முதல் பார்வையிலேயே என்னை வெளியாள் எனக் கண்டுகொண்டு விட்டது. கண நேரத்தில் சுறுசுறுப்பாகி எழுந்து பாயும் தோரணையில் நின்று கத்த ஆரம்பித்துவிட்டது, பல முறை இவைகளிடம் சிக்கி கடிபட்டு தெறித்து ஓடி கற்றுக்கொண்ட ஞானமான அப்படியே அந்த இடத்திலேயே நகராது சிலையாகி நிற்கும் யுக்தியை கடைபிடித்தேன், ஆனாலும் இவைகளைக் கண்டால் உள்ளுக்குள் உருவாகும் நடுக்கம் எவ்வளவு அனுபவம் பெற்றாலும் மறைய மாட்டேன் என்கிறது. விடாமல் கத்திக் கொண்டிருந்தாலும் அது நின்ற இடத்திலிருந்து நகரவில்லை. நகராததைக் கண்டு இது கடிக்கின்ற ரகமல்ல என்று என் அனுபவ மனம் உணர்ந்து கொண்டதும் தன்னியல்பாகவே உடலிலிருந்த படபடப்பு குறைந்து நிம்மதி உண்டானது, சிறிது நேரத்திலேயே அதுவும் தன்னுடைய வேடத்தை நான் கண்டு கொண்டு விட்டதை உணர்ந்து அதை அப்படியே உதிர்த்து அமைதியானது, பிறகு ஒன்றும் நடக்காத பாவனையில் பழையபடி முன்னங்கால்களை நீட்டி அமர்ந்து கொண்டது, ஆனாலும் பார்வையை அது என்னிலிருந்து விலக்கவில்லை.
நாய் என்ன ரகமென்று சரியாகக் கண்டறிய முடியவில்லை, காதுகள் மேல்தூக்கி விடைத்திருந்தன, பளபளப்பான கரிய நிறம், காக்கிநிற கழுத்துப்பட்டை இறுகி நல்ல கொழுகொழுவென இருந்தது, இந்த தெருவின் செல்லப்பிள்ளையாக இருக்கலாம், சுகவாசி என்று எண்ணி கொண்டேன். பிறகு நாயை அப்படியே விட்டுவிட்டு தெருவில் கவனம் சென்றது, முதல் பார்வையிலேயே வசதியானவர்கள் குடியிருக்கும் சூழலுக்குரிய அழுக்கில்லாத சுத்தமானச் சூழலை உணர முடிந்தது, நல்ல பழுதில்லாத 20அடி தார்ச்சாலை, அதிகாலை பெய்திருந்த மழை காரணமாக தன் சுயநிறமான ஜொலிக்கும் அடர்கருப்பினை திரும்பப் பெற்று புதிது போல காட்சியளித்தது. வீடுகள் அளவான சுற்றுச்சுவருடன் கிட்டத்தட்ட ஒருபோலவே காட்சி அளித்தன. வீடுகளின் முன்பு பாதுகாப்புத் தடுப்பு கொண்ட பூக்களைச் சொரியும் அலங்காரச் செடிகளும், குட்டையான சிறு பூமரங்களும் இருந்தன, மேலும் இவையெல்லாம் அசல் வசதியானவர்களின் இயல்பிற்குரிய சுற்றுச்சுவர்க்கு வெளியே சாலையினை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டவைகளாக இருந்தன.
பாதையில் மனித நடமாட்டமே இல்லை, வீடுகளின் முகப்புகளிலும்கூட, அதற்கு பதிலாக இங்கிருக்கும் மனிதர்களின் இருப்பை, தோரணையை, மன இயல்பை மாறா வடிவம் கொண்ட வீடுகள் பறைசாற்றிக் கொண்டிருந்தன, வாய் மூடி,முகம் திருப்பி, முதுகு காட்டி என. இருப்பினும் ஒவ்வொன்றும் தான் அமைதியான இயல்பு கொண்டதைச் சொல்லியபடி இருந்தன. வீடுகளைத் தொடர்ந்து பார்க்கப் பார்க்க இந்த இயல்புள்ளேயேகூட சிறுசிறு வித்தியாசங்கள் தெரிந்தன, வெளித் தோற்றத்தின் நிறங்கள் வெண்மையின் வெவ்வேறு கலவைகளில் இருந்தன, இந்த வீடுகளை அமைதியானவையாக தோன்றச் செய்வதே இந்த வெண்மை நிறம்தான் என்று தோன்றியது.
