சாம்பனின் பாடல் – தன்ராஜ் மணி சிறுகதை

தன்ராஜ் மணி

மண்ணுருக மணல் கொதிக்க
நீரவிய , செடி கருக
சித்திரை வெயில்
சுட்டெரித்த மதிய வேளையில்
அப்போர் நிகழ்ந்தது
பனையின் அடிமரம் போல் கருத்த மேனியும்
கற்பாளம் போல் மார்பும்
அளவெடுத்து அடித்து வைத்த
கோவில் தூண் போன்ற கைகளும்
அக்கைகளின் நீட்டம் போல்
கதிரொளியில் மின்னும் போர் வாளும்
தன் உதடுகளில் மெல்லிய
புன்னகையும் சூடி
குதிரையில்
வீற்றிருந்தான் தளபதி சாம்பன்-
தோல்வியறியா மாவீரன்
பகைவர்க்கு காலன்

போர் முரசம் கொட்டத் தொடங்கியது
இடியும் மின்னலுமென
வான் விட்டு மண்ணிறங்கும்
பெருமழையென
சாம்பனின் படை
கொம்புகள் பிளிற
முழவுகள் முழங்க
பறைகள் அதிர
பகையரசின் படை மேல்
பொழிந்தது
ஒரு மின்னல் மின்னி மறையும்
பொழுதில் பகைவரின்
படை வீரர்கள் மண்ணில் கிடந்தனர்
எதிர்பட்ட தலைகள் கொய்து
மார்கள் பிளந்து
கொழுங்குருதி ஆடி
சாம்பனின் கைகளில் நின்றது
அவன் வாள்
படை நோக்கித் திரும்பி நின்று
வான் நோக்கி உயர்த்தினான்
தன் செவ்வாளை
வெற்றிக் களிப்பில்
ஆர்த்தது படை

புறமுதுகிட்டோடிய
பகையரசனின் உபதளபதி
வாள் உயர்த்தி ஆர்ப்பரிக்கும்
சாம்பனைக் கண்டான்
தோல்வியின் சீற்றம் எழ
வெறி கொண்டு குதிரையை
சாம்பனை நோக்கிச் செலுத்தினான்
அருகணைந்தால் தலை தப்பாது
என தெளிந்து ஈட்டி தாக்கும் தொலைவிலிருந்து
தன் கையிலிருந்த ஈட்டியை
சாம்பனின் முதுகை நோக்கி வீசினான்
ஈட்டி தன் பின்னால் அணுகுவது
சாம்பனின் மனம் அறிந்தது
சாம்பன் குதிரையை திருப்பினான்
ஈட்டி சாம்பனின் மாரைத் துளைத்து
முதுகில் வெளிவந்தது
அந்நிலையிலும் தன் கையிலிருந்த
வாளை வேல் போல வீசினான் சாம்பன்
அது உபதளபதியின் மார் பிளந்து குத்தி நின்றது.
கொதித்தனர் சாம்பனின் வீரர்கள்
கதறினர் வெறி கொண்டு
பகையரசின் படைகளை
துரத்திச் சென்று ஒருவர் மிஞ்சாமல்
வெட்டி சாய்த்தனர்
அதிலும் நிறைவுறாமல்
பகை நாட்டில் புகுந்தனர்
ஊர்களை எரித்தனர்
குளங்களில் நஞ்சிட்டனர்
கண்டவரை வெட்டி வீசினர்
சாம்பல் பூத்த மண்ணையும்
புகை மூடிய விண்ணையும்
சமைத்துவிட்டு
தங்கள் நாடு வந்து சேர்ந்தனர்
நாடே கதறியது
குலம் கண்ணீரில் கவிந்தது
சாம்பன் மாவீரனாய் மண்ணில்
விதைக்கப்பட்டான்
விதைக்கப்பட்ட பதிமூன்றாம் நாள்
நடுகல்லாய் நடப்பட்டான்
நாள்தோறும் பூசனை ஏற்றான்
குலப்பாடல்களில் நிறைந்தான்
வெறியாட்டில் தம் குலத்தாரில்
இறங்கி நற்சொல் உரைத்தான்
சாமி ஆனான்

