ஆற்றோரமாய்…

மெரடித் ஏலிங்

“அந்த ஆள் என்ன செய்து கொண்டிருக்கிறான்?”

“எந்த ஆள்?”

மலை மேல் பார்க்கத் திரும்பினான் மைக்கேல்.

“நாம் செய்வதைத்தான் செய்வானாக இருக்கும்,” என்றான் அவன்.

கேரி வெயிலுக்குப் போட்டுக் கொண்டிருந்த தொப்பியைக் கழட்டினாள்.

“அவனிடம் மீன் பிடிக்கும் கருவிகள் எதுவும் இல்லை,” என்றாள் அவள். “அல்லது காம்ப் செய்வதற்கானதுவும் இல்லை”

“காரில் வைத்திருப்பானாக இருக்கும்”

மைக்கேல் கல்லோன்றின் மீது கால் வைத்து, ஆற்றுக்குள் தூண்டிலை வீசினான்.

“எனக்கு என்னமோ சந்தேகமாக இருக்கிறது,” என்றாள் கேரி. “பார்த்தால் அப்படி இல்லை”.

மைக்கேல் தூண்டிலை இழுத்துக் கட்டிவிட்டு, ஆற்றங்கரைக்கு ஏறி வந்தான்.

“இருக்கட்டும்,” என்றான் அவன், “அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறாய்?”

கேரி வெயிலுக்கான தொப்பியை மறுபடியும் போட்டுக் கொண்டு, மலைமேல் பார்த்தாள். அவன் தனது கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிக்கொண்டு காரின் முன்புறம் சாய்ந்து நின்று கொண்டிருந்தான், அவன் எந்த திசையில் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை கேரியால் ஊகிக்க முடியவில்லை.

“நாம் மட்டும் இங்கே தனியாய் இருப்பது எனக்குச் சரியாகப் படவில்லை,” என்றாள். “அவன் மேலே இருப்பதும், நாம் கீழே இருப்பதும். அவன் நம்மை எளிதாகச் சுட்டுத்தள்ள முடியும்”.

“அவன் எதற்கு நம்மைச் சுட்டுத் தள்ள வேண்டும்?” என்று மைக்கேல் கேட்டான்.

“நாம் போவதானால் அந்த மலை மீது ஏறிப் போக வேண்டும், அதைத்தான் சொல்கிறேன்”.

கேரி தரையில் அமர்ந்து ஒரு கல்லை எடுத்துக் கொண்டாள். அதை ஒரு கணம் கவனமாகப் பார்த்துவிட்டு, ஆற்றுக்குள் வேகமில்லாமல் வீசினாள்.

“எனக்கு அவனைப் பார்க்கப் பிடிக்கவில்லை என்பதுதான் விஷயம்,” என்றாள் அவள்.

மைக்கேல் புழுக்கள் இருந்த அட்டைப்பெட்டியைத் திறந்து ஒன்றை வெளியே இழுத்தான். தரையில் உட்கார்ந்து கொண்டு அதை, தன் தூண்டிலின் கொக்கியில் மாட்டினான். கேரி கூலருக்குள் இருப்பதையெல்லாம் அங்குமிங்கு நகர்த்திக் கொண்டிருந்தாள்.

“நான் சாண்ட்விச் சாப்பிடப் போகிறேன்,” என்றாள். “உனக்கும் வேண்டுமா?”

மைக்கேல் வேண்டாமென்று தலையசைத்தான்.

“அந்த இடத்தில் கடைசி முறையாக ஒரு தடவை முயற்சி செய்து பார்க்கப்போகிறேன்,” என்றான் அவன், எழுந்து நின்றுகொண்டு. “அதற்கப்புறம் போகலாம்”

மைக்கேல் பாறைகள் இருந்த இடத்துக்குச் சென்றான். அவற்றில் மிகப்பெரியதாகவும் தட்டையானதாகவும் இருப்பதை அடையும்வரை ஒவ்வொன்றாகத் தாண்டிச் சென்றான். அங்கிருந்து கேரியைத் திரும்பிப் பார்த்தான்.

“சாண்ட்விச் எப்படியிருக்கிறது?” என்று உரக்கக் கத்தினான்.

கேரி தோள்களைக் குலுக்கிக் கொண்டாள். மைக்கேல் திரும்பிக் கொண்டு, தன் தூண்டிலைத் தண்ணீருக்குள் வீசினான். நீரோட்டத்தோடு தூண்டில் சென்றது, அதன்பின் அவன் அதை வெளியே இழுத்துவிட்டு மீண்டும் வீசினான்.

கேரி தலையை உயர்த்தி மலைமீது பார்த்தாள்.