திருப்பூரில் இப்படி அமைதியான பகுதிகள் மிக அபூர்வம், 7 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நகருக்கு வந்த புதிதில் இங்கிருந்த பரபரப்புச் சூழல் கடுமையான மனவிலக்கத்தைக் கொடுத்தது, திடீர் பணவரவால் வீங்கிய நகர் இது, குண்டும் குழியுமான நெரிசலான சாலையில் ஆடி கார் போய்க் கொண்டிருக்கும், எப்போதும் பரபரத்துக் கொண்டிருக்கும், டீக்கடை, டிபன் கடை, அதைவிட பிராந்திக்கடை, எப்போதும் திருவிழா போல கூட்டமிருக்கும், ஓட்டப்பந்தயத்தின் எல்லைக் கோட்டை நெருங்கும் அவசரத்திலேயே எல்லோரும் ஓடி கொண்டிருப்பார்கள், துரித ஸ்கலிதம் போல. ஆனால் சமீப காலங்களில் பரபரப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது, பணவரவு குறைகிறதா அல்லது அனுபவ முதிர்ச்சியா என்றறிய முடியவில்லை, அல்லது இரண்டும் காரணமாக இருக்கலாம்.
பரபரப்பு இல்லாத இந்தச் சாலை என் சொந்த ஊரை ஞாபகப்படுத்தியது. அப்படியே ஊர் ஞாபகங்களில் மனம் அலைந்தது. அமைதியான குளத்தில் சிறுமீன் மேல் வந்து எட்டிப் பார்ப்பதைப் போல எதிரில் ஒரு கேட் திறந்து அதில் நடுத்தர வயது பெண்ணுருவம் என்னைப் பார்த்து பின் பார்க்காததை போல பாவித்து கேட்டை சாத்தி மறைந்தது கற்பனையில் உலவிக் கொண்டிருந்த என் மனதை கலைத்து கவனத்தை மீண்டும் சாலையின் மீது கொண்டுவந்து நிறுத்தியது, மீண்டும் வீடுகளின் அமைப்பை பார்த்து கொண்டிருந்தேன், சட்டெனத் தோன்றியது இங்கிருக்கும் வீடுகள், அவற்றின் சுவர்கள், கதவுகள், படிகள் எல்லாமே சதுரம் மற்றும் செவ்வகங்களின் வெவ்வேறு அளவுகள் என, அதுதான் எல்லாவற்றையும் ஒருபோல காண்பிக்கும் சீர்மையை தருகின்றது என்று, ஓட்டு வீடுகள் இல்லாமல் ஆனதும் முக்கோணங்களும், சாய்வுக் கோணங்களும் வீடுகளின் புற அமைப்பிற்கு தேவையில்லாமல் ஆகிவிட்டன. அதுவும் இந்தத் தெருவின் கட்டிட அமைப்புகளில் முகப்பு அலங்காரங்கள் இல்லாதது இவற்றிற்கு ஒரு மேட்டிமைத் தன்மையை அளித்தது, வெண்ணிறத் துணிகளை போல. நின்றிருந்த சில மணி நேரங்களிலேயே இடம் மிக பிடித்ததாகி விட்டது, இங்கு வீடு கிடைத்தால் கோதை மகிழ்ந்து பரவசமடைவாள் என்பதை யோசிக்கவே குதூகலமாக இருந்தது.
நேற்றிரவு தமதமாகத்தான் வீடு வந்து சேர்ந்தேன், கோதை வாசலில் சுஸ்மியை மடியில் தூங்க வைத்தபடி அமர்ந்திருந்தாள், பைக்கை நிறுத்தியபடி, “ஏன் வெளியவே உட்கார்ந்திருக்கற, பனி பெய்து,உள்ள போக வேண்டியதுதான,” என்று சொல்லியபடி அவள் அருகில் சென்றபோதுதான் அவள் முகம் அழுது வீங்கியிருந்ததைக் கண்டேன்.
