சகுனம்

சிகந்தர்வாசி

அந்த ஒரு வாக்கியத்தில் பல கதவுகள் திறந்தன
ஒரு மாய உலகம் கண் முன் விரிய
நான் எங்கோ பறந்தேன்
அழகான மாளிகைகள், சுத்தமான சாலைகள்
விதவிதமான கார்கள், விமானங்கள்
மேகங்களை கிழித்து வானத்துக்கு ஒட்டடை அடிக்கும் கட்டிடங்கள்
முதல் எது முடிவு எது என்று தெரியாத நீர்வீழ்ச்சிகள்

“பையன் அமெரிக்கால இருக்கான்”

உடம்பு சற்று நடுங்கியது, வார்த்தைகள் வழுக்கின
பார்வையை எங்கு நிறுத்துவது என்று தெரியாமல் தவித்தேன்
அவன் என்ன கேட்டான் நான் என்ன சொன்னேன்?
அந்த நினைவு மூளையில் பதிவாகாமல் சறுக்கி எங்கோ சென்றுவிட்டது
சிரித்தேன், மறுபடியும் நடுங்கினேன், பேசும்போதே கனவு
கண்டுகொண்டிருந்தேன்

“சகுனம் சரியில்லையாம்”

அன்று மூடிய கதவின் ஒலி இன்னும் எதிரொலிக்கிறது
நேராக என்னிடம் முடிவைச் சொல்லமுடியாத ஒரு கோழை
சுமாராக இருந்தும் அழகனாய் நினைத்துக்கொள்ளும் அற்ப ஜீவி
புகைப்படம் பார்த்தபின்தானே வந்தான்? நிராகரிக்கும் உரிமை
இருவருக்கும் உண்டு. அற்பஜீவி.  உன்னை நான் நிராகரிக்கிறேன்

“சகுனம் சரியில்லையாம்”

தடுமாறாமல் பேசியிருக்க வேண்டுமோ?
நவ நாகரீகப் பெண் என்று காட்டிக்கொள்ள வேண்டுமோ?
அழகு குறைச்சலோ? ஆங்கிலம் அதிகம் பேசவேண்டுமோ?
கணங்களில் ஏன் கண்ணீர்? மூடப்பட்ட கதவின் எதிரொலி.

“சகுனம் சரியில்லையாம்”

அந்த கனவு மறுபடியும் விரியவில்லை
திருமணம், மகன், மகள், பேரன்கள் , பேத்திகள்
பல முறை அமெரிக்க பிரயாணம்
ஆனாலும் மனதில் ஆழமாக பதிந்திருந்தது அந்த ஒரு நாள் கனவு

மனதில் நீங்காத கேள்வியாக அது நின்றுவிட்டது
ஏன் அன்று சகுனம் சரியில்லை?

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.