாம் ஏற்றிருக்கும் பொது உளவியலை சாந்தப்படுத்துகின்ற எந்த கவித்துவப் பிரதியும் அனேகமாக கவிதையாக இருக்க முடியாது. அதை மீறி நாம் அதை கவிதையாக ஏற்றுக்கொண்டால் உண்மையில் அது கவிதை குறித்த நமது பழைய புரிதலை நியாயப்படுத்துகிறது என்றே அர்த்தமாகும். நிச்சயமாக கவிதையின் அசாத்தியங்களை (இதுகாறும் சாத்தியமற்றது என கருதிய அம்சங்களையும், புனைவு உத்திகளையும் கொண்டு கவிதையை நிகழ்த்துதல் அந்தப் பிரதி உருவாக்கவில்லை என்றே நாம் கருத வேண்டியதிருக்கும். அதுபோலதான் வாசகர் என்ற மனநிலையும். புதிதாய் ஒன்றை அறிந்துகொள்வதற்கான தயார்நிலையிலும் அதற்கான வழிவகைகளிலும் வினைபுரிய வேண்டும். நம்மை கலங்கடிக்காத, சங்கடத்தை ஏற்படுத்தாத நிலையில் நமது பழைய புரிதலை தொந்தரவு செய்யாத நிலையில் இருக்கும் எந்தக் கவித்துவப் பிரதியையும் கவிதையாக ஏற்க மறுக்கும் மனநிலைதான் வாசகர் என்பதாகும்.
கவிதைப் பிரதியோடு கிடந்து தீவிரமாகப் போராடி அதனோடு வினைபுரியும் ஆற்றல்களையும் வளங்களையும் பெருக்கும் மனநிலையைத்தான் நான் ”வாசகர்” என்ற சொற்களால் அழைக்க விரும்புகிறேன். இங்கு அடிப்படையான ஒரு கேள்வி எழும்புகிறது கவிதைப் பிரதியுடன் இந்தக் கடினமான போராட்டம் அவசியம்தானா என்பதுதான் அது. ஆம், நிச்சயமாக இலக்கியப் பிரதிகளில் கவிதைக்கு மாத்திரம் இது மிக அவசியமான ஒன்று. ஏனெனில், அது எந்தச் சாதாரணமான விசயமெனினும் அதன் பண்பையும் கருத்துநிலைகளையும் முற்றிலும் புதிய ஒன்றாக மாற்றியமைக்கின்ற வேலையைச் செய்வதாகும். எந்த முன்னுதாரணங்களுமின்றிய ஒரு நிலையில் செயற்படுவது. இந்த முன்மாதிரிகளை முற்றாகப் புறக்கணிப்பதுதான் கவிதையின் வேலையே. அப்படி செயற்படுவதால்தான் அது கவிதையாக தன்னை நிலைநிறுத்துகிறது. மிகவும் புதிதான அனுபவநிலையை சூழலுக்கு அறிமுகப்டுத்துகிறது.
இப்போது கவிதைப் பிரதிக்கும் வாசகருக்குமிடையிலான உறவு எப்படிப்பட்டது என்பது ஓரளவு புரிந்திருக்குமென்று நினைக்கிறேன். எனினும், இதை கருத்துத்தளத்திலும் கொஞ்சம் விவாதிக்கலாமென்று நினைக்கிறேன்.
பிரதி அர்த்தத்தை கொண்டிருக்கிறது அதாவது மொழியாலான ஒரு நிகழ்வுதான் பிரதி என்பதால் மொழிவழியாக தாக்கமுற்றநிலையில் ஒரு அர்த்தத்தை கொண்டிருக்கிறது என்றும், சூழல்தான் பிரதிக்கான அர்த்தத்தை உருவாக்குகிறதென்றும், ஆசிரியனின் நோக்கமே ஒரு பிரதிக்கான அர்த்தத்தை கண்டடைவதில் முக்கியமானதென்றும், இல்லை வாசகனே பிரதிக்கான அர்த்தத்தை கண்டுபிடிக்கிறான். அவனினூடாகவே பிரதி தனது அர்த்தத்தை உருவாக்குகிறது என்றும் பல கருத்துநிலைகள் இருக்கின்றன. கடைசியாக கவனயீர்ப்பைப் பெற்ற கருத்துநிலை, வாசகனை முதன்மைப்படுத்தியது என இதுவரை அறிந்திருக்கிறோம். எனினும், அனைத்துக் கருத்து நிலைகளும் உலகளவில் செல்வாக்குடனே இருக்கின்றன. இதுதான் ஆச்சரியமான ஒன்று. இதில் குறித்த ஒரு கருத்துநிலைதான் முக்கியமானது என்று எந்தச் சட்டங்களுமில்லை. இப்படியான தீர்க்கமான வரையறை இல்லாமலிருப்பதுதான் இலக்கியத்தின் வெற்றியும் கூட. இன்னும் மிகச் சுதந்திரமான ஒரு வெளியாக இலக்கியம் கருதப்படுவதற்கும் இதுதான் காரணம்.
