– கதை: ஸ்ரீதர் நாராயணன்; ஓவியம்: யாத்ரீகன் –
‘ஏன் ஃபோனை ஃபோனை பாத்திட்டிருக்க? நந்தினிகிட்டேந்து கால் வந்திருக்கா?’ என்றாள் அம்மா.
அந்த நிமிடம்வரை நந்தினி இருபத்து மூன்று மெசேஜ்கள் அனுப்பியிருந்தாள். “எட்டரைக்கு ரேகா வந்தாள்”. “நாங்கள் சிவாஜிநகர் போகிறோம்.” “சஃபீனா பிளாசாவில் சேல் போட்டிருக்கிறார்கள்.” “கமர்ஷியல் தெரு வுட்டீஸ்ஸில் சாம்பார் வடை. சாப்பிடுகிறோம்…”.
அவன் அம்மாவை சந்திக்க கிளம்பும் போதெல்லாம் நந்தினியின் போக்கு இப்படி ஆகிவிடுகிறது. அவன் ஒன்றும் அடிக்கடி அம்மாவை சந்திக்கப் போவதில்லை. வருடத்திற்கொரு முறையாவது அம்மாவை பார்த்து விட வேண்டும். அதுவும் தீபாவளி சமயம் என்றால் பொறுக்க முடியாமல் கிளம்பிவிடுவான். நந்தினி அவன் கூட வரமாட்டாள். ஆனால் இப்படித்தான், கூடவே இருப்பது போல குறுஞ்செய்திகளாக அனுப்பிக் கொண்டே இருப்பாள்.
‘என்னடா, தீபாவளி வந்திட்டுதே, இன்னும் அம்மா நினப்பு வரலயே இவருக்குன்னு நினச்சிட்டிருந்தேன். இன்னிக்கு கிளம்பியாச்சா? இந்தவாட்டி எங்க… ரேஸ்கோர்ஸா, இல்ல ஓபராயா? உங்கம்மாதான் பெரிய செலிப்ரிட்டியாச்சே. அதான் கேட்டேன். இன்னிக்கு ரேகா வேற வர்றேன்னு சொல்லியிருக்கா. நீங்க அம்மாவைப் பாக்கப் ஓடறத சொன்னா சிரிப்பா சிரிக்கப் போறா. இல்ல தெரியாமத்தான் கேக்கறேன்…. இவ்ளோ பாசமா இருக்கற அம்மா உங்கள எத்தனவாட்டி நினச்சுப் பாத்திருக்காங்க? இல்ல கூப்பிட்டுத்தான் பேசியிருக்காங்களா? அன்னிக்கு ஏதோ டீவி ஷோல கூட வந்தாங்களே…. பிரேக்ஃபாஸ்ட் புரோகிராம்ல. பெரிய பெரும பீத்த கலயம் மாதிரி. ஒருவார்த்த எம்பையன்னு உங்களப் பத்தி சொன்ன மாதிரியே தெரில. இந்தக் கடைய பெருசாக்கறோம். இத்தன ஃப்ராஞ்சைஸ் கூட்டப்போறோம்… டிஸ்கவுண்டு என்ன….. டார்கெட்டு என்ன… அவார்டு என்ன… இப்படியே ஒரே தம்பட்டம்தான். குடும்பம்னு ஒருவார்த்த… ஒருவார்த்த கூட பேசல தெரியுமா?’
தோசைகளுக்கும், க்ரீன் டீக்கும் இடையே வரிசையாக கேள்விகளை கொட்டிக் கொண்டே இருந்தாள். அவன் என்ன பதில் சொல்லிவிட முடியும்? என்ன சொன்னால்தான் நந்தினி திருப்தியடைவாள்?
அவளோ அவளுடைய தோழி ரேகாவோ என்றில்லை. அவன் அறிந்த, சந்தித்த, சந்திக்கப் போகும் யாராக இருந்தாலும், ஏதோ ஒரு தருணத்தில் அவன் அம்மாவைப் பற்றிய பேச்சு வந்ததும், இந்தக் கேள்விகள் வெவ்வேறு வடிவத்தில் வந்து விழும்.