“என்னாச்சு,” என்று கேட்கத் துவங்கும்போதே பதில் சொல்லாமல் எழுந்து தூக்கத்திலிருந்த குழந்தையை மார்பில் போட்டு உள்ளே சென்றாள், குழந்தையை கட்டிலில் கிடத்திவிட்டு நாளைக்கும் இந்த வீட்டில் இருந்தேன்னா நான் செத்துடுவேன் என்றாள், அவள் முகத்தைப் பார்க்கத் தயங்கி வேறு பக்கம் திருப்பி, “சரிம்மா, தூங்கு போ,” என்று சொல்லியபடி என்னிலிருந்த பதட்டத்தை மறைக்க ஏதாவது செய்ய வேண்டி உடைகள் மாற்றத் துவங்கினேன், அவள் குழந்தை மீது கைவைத்தபடி ஒரு பக்கமாக படுத்துக் கொண்டாள், கட்டப்படாமல் விரிந்திருந்த முடி முகத்தைப் பாதி மறைத்திருந்தது, இடைவெளியில் கண்கள் கலங்கி நீர் பெருகுவதைக் காண முடிந்தது, ஒன்றும் சொல்லாமல் அருகில் அவள் நோக்கித் திரும்பாமல் படுத்து கொண்டேன், நீண்ட நேரம் விசும்பல் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.
இருமல் வந்த காசநோயாளியின் சத்தத்துடன் ஒரு புராதன மொபெட் மெதுவான வேகத்தில் என்னை நோக்கி வருவது தெரிந்தது, வீடு ப்ரோக்கர் லிங்கமூர்த்தியாகதான் இருக்கும் என எண்ணிக்கொண்டேன், இதுவரை நேரில் பார்த்ததில்லை, கொஞ்சம் பழுப்படைந்த வெண்மை நிறம்கொண்ட வேட்டிச் சட்டையில் வந்து நின்றார், முன்வழுக்கைத் தலை, கம்பீரமான உடல், பெரிய மீசையின் அதீத பளபளப்பு தான் சாயம் பூசி கொண்டதை அறிவித்தபடி இருந்ததைப் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது, வேட்டியின் கரையில் அவர் இன்னொரு பகுதி தொழிலாக அரசியல் வேலையும் செய்கிறார் என்பதும் தெரிந்தது, அறிமுகப்படலம் இல்லாமலேயே, ”தம்பி,கொஞ்சம் லேட்டாகிடுச்சு, இந்த வீடுதான் வாங்க,” என்றழைத்தபடி செயற்கையான பரபரப்புடன் முன்னால் நடந்தார், நாய் முன் நின்ற அதே வீடுதான், நான் பின்தொடர்ந்து வராததை உணர்ந்து திரும்பிப் பார்த்து பின் நாயை நோக்கி, ”இது கடிக்காது வாங்க,” என்றார், நாய் இப்போது என்னைப் பார்த்து கொஞ்சம் பயந்த தோரணை கொண்டிருந்த மாதிரி தோன்றியது.
கேட்டின் ஓரத்தில் இருந்த அலாரத்தை தேடிக் கண்டடைந்து அழுத்தினார், சத்தம் கேட்டு ஒரு முதியவர் நடந்து வருவது கேட்டின் இடைவெளியில் தெரிந்தது, துளி பரபரப்பின்றி பொன்நகையை கையாள்வது போன்ற கவனத்துடன் மெதுவாக கேட்டினை திறந்தார், அவரிடம், ”முனுசாமி, பெரியவர் இருக்காரா!” எனக் கேட்டு பதில் வாங்க முற்படாமலேயே உள்ளே நடந்தார், முனுசாமி என்னைப் பார்த்து, ”வீடு பாக்கவா, உள்ள போங்க,” என்று சொல்லியபடி கேட்டை அதே இயல்புடன் சாத்தினார், எங்களைப் பார்த்தபோது அவரில் இருந்த புன்னகை பிறகு கதவை சாத்தும் பொழுதும், பின் நடந்து செல்லும் பொழுதும் இருந்தது.
