ஐன்ஸ்டீன் வாழ்ந்த வீடு

ஸ்ரீதர் நாராயணன்

‘ஐன்ஸ்டீன் இருந்த வீடுன்னு ப்ரின்ஸ்டன்ல இருக்காமே, நீங்க பாத்திருக்கீங்களா’
என்று பையன் கேட்டதும் முதலில் வியப்பும் பிறகு உற்சாகமும் தொற்றிக்கொண்டது எனக்கு. வியப்பு பையன் அவனாகவே வந்து இதையெல்லாம் பேசுகிறானே என்று. அவன் வயது அப்படி. டீனேஜின் வாசலில் பன்னிரெண்டு வயதில் பெற்றோருக்கு தன்னைவிட என்ன பெரிதாக தெரிந்துவிடப் போகிறது என்ற மிதப்பு தானாக வந்துவிடுகிறது. இவன் அவ்வளவு மோசம் இல்லையென்றாலும் அப்படியானதொரு பாவ்லா உண்டு. கேள்விக் கேட்டதோடு போய்விடாமல் பதில் வருகிறதா என்று நிதானமாக பார்த்துக் கொண்டிருந்ததால் உபரியாக உற்சாகமும் தொற்றிக் கொண்டது.

‘என்ன திடீர்னு ஐன்ஸ்டீன் பத்தி ஆராய்ச்ச்சி?’

கேட்ட கேள்விக்கு டக்கென பதில் சொல்லிவிட்டால் ஆச்சு என்று போய்விடுவார்கள். அப்புறம் அப்பா என்று பீற்றிக்கொள்ள என்ன இருக்கிறது சொல்லுங்கள்.

‘சும்மாத்தான். இங்கதானே இருக்கு.. இதுவரை நாம போனதில்லயேன்னு கேட்டேன்’ என்றான்.

உண்மைதான். அவன் பிறந்தபோது நான் ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்தேன். வேலை அமைந்த ஊரில் தண்டு இறக்கி விடுவது என்று நாடோடித்தனமான வாழ்க்கை. இந்த ஈஸ்டன் நகரத்திற்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகப்போகிறது. இங்கிருந்து ஒருமணி நேர பயணம்தான் ப்ரின்ஸ்டனுக்கு. ஆனால் ஏனோ போகும் வாய்ப்பு சித்திக்கவில்லை. இத்தனைக்கும் அமெரிக்கா வந்திறங்கிய பேச்சிலர் காலகட்டத்தில், நண்பர்களோடு குழுவாக சுற்றிப் பார்த்த இடங்கள் என்றுப் பார்த்தால் நியூயார்க் நகரத்திற்கு அடுத்தபடியாக ஐன்ஸ்டீன் வாழ்ந்த வீடு முக்கியமானதொன்றாக இருந்தது.

“அதொண்ணும் அவ்வளவு பிரமாதமான இடமாக இருக்காது. ஐன்ஸ்டீன் வாழ்ந்த வீடுங்கிறதுக்கு எந்தவித பிரத்யேக அடையாளமும் இல்லாம சாதாரணமாகத்தான் இருக்கும். நான் போய்ப்பார்த்தபோது யாரோ அந்த வீட்டில் குடியிருந்தார்கள். உள்ளேக் கூட போகமுடியாமல் தெருவோடு பார்த்துவிட்டு திரும்பிவிட்டோம்” என்றேன்.

‘நீங்க எப்போ பார்த்தீங்க? 2011க்கு அப்புறம் இப்போ யாரும் குடியில்லியாம்.’ என்றான். இதுதான் இந்த தலைமுறையினரிடம் உஷாராக இருக்க வேண்டிய விஷயம். கூகிளில் தட்டினால் மொத்த தகவல்களும் விரல்நுனியில் வந்து குவிந்து விடுகிறது இவர்களுக்கு. கொஞ்சம் அசந்தால் நம்மையே போட்டுப் பார்த்துவிடுவார்கள். ‘ஐன்ஸ்டீனுக்கு ஸ்பெல்லிங் சொல்லு பாப்பம்’ என்றெல்லாம் ஜம்பம் அடித்து நமது மேதாவிலாசத்தை காட்டிக்கொள்ள முடியாது.