இந்த கருத்துநிலைகளின் உள்ளார்ந்த ரீதியாக இயங்கும் முக்கியமான இரண்டு விசயங்களை இங்கு சுட்டிக்காட்டலாம் என நினைக்கிறேன். ஒன்று ஆசிரியர் மாணவ அல்லது குரு சீட புரிதல் முறை. மற்றையது கண்டுபிடித்தல் முறைமை. இந்த இரண்டு முறைகளிலும்தான் பிரதிக்கான அர்த்தம் உருவாக்கப்படுகிறது. இரண்டு முனைகள் இதிலிருக்கின்றன. ஒன்று அறியப்பட வேண்டிய நிலையிலிருக்கின்ற முனை. மற்றையது அறிந்த முனை. உதாரணமாக இப்படி இதை விபரிக்கலாம். குரு அறிந்தவராகவும், சீடன் அறியப்பட வேண்டியவர் என்பதாக ஆக்கப்பட்டிருக்கிறார். ஒரு முனை செயலூக்கமானதாகவும் மற்றையது செயலூக்கமற்றதாகவும் அமைக்கப்படுகிறது. கண்டுபிடிப்பு முறையும் இப்படித்தான். இயற்கை இருக்கிறது. மனிதன் செயலூக்கமான பகுதி. அந்தப் பகுதி இயற்கையை தனது ஆற்றலினால் அர்த்தப்படுத்துகிறது. இவ்வளவுதான்.
அர்த்தத்தை கண்டுபிடிப்பதில் உதவுவதாக நம்பும் இந்த இரு வழிமுறைகளும் ஒரு முனையை செயலூக்கமற்றதாக நம்ப வேண்டிய தேவையில் இருக்கிறது. அப்போதுதான் அர்த்தம் என்பது உருவாகும் என கருதப்படுகிறது. இதையே இலக்கியத்திலும் பாவிக்கின்றனர். ஏன் அனைத்திலும் இதுதான்.
இலக்கியப் பிரதியை சந்திப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் குறிப்பிட்ட ஒரு உண்மை தேவையில்லை. குறிப்பிட்ட ஒரு வழிமுறையும் தேவையில்லை. ஆனால், இலக்கியப் பிரதிக்கும் வாசகனுக்குமிடையில் உரையாடல்தான் தேவை. அதிலும் கவிதைப் பிரதியோடு வினையாற்றும்போது இரண்டு முனைகளும் அதாவது பிரதியும், வாசகரும் செயலூக்கமான நிலையை எடுக்க வேண்டும். அனுபவம் என்பது ஒற்றை மனிதனின் தனித்த மனநிகழ்வு அல்ல. எனவே, இலக்கிய வாசிப்பென்பது ஓர் உரையாடல். வாசகன் பிரதியுடன் மொழிவழி உரையாடலில் ஈடுபடுகிறான். மொழிவழி நிகழ்வதாலேயே அது தனிமனித அனுபவம் சார்ந்ததல்ல. பிரதி சில காலங்களுக்கு முன் எழுதப்பட்டதெனினும், பல ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதெனினும் அது கடந்த காலத்தைச் சுமந்து நிற்கிறது. இங்கு வாசகனே நிகழ்காலத்தை தன்னில் கொண்டுள்ளான். வாசிப்புச் செயலில் இரண்டு காலங்கள் சந்தித்துக்கொள்கின்றன. கலக்கின்றன. முரண்படுகின்றன. எனவே, பிரதி ஏற்கனவே அர்த்தத்தை கொண்டிருக்கின்றது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதுபோல, வாசகனே அர்த்தத்தை கண்டுபிடிக்கின்றான் என்ற பேச்சுக்கும் இடமில்லை. வாசிப்பின்போது அர்த்தம் மெதுவாக நிகழ்கிறது. உண்மைகள் தங்கள் இருப்பை புதுப்பித்து அவிழ்கின்றன. அதனைப் புரிதல் என்கின்றோம். பிரதி வாசிக்கப்படுகிறது என்றால் அங்கு இரண்டு காலங்கள் சந்தித்துக்கொள்கின்றன என்று பொருளாகிறது. இது தொடுதளங்களின் சந்திப்பு (Fusion of Horizons) ஆனால், இந்தச் சந்திப்பு இரவும் பகலும் எங்கே சந்தித்துக்கொள்கின்றது என கண்டுபிடிக்க முடியாத மங்கலான ஒரு புள்ளிபோன்றது
வாசகனே அனைத்தும் அல்லது பிரதியே அனைத்தும் என்ற இரண்டு கருத்துநிலைகளும் இங்கு சங்கடமான நிலைக்குச் சென்றுவிடுகிறது. கடந்தகாலம் மற்றும் நிகழ்காலம் எனபது மாத்திரமல்ல, வாசகனின் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்பு திட்டம் எனபவைகளும் இந்த பிரதி வாசிப்புச் செயலில் பங்கேற்கின்றது.