பெரிய வீடு, முன்வாசலுக்கு வெளியே நேர்த்தியான மூங்கில் இருக்கைகள் போடப்பட்டிருந்தன, வார்னிஷ் பூசப்பட்ட மூங்கில்களைப் பார்த்தபோது பாடம் செய்யப்பட்ட இறந்த உடல்கள் என்ற பதம் ஞாபகம் வந்து அதை வலுக்கட்டாயமாக மனதிலிருந்து நீக்கினேன். லிங்கமூர்த்தி அதில் அமரச் சொல்லி தானும் அமர்ந்து கொண்டார், உட்கார தயக்கம் உண்டாகி பின் அமர்ந்து கொண்டேன், வரவேற்பு மேசையில் தினமலர் பிரிக்கப்படாமல் இருந்தது. லிங்கமூர்த்தியின் உடலில் ஒவ்வொரு கணமும் ஏதாவது ஒரு உடலசைவு வெளிப்பட்டு கொண்டே இருந்தது, முகத்தை என் பக்கமாக திருப்பி இரகசிய குரலில், “தம்பி அட்வான்ஸ் கொடுக்கும்போதே கமிஷனை கொடுத்துடுங்க,” என்றார், அவர் மீது எரிச்சலும் அதேசமயம் பிரியமும் கலந்து வந்தது, காலையில் போனில் அழைத்து இன்னைக்கே வீடு வேண்டும் என்று மன்றாடிக் கேட்டபோது, “தம்பி, சாமான் சட்டியெல்லாம் தூக்கிட்டே வந்துடுங்க, வீடு ரெடியா இருக்கு,” என்று இவர் சொன்னபோது மொத்த பாரமும் அந்த நொடியிலேயே நீங்கியதைப் போல் உணர்ந்தேன்.
உள்ளே இருந்து 70 மதிக்கத்தக்க ஒரு பெரியவர் வெளியே வந்தார், முண்டா பனியனும், வெள்ளை வேட்டியுமாக. ஒட்ட வெட்டிய தலையில் புதிதாக முளைத்திருந்த வெண் நாற்றுகள் போன்று முடிகள் இருந்தன, கழுத்து வரை வெண் மார்புமுடிகள் பரவியிருந்தன, காதுகளின் ஓரங்களில்கூட நாற்றுகள் நட்டுவைத்ததை போல சில வெண்முடிகள் இருந்தன. லிங்கமூர்த்தி அவரை பார்த்ததும் எழுந்து நின்றதை பார்த்து நானும் எழுந்து நின்றேன், ”என்னடா இந்தப் பக்கம் ஆளை காணோம்,” என்று அவர் கேட்டதற்கு லிங்கமூர்த்தி பதில் சொல்லாமல் குழைந்து சிரித்தார்.
“இந்த தம்பிதாங்க” என்று என்னைக் காட்டினார், நான் பாதி எழுந்து வணக்கம் தெரிவிப்பது மாதிரி ஒரு செய்கையை செய்தேன். அவர் உட்காரச் சொல்லிச் செய்து எதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டார், முதல் வார்த்தையிலேயே ,”தம்பி என்னாளுக,” என்றார் சாதாரணமாக.
நான் அவர் சொல்வது புரியாததை போல பாவனை காட்டினேன், பிறகு அதெல்லாம் வேலைக்காகாது என்று புரிந்து கொண்டு, ”ஆசாரிங்க” என்றேன்.
“மர ஆசாரியா”
“இல்லைங்க, இரும்பு ஆசாரி”
“இல்ல, சும்மாதா கேட்டேன், என்ன பண்றீங்க”
“பிரின்டிங் காண்ட்ராக்ட்ங்க”
அவருக்கு பேசும் ஆர்வம் வந்ததை அவருடலும், முகமும் காட்டியது, ஆனால் அருகிலிருந்த லிங்கமூர்த்தியின் முகத்தில் சுணக்கம் தெரிந்தது.