‘வாசலில் பெரிதாக private propertyன்னு ஒரு போர்டு வச்சிருக்கும். எங்களுக்கு அது ஐன்ஸ்டீன் வீடுதான்னு நம்பிக்கையே வரல. ஒருவேள அதுதான் அவங்க நோக்கமா இருக்கலாம். அப்போ கூகிள் மேப் வசதில்லாம் வேற கிடையாது. தட்டுத்தடுமாறி விசாரிச்சுகிட்டுத்தான் போனோம். ஏதோ தவறான வீட்டுக்கு முன்னாடி நின்னு போட்டோ எடுத்துக்கிட்டோம்கிற சம்சயம் இப்பவும் உண்டு’ என்று சிரித்தேன்.
இரண்டாயிரத்து ஒன்றாம் (2001) வருடம் உழைப்பாளர் தினத்தை (labor day) ஒட்டி நியூயார்க்கை சுற்றிப்பார்க்க கிளம்பிய குழுவில் அபய் பாலேகர்தான் முதன்முதலாக டிஜிட்டல் கேமரா வாங்கியிருந்தான். கிட்டத்தட்ட ஆறேழு கடைகளில் ஏறி இறங்கி, ஏகப்பட்ட கணக்குகள் போட்டு ஸ்வஸ்தே மே மில்கயா என்று பீற்றிக்கொள்ளும்படியான கேமரா வாங்கிய பின்புதான் சுற்றுலாவிற்க்கேப் புறப்பட்டான். பேட்டரி தீரும்வரை அவன் மாய்ந்து மாய்ந்து எடுத்த போட்டோக்களை எல்லாம் தவறாமல் நானும் ஒரு காப்பி சேகரித்து வைத்திருந்தேன். இவ்வளவு வருடங்களாக சேமித்து குமித்த போட்டோக்களில் பாலேகரின் போட்டோக்களை எந்த ஹார்ட்டிஸ்க்கில் போட்டு வைத்திருக்கிறேன் என்று தெரியவில்லை.

என்னுடைய சிரிப்பில் பையனும் சேர்ந்து கொண்டு சிரித்தான்.

‘ஒருவேள நீங்கப் போனது ஐன்ஸ்டீனோட ஸீப்ரா பஸில்ல வரும் இமாஜினரி வீடுகள்ல ஒண்ணா இருக்கலாம்’

பரவாயில்லை. இந்த இணைய குப்பைகளில் பையன் ஏதோ நல்ல குப்பைகளைத்தான் நோண்டிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்துக் கொண்டேன். ஒரு சாதாரண செய்தியை பிரபலங்கள் மேல் ஏற்றி பரப்பிவிடுவது எப்போதும் நடப்பதுதான். ஐன்ஸ்டீன் பெயரில் ஏகத்துக்கு கற்பனை செய்திகளும், வேடிக்கை துணுக்குகளும் வழக்கில் உண்டு. ஒருவகையில் இதெல்லாம் செலிப்ரிட்டி சுரண்டல் எனலாம். உண்மையில் இவர்களுக்கு தீனி போடும்வகையில் அவரும் கொஞ்சம் எக்ஸென்ட்ரிக் வகை மனிதராகத்தானே இருந்தார்.

‘ஆமாம். அவர் பெயரில் ஏகத்துக்கு hoax செய்திகள் உண்டு. ஐன்ஸ்டீனுக்கும் அவருடைய கார் டிரைவருக்கும் பந்தயம் நடந்ததுன்னு ஒரு ஜோக் உண்டு. டிரைவரை இவர் போல அனுப்பி ஏதோவொரு யூனிவர்சிட்டியில் ரிலேட்டிவிட்டி பற்றி பேசச் சொன்னாராம். யாருமே கண்டுபிடிக்கவில்லையாம்.’

‘ஏன்?’