இன்னும் சில காலம் சென்றது
பகையரசு சாம்பலிலிருந்து
எழுந்தது
புகை போல் படை கொணர்ந்து
நாட்டைச் சூழ்ந்தது
அது வஞ்சத்தின் வெறி கொண்டிருந்தது

சாம்பனின் வீரகதைகள் உருமியுடன் உருவேற்ற
அவன் கொடிவழியினர்
அவன் வெற்றிகளின் பெருமிதங்கள் கண்ணில் மிதக்க
பகைவர்கெதிராக போருக்கெழுந்தனர்
வஞ்சத்தின் வெறி
பெருமிதத்தின் மிதப்பின்
மேல் வெற்றி கொண்டது

இது பகைவரின் முறை…
அவர்களின் வாட்கள்
எதிர் வந்த அனைத்தையும் தீண்டி
செம்மை குளிக்க தொடங்கின
போரில் தப்பிய சிலரும்
பெண்டிரும் குளவிகளும்
சாம்பனின் நடுகல்
வண்டியில் முன் செல்ல
கண்ணீரும் கதறலுமாய்
அதன் பின் நடந்தே
பகைவனின் வாளும் வஞ்சமும்
தீண்டா தொலை நிலம்
சென்று சேர்ந்தனர்

சாம்பன் புது நிலத்தில் நடப்பட்டான்
அன்னத்திற்கு பதிலாய் ஆற்றாமையும்
குருதிக்கு மாற்றாய் கண்ணீரையும்
படையலாய் கொண்டான்
சோற்றுக்கு வழியில்லாத குடிக்கு
தினம் தினம்
பூசை செய்ய வாய்க்கவில்லை
நாள் பூசை வாரமாகி
வாரம் மாதமாகி
மாதம் வருடமாகியது
வருடத்திற்கு ஒரு முறை
சித்திரை முழு நிலவு நன்னாளில்
வான் பார்க்க பொங்கலிட்டு
பல விலங்கு பலி கொடுத்து
ஊர் கூடி குலவையிட்டு
பேர் சொல்லி புகழ் பாடி
அவனை ஏத்தி வணங்கியது
அவன் குடி

இனியும் ஒரு காலம் வந்தது
வாள் வீச்சும் மற்போரும்
வீரமும் மறமும்
சோறும் பேரும் தராது,
சிறையும் இழிவும் தந்தது
பழம் பெருமை பொருளாகாமல் போனது
அழியாப்புகழ் அன்னமாகாமல் போனது
உயிர் உடல் தங்க சாம்பனின் குடி
வேல் விட்டு
வேறு வேலை தேடி போனது
சோறீட்டச் சென்ற குடி
சொல் பேண நேரமற்றுப் போனது
மண் மறைந்த இறுதி குலப்பாடகனுடன்
சாம்பன் சொல்லில் இல்லாமல் ஆனான்
சொல் பேண நேரமில்லையெனினும்
வருடத்திற்கொரு பூசை
சித்திரை முழு நிலவில்
வான் பார்க்க பொங்கலிட்டு
பல விலங்கு பலி கொடுத்து
ஊர் கூடி குலவையிட்டு
அவன் புகழை மனதில் நிறுத்தி
வணங்கியது
அவன் குடி

இனியும் ஒரு காலம் வந்தது
கரப்பானும் கருகிச் சாகும்
பஞ்சம் சூழ்ந்தது
கொத்து கொத்தாக சாவு விழுந்தது
மக்கள் கூட்டம் நாதியற்று போனது
குடிகள் பிழைக்க ஊர் விட்டெழுந்தது
சாரி சாரியாய் சோறிருக்கும்
திசைகள் நோக்கி சிதறி சென்றது
அரை உயிர் ஏந்தி அன்னம் தேடி
சென்ற குடிக்கு
சாம்பனை தூக்கி சுமக்கும்
வலுவற்று போனது

எம் உயிரில் நீ கலந்திருப்பாய் எப்போழுதும்
உயிர் தங்கி பிழைத்திருந்தால் வந்திடுவோம் அப்பொழுதும்
என்று சொல்லி
நட்ட இடத்தில் அவனை நிற்க விட்டு
கண்ணீருடன் விடை கொண்டது