“தம்பி, இந்த ஏரியாவே முன்னாடி எங்களோடதுதான், முன்னாடி பஸ் போற ரோடுல இருந்து பின்னாடி இருக்கற பி டி காலனி வரைக்கும், பி டி காலனிகூட அந்த காலத்துல எங்க பெரியவங்க வெளியிலிருந்து விவசாயக் கூலிகளா வந்தவங்களுக்கு தங்கறதுக்கு தானமா கொடுத்த நிலம்தான், அது மொத்தம் 5 ஏக்கர், இப்ப அங்க சென்ட் 9 லட்சம் போவுது”
நான் ஆர்வமாக கேட்பதைப் போல பாவனை செய்தேன், லிங்கமூர்த்தி பாதி எழுந்து நின்று, ”அப்ப வீட்டை பாக்களாங்களா,“ என்றார், பெரியவர் அவரைப் பொருட்படுத்தவே இல்லை, லிங்கமூர்த்தி ஏமாற்றமாகி என்னை திரும்பிப் பார்த்தபின் பழையபடி அமர்ந்து கொண்டார், ஏதோ வாய்க்குள் முணுமுணுப்பது தெரிந்தது.
“கடைசியா இந்த வீதி என்னோட பாகமா வந்துச்சு, நா பிளாட் போட்டு வித்துட்டேன், இப்ப ஐயோனு இருக்கு, வித்ததுக்கு இப்ப 10 மடங்கு விலை கூடி போச்சு”
“முன்னாடி விவசாயம்களா…”
“தம்பி அது காசை விடற பொழப்பு, ஆனா இப்பவும் மனசு அத விட மாட்டேன்கிது, இப்பக்கூட இரண்டு நாட்டுமாடு பின்னாடி கிடக்கு, தினம் 1.5 லிட்டர்தான் கறக்குது, நா ஜெர்சிதான் வாங்கச் சொன்னேன், நாட்டுமாடு வச்சாதான் கவுரவம்னு பையன் திட்டிவிட்டு இத வாங்கிக் கொடுத்தான்”
“பையன் என்ன செய்யறார்ங்க”
“பனியன் தொழில்தான், முன்ன நிறைய பணம் நாசம் பண்ணிட்டான், பிறகு மறுபடியும் கொஞ்சம் நிலம் வித்துக் கொடுத்து பணம் போட்டு, இப்ப நல்லா போகுது, முன்ன நிக்கறது அவனோட இரண்டு கார்ல ஒன்னுதான், இப்பதான் வாங்கினான், ஒரு காரை ரெண்டு வருஷம் கூட வைக்க மாட்டேன்றான், அதுக்குள்ள மாத்தி வேறொன்ன வாங்கிடறான்”
திரும்பி காரைப் பார்த்தேன், தான் பென்ஸ் என்பதை ஒவ்வொரு பாகத்திலும் சொல்லியபடி நின்றிருந்தது, அதன் வெண்ணிறம் ஏனோ வெள்ளைக்காரியை ஞாபகப்படுத்தியது.
லிங்கமூர்த்தி கடுப்பாகி இப்போது எழுந்தே நின்று விட்டார், பின் இடைபுகுந்து, ”அய்யா நேரமாச்சுங்க,” என்றார்.
பெரியவர் புதிதாக யாரையோ பார்ப்பதைப் போல லிங்கமூர்த்தியைப் பார்த்து பிறகு, ”சரி போய்ப் பாரு, திறந்துதான் இருக்கு, டே முனுசாமி…” என்று அழைத்தார்.
அடுத்த இரண்டு நொடிகளில் முனுசாமி அங்கு வந்து நின்றது ஆச்சிரியமாக இருந்தது, அதே மாறாத குழந்தைமை புன்னகை.
“போய் காட்டிக் கொடு, போடா”
“சரிங்க”
மூவரும் பின்பக்கம் நடந்தோம், பெரியவர் மறைந்ததும் லிங்கமூர்த்தி கோபத்துடன், ஆனால் சத்தமில்லாமல் என்னிடம் கத்தினார், ”வீடு பாக்க வந்தியா, அரட்டையடிக்க வந்தியா?” நான் பதிலேதும் சொல்லவில்லை, திரும்பி முனுசாமியைப் பார்த்தேன், அவர் சிரித்தார்.