‘மேலோட்டமாக தெரிந்து கொண்டு யாராவது அடித்துவிட்டாலும் கேட்டுக் கொள்ள ஒரு குரூப் இருக்கத்தானே செய்கிறது. ஜோக்கே அப்புறம்தான் வருது. டிரைவரோட பிரசண்டேஷன் முடிஞ்சதும் ஒரு புரஃபஸர் ரிலேட்டிவிட்டி தியரி பத்தி சந்தேகம் கேட்டாராம். ‘இதுக்கெல்லாம் நான் பதில் சொல்றதுக்கு பதிலா என் டிரைவரே பதில் சொல்வானே’ன்னு ஐன்ஸ்டீனை கைகாட்டிட்டு தப்பிச்சிட்டானாம் அந்த டிரைவர்’ என்றேன்.

ஓஹ்ஹ்ஹ்…ஓஹ்ஹ்ஹ்… என்று சிரித்ததில் பையனுக்கு புரையேறிக்கொண்டு விட்டது.
நான் படித்த காலத்தில் ரிலேட்டிவிட்டி பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக் கொண்டதில்லை. அறிவியல் எல்லாம் பரீட்சைக்கு தேறும் அளவுக்கு மட்டும் படித்தால் போதும். அப்பொழுதெல்லாம் பொது அறிவுப் போட்டிகள் அடிக்கடி நடக்கும். இப்போது மாதிரி பொதுஅறிவு என்பது கூகிள் வசம் சீப்பட்டு கிடக்கவில்லை. ஒரு என்சிசி கேம்ப்பில் லெட். கர்னல் கோஹ்லி என்னும் மகானுபவன், ‘ஐன்ஸ்டீன் எந்த இனத்தை சேர்ந்தவர்’ என்றொரு கேள்வியை கேட்க எல்லாரும் தடுமாறிக் கொண்டிருந்தார்கள். பத்திரிகைகளில் நரைத்த தலையுடன்,, நறுக்கு மீசையுடன் நாக்கை தொங்கவிட்டபடி வரும் ஐன்ஸ்டீன் படம்தான் எனக்கு பரிச்சயம். ஏதோ ஒரு துணுக்கில் அவர் யூதர் என்று படித்திருந்தேன். ஆனால் யூதர் என்பதை எப்படி ஆங்கிலத்தில் சொல்வது என்று தெரியாமல் தயங்கிக் கொண்டிருந்ததால் பதில் சொல்லும் வாய்ப்பு போய்விட்டது. அடுத்த ரவுண்டு தொடங்கும் முன்னர், சட்டென மின்னலாக பதில் மனதில் பளிச்சிட உடனே உரக்க ‘Jew’ என்று கத்தினேன். கோஹ்லி சாப் போனால் போகிறதென்று போனஸாக இரண்டு மதிப்பெண்கள் கொடுத்தார். இப்போது என் பையனைக் கேட்டால் ஐன்ஸ்டீன் ஆண்டி செமிட்டிக்காக இருந்து எப்படி ஜியோனிச ஆதரிப்பாளராக மாறினார் என்று ஒரு கட்டுரையே எழுதுவானா இருக்கும்.

‘ஐன்ஸ்டீன் வீட்டை விட, ஐன்ஸ்டீன் வீட்டுக்கு பெயின்ட் அடிச்சவன்னு ஒருத்தர மீட் பண்ணதுதான் சுவாரசியமா நினைவிலிருக்கு’ என்றேன். எதிர்பார்த்தது போல மகன் புதியதாக ஏதோ கேட்கிறோம் என்ற ஆர்வத்தோடு முன்னே நகர்ந்து உட்கார்ந்தான்.

‘சுத்திப் பாக்க போன எல்லாரும் சேர்ந்து ஐன்ஸ்டீன் வீட்டுக்கு முன்னாடி பாலேகர் காமிராவில் படம் எடுத்துக்கலாம்ன்னு போட்டோ எடுக்க ஆள் தேடினோம். அப்போ அகப்பட்டவர்தான் அவர். பெயர் சரியாக நினைப்பிலில்லை. ஆனால் அறிமுகத்தின் போது தான்தான் அந்த வீட்டை பெயிண்ட் அடித்ததாக சொல்லி அறிமுகப்படுத்திக்கிட்டார். பாலேகருக்குன்னு இப்படித்தான் ஆள் மாட்டுவங்க’ என்றேன். அப்புறம் நினைவு வந்தது போல,