‘யாரு? கல்யாணி சாரங்கனா? உங்க அம்மாவா….?’ என்று முதலில் புருவத்தை தூக்குவார்கள். ‘ஓ, நீங்க ஃபர்ஸ்ட் மேரேஜ் புள்ளயா… அதான், ஜே எஸ் எங்கயும் பையனப் பத்தி சொன்னதேயில்லன்னு நினச்சேன். உங்க அப்பா இன்னும் இருக்காரா சார்? என்ன செய்யறார் இப்ப?’
குறுகுறுவென ஊரும் பார்வைகள். குடையும் நோக்குகள். எல்லா கேள்விகளுக்கும் பின்னாலும், பதில்களை எதிர்பார்க்காத ஏளனச் சிரிப்பு ஒன்று தெறித்து மறையும்.
‘என்ன பிரச்னைன்னு முறிச்சுகிட்டு போனாங்களாம்? குடும்பம்னா நாலும் இருக்கறதுதான். எங்க தாத்தா பேரலடிக் அட்டாக் வந்து கிடயா கிடந்தார். அப்பக் கூட பாட்டிய தேவ்டியா முண்டன்னுதான் திட்டுவாரு. தூக்கிப் போட்டுட்டா போனாங்க. முழுசாப் போற வரைக்கும் மூணரை வருசம் வச்சிருந்து பாத்து, மூத்திரம் பீயெல்லாம் துடச்சுப் போட்டுட்டுத்தான் இருந்தாங்க. விட்டுக் கொடுத்து வாழ முடியலன்னா அப்புறம் கல்யாணம் எதுக்கு, குழந்த குட்டிங்க எதுக்கு’
அம்மாவைப் பற்றி பேசும்போதெல்லாம் நந்தினியின் குரலில் ஆங்காரம் ஏறிக் கொண்டே போகும். அவள் கோபம் அம்மாவின் மேலா, அல்லது அம்மாவின் இடத்தில் அவள் இல்லாமல் போனதாலா என்று சமயத்தில் அவனுக்கு சந்தேகம் ஏற்படும். இதோ அடுத்த மெசேஜ் வந்துவிட்டது.
‘சாப்பாடு ஆச்சா?’
அம்மாவும் அதையேத்தான் கேட்டாள். ‘ஃபுட் கோர்ட் போகலாமாடா? எங்காவது நல்ல சாலட் கிடைச்சா போதும்’
அப்போதுதான் Scary World என்னும் ‘திகில் உலகை’ விட்டு வெளியே வந்திருந்தார்கள். இரண்டு அடுக்குகளில் ஏகப்பட்ட திகில் அனுபவங்களை ‘செட்டப்பாக’ உள்ளடக்கியிருந்த இடம். இருட்டு அறைகளில் முகத்துக்கு நேரே வௌவால்கள் வந்து தொங்கின. வெற்று முகமூடிகள் விஷ்க் விஷ்க் என காற்றில் அலைந்தன. ஒரு பெரிய எலும்புக்கூடு படுத்திருந்த நிலையில் இருந்து ஆடிக்கொண்டே எழுந்து நின்றது. அந்த சூழலின் திகிலை விட, உள்ளே சென்ற கூட்டத்தினரின் கூச்சல்தான் அதிக திகிலை உண்டாக்கியது. அவனும் கூட ஒன்றிரெண்டு முறை க்ரீச்சிட்டபடி அம்மாவின் தோளைப் பற்றி ஒண்டிக் கொண்டான். மாடிப்படிகளில் இருந்து கீழே இறங்கும்போது பாய்ந்து வந்து வாளை நீட்டியபடி நின்ற குள்ளனைப் பார்த்ததும் அவனுக்கு தூக்கிவாரிப் போட்டது. அம்மா மட்டும் எப்போதும் போல அதே தைரியத்துடன் இருந்தாள். வெளியே வந்தபோது எல்லாரும் சந்தேகமில்லாமல் வியர்த்திருந்தார்கள். அம்மா மட்டும் அதே மங்காத புன்னகையுடன் சாப்பிட கிளம்பிவிட்டாள். ‘சப்வே போறோம் சாப்பிட’ என்று நந்தினிக்கு டெக்ஸ்ட் அனுப்பிவிட்டு அவனும் அம்மாவை தொடர்ந்தான்.
‘சுவாதி மேரேஜெல்லாம் எப்படிரா நடந்தது? நீ அனுப்பின ஃபோட்டோல்லாம் பாத்தேன். சின்னசின்னதா பாத்த பசங்கள்லாம் எப்படி வளந்திட்டாங்க… நிறய பேர் பேரே தெரியல. அவளுக்கு இது தலை தீபாவளில்ல. நீங்கள்லாம் மெட்ராஸ் போறீங்களாடா?’