வீடு நான் எதிர்பார்த்ததை விட பெரிதாகவும் அழகாகவும் இருந்தது, மெல்ல உள்ளுக்குள் ஒரு நடுக்கம் ஆரம்பித்தது. லிங்கமூர்த்தியிடம், ”வாடகை எவ்வளோ சொல்றாங்கண்ணே” என்றேன்.
“16 ஆயிரம்”
தொண்டை விக்கித்துக் கொண்டதை போல் உணர்ந்தேன், அட்வான்ஸ் பற்றி அவரிடம் கேட்காமலேயே மனதிற்குள் கணக்கிட்டேன், என்னால் திரட்ட முடியாத தொகை.
திரும்ப வெளிவந்தபோது பெரியவர் அங்கேயே அமர்ந்திருந்தார். “தம்பி வீடு பிடிச்சதா” என்றார் ஆர்வமாக.
“பிடிச்சதுங்க, வீட்டுல பேசிட்டு லிங்கம் அண்ணன்கிட்ட சொல்லிடறேங்க”
நான் சொல்வதிலேயே நான் வரமாட்டேன் என்பதை அவர் யூகித்துக் கொண்டதை அவர் முகம் காட்டியது.
“இரண்டு நாள்ல வந்துடுறேங்க,” சொல்லும்போதே இது சாத்தியப்படாது என மனதிற்குள் எண்ணம் வந்து போனது. கேட்டருகில் வந்தபோது முனுசாமி புன்னகையுடன் விடை கொடுத்தார்.
வெளியே வந்ததும் லிங்கமூர்த்தி, ”சரி தம்பி, யோசிச்சு சொல்லுங்க, வந்த பிறகு வாடகை ஜாஸ்தின்னெல்லாம் திணறக் கூடாது, முடியும்னா சொல்லுங்க,” என்றபடி மொபட்டுக்கு உயிர் கொடுக்கத் தொடங்கினார். பின் அந்தச் செயலை நிறுத்தி ஏதோ யோசித்து, ”தம்பி இவனுங்களுக்கு இது பரம்பர சொத்து, தொழில்ல நொடிஞ்சாங்கன்னா ஒரு துண்டு எடுத்து வித்தா போதும்,மீண்டுடுவானுக, நிலம்கிறது என்னனு நினைக்கற, தங்கப் புதையல் அது,” என்றார். நான் பதில் சொல்லாமல் புன்னகைத்தேன்.
” நீயும் நானும் இப்படி தெருத்தெருவா அலைஞ்சாதான் காசு, காலம் பூரா அலஞ்சாலும் ஒரு துண்டு நிலம் கூட வாங்க முடியாது”
“அண்ணே, அது அவங்க அதிர்ஷ்டம், முந்தின தலைமுறைக சம்பாதிச்சுக் கொடுத்ததை அவங்க அனுபவிக்கறாங்க, நமக்கு அந்த கொடுப்பின இல்ல, அவ்வளவுதான்”
” மண்ணாங்கட்டி, இது சம்பாதிச்சு வந்த சொத்தில்ல, முன்னாடி அவங்க பாட்டபூட்டனுக பிடிச்செடுத்த நிலம் இது, அவ்வளவுதான், முதல்ல அவங்க வச்சுருந்ததால அவங்களோடதாகிடுச்சு, பின்னாடி வந்தவன் எல்லாம் நிலம் இல்லாம ஆகிட்டானுக, இதான் நிஜம்”
பதில் சொன்னால் பேச்சை வளர்ப்பார் என எண்ணி வெறுமனே கேட்பதை போல முகத்தை வைத்து கொண்டேன்.