‘பாலேகர் பத்தி உனக்கு சொல்லியிருக்கேனா? ‘ என்று தொடர்ந்தேன். ‘அவன் பேரே ஒருமாதிரி தமிழுக்கு நெருக்கமானதாக இருக்கும். நம்மூர் முருகன் கையிலிருக்கும் வேல் பாத்திருக்கியா? குன்றெறிந்த பிள்ளையார்ன்னு சொல்வாங்க அவர. வேலெறிந்து குன்றையே பிளந்துட்டாராம். பாலேகர்னா மராத்தியில் வேலெறிபவன்னு அர்த்தம். அவன் பேரைக் கேக்கும்போதெல்லாம் எனக்கு முருகன் வேலெறிந்து ஜெயித்ததுதான் மனசில ஓடும். அவனும் அப்படித்தான் எந்த சிச்சுவேஷனையும் எளிசா சமாளிக்கிற ஆட்டிடியூடோட பிரமாதமா வேலை செய்வான். அருமையா சமையலும் செய்வான். ஆறு மாசம்தான் அவங்கூட தங்கியிருந்து வேலை பாத்தேன்னாலும் மறக்க முடியாத சாகச பர்சனாலிட்டி அவன். யாருக்கும் பயப்படாதவன்னாலும் அப்போ ஒரு பொண்ணு மேல மட்டும் பயங்கர பயம் இருந்ததுன்னுவான். எவ்ளோ பயம்னா, அவ கண்லயே பட்டுட்டக்கூடாதுன்னு நாக்பூரை விட்டு பொறப்பட்டு வந்துட்டேன்னுவான். இத்தனைக்கும அவனுக்கு அப்ப என்ஃபோர்ஸ்மென்ட்ல அப்பாயின்மெண்ட் கூட ஆகியிருந்தது.’

‘பொண்ணப் பாத்து பயந்திட்டாரா? ஏன்?’ வெகுளித்தனமாக கேட்டவனைப் பார்த்து புன்னகைத்தேன். பையன்கள் பெண்களைப் பார்த்து பயப்படாமல் வேறு எதைப் பார்த்து அதிகம் பயப்படப்போகிறார்கள்.

‘அவன் அவள் மேல் காதல் கொண்டிருந்தான். ரொம்ப ஆழமான காதலாம். அவள் இல்லாமல் வாழ்க்கையே இல்லைம்பான் ஒருதரம். அடுத்த நிமிஷமே, அவள் இல்லைன்னாக் கூட பரவால்ல அவ நிராகரிச்சிட்டா இன்னும் கொடுமைன்னு புலம்புவான். அதொரு ஆங்க்‌ஷியஸ் மனநிலை. ஐன்ஸ்டீன் பாரடாக்ஸ் கேள்விபட்டிருக்கியா?’

‘EPR பாரடாக்ஸ்தானே?’

தெரியுமா என்று கேட்கவே கூடாது இவர்களிடமெல்லாம்.

‘அதேதான். தன் காதலை அவள் ஏத்துப்பாளா மாட்டாளான்னு அவ்ளோ குழப்பம் அவனுக்கு. அவன் படிச்ச படிப்பு, கிடச்ச வேலை எதுக்குமே சம்பந்தமில்லாம கம்ப்யூட்டர் லேங்குவேஜ்னு தனியா ஏதோ கோர்ஸ் படிச்சு, அமெரிக்காவுக்கு வந்திட்டான். டெய்லி அவளுக்கு ஃபோன் போட்டு பேசப்போறேன்னு ஆரம்பிப்பான். ஆனா பேச தைரியம் வராது. அவ இப்படி செஞ்சா, அப்படி செஞ்சா அதனால அவளுக்கும் எம்மேல லவ் இருக்குன்னு ஆரம்பிப்பான். அப்புறம் அவள் லவ் இருந்தாலும் சொல்லமாட்டா. அவ எதிர்பாக்கிற ஆள் நானில்லைன்னு உள்ளேயே சுருண்டுக்குவான். ஐன்ஸ்டீன் பாரடாக்ஸில் வர்ற மாதிரி, வெள்ளி பூசின கண்ணாடி வழியா ஒளி ஊடுருவவும் செய்யும் பிரதிபலிக்கவும் செய்யும் இல்லையா. எது நிச்சயம்னு தெரியாத பெரும் சோகம் அவனுக்கு. காதல்ங்கிறது உண்மையில் ஒரு நோய்தானே. அப்படித்தான் போட்டு படுத்தி எடுக்கும் ஆளை’