அம்மா கேட்டுக்கொண்டே முள்கரண்டியால் லாகவமாக காய்கறிகளை குத்தி சாப்பிடத்தொடங்கினாள். இந்த ஆகஸ்டில்தான் சுவாதியின் திருமணம் முடிந்தது. ஞானபிரகாசம் மாமாவின் செல்வாக்கும், படாடோபமும், ரிசப்ஷன் மெனுவிலிருந்து, திருமணத்தில் பங்கேற்ற முக்கியஸ்தர்கள் வரையிலும் பளிச்சென தெரிந்தது. கல்யாணியின் பையன் என்றளவில் அவனை பல உறவினருக்கும் தெரிந்திருந்தது. மாமா வெகு நெகிழ்ச்சியாக அவனை வரவேற்று கட்டித் தழுவிக்கொண்டார். இவ்வளவு பெரிய உறவு பெருங்கூட்டத்தை துறந்துதான் அப்பாவும் அம்மாவும் பெங்களூருக்கு புகலிடம் தேடி போனார்களா அந்த காலத்தில் என்று அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது
‘சொந்தம் பந்தம்னு ஒரு பய வேணாம் கல்யாணி. உனக்கும் எனக்கும் இனி எல்லாம் நம்ம ஃப்ரெண்ட்ஸ்கதான். இங்கதான் எல்லாம்’
என்று நெகிழ்ச்சியோடு அம்மாவின் முகம்பார்த்து அப்பா சொல்லிக் கொண்டிருந்த பொழுதுகள் அவனுக்கு நன்றாக நினைவில் இருந்தது. இரவு உணவிற்குப் பின்னர் அப்பா எப்பொழுதும் உணர்ச்சி வயப்பட்ட நிலையில்தான் பேசிக் கொண்டிருப்பார். கைவிட்ட சொந்தங்கள், கடன் தொல்லைகள், எதிர்கால கனவுகள் எல்லாம் அப்பொழுதுதான் அவர் முன் விரிந்து நிற்கும். அப்பாவின் நட்புவட்டம் சிறியதாகத்தான் இருந்தது பிச்சமூர்த்தி, குரியகோஸ், கணேசலிங்கம், சூரி வேறு பெயர்கள் நினைவிலில்லை. ஜேஎஸ்ஸின் ஆதரவுதான் மிகப் பெரியது.
அப்பொழுது ஜேஎஸ் சிவாஜிநகர்ப் பக்கம் சின்னதாக க்ளினிக் வைத்திருந்தார். பக்கத்திலேயே, போலிஸ் குவார்டர்ஸ் பின்புறம் ‘கல்யாணி மெடிக்கல்ஸ்’ கடை இருந்தது. அம்மாவின் பி ஃபார்மா படிப்பும் சர்டிபிஃபேக்டும் வைத்து அப்பா தொடங்கிய கடை. மருந்துக் கடையின் பெயர் போட்டு அப்பா அடித்துக் கொடுத்த ப்ரிஸ்கிரிப்ஷன் பேடுகளில்தான் ஜேஎஸ் தொடர்ந்து மருந்து எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்பா சரியான வெகுளி. ஆனால், நல்ல உழைப்பாளி. ஞாயிறு மட்டும்தான் மாலை ஐந்து மணிக்கு கடையடைப்பார். அதுவும் சில சமயம் நண்பர்கள் யாராவது அரசியல் வம்புகளை அலச வந்துவிட்டால் ஆறு, ஆறரை ஆகிவிடும். மற்ற நாட்களில் இரவு பத்து பத்தரை ஆகிவிடும். கடையை சாத்திவிட்டு வீட்டுக்கு வரும் வழியில் கதம்பா ஓட்டலில் காரட் அல்வாவோ, வெஜிடபிள் போண்டாவோ வாங்கிக் கொண்டு வருவார். அவ்வளவு நேரத்திற்கு மிச்சம் இருந்தால் தேங்காய் போளி இருக்கும். அம்மாவிற்கு இருந்த விரிந்த பார்வையும் தன்னம்பிக்கையும் அப்பாவிடம் கிடையாது. அதுதான் அவர்களுக்குள் அத்தனை ஈர்ப்பும் காதலும் தோற்றுவித்ததோ என்னமோ. அப்பா சாய்ந்து கொள்ள, இளைப்பாற, அணைத்துக் கொள்ள என்று எப்பொழுது அம்மா இருந்தாள்.