இந்தச் சந்திப்பு எப்போதும் முரண்பாடு கொண்டதாகவே இருக்க வாய்ப்புள்ளது. அது போல சில தருணங்கள், இடங்கள், இதமான சந்திப்புக்களாக ஆகவும் செய்கிறது மொழி அனுமதிக்கும் எல்லைக்கூடாக இந்தச் சந்திப்பு நடந்தேறுகிறது. அந்தச் சந்திப்புப் பற்றிய கதைகளின் வியாக்கியானமே கிட்டத்தட்ட அர்த்தமாகும். இது ஒவ்வொரு சந்திப்பின்போதும் முற்றிலும் வேறுபடக்கூடியது. எனவே, அர்த்தங்கள் பெருக வாய்ப்பைத் தருகிறது.
ஆகவே, வாசிப்பென்பது மிக்ச சிக்கலான ஒரு நிகழ்வு. வாசிப்பின்போது பிரதி மாத்திரமல்ல வாசகனும் உருமாறுகிறான். இந்த உருமாற்றம் நிகழாதுபோனால் அங்கு உரையாடல் இல்லை என்றே அர்த்தமாகிறது. உரையாடல் வாசிப்புச் செயற்பாடு என்பதை டெரிடா மறுத்திருப்பார் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இது மிகச் சிக்கலான ஒரு நிகழ்வு. வாசிப்பின்போது பிரதி மாத்திரமல்ல வாசகனும் உருமாறுகிறான். இந்த உருமாற்றம் நிகழாதுபோனால் அங்கு உரையாடல் இல்லை என்றே அர்த்தமாகிறது. இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்வதென்றால், வாசகன் என்பது பிரதியுடன் வினையாற்றும்போது உருவாகும் மனநிலை. பிரதியில் அர்த்தத்தை கண்டுபிடிப்பதில் பாங்காற்றுவதுதான் வாசகனின் பணி. மாறாக பிரதியிலிருந்து உண்மையை எடுத்துச் சொல்வதல்ல. பிரதி என்பது, அர்த்தங்களை கண்டுபிடிக்க பங்களிப்புச் செய்யும் வாசகர்களுக்கு ஏதுவான சூழலை வழங்குவதுதான். அதிலும் கவிதைப் பிரதி மிகவும் சூட்சுமமான வழிமுறைகளையும், தந்திரோபாயங்களையும், நமக்கு என்றுமெ பழக்கமற்ற புனைவு நிலவரங்களையும் உருப்பெருக்கி, அர்த்தங்களை கண்டுபிடிப்பதில் சாவலை உண்டுபண்ணுவதுதான். அந்தச் சவாலை எதிர்கொண்டு அர்த்தத்தை கண்டுபிடிப்பதில் பங்களிப்பச் செய்வதில்தான் வாசகன் என்ற மனோபாவம் விரிவடைகிறது. அடுத்த எல்லைக்குச் செல்கிறது. ஆகவே, கவிதைக்கும் வாசகனுக்குமிடையிலான உறவு பெரும் ஆற்றல்களைக்கொண்டு மெல்ல மெல்ல வளரக்கூடிய ஒன்று. அதே நேரம் தற்செயலானதும்கூட. இந்த ஆச்சரியமிக்க உறவை இழந்துவிடுவதினாடாக வாழ்வின் தருணங்கள் பழசுபட்டுப் போகின்றன. வாசகர் என்ற ஒரு மனநிலை பிரதி என்ற மொழியாலான ஒரு நிகழ்வை சந்தித்தல் என்பதே பிரதியுடனான நமது உறவாக கொள்ளமுடியும். அந்தச் சந்திப்பின் கதைகளை வியாக்கியானம் செய்வதே வாசிப்பாகும்.
பிரதியில் அர்த்தத்தை கண்டுபிடிப்பதில் எப்படியான பங்களிப்புக்களைச் செய்ய முடியும் என்று சிந்திப்பதுதான் இலக்கியத்தில் செயற்படுதல் என்பதுமாகும். நாம் இப்போதெல்லாம் ஒரு பிரதி தன்னை எப்படி கவிதையாக நிகழ்த்திக் காட்டுகிறது என சிந்திக்கும் முயற்சியில் கவனத்தை செலுத்துவதில்லை. அதற்கு மாறாக இந்தப் பிரதி கவிதையாக இருக்கிறது என நம்பிவிடுகிறோம். அதற்கு மரபுரீதியிலான சில அடையாளங்கள் எழுதாத விதியாக இருந்து உதவி செய்கின்றன. ஆக, அதற்கு அடுத்த நிலையிலுள்ள இந்தக் கவிதை என்ன சொல்கிறது என்றே யோசிக்கிறோம். உண்மை அப்படி அல்ல. ஒரு பிரதி தன்னை கவிதையாக நிகழ்த்திக்காட்ட எப்படியாக தனது உள்ளலகுகளில் செயற்படுகிறது என்பது இங்கு முக்கியமானது. இந்த ஆழ்ந்த வாசிப்பு முறையை கண்டடையும்போது, நாம் யாரும் கவிதைக்கும் வாசகருக்குமான உறவு பற்றி கவலைகொள்ள ஏதுமிருக்கப் போவதில்லை.
கவிதை – அதிகாலை ஒரு வெள்ளைக் கதவு
2 comments