‘யாரோ பெயின்டரப் பத்தி சொல்லிட்டிருந்தீங்க’ என்று நினைவுறுத்துகிறான் பையன். பன்னெண்டு வயசுப் பையன்களுக்கு இது போரடிக்கிற விஷயம்தான்.

‘ஆமாம். எங்களயெல்லாம் குரூப் போட்டோ எடுத்தவர் அவர்தான். முதல்ல சீனர்னு நினச்சோம். மங்கோலிய முகச்சாயலை சட்னு நம்மால அடையாளப்படுத்த முடியறதில்லயே. அப்புறம்தான் தெரிஞ்சது. அவர் தென்கொரியாவைச் சேர்ந்தவர்னு. நல்ல சுவாரசியமான மனுஷர். அவர் வீடு அதே தெருவில் இன்னொரு முனையில் இருந்தது. எல்லாரையும் அழைச்சிட்டுப் போய் காப்பியெல்லாம் கொடுத்து உபசரித்தார். ஐன்ஸ்டீன் வீட்டை விட அவர் வீட்டில் ஐன்ஸ்டீன் பற்றி அதிகமாக அடையாளங்கள் இருந்தது. வீட்டுக்குப் பெயரே ‘Einstein’s Bridge’ன்னுதான் வச்சிருந்தார். அவரோட தொழிலுக்கு அது உதவியாக இருக்குமோ என்னவோ. அதையும் தாண்டி அவருக்கு ஐன்ஸ்டீன் மேல் பெரும் பக்தி இருந்தது. தனிப்பட்ட ஆர்வத்தில் அவரா சயின்ஸ் கத்துக்கிட்டாராம்’

‘ஓ, அதான் இன்ட்ரெஸ்டிங்னு சொல்லிட்டிருந்தீங்களா’

‘இல்ல. ஐன்ஸ்டீன் ப்ரிட்ஜ் வச்சு ஒரு காதல் கதை சொன்னார். அதுதான் சுவாரசியம். இரு… கொஞ்சம் யோசிச்சுக்கிறேன்’ என்று அந்த பழைய சம்பவத்தை அசைபோட ஆரம்பித்தேன். அதற்குள் பையன் பழைய ஹார்டிஸ்க்குகளை எல்லாம் தேடி எடுத்து ஐன்ஸ்டீன் வீட்டின் போட்டோக்களை தேடும் வேலையை ஆரம்பித்திருந்தான். சில நிமிடங்களில் பொறுமையிழந்தவனாக,

‘அதென்ன ஐன்ஸ்டீன் ப்ரிட்ஜ் ஸ்டோரி?’ என்று மீண்டும் ஆரம்பித்துவிட்டான்.

‘அதுவா, அவரவர் சொந்த ஊர் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். இந்த வருடம் தென்கொரியாவில் ஏஷியன் கேம்ஸ் நடக்கப்போறதே… இன்ச்சான் சிட்டி, அதுக்கு பக்கத்திலே ஹான் நதிக்கரையோரமா ஒரு கிராமம்தான் அவரோட சொந்த ஊராம். அந்த ஊரப்பத்தி பேசும்போது ரொம்ப பெருமை அவருக்கு. எப்படியும் கொஞ்சகாலத்தில் அங்க திரும்பிப் போயிடப்போறேன்னு சொல்லிட்டிருந்தார். நாங்க சும்மாயில்லாம பாலேகர் ஊருக்கு போகவே போறதில்லயாம்னு கிண்டல் அடிச்சிட்டிருந்தோம். அவனோட love anxiety பத்தி கேட்டுத் தெரிஞ்சிகிட்டவர், அப்பதான் ‘காதலைத் தேடிப் போன மூன்று சகோதரர்கள்’ கதையைச் சொன்னார். ஏதோ fable மாதிரி ஆரம்பிச்சு கடைசியில ஐன்ஸ்டீன் ப்ரிட்ஜ்ல வந்து முடிஞ்சது’ என்றேன்.