“மைக்கேல்,” என்றாள்.

“என்ன?”

“பார்”.

மைக்கேல் திரும்பினான்.  சுட்டிக்காட்டினாள் கேரி. அந்த ஆளைக் காணவில்லை, ஆனால் அவனது கார் அங்கேயே இருந்தது.

“சரி,” என்றான் மைக்கேல், தூண்டிலைப் பின்னிழுத்தவாறே. “அது ஒன்றும் பிரச்சினையில்லை”.

புழுக்கள் இருந்த அட்டைப்பெட்டியை மூடி, மீன்பிடி கருவிகள் இருந்த பெட்டிக்குள் வைத்தால் கேரி. அவள் தரையில் மண்டியிட்டு அமர்ந்து, தன் முதுகுப் பைக்குள் வைக்க வேண்டியியா இதர பொருட்களைச் சேகரித்துக் கொண்டாள்: தனது மேல்சட்டை, அவர்களது டவல்கள், மைக்கேலின் சிகரெட்டுகள், கிரனோலா பார்கள், ப்ளாஷ்லைட், சாப்பாட்டு விஷயங்கள்.

“எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டாயா?” என்று கேட்டான் மைக்கேல், பக்கத்தில் வந்திருந்தான்.

“ஜீசஸ்! நான் பயந்துபோய் விட்டேன்,”, என்று கேரி எழுந்து நின்றாள்.

“மன்னித்துக்கொள்.” மைக்கேல் தலையை உயர்த்தி காரைப் பார்த்தான். “உனக்கு ஒன்றுமில்லையே?”

“இங்கிருந்து போனால் போதும்,’ என்றாள் கேரி.

“சரி,” என்று சொன்னான் மைக்கேல். “நான் தூண்டில் கொலையும் கூலரையும் கொண்டு வருகிறேன், நீ இந்தப் பெட்டியையும் முதுகுப் பையையும் வைத்துக் கொண்டால் போதும்”.

“நாம் எங்கே போகிறோம்?” என்று கேட்டாள் கேரி.

“மேலே போகலாம் என்று நினைக்கிறேன்,” என்றான் மைக்கேல். அவன் அந்த மலையைப் பார்த்து தலையசைத்தான். “அந்தக் கார் இருக்கும் இடத்துக்குப் போகலாம்”.

“வேண்டாம்,” என்றாள் கேரி. அவள் முதுகுப் பையை மாட்டிக் கொண்டாள். “அங்கே போக வேண்டாம்”.

“அட, அதனால் என்ன,” என்று சொன்னான் மைக்கேல். “நாம் எங்கே போக வேண்டும், சொல்”

காரி தன் கண்களை இடுக்கிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தாள்.

“நாம் அந்தப் பக்கம் கொஞ்சம் தூரம் நடந்து செல்லலாமே, ஆற்றோரமாக?”

மைக்கேல் தன் தோளுக்குப் பின் திரும்பிப் பார்த்தான்.

“அதற்கப்புறம்?” என்றான்.

“அங்கே எங்கேயாவது நடந்து போகலாம்,” என்றாள் அவள். “யாரிடமாவது சொல்லலாம்”.

மைக்கேல் கூலரைக் கிளிக்கிட்டு மூடிவிட்டு, அதைத் தூக்கிக் கொண்டான்.

“அவர்களிடம் என்ன சொல்வது?” என்றான்.

“தெரியவில்லை,” என்றாள் கேரி. “நமக்கு பயமாக இருக்கிறது என்று சொல்லலாம்”.

அவர்கள் ஆற்றோரமாய் நடந்து சென்றனர், சில நிமிடங்களுக்கு ஒரு முறை நிழலில் தங்கிச் சென்றனர். கேரி கவனமாகத் தங்களைச் சுற்றியிருப்பதை கவனித்துக் கொண்டே வந்தாள். மைக்கேல் மீன்பிடிக்கும் இடங்களைத் தண்ணீரில் தேடிக் கொண்டே நடந்தான். அரை மைல் அளவு நடந்தபின், அவர்கள் முகாம் ஒன்று இருந்த இடத்துக்கு வந்தனர்.

“ஹேய்,” என்றாள் கேரி, தன் கையிலிருந்த டாக்கிள் பெட்டியைக் கீழே வைத்தாள். “இங்கே ஆட்கள் இருக்கிறார்கள்”.

மைக்கேல் சுற்றிலும் பார்த்தான்.

“யாரையும் காணோம்”.

“ஆமாம், இதெல்லாம் அவர்களுடையது,” என்றாள் கேரி.