புகழ் சூடி வாழ
வாள் தூக்கி சமர் செய்த குடி
ஒரு வேளை களி உண்டு வாழ
வாழ்வோடு பெரும் சமர் செய்தது
பலிகள் பல வலிகள் பல கடந்து
பஞ்சம் வென்று பிழைத்து நின்றது
உயிர் இனி தங்கும் அது உறுதி என்றானதும்
சாம்பன் குடிகளின் கனவுகளில் எழுந்தான்
மறந்திருந்த குடி அனைத்தும்
அவனை நினைவில் எழுப்பியது
நம் தெய்வம்
நமக்காக தனித்திருக்கிறது
நம்மை காக்க ராப்பொழுதும் விழித்திருக்கிறது
அதைப் பசித்திருக்க விட்டு விட்ட
தம் நிலையை நொந்து கொண்டது
சிதறிவிட்ட குடி கூடி பூசை வைக்க வாய்ப்பில்லை
கனவில் கண்ட குடிகள் மட்டும்
சாம்பனைக் காண ஊர் சென்றது
மண் மூடி புதர் அண்டி
மறைந்திருந்த சாம்பனை
கண்ணீர் வழிய அகழ்ந்தெடுத்து
நீராட்டி தூய்மை செய்து
வான் பார்க்க பொங்கலிட்டு
ஒரு சிறு கோழி பலி கொடுத்து
காத்தருள வேண்டி நின்றது

வருஷத்துகொருக்கா வந்து போக ஏலாது
ஒண்டிக்கிட்ட எடத்துக்கும்
கூட்டிப் போக முடியாது
அதனால எஞ்சாமி
முடிஞ்சப்போ நாங்க வர்ரோம்
முடிஞ்சத செஞ்சு தர்ரோம்
கோவிக்காம ஏத்துக்கப்பா
எங்கள எல்லாம் காப்பத்தப்பா
எங்க குல சாமி நீதானப்பான்னு
அழுது பொலம்பிச்சு சனம்
மனசெறங்கின கொல சாமி
“உன் புள்ளைக்கி மொத சோறு
எம் முன்னால ஊட்டு
நீ அறுத்த மொத கதிர
எனக்கு பொங்கி போடு

நீ தொடங்கும் எதுவானாலும்
என் காலடியில் தொடங்கு
இத மட்டும் தப்பாம செஞ்சியனா
இனிமேலு ஒன்னுத்துக்கும்
கொறவில்ல உங்களுக்கு
வூடு நெறய புள்ளைங்களும்
குதிரு நெறய தானியமும்
பொட்டி நெறய பொன்னும் மணியும்
பொங்கி பொங்கி பெருகும்”னு
பெரியாத்தா மேல ஏறி வந்து
போட்டுச்சு உத்தரவு

சனம் மொத்தம் கன்னத்துல போட்டுகிட்டு
தப்பாம செஞ்சிருவோஞ் சாமி
கொறவொண்ணும் வெக்காம இனின்னு
சூடந்தொட்டு சத்தியம் பண்ணுச்சி

சாமி சொல்ல தட்டாம பக்தியோட
இருந்துச்சு சனம்
சாமியும் மனங்குளுந்து போயி
எட்டு மங்கலமும்
பதினாறு செல்வங்களும்
எட்டுக்கண் விட்டெரிய
வாழுற ஒரு வாக்கயயும்
சனங்களுக்கு வாரி வாரி
குடுத்துச்சு

ஒண்டிக் கெடந்த எடத்துல
ஓங்கி வளந்த சனம்
இன்னும் ஒசரம் தேடி
பல ஊரு பரவி குடி போச்சி
ஒதுங்க எடமில்லாம திரிஞ்ச சனத்துக்கு
போய் ஒக்காரும் எடமெல்லாம் சொந்தமாச்சு
பருக்க சோத்துக்கு பல நாள் பரிதவிச்ச சனத்துக்கு
பருப்பும் நெய்ச் சோறும்
பாலும் பாயாசமும்
எல நெறச்ச தொடு கறியும்
கவிச்சும் காய் கனியும்
ஒரு நாளும் கொறயல