இப்போது பார்த்தால் மகனுக்கு அருகில் மனைவியும் வந்து கதைகேட்க அமர்ந்திருந்தார். எவ்வளவு வயதானாலும் பெண்களுக்கு காதல் கதைகள் சலிப்பதேயில்லை..

“அந்த நாட்டு அரசன் தன் மகளுக்கு திருமண வயது வந்ததும் ஒரு விநோதமான போட்டி ஒன்றை வைத்தானாம். ‘காதலைக் கண்டுபிடித்து கொண்டு வாருங்கள். இளவரசியை கைப்பிடித்து கொண்டு செல்லுங்கள்’ என்று நாடு முழுக்க அறிவிப்பு வெளியிட்டானாம். அதைக் கேட்டதும் அந்த மூன்று சகோதரர்களும் எப்படியும் போட்டியில் ஜெயித்துவிட வேண்டும் என்று புறப்பட்டார்களாம்.

முதலாமவன் போகும் வழியெங்கும் கண்ணுக்குப் புலப்பட்டவர்களிடம் எல்லாம் காதலை தேடினான். தெருக்கள், சத்திரங்கள், சாவடிகள், கோவில்கள், கொத்தளங்கள், காடுகள், மலைகள் என்று எங்கும் சுற்றிப் பார்த்தவனுக்கு, காதல் மட்டும் கண்ணில் அகப்படவேயில்லையாம். உலகெல்லாம் சுற்றி ஏமாந்தவன், துக்கத்தோடு திரும்பிவந்து கண்ணாடியில் தன்னைப் பார்த்தபோதுதான் புரிந்தது. அவனுடைய காதல் அந்தக் கண்ணாடிக்குள் இருந்தது. அவனால் தன்னைத் தவிர வேறு யாரையும் காதலிக்க முடியாது என்றுணர்ந்தபோது அவன் காதல் ஜனிக்காமலேயே மாண்டுபோனது. அவன் நார்சிஸ்ட்டாக புராணத்தில் புதைந்துபோனான்.

three-brothers

இரண்டாமவன் காதலைத்தேடி புறப்பட்டுப் போனான். அவன் உலகைச் சுற்றிவரும்போது பார்த்த பெண்கள் எல்லாரின் கண்களிலும் காதல் இருந்ததைக் கண்டுபிடித்தான். அவர்களை அப்படியே தன் கனவிற்குள் கொண்டு போய் அவர்களோடு காதல் புரியத் தொடங்கினான். கனவெங்கும் காதலால் நிரம்பி வழிய, மெய்யுலகை துறந்து, கனவுகளோடு கலந்து காதலைக் கண்டுபிடிக்க முடியாமல் காதலிலே கரைந்து போனான்.

காதலைத்தேடிப் போன தன்னுடைய மூத்த சகோதரர்களின் கதியை தெரிந்துகொண்டாலும், மனம் தளர்ந்துவிடாமல், நம்பிக்கையோடு மூன்றாமவன் கிளம்பினான். வேறெங்கும் செல்லாமல், நேராக இளவரசியிடம் சென்று, தான் காதலை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்தான். தன்னுடன் வந்தால் காதலைக் காட்டுவதாக கூட்டிச்சென்றான். அவர்கள் சென்றது ஐன்ஸ்டீன் பாலம் என்றழைக்கப்படும் வார்ம்ஹோல். அதன் வழியாக அவர்கள் பலவருடங்களை பயனித்து, எதிர்காலத்தை சென்றடைந்தார்கள். அந்த உலகம் முற்றிலும் வேறாக இருந்தது. அங்கே முதுமையில் கனிந்து, வலுவிழந்த உடலும், சூடு தணிந்த இரத்தமுமாய் தள்ளாடியபடி தனிமையில் அமர்ந்திருக்கும் அவர்களையே அவன் அவளுக்குக் காட்டினான். அதுவரையிலான அவர்கள் வாழ்க்கைத் துளிகள் எல்லாம் ஒன்றுதிரண்டு, பொங்கி எழுந்து, பேருருக்கொண்டு அவர்கள் இடையே நின்றுகொண்டிருந்தது. ‘இதுதான் நான் கண்டுபிடித்த காதல்’ என்று காட்டினானாம். இளவரசிக்கு அந்தக் காதலில் அப்பொழுதே கட்டுண்டு விட்டாளாம். காதலைக் கண்டுபிடித்து கொண்டாடுபவர்களாக காலத்தில் நிலைபெற்றார்கள் அவர்கள்.”