மைக்கேல் தன் கையிலிருந்த கூலரையும் துடுப்புக் கோலையும் கீழே வைத்தான்.

“ஒரு சிகரெட் குடித்துக் கொள்கிறேன்,” என்றான். “இங்கு ஒரு நிமிடம் இருந்தால் பரவாயில்லையா?”

“சரி,” என்றாள் கேரி. “இவர்களுடன் குழந்தைகள் வந்திருக்க வேண்டும். இந்த டவல்களைப் பார்”

கார்ட்டூன் சிப்பி வரையப்பட்டிருந்த சிறிய ஆரஞ்சு நிற டவல் ஒன்று கிளையில் போர்த்தப்பட்டிருந்தது. இன்னொன்று – பிங்க் கலரில், ஸ்மைலி முகங்கள் வரையப்பட்டது- தரையில் சுருண்டு கிடந்தது.

மைக்கேல் சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு அமர்ந்தான்.

“எங்கே போனார்கள்?” என்றான். “யாரும் நீந்தும் சத்தம் கேட்கவில்லை”.

“இவர்கள் நீந்தப் போகவில்லை,” என்றாள் கேரி. தன் இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு முகாம் இருந்த இடத்தைச் சுற்றி வந்தாள். “இவர்களுடைய டவல்கள் இங்கிருக்கின்றன”.

கேரி தன் ஷூக்களை அவிழ்த்துவிட்டு முதுகுப் பையிலிருந்து ஒரு டவலை வெளியே உருவினாள்.

“உனக்கு வசதியாய் இருக்கும் என்றால் சொல், நான் தூண்டில் வீசப் போகிறேன்,” என்றான்.

“எனக்கு ஒன்றுமில்லை,” என்றாள் கேரி. “அதைவிட இது நல்ல இடம் என்று நினைக்கிறேன்”.

தரையில் டவலை விரித்து, அதன் மேலமர்ந்தாள் கேரி. தொப்பியைக் கழட்டி அருகில் வைத்துக் கொண்டு, கண்களை மூடிப் பின்னால் சாய்ந்தாள். சூரிய ஒளி அவள் முகத்தை நிறைத்து இறங்கிற்று.

“அந்த வெள்ளி ஸ்பூனைப் பார்த்தாயா?” என்றான் மைக்கேல்.

காரி கண்களைத் திறந்து பார்த்தாள்.

:என்னது?”

“இன்று காலை நான் பயன்படுத்திக் கொண்டிருந்தேனே, சின்னதாய் வெள்ளிப் பொறி. வால் வைத்தது”

“ஓ,” என்றாள் கேரி. “இல்லை, அதைப் பார்க்கவில்லை”.

அவள் கண்களை மூடிக் கொண்டாள்.

அதன்பின் மீண்டும் கேரி கண் திறந்தபோது, அவள் தான் தூங்கிவிட்டிருப்பதை உணர்ந்தாள். அவளது நெற்றியை மென்மையான குளிர்க்காற்று வருடிச் சென்றது. அவளது முழங்கையின்கீழ் தொப்பி நசுங்கிற்று.

“மைக்கேல்?” என்று அழைத்தாள், இன்னும் படுத்துக் கொண்டுதானிருந்தாள்.

அவள் எழுந்து அமர்ந்து ஒரு கையால் தலைமுடியைச் சரி செய்து கொண்டே. தன்னைச் சுற்றிலும் பார்த்தாள்,

“மைக்கேல்?”

ஆறு அமைதியாக இருந்தது. தூண்டிற்கோல்கள் இரண்டும் ஒரு மரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தன.

அவள் மீன்பிடிகருவிகள் இருந்த பெட்டியை நோக்கித் தவழ்ந்து சென்றாள், அடிக்கடி தன் தலையைத் தூக்கிச் சுற்றிலும் பார்த்தபடி. டாக்கிள் பெட்டியைத் திறந்து, மீன்பிடி கயிற்றைக் கத்தரிக்க அவர்கள் பயன்படுத்திய பாக்கெட் கத்தியை எடுத்து உதறி கத்திமுனையைத் திறந்து வைத்துக் கொண்டாள்.

திரும்பவும் டவலுக்குத் தவழ்ந்து சென்று அதில் அமர்ந்தாள்.

சூரியன் சாய ஆரம்பித்திருந்தது, குளிரத் துவங்கியது. அவள் டவலைச் சுருட்டி, முதுகுப் பையில் வைத்தாள். கூலரிலிருந்து சாண்ட்விச்சை எடுத்துக் கொண்டு, முதுகுப் பையை அணிந்து கொண்டாள். கூலர், டாக்கிள் பெட்டி, தூண்டிற்கோல்களை விட்டுச் சென்றாள்.

