ரத்ன பிரபா
“என் உச்சந்தலை நிஜமாகவே திறந்து கொண்டது போலிருக்கும்போது, அதுதான் கவிதை என்பது புரிந்துவிடுகிறது,” என்றார் எமிலி டிக்கின்சன். கவிதை எழுதுவதற்குத் தகுந்த கருப்பொருள் தேடிச் செல்ல மகாபாரதத்தை விடவும் சிறந்த, நிரம்பி வழியும் கொதிகலன் எது இருக்க முடியும் – எத்தனை வடிவங்கள் இருந்தாலும், எத்தனை கோணங்கள் வெளிப்பட்டிருந்தாலும், மீண்டும் மீண்டும், பல பத்தாயிரம் முறை திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட பின்னும், தன் புத்துயிர்ப்பையும் அழகையும் தக்க வைத்துக் கொண்டுள்ள உலகின் மாபெரும் காவியமல்லவா அது!
ஊர்வசி, உலூபி, உத்தரை, சுபத்திரை: அர்ஜுனன் வாழ்வில் புகுந்த நான்கு வெவ்வேறு பெண்களுடனான அவனது உறவுகள் குறித்த நான்கு பகுதிகளாக கவிதைத் தொடர் ஒன்று எழுதப்பட்டிருப்பது பற்றி கேள்விப்பட்டதும், இவர்களைக் காட்டிலும் புகழ்பெற்ற திரௌபதியை விடுத்து இந்த நால்வர் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்று யோசித்தேன். இதில் சிந்தனைக்குரிய இன்னொரு விஷயம், சுபத்திரையின் தேர்வு – மற்ற மூவரோடு ஒப்பிட்டால் இவள் மரபு சார்ந்த துணை உறவானவள். இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் கவிதைகளை வாசிக்கத் துவங்கினேன். ஒவ்வொரு காதலும் கவிஞரின் மனதினூடே விவரிக்கப்படும்போது நான்கு பெண்களின் சித்திரமும் கவிதைகளின் மையத்திலுள்ள கிருஷ்ணன் இறுதி அடிகளில் வருவதும் மிகச் சிறப்பான வளர்ச்சியை அடுத்தடுத்த கவிதைகளிள் அடைவதைக் கண்டுணர முடிந்தது.
முதல் கவிதை, ஊர்வசி அர்ஜுனன் உறவை புதுப்பார்வையில், துணிச்சலான கோணத்தில் விவரிக்கிறது:
“அர்ஜுனன் அறைக்கு/ சென்று திரும்பியவள்/ கண்களில் ஏமாற்றம்./ கரை மீறும் நதியலை போல்/ வெகுண்டு/ வேகவேகமாய்/ அலங்காரத்தை கலைத்தாள்.// உடைகளைக் கழட்டத் தொடங்கியதும்/ கொஞ்சம் அமைதி/” – துவக்கத்தில் அர்ஜுனன் மறுப்பின் காரணமாக அவள் சினந்தாலும், ஊர்வசி தன் அணிகலன்களையும் ஆடைகளையும் களைவதில் தன் ஆத்திரத்தைத் தணித்துக் கொள்கிறாள். எந்த புரூரவஸின் உறவின் காரணமாகத் தனக்கு தாயாகி விட்டவள் என்று சொல்லி அர்ஜுனன் நிராகரிக்கிறானோ, அவனோடு வாழ்ந்த நினைவுகளை மகிழ்ச்சியோடு அசை போடுகிறாள். ஒரு அழகிய பெண்ணை நிராகரித்தபின் அர்ஜுனன் மனதில் தோன்றும் ஏமாற்றத்தைப் பயன்படுத்திக் கொண்டு கவிஞர் தற்கால இந்திய சமூக அமைப்பில் பெண்ணை போகப் பொருளாக மட்டுமே காணும் போக்கு குறித்து சிந்திக்கிறார் என்று தோன்றுகிறது.
இரண்டாம் கவிதையில் உத்தரையின் வாழ்வில் பிருக்கன்னலையின் புயல் போன்ற வருகை என்னை சிந்தனையில் ஆழ்த்தியது – நாமறியாமல் நம்மால் அனுமதிக்கப்பட்டு நம் வாழ்வில் எத்தனை எத்தனை புயல்கள் புகுகின்றன, அவற்றின் அழிவுப் பாதையில் விட்டுச் செல்லப்படும் சிதிலங்கள்தான் எத்தனை, பலமுறை அவை மீளப்பெற முடியாதவையாக இருக்கின்றன. அனைத்து கவிதைகளில் உள்ள வர்ணனைகளும் கற்பனையைத் தூண்டுபவையாக இருந்தாலும், உலூபி கவிதையில் கடலுயிர்களால் நெய்யப்படும் திரைச்சீலை – “அர்ஜுனன்/ காமநோய் தீர்க்கும் வைத்தியனானான்./ நதியின் உயிரினங்கள்/ அறையின் திரையாகின/” – அருமையானது, அர்ஜுனனும் உலூபியும் தனிமையில் இணைவது வாசகனின் கற்பனைக்கே விடப்படுகிறது.