wormhole

‘எ வார்ம்ஹோல்? டைம் ட்ராவல் புரியுது. அதுக்கு மேல ஒண்ணுமே புரியல. பட் ஐ லைக் தட் ஸ்டோரி’ என்றான் பையன். பரவாயில்லை. புரியவேண்டிய காலத்தில் புரிந்தால் போதும் மகனே என்று நினைத்துக் கொண்டேன்.

‘நாங்க நியூயார்க் போயிட்டு வந்த அடுத்த வாரமே பின் லேடன் புண்ணியத்தில் வேர்ல்ட் ட்ரேட் சென்டர் இடிச்சு சரிஞ்சுப் போச்சு. கூடவே எங்களுடைய வேலைகளும், அமெரிக்க எதிர்காலமும் சரிந்து போய் எல்லோரும் ஊர் திரும்பிட்டோம். ஐன்ஸ்டீன் ப்ரிட்ஜ் மூலமாக காதலை கண்டுபிடித்த மூன்றாவது சகோதரன் போல அப்போ பாலேகரும் உற்சாகமாகவே ஊர் திரும்பினான்.’ என்று சொல்லிவிட்டு கதை முடிந்ததற்கு அடையாளமாக தண்ணீரை குடிக்க ஆரம்பித்தேன்.

‘ஹ… கண்டுபிடித்துவிட்டேன்’ போட்டோக்களை தேடிக் கொண்டிருந்தவன் உற்சாகமாக சொன்னான்.

‘Einsteen என்று தப்பான ஸ்பெல்லிங்கில் டேக் செய்திருக்கிறீர்கள். அதுதான் கண்டுபிடிக்க லேட் ஆகிவிட்டது’

என்று பதினான்கு வருட பழைய புகைப்படங்களை மீட்டு எடுத்த பூரிப்போடு சொன்னான். எல்லாரும் கதையை மறந்துவிட்டு படங்களைப் பார்க்க ஆரம்பித்தோம். ஆளாளுக்கு தனியாகவோ, குழுவாகவோ ஐன்ஸ்டீன் வீட்டின் முன்னே நின்றுகொண்டிருக்கும் படங்கள் வரிசையாக இருந்தன். ஃபைல் பெயர்களிலே படங்களில் இருப்பவரின் பெயர்களும் இருந்தது.

‘ராகுல் பிஸ்ஸால், அனுஷா ஃபோங்கே, ராஜா சாந்தேக்கர், ஷ்ரத்தா கோயல்….’ என்று வரிசையாக பெயர்களை சொல்லிக் கொண்டே வந்த பையன், ‘இதில பாலேகரோ, அந்த கொரியன் பெயின்டரோ இல்லையேப்பா’

ஆமாம். அன்று ஐன்ஸ்டீன் வீட்டுக்கு முன்னே நின்று எடுத்துக் கொண்ட முழு குரூப் படங்கள் எதுவும் காணோம்.

இப்போது பார்த்த பையன் கண்ணில் குறும்பு மின்ன…

‘ஓ! டாட், இந்த பெயிண்டர் கதையெல்லாம் உண்மையா நடந்ததா, ஐண்ஸ்டீன் வீடுங்கிற பேர்ல நீங்களா அடிச்சுவிடறீங்களா?’

இவையெல்லாம் உண்மைகளிலிருந்து பெறப்பட்ட உண்மைதான் என்பதை அவனுக்கு எப்படி விளக்குவது என்று புரியவில்லை. ஆனால், பக்கத்தில் இருந்த மனைவியின் புன்னகையில் அவருக்கு புரிந்துவிட்டது என்பது மட்டும் எனக்கு புரிந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.