அன்றைய நாட்கள் அவனுக்கு நன்றாக நினைவில் இருந்தது. நெளி வளையலும், கல்தோடும், பிச்சிப்பூவும், பின்னங்கழுத்தில் தீற்றலான பவுடர் பூச்சுமாக, சீட்டியடித்துக் கொண்டே கண்ணாடியில் பார்த்து அலங்கரித்துக் கொள்ளும் அம்மா. இப்போது அவள் பார்வை, பேச்சு, தோரணை எல்லாம் மாறியிருந்தது. பெரிய மனிதர்களுக்கான கம்பீரம் வந்து சேர்ந்து கொண்டு விட்டது. கண்ணாடியில் முகம் பார்த்து பவுடர் ஒற்றிக்கொண்டே, தன்னையே மெய்மறந்து பார்த்துக் கொண்டிருக்கும் அவனைப் பார்த்ததும் கண்சிமிட்டி சிரிப்பாள். அந்த சிரிப்பு மட்டும் அப்படியேதான் இருந்தது. அந்த சிரிப்புக்கு முன்னால், எப்போதும் இறுகிய பாறையாக இருக்கும் அப்பா, நெகிழ்ந்து உருகிவிடுவார்.
ஜே எஸ் கிளினிக் இப்போது பெரிய ஜே எஸ் ஹாஸ்பிடலஸ் சங்கிலியாக உருவாகி விட்டிருந்தது. சாந்தி நகர் ஹாக்கி ஸ்டேடியம் பக்கம் இருக்கும் நான்கு மாடி கட்டிடத்தில் ஹெட் ஆபீஸ் எல்லாம் கொண்டு வந்துவிட்டார்கள். மூன்றாம் தளம் முழுவதும் அம்மாவின் ராஜ்யம்தான். சீஃப் ஆப்பரேட்டிங் ஆபிசர்.
‘மேடம் மீட்டிங்க்ல இருக்காங்க. நீங்க வந்தா உள்ள அனுப்ப சொன்னாங்க’ என்ற பவ்யமான உபசரிப்புகளுக்கு மத்தியில் அம்மாவின் ஆளுமையின் பரிமாணம் வெகுவாக மாறியிருந்தது. இது வேறு கல்யாணி.
நந்தினியிடமிருந்து முப்பத்தி ஏழாவது மெசேஜாக ‘அம்மாவோட கொஞ்சி முடிச்சாச்சா? சீக்கிரம் கிளம்பி வா’ என்று வந்தது.
‘அதுக்குள்ள போகனுமா என்ன? வெங்கடப்பா காலரில எக்ஸிபிஷன் இருக்காம்டா. நீயும் கூட வாயேன். சின்னதா ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்’ என்றாள் அம்மா. அதே சிரிப்பு.
இதோ கருடா மாலில் இருந்து அரைக்கிலோமீட்டரில் ரெசிடென்ஸி ரோடு. அங்கிருந்து இருபது நிமிடத்தில் நடந்தே போய்விடலாம். அம்மா கார் டிரைவருக்கு போன் செய்து நேரே ஆர்ட் கேலரிக்கு வரச் சொல்லிவிட்டாள். தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு விற்பனைகள் நாலாபுறமும் சூழ்ந்திருக்க, சாலைகள் எங்கும் மக்கள் கூட்டம் திமிலோகப்பட்டுக் கொண்டிருந்தது. அம்மா நிறைய பேசிக் கொண்டும் அவன் நிறையக் கேட்டுக் கொண்டும் நடந்தார்கள். வழியில் சர்ச் ஸ்ட்ரீட் சாலையோரக் கடையில், கறுப்பு புட்டாக்கள் போட்ட வெள்ளை ஸ்கார்ஃப் ஒன்று அம்மா வாங்கினாள். அவன் காசு கொடுக்க முன்வந்தபோது பார்வையாலே கடிந்து கொண்டு அவளே காசு கொடுத்தாள். சுற்றுப்புற கொண்டாட்டங்களை விட அம்மாவின் அண்மைதான் அவனுக்கு தீபாவளியை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது.