நினைத்தபடி நடந்து கொள்ளும், நிரந்தரமற்ற மாயையின் பாத்திரத்தைக் கொண்டு சுபத்திரை விவரிக்கப்பட்டிருப்பது – இந்து தத்துவ மரபில் உள்ள முக்கியமான அம்சத்தைக் கொண்டு தொடரை தக்க முறையில் நிறைவு செய்கிறது. கௌரவர்களின் வஞ்சகத்தால் அபிமன்யு களம்படுகையில் சுழலும் அவனது எங்கும் நிறைந்த சக்கரத்தைக் கவிஞர் புத்தரின் தர்மசக்கரத்துடன் இணைப்பது மிக அழகிய கற்பனை – – “மகாமாயையுடன் தொடர்பு விலகாமல்/ பிடியில் சிக்காமல்/ நடு வழியில் நடந்து சித்தார்த்தன்/ தர்மச்சக்கரத்தைச் சுழற்றி புத்தனானான்” – இது என் மனதில் சுகமான உணர்வுகளைக் கிளர்த்தியது. அபிமன்யூவின் துரோக, குருதிப் பலி அகிம்சையும் கருணையும் இரக்கமும் நிறைந்த வாழ்வு முறையின் துவக்கங்களாக அமைவது போலமைகிறது கவிதை.
ஒவ்வொரு கவிதையின் முடிவிலும் உள்ள கிருஷ்ணனின் மேற்கோள்கள் சிறப்பாக எழுதப்பட்டிருந்தாலும், உத்தரை கவிதையின் முடிவே அனைத்திலும் அழகியது – ““குரு,தோழன், மாமன், தந்தை/ மாறும் காலங்கள், மாறும் வேடங்கள்/ உன்னுள் மாறாமல் இருக்கும்/ என்னை உணர் அர்ஜூனா/” – புறவுருவத் தோற்றங்களைக் கடந்து, உள்ளுறையும் இறைவனை உணரத் தூண்டுவது போலிருந்த வரிகள். தத்துவமும் மென்காமமும், கிறுகிறுக்க வைக்கும் கலவை. நான்கு கவிதைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய, ஆனால் வெவ்வேறு கருப்போருட்களைப் பேசுவது போலிருக்கிறது – ஊர்வசியில் காமம், உத்தரையில் களங்கமிலாத் தன்மை, உலூபியில் சுயநலமற்ற காதல், சுபத்திரையில் ஆன்மிகத்தில் கலக்கும் காமம், மானுட இயல்பின் மாறும் குணங்களை விவரிப்பது போலும்.
அடிப்படை தத்துவம், காவிய பாத்திரங்களை நினைவூட்டும் சுட்டல்கள், புதுப் பார்வைகள் நல்ல ஒரு வாசிப்பை அளித்து நம்மைச் சிந்திக்கத் தூண்டினாலும், கவிதைகள் உரைநடைப் பாணியில், அழகும் கற்பனையும் குறைந்து ஒலிக்கும் சொற்களில் அமைந்திருப்பதைக் குறிப்பிட வேண்டும்.
முதலில் சொன்னது போல், மகாபாரதம் எழுத்தாளர்களுக்கு ஒரு செல்வக் களஞ்சியம். அதைப் புதிய கோணத்தில் நான் வாசிக்கும் ஒவ்வொரு முறையும் அதனுள் உறைந்திருக்கும் சாத்தியங்களைக் கண்டறிந்து கற்பனைக்கண் கொண்டு காணும் மானுட மனதை நினைத்து வியக்கிறேன். அதே பாத்திரங்கள் எண்ணற்ற வகைகளில் விவரிக்கப்படும் தன்மை கொண்டிருக்கின்றன, சனாதனிகளுக்கு இது சில சமயம் ஒவ்வாமையை அளிக்கலாம் – ஆனால் பாரதத்தில் சலிப்பூட்டுவதாகவோ வாசிக்கத் தாளாததாகவோ எந்தப் பகுதியும் இல்லை.
மேலும் பல பாரதங்கள் தோன்றட்டும், இந்த அற்புத காவியத்தின் அருள் பாலித்து மேலும் பல கவிகள் உருவாகட்டும்.