வசதிய தொரத்திப் போன சனம்
வசதியா சாமிய மறந்து போச்சு
சாமி குத்தம் ஆகிப் போகும்னு
பயத்துக்கு பொங்க வெச்சு
சாங்கியத்துக்கு ஆடு வெட்டி
பேருக்கு கும்பிடு போட்டுட்டு
நிக்க நேரமில்லாம ஒடுச்சு சனம்

சனத்துக்கு இப்போ
பல ஊரு சொந்தம்
ஆனா சாமிக்கு வாச்சது அதே
வன்னி மரத்தடி தஞ்சம்

பயப்பட்டு வந்தாலும்
படையலிலே
கொறவில்ல
பொங்கச் சோறும்
பலியாடும் பகுமானமா
பாத்து செஞ்ச
சனத்துக்கு
எதுக்கு செஞ்சோம்
ஏஞ் செஞ்சோம்
தெரியல்ல
செஞ்சியினா
அள்ளி தரும்
செய்யாட்டி
கொன்னுப் போடும்
பாத்துக்கனு
சொல்லி சொல்லி
வளந்த சனம்
நான் குடுக்கேன்
நீ குடுனு
சாமிகிட்ட வேவாரம்
பேசுச்சு
கொற காலம் இப்படி போக
வந்துச்சி ஒரு புது காலம்.

 

“பெரியவனுக்கே சொல்ல சொல்ல கேக்காம குருவாயூர்ல போயி சோறு ஊட்டிட்ட, இவளுக்காவுது நம்ம கொல சாமிக்கு முன்னாடி செய்யனுண்டா” என்றார் அம்மா.

“ஏம்மா தொண தொணனு சொன்னதயே சொல்லிட்டு இருக்க. அந்த காட்டுக்குள்ள கை கொழந்தய தூக்கிட்டு எப்புடி போறது? ரோடு சரியில்ல , தங்கறதுக்கு பக்கத்துல ஒரு நல்ல ஹோட்டல் கூட இல்ல, பேசாம இருமா, குருவாயூர்லயே இவளுக்கும் செஞ்சிரலாம் , எல்லாரும் இப்ப அங்கதான் செய்றாங்க, அப்படியே ஆழபுழா போனம்னா ஒரு ரெண்டு நாளு நல்லா ரிலாக்ஸா இருந்துட்டு வரலாம்” என்றான் அரவிந்த்.

“உங்கப்பாரு பத்து வருசமா கொலசாமிக்கு படையல் வெச்சிரனும்னு சொல்லிகிட்டே இருந்தாரு, பண்ண முடியாமயே போய்ட்டாரு. நா போய் சேர்ரதுக்குள்ளயாவுது ஒரு படையல போட்டுட்டு வந்துரலாம்னா… “ முடிக்காமலே கேவ ஆரம்பித்தார்.

“எப்பப் பாரு எமோஷனல் ப்ளாக் மெயில்” என்று சிடு சிடுத்து விட்டு, மொபலை எடுத்தான்.

“மாமா, எப்படி இருக்கிங்க, ஆங் எல்லோரும் சூப்பர் மாமா. ஆங் நடக்கறா இப்போ. ஒன்னில்ல மாமா அம்மா குலதெய்வம் கோயில்ல வெச்சுதான் தியாவுக்கு அன்னப்ப்ரசன்னம் பண்ணனும்னு சொல்லுது, எப்படி என்னானு கேக்கலாம்னு”.

“…”

“நானும் அதத்தான் சொன்னென் மூணு நாளா ஒரே பாட்ட பாடிகிட்டு இருக்கு, இன்னைக்கி ஒப்பாரியே வெக்க ஆரம்பிச்சிருச்சு அதான் போய்ட்டு வந்துரலாம்னு. மாமா நீங்களும் கொஞ்சம் வரிங்களா , சேலம் வரைக்கும் போயிருவேன் அங்கருந்து ஊருக்கு எப்படி போகனும்னெல்லாம் தெரியல, கூகுள் மேப்ல ஊரு பேரே வரல”.

“…”

“ரொம்ப தாங்க்ஸ் மாமா, ஆங் நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்”.

“சந்தோசமா..,? கொஞ்சம் ஒப்பாரிய நிறுத்து, இந்த வீக் எண்ட் போயிட்டு வந்துரலாம். சண்முகம் மாமா வர்றாரு கூட. அவரு நம்ம கூடதான் கடைசியா வந்தாராம், கேட்டுகிட்டு போயிரலாம்னு சொன்னாரு”.