“தம்பி, இவங்க முன்ன விவசாயத்துக்காக சும்மா கிடந்த நிலத்தை பிடிச்செடுத்தாங்க, அப்படியே அவங்களோடதாக்கிட்டாங்க, இப்ப இந்த பனியன் தொழில் இங்கு வந்து நிலத்தை பொன்னு விலைக்கு ஏத்திடுச்சு, இவனுக கஷ்டப்படாமையே பணக்காரங்க ஆகிட்டாங்க, அவ்வளவுதான், தம்பி ஒன்னு மட்டும், எவனுக்கும் தன் தேவைக்கு மீறி இருக்கற நிலம் அவனொடதில்ல,” பேச்சில் பொங்கி உணர்ச்சியில் மேலேறியவர் சொல்லி முடித்ததும் அமைதியாகி நிதானமானார்.
பிறகு, ”சரி தம்பி, மறுபடியும் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க, அட்வான்ஸ் கொடுக்கும்போதே கமிஷன் கொடுத்துடுங்க, அலைய வச்சுடாதீங்க”
எனக்கு உடனே கோதையின் அவளுக்கு மிக பிரியமான தங்க முறுக்குச் சங்கலி ஞாபகம் வந்தது, அது பத்தாது என்று தோன்றியவுடனே மாமனார் சுஸ்மிக்கு போட்ட மெல்லிய வளையலும் ஞாபகம் வந்தது.
லிங்கமூர்த்தி, ”தம்பி ஊர்ல சொந்தமா வய வீடு ஏதும் இருக்குங்களா?” என்று கேட்டபோதுதான் புத்தி கணக்கிடலிலிருந்து வெளியேறி மீண்டது.
“இல்லைண்ணா, இருந்தது எல்லாம் போச்சு, இனிதான் வாங்கணும்”
“தம்பி, நமக்குன்னு ஒரு இடம் இல்லைன்னா வேர் இல்லைன்னு அர்த்தம், இப்படி வருசத்துக்கு ஒரு முறை, ஆறு மாசத்துக்கு ஒருமுறை தெருத்தெருவா தேடி அலைஞ்சுட்டு இருக்கணும், முதல்ல சம்பாதிச்சு ஒரு இடம் வாங்கி போடுங்க, பிறகு அங்க தன்னால அதுல வீடு கட்டிட முடியும், நிலம்கிறது நமக்கான சொத்து இல்ல, நமக்கு பிள்ளைகளுக்கு, பிள்ளையோட பிள்ளைகளுக்கு நாம கொடுக்கற நிம்மதி, உள்ள பார்த்தீங்கள கிழவனை, என்ன திமிரா, ஒரு கவலையுமில்லாம இருக்கான்னு?” பிறகு முகபாவத்தில் லேசான புன்னகையுடன் விடைபெற்றுக் கிளம்பினார்.
பைக் எடுத்துக் கிளம்பும் கிளம்பும்போது திடீரென ஞாபகம் வந்து அந்த நாயைத் தேடினேன், அங்கு முன்பு இருந்த இடத்தில் காணவில்லை, திரும்பிப் பார்த்தபோது எதிர் இடத்தில் இருந்தது, நிழல் காரணமாக இடம் மாறி இருக்கிறது, என்னைப் பார்த்ததும் எழுந்து நின்றது, ஆச்சரியமாக குரைக்காமல் வாலாட்டியது, பைக்கிலிருந்து இறங்கிச் சென்று அதன் புறங்கழுத்தை தடவிக் கொடுத்தேன்.
நல்ல கதை. பிடித்திருக்கிறது.
நன்றிங்க
நல்ல கருத்து, நல்ல நடை,அருமையான விவரணைகள்.அது சரி, இடமோ,வீடோ நாம் கஷ்டப்பட்டுவாங்கிவைத்தால் நம் பின் வாரிசுகள் அதை
வைத்து அனுபவிக்கும் நிலை இல்லையே? எங்கெங்கோ பிழைப்பிற்காகப் போய்விடுகிறார்களே-போகவேண்டியுள்ளதே? என்ன செய்வது?
ரா.கி, ஒருகதைதான் எழுதியுள்ளீர்களா? வேறு எங்கு எழுதியிருக்கிறீர்கள்?
நன்றிங்க , இன்னொரு கதை காத்திருப்பு எழுதியுள்ளேன் , மொத்தம் இரண்டு கதைதான் எழுதியிருக்கிறேன் !