அவள் நடக்க ஆரம்பித்தாள். மேடேறிச் சென்றாக வேண்டும். பாறைகளைப் பற்றிக் கொண்டாள், தடுமாறும்போது கிளைகளைப் பிடித்து நிதானித்துக் கொண்டாள். இலைகளின் ஓசை கேட்கும்போது திரும்பிப் பார்த்து, தன்முன் கத்தியை நீட்டினாள். கீழிருந்த நதி அடங்கலாயிற்று.

அவள் மலையுச்சியை அடைந்தபோது, சூரியன் மலைகளுக்கப்பால் மறைந்திருந்தான். வெளிச்சம் இருந்தது, ஆனால் அதிகமில்லை: மரமொன்றின் கீழிருந்த பிக்னிக் டேபிளில் கூடி உண்டதன் மிச்சம் இருந்தது- கசங்கிய சிப்ஸ் பேக், காலியான சோடா கேன்கள், ஒரு சிறிய அடுக்கு காகிதத் தட்டுகள். காற்று தூசு புரட்டிக் கொண்டிருந்த சாலையை நோக்கி நடந்தாள். இரு புறமும் பார்க்கையில் எதுவுமில்லை.

அவள் தன் காலுக்கருகே நெருக்கமாய் கத்தியை வைத்துக் கொண்டு கார் இருந்த திசையை நோக்கி நடக்கத் துவங்கினாள், .இப்போது நதியோசை கேட்கவில்லை.

சிறிது நேரத்தில் ஹெட்லைட்டுகள் அவள் முன் தோன்றின. அவள் தலை சாய்த்துக் கொண்டு, தரையில் பதுங்கி அமர்ந்தாள். அது அவளைக் கடந்து சென்றதும் தாவி எழுந்து ஓடினாள்.

ஒருசில கணங்களில் அவள் தான் வேறு இரு ஹெட்லைட்டுகளின் வெளிச்சத்தில் இருப்பதை உணர்ந்தாள், இம்முறை அந்த ஒளி அவளுக்குப் பின்னிருந்து வந்தது. அவள் திரும்பி நின்று கொண்டு, தன் கண்களைக் கைகளால் மறைத்துக் கொண்டாள். கத்தி வைத்திருந்த கையை வேகமாக முதுகுக்குப்பின் மறைத்துக் கொண்டாள். கார் நிதானித்தது, அதன் ஹெட்லைட்டுகள் மங்கலாயின. அதன் ஜன்னல்கள் கீழிறங்கியபோது, காட்டமான பீர் வாசனை உள்ளிருந்து வெளியேறிற்று.

காரை ஓட்டி வந்தவன் – பேஸ்பால் தொப்பி அணிந்திருந்தவன்- சகபயணியர் இருக்கைக்கு வந்து வெளியே எட்டிப் பார்த்தான்.

“வழி தவறிவிட்டாயா?” என்றான்.

“இல்லை,” என்றாள் கேரி, கத்தியை இறுக்கமாய் பிடித்திருந்த கையைத் தளர்த்திக் கொண்டாள். “அப்படியெல்லாம் இல்லை”.

அவன் கண்களை இடுக்கிக் கொண்டு சாலையை நோக்கினான்.

“லிப்ட் வேண்டுமா?”

கேரி காரினுள் பார்த்தாள். அவனது தொடைகளுக்கிடையில் ஒரு ஸ்டிரோபோம் கப்பை இறுக்கி வைத்திருந்தான். ரியர்வியூ மிர்ரரில் உலோகத்தினாலான ஒரு சிலுவை தொங்கிக் கொண்டிருந்தது.

“வேண்டும்,” என்றாள், கத்தியை மூடி, தன் பின் பாக்கெட்டில் செருகிக் கொண்டாள். “உனக்குப் பரவாயில்லை என்றால்”.

அவன் கதவைத் திறந்தான், கேரி உள்ளே ஏறி, முதுகுப் பையைக் காலடியில் வைத்துக் கொண்டாள்.

அவர்கள் கிளம்பும்போது கேரி திரும்பிப் பார்த்தாள். கறை படிந்த பின் ஜன்னலினூடே அவள் ஒரு உருவம் சாலைக்கு ஓடி வருவதைப் பார்த்தாள்.

“இரு,” என்றாள் கேரி, அவன் கையைத் தொட்டு.

அவன் அவளைப் பார்த்தான், முகத்தைச் சுளித்துக் கொண்டு.

“வேகமாய்ப் போ”.

Source:- Along the River by Meredith Alling

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.