வெள்ளி மாலை அரவிந்த் குடும்பம் அவன் மாமாவோடு கிளம்பியது.
வண்டி ஏறியவுடனே உற்சாகமாகப் பேச ஆரம்பித்துவிட்டார் மாமா. பல வருடம் கழித்து குலதெய்வம் கோயில் போகும் குஷியில் இருந்தார். “உங்க பைப்பு கம்பெனி ஆரம்பிச்சப்பதான் கடைசியா போனது, ஏங்க்கா ஒரு இருவது வருசமிருக்குமா?” என்றார்.

“மேலயே இருக்கும்” என்றார் அம்மா.

“அந்த ட்ரிப்ப மறக்கவே முடியாது. கோயிலுக்கு போறதுக்கு ரோடே கெடயாது, முள்ளுக்காட்டுல ஒத்த அடி பாத மாதிரி இருக்கும். போற வழியில அந்த முள்ளுக் காட்டுக்குள்ள வேன்ல நால்ல மூணு டயரு பஞ்சராயிருச்சு, அப்பெல்லாம் ஏது மொபைலு, நானும் சேகருந்தா நாலு கிலோமீட்டர் நடந்தே ஊருக்குள்ள போயி லிப்ட்டு கேட்டு சங்ககிரி போயி ஆளு கூட்டியாந்து…, போதும் போதும்னு ஆயிருச்சு. அதுக்கப்புறம்தான் அங்க போற ஆசயே உட்டுப்போச்சு போ” என்றார்.

“மாமா, தமிழ் நாட்ல குக்கிராமுத்துகெல்லாம் ரோடு இருக்குனு சொல்றாங்க நம்மூருக்கில்லயா” என்றான் அரவிந்த்.

“ஊருக்கு ரோடு வசதியெல்லாம் அப்பவே இருஞ்ச்சிடா. ஊரு நம்ம கோயில் இருக்க எடத்துல இருந்து பல வருசத்துக்கு முன்னாடியே ஒரு ஆரேழு கிலோமீட்டர் தள்ளிப் போயிருச்சு. ஊரு தள்ளி போனதுல பொழக்கமில்லாம கோயில சுத்தி இருக்க ஏரியா பூராவும் முள்ளுக்காடா ஆயிப்போச்சி. ஊருக்கு வெளியே இருந்து அந்த முள்ளுக் காட்டுக்குள்ள போறதுக்குதா இவ்ளோ சிரமம்”.

“இன்னுமும் அப்படியேதா இருக்குமா அப்போ?” என்றான் அரவிந்த் கவலையாய்.

“கண்ல பாக்குற எல்லா நெலத்தையும் ப்ளாட் போட்டு வித்துகிட்டு இருக்கானுங்களே, அந்த காட்ட மட்டும் உட்டா வெச்சிருக்க போறானுங்க. புதுசா ஏதாவுது ஒரு நகர் முளச்சிருக்கும் காட்டுக்குள்ள, “ என்றார் சிரித்துக் கொண்டே.

அரவிந்த் “நம்ம சொந்த காரங்க யாருமே பக்கமா போவலயா அங்க?”

“நீ போன் பண்ணப்பறம் நானும் எல்லாத்துக்கும் போன போட்டு பாத்தேன், யார கேட்டாலும் போயி பத்து வருசமாச்சு, எட்டு வருமாச்சுனு தான் சொல்றானுங்க, கொழந்தங்க சோறூட்டுக்குதான் நிறைய பேரு போயிட்டிருந்தாங்க, கொழந்தங்கள தூக்கிட்டு அந்த காட்டுக்குள்ள இப்படி போக வர ரொம்ப செரமமா இருக்குனு எல்லாரும் வேற வேற கோயில்ல, வீட்லனு பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. வேற பக்கம் இருக்க நம்மாளுங்க யாராவுது போவாங்கலா இருக்கும்.” என்றார் மாமா.

