அவளிடம் மட்டுமே திருடிய சொற்கள்.
♪
அவளது கலாசாரம்
வித்தியாசமான சூழலின்
சொற்களால் திருடப்பட்டிருந்தது.
அவள் வழமையாக வந்தமரும்
அந்த இருக்கையில் அமர்ந்தாள்.
பின் மல்லாந்து
படுத்துக் கொண்டு
அவளது முகத்தில் விழுந்த
மழைத் துளிகளை வாங்கி
மிகவும் சுதந்திரமாய் ரசித்தாள்.
நடைபாதையில் பயணிக்கும்
மக்களின் வாழ்வும் இயக்கமும்
கடவுளின் வரம் என உணர்ந்தாள்.
சாரல் மழை
மெல்லியதாய்
அவளுக்குச் சுட்டது.
அவள் பறவையாக தொலைந்தாள்
மனதில் சிறகுகள் விரிந்து
மேகத்தில் ஏறினாள்.
♪
தனிமையை வரைபவன்
♪
நேற்றும் தனிமையை வரைய வேண்டியிருந்தது
தனிமையை ஓர் இரவாக வரைந்தேன்
இரவிற்குள்
சில நட்சத்திரங்கள் வந்தமர்ந்தன
இன்னும் சில பறவைகளும்
வந்து சேர்ந்தன
நிலா ராஜகுமாரி மேகத்திற்குள்
மறைந்து மறைந்து
புதிது புதிதாய் காட்சி தந்தாள்
பேச்சுக்கு துணை கிடைத்தது
ஒரு யுகத்தைக் கடந்தது போல் இருந்தது
தனிமை கறுப்பு நிறத்தையொத்தது
அது ஒரு பெரும் வனத்தின்
இருளை என் மீது சுமத்தியிருக்கிறது
இருள் என்பதும்
ஒரு வகை வலிதான்
அதனைத்தான்
பல நேரங்களில் தலையணைக்கடியில்
மறைத்து வைக்க வேண்டியிருக்கிறது
எப்படி மறைத்து வைத்த போதும்
அறை முழுக்க அது பரவிடுகிறது
இப்போது
மூன்றாம் சாமம் தாண்டியிருந்தது
தனிமையை ஒரு பகலாக வரையத் தொடங்குகிறேன்
பகலுக்குள் சில மனிதர்கள் நடமாடலாம்.
♪