பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்துகொண்டு
ஹிந்து நாளிதழை படித்துக் கொண்டிருக்கிறார்
பக்கவாட்டு ஜன்னல் வழியே வெளிச்சம்
ஆபிச்சுவரி பக்கத்தில் உள்ள புகைப்படங்களை
ஒளிரச்செய்கிறதோ என்னவோ, ஆனால்-
அப்பாவின் மனதை அவர் போட்டிருக்கும்
தடிமனான கண்ணாடி மறைக்கிறது
காலை எழுந்ததும் ஏன் மரணத்தை எதிர்கொள்கிறார்?
ஒவ்வொருவராக மறைந்து கொண்டிருக்கும் நண்பர்களுக்காகவா?
தான் இன்னும் மறையவில்லை என்பதை மறக்காமல் இருக்கவா?
ஒளி ஒழுகும் இருட்டுச் சமையலறையிலிருந்து
அம்மா காபி டம்ப்ளருடன் அப்பாவை நோக்கி வருகிறாள்.
காபி சுவை நாவினில் இறங்க, மரண பயம் மெல்ல விலக,
நாற்காலியை விட்டு மெதுவாக எழுந்து நிற்கிறார்
க்ளிக் க்ளிக்
ஒளிப்பட உதவி – artofday.com