அதன் பிறகு அவர் கோயில் சென்ற அனுபவங்களையெல்லாம் சிறு குழந்தைக்குரிய ஆர்வத்துடன் வாய் சலிக்காமல் சொல்லி கொண்டே வந்தார். தங்க நாற்கர சாலையின் தயவில் நினைத்ததைவிட சீக்கிரமாக சேலம் வந்து சேர்ந்தனர். அரவிந்த் ராடிஸனில் ஏற்கனவே இரண்டு ரூம் புக் செய்து வைத்திருந்தான்.

“ரோடெல்லாம் சூப்பரா இருக்குல்ல மாமா, டோலு தான் வெச்சு தீட்றான் பரவால்ல இவ்ளோ சீக்கிரம் வந்துட்டோம்ல. நல்லா தூங்கிட்டு காலைல ஒரு எட்டு மணிக்கு போனா போதுமில்ல மாமா” என்றான் அரவிந்த்.

“டேய், காலைல ஆறு மணிக்கெல்லாம் கிளம்பிறுவோம், போயி எடத்த வேற கண்டு புடுக்கணுமில்ல. அப்பறம், ஆளு யாரும் கொஞ்ச நாளு வராம போயிருந்தா நாமதான் முள்ளு வெட்டி, சுத்தம் பண்ணி, பண்ணாரி பொடி போட்டு சாமிய கழுவினு எல்லாம் பண்னனும், அதுக்கு ஊருக்குள்ள இருந்து ஆளு வேற கூட்டிடு போவனும், நீ பாட்டுக்கு லேட் பண்ணிட்டு இருக்காத” என்றார் மாமா.

“சரி மாமா, ரெடி ஆயிட்டு வந்துர்ரோம்” என்றான்.

காலையில் ஐந்து மணிக்கே மாமா வந்து கதவை தட்டிவிட்டார்.

“தூக்கமே புடிக்கலக்கா, போயி சாமிய பாத்துட்டம்னா கொஞ்சம் நல்லாருக்கும்” என்றார் பல் தெரிய சிரித்து கொண்டு.

“எனக்கும் என்னவோ தூக்கமில்ல சண்முகம், அவங்கெல்லாம் நல்ல தூக்கம், இப்பதான் எழுப்பி உட்டேன், குளிச்சிட்டு இருக்காங்க, காப்பி சாப்புடுரியா” என்றார் அம்மா.

“எதுவும் வேணாடாங்கா எல்லாம் அங்க போயி பாத்துக்கலாம்” என்றார் மாமா.

அரை மணி நேரத்தில், பட்டு வேட்டி, சட்டை, சேலை, பட்டு பாவாடை என கட்டி தயாராகி வந்தனர் அரவிந்தும், அவன் மனைவியும் , குழந்தைகளும்.

“அம்மா காபி சொன்னியா” என்றான் அரவிந்த்.

“நாந்தான் வேணாம்னு சொன்னேன், அங்க போயி பாத்துக்குலாம், கொழந்தங்களுக்கு ஏதாவுது வேனும்னா வேணா சொல்லு, பார்சல் பண்ணி கார்ல எடுத்துட்டு போயிரலாம்” என்றார் மாமா.

“அவங்களுக்கெல்லாம் ஊர்ல இருந்தே கொண்டாந்தாச்சு, சுடு தண்ணி மட்டும் ப்ளாஸ்க்ல எடுத்துகிட்டா போதும். ஒரு காபி குடிச்சிட்டு போயிரலாம் மாமா” என்றான் அரவிந்த்.

“சீக்கிரம் போனா வேல செய்ய ஆள் கிடைக்கும், இல்லனா அவங்கெல்லாம் வேற கூலி வேலைக்கு போயிருவாங்கடா, சொன்னா கேளு அங்க போயி பாத்துக்கலாம் வா” என்று அவனை தள்ளிக் கொண்டு போனார் மாமா.

அரவிந்த் கீழே வந்து காரை எடுத்தான். வெளியில் இருந்த செக்யூரிட்டியிடம் ஊர் பெயரைச் சொல்லி வழி கேட்டான்.

“அந்தூருங்களா, கோயமுத்தூரு போற ரோட்ட புடிங்க,சங்ககிரி தாண்டி கேளுங்க சொல்லுவாங்க” என்றார் செக்யூரிட்டி.

