உறக்கம் வராமல் படுக்கையில்
புரண்டு புரண்டு படுக்கும் நேரம்
அவள் கதவைத் தட்டுகிறாள்
அறையுள் கசியும் மெல்லிய வீதிவெளிச்சம்
இரவு விரைவாகச் செல்லும் லாரியின் சப்தம்
ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறியின் ஓசை
யாரையோ கூப்பிடும் பல்லியின் குரல்
இடைவிடாது டிக் டிக் டிக் எனும் காலக் கணக்கு
எல்லாவற்றையும் மீறி அவள் கதவை தட்டும் சப்தம்
இல்லாத கதவை இல்லாத ஒருவள் தட்டுகிறாள்
மீண்டும் பெற முடியாது நழுவவிட்ட தருணங்கள்
சொல்லாத பல நூறு அன்புச் சொற்கள்
பாதை ஒன்றே என்று நினைத்துச் செய்த பயணம்
ஆனால் கண்ட காட்சிகள் ஒன்றா?
அவள் கதவை தட்டுகிறாள்
பாதையில் ஏதோ விட்டுவிட்ட உணர்வு
எந்த நடையும் முழுமை அடைவதில்லையோ?
சிராய்ப்புகள், பெரிய காயங்கள், மெதுவாக உருமாறி
இந்த இரவின் நிலவு போல் பளிச்சென்று தெரிகின்றன
வெளிச்சம் கண்ணைக் கூசுகிறது
கண்ணை மூடிக்கொண்டாலும் காதில்
அவள் கதவை தட்டும் சப்தம்
அவள் தட்டுவதனால் என் மனம் அதிர்கிறதா
இல்லை மனம் அதிர்வதால் சப்தம் கேட்கிறதா
வகுத்த பாதை நமதில்லை என்றாலும்
பாதையை மாற்றியிருக்கலாமோ?
காட்சிகள் மாறியிருக்குமோ?
பாதையில் அருவிகள் தோன்றி சாரலில் நனைந்திருப்போமோ?
இல்லை, கல்லும் முள்ளும் நிறைந்திருக்குமோ?
கேள்விகள் காற்றடிக்கப்படும் பந்து போல் பெரிதாகின்றன
பெரிதாகிக்கொண்டே இருக்கின்றன
கண் திறந்தாலும் மூடினாலும் அவையே தெரிகின்றன
உறக்கம் வராமல் திரும்பிப் படுக்கிறேன்
அவள் கதவை தட்டுகிறாள்