“இது மாமாங்கம்னு போர்ட பாத்தாதா தெரியுது, எல்லாம் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போச்சு” மாமா ஒவ்வொரு ஊர் தாண்டும் போதும் அவர் முன்பெல்லாம் வந்த போது அந்த ஊர் எப்படி இருந்தது என மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டே வந்தார்.

சங்ககிரி வந்தது, பை பாஸில் இருந்து இறங்கி ஊருக்குள் காரை விட்டான் அரவிந்த். அங்கு ஊருக்கு வழி கேட்டான், “பைபாஸ்ல இருந்தா உள்ள வந்திங்க?” ,

“ஆமா” என்றான் அரவிந்த்.

அட பைபாஸ் மேல தாங்க அந்த ஊரே இருக்கு, பைபாஸ்லயே இன்னும் ஒரு 10 கிலோ மீட்டர் போனிங்கன்ன லெப்ட்ல ஒரு போர்டு வரும் பாருங்க”.

மீண்டும் பை பாஸில் ஏறி 10 கீ மீ வந்தவுடன், ஊர் பெயரில் போர்ட் இருந்தது, இடதுபக்கம் திரும்பி சில நிமிட பயணத்தில் ஊரின் சிறிய கடைவீதி வந்தது.

கண்ணாடியை இறக்கி விட்டு பைக்கில் அமர்ந்து டீ குடித்து பேசிக்கொண்டிருந்த இருவரிடம் “ஏங்க வீராசாமி கோயிலுக்கு எப்படி போகனும்?” என்று கேட்டார் மாமா.

“வீராசாமி கோயிலா? தெர்லங்க , பக்கத்துல கடையில கேளுங்க” என்றார் அதில் ஒருவர்.

மாமா “ஓரமா நிறுத்து அரவிந்து, போயி கேட்டுட்டு வரேன்” என்றார்.

வண்டியை சற்று ஓரமாக நிறுத்தி விட்டு,”நானும் வரேன் , வாங்க மாமா” என்று அரவிந்தும் இறங்கி உடன் நடந்தான்.

டீக் கடை கல்லாவில் உட்கார்ந்திருந்த நடுத்தர வயதுடையவரிடம் அதே கேள்வியை மாமா கேட்டார். “அப்படி ஒரு கோயிலு நானு கேட்டதே இல்லிங்களே” என்றார் நடு வயதுக்காரர் குழப்பமாக.

“கோயிலுனா கோயில் இல்லங்க, ஒரு பெரிய மரத்துக்கு கீழே உருண்ட கல்லு மாரி நட்டு வெச்சுருக்கும், நானு இந்த பக்கம் வந்தே இருவது வருசமாச்சு, அப்பல்லாம் முள்ளுக்காடா இருக்கும், உள்ளார கொஞ்ச தூரம் போனா ரெண்டு மூணு மரமுருக்கும், அதுல பெரிய மரத்துக்கு கீழ தான் சாமி இருந்தது, இங்கெல்லாம் ரொம்ப மாரி போயி இருக்குது நெப்பே தெரியல” என்றார் மாமா.

“ஏங்க அந்த முள்ளுக்காட்ட நெரவிதானுங்க பைபாஸி போட்ருக்குது, ஆனா அதுக்குள்ளார சாமி இருந்த மாதிரி தெரியிலிங்களே” என்றார் அவர். அரவிந்தும் மாமாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர், எதுவும் பேசவில்லை.

மாமா “கண்டிப்பா இந்த ஊரு தாங்க இங்கதான் எங்கியாவுது இருக்கணும்” என்றார் அழுத்தமாக.

“நானிங்க கட வெச்சே கொஞ்ச நாள் தாங்க ஆச்சு. இருங்க ஒரு அஞ்சு நிமிசத்துல மேஸ்திரி ஒருத்தரு வருவாரு, அவர்ட்ட கேட்டுப் பாப்போம், அவரு இந்தூர்ல தான் பொறந்தது வளந்ததெல்லாம், அவருக்கு தெரிஞ்சிருக்கும்” என்றார் நடுவயதுக்காரர்.

இருவரும் டீ வாங்கி குடித்துக் கொண்டு மேஸ்திரிக்காக காத்திருந்தனர். சிறிது நேரம் போனதும், பழுப்பேறிய வெள்ளை வேட்டியும், முட்டி வரை மடித்துவிட்ட கோடு போட்ட வெள்ளை சட்டையும் அணிந்து கொண்டு அறுபது வயது மதிக்கதக்க மனிதர் ஒருவர் வந்து கடையில் அமர்ந்து தினத்தந்தி பேப்பரை கையில் எடுத்தார்.

“மேஸ்திரி, இங்க வீராசாமி கோயிலுனு ஏதாவுது உனக்கு தெரியுமா? மெட்ராஸில இருந்து இவங்க வந்துருக்காங்க, அவங்க குலதெய்வமா, இந்த ஊர்ல தான் இருக்குனு சொல்றாங்க” கல்லாவில் காசு வாங்கி போட்டுக் கோண்டே அவரை பார்க்காமல் சத்தம் கொடுத்தார் நடுவயதுக்காரர்.

மேஸ்திரி நிமிர்ந்து அரவிந்தையும், மாமாவையும் பார்த்தார். “உங்க ஆளுங்க யாரும் பல வருசமா இந்த பக்கமே வரதில்லயேப்பா” என்றார்.

“எல்லா ஒவ்வொரு ஊர்ல இருக்கரம் முன்னாடி மாரி வர முடியறதில்ல, கோயிலு எங்க இருக்குனு உங்களுக்கு தெரியுமா” என்று ஆர்வமாய் கேட்டார் மாமா.

“எம்ப்பா வருசத்துக்கு ஒருத்தராவுது வந்திட்டுருந்திங்க, ஆறேழு வருசமா ஒராளு கூட வரல, உங்காளுங்க யாரும் இப்போ ஊருக்குள்ள இல்ல, பூச படையிலுனு ஒன்னும் இல்லாம, எடமே முள்ளு மண்டி போச்சுப்பா. ரோடு போட வந்தவங்ககிட்ட சொன்னோம், அந்த மரத்த உட் ருங்க அது கோயிலுனு, யாராவுது கும்முட்டாதான் சாமி, இங்க வெறும் முள்ளுதான் இருக்கு, சாமின்னு சொல்ல ஒரு கல்லுகூட இல்ல போங்கய்யானுட்டானுங்க, எல்லாத்தையும் நெரவி உட்டுதாம்ப்பா ரோட்டை போட்டாங்க. முள்ள வெட்டி எடுத்தா பெரிய மரத்தடியில சாமி நட்டுருக்கும் அதையாவுது குடுங்க, மாரியிம்மன் கோயிலுக்குள்ள போட்டு வெக்கரோம்னு கேட்டோம். அதெல்லாம் ஆள வச்சு முள்ளெல்லாம் வெட்டிக்கிட்டு இருக்க முடியாது, மரத்த புடுங்கிட்டு அபப்டியே புல்டோசர் உட்டு நிரவிடுவோம்னு சொல்லிட்டாங்க” என்றார் மேஸ்திரி வருத்தம் தோய்ந்த குரலில்.

என்ன சொல்வதென்று தெரியாமல் சிறிது நேரம் எதுவும் பேசாமல் அரவிந்தும், மாமாவும் நின்று கொண்டிருந்தனர். சில நிமிடங்கள் கழித்து “அந்த மரம் எங்க இருந்தது” என்றான் அரவிந்த். மேஸ்திரி எழுந்து கொண்டு “வாங்க” என்று முன்னால் நடந்தார். அரவிந்தும் மாமாவும் இறுகிய முகத்தோடு பின்னால் சென்றனர்.

அவர்கள் வந்த பைபாஸ் சாலையின் விளிம்பில் சென்று நின்றார், “தடுப்புக்கு இந்தப் பக்கம் இருக்கற ரோடு முள்ளுக்காட்டு மேலதான் போகுது. குத்து மதிப்பா சொல்லனும்னா நம்ம நிக்கறதுக்கு நேரா பத்தடிலதான் மரம் நின்னுச்சு” என்றார். அவர் சொன்ன இடத்தின்மேல் வாகனங்கள் 80 கிலோ மீட்டர் வேகத்தில் விரைந்து கொண்டிருந்தன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.