எத்தனையோ விதவிதமான தீபாவளிகளைப் பார்த்தாகிவிட்டது. சற்றே பெரிய சைஸில், மொடமொடப்பான புதுச்சட்டையை அணிந்து கொண்டு அப்பாவோடு அணுகுண்டுகளை சேர்த்து வைத்து வெடித்த தீபாவளி அவனுக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. சேவியர் பள்ளியின் மிஸஸ் பிரகாசம் அப்பாவிடம் தரச்சொல்லி கொடுத்துவிட்ட டிசியோடு சாம்ராஜ்பேட்டை அரசுப் பள்ளியில் அவன் சேர்ந்த்தும் ஒரு தீபாவளி சமயம்தான். கணேசலிங்கம் மாமாவின் மோட்டார் பைக்கை வித்து மொசறு ரங்காவின் கந்துவட்டி கடனைத் தீர்த்ததும், அதனால் அப்பாவும் அம்மாவும் பேசிக்கொள்ளாமல் கழித்த தீபாவளி ஒன்றும் உண்டு. மழை நசநசத்துக் கொண்டிருந்த தீபாவளி ஒன்றில் அப்பாவால் நன்பகல்வரை எழுந்திருக்க முடியாமல் போனது. நழுவிப் போகும் கனவுகளை துரத்திப் பிடிக்க முடியாமல், அப்பா குடிக்க ஆரம்பித்திருந்த நாட்கள் அவை. முதல்நாள் இரவு முழுவதும் மொடாக்குடி.
‘எல்லாத்துக்கும் நாந்தான் காரணமா?’ அம்மா இடுப்பில் கைவைத்துக் கொண்டு கேட்க, குரோதத்ததுடன் அப்பா அவளை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த பண்டிகை நாளும் ஏதோ ஒரு தீபாவளியாக இருந்திருக்கும். அந்த சபிக்கப்பட்ட தீபாவளிக்கு அப்புறம் எந்த தீபாவளியும் அவனுக்கு நினைவில்லாமல் போனது. அன்றுதான் அம்மா வீட்டைவிட்டு வெளியே போய்விட்டிருந்தாள். அதற்கு முதல் நாள்தான் ஞானப்பிரகாசம் மாமா வீட்டிற்கு வந்திருந்தார். பட்டுப்போன உறவுகள் மீண்டும் துளிர்க்க தொடங்கிய காலம். அம்மா படபடத்தபடி காற்றில் நடனமாடும் வண்ணத்துப்பூச்சி போல சிறகடித்துக் கொண்டிருந்தாள். அவ்வளவு மகிழ்ச்சி. ஆனால் குடிபோதை தளும்பிய மனதில் அப்பாவுக்கு கழிவிரக்கம்தான் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.
‘அதாரு… அந்த பொம்பளப் போலீசு ஒருத்தி… அவ பேரு என்னா? இரட்டை லத்திய வச்சு தோ… இங்க குண்டிலயே போட்டு சாத்து சாத்துன்னு சாத்தினாளே. இவன் சொல்லித்தானே அடிச்சா. உனக்கு எல்லாம் மறந்து போச்சுல்ல’. வீட்டுக்குத் தெரியாமல் அப்பாவும் அம்மாவும் காதலித்துக் கொண்டிருந்த காலத்தில், அவர்களை அடக்கி வைக்க கையாளப்பட்ட உத்திகளில் ஒன்றுதான் அந்த போலிஸ் தடியடி. மாமா, அம்மாவிற்கு கொஞ்சம் சுற்றி வளைத்த உறவு என்றாலும், செல்வாக்கு அதிகமானவர். போலிசும் கொடுத்த காசுக்கு அதிகமாகவே அப்பாவை போட்டு தாளித்து எடுத்துவிட்டனர். நினைவுகள் தொலைந்துபோனாலும் தழும்புகள் அவற்றை மீட்டுக் கொண்டுவந்துவிடுகின்றன.
மாமா வந்துவிட்டுப் போன தீபாவளிக்கு முதல் நாள். அன்றிரவு, சிறுநீர் முட்டியதால் அரைதூக்கத்தில், படுக்கையில் இருந்து எழுந்த அவன் பாத்ரூம் போக அறைவாயிலுக்கு வந்தபோது அப்பாவின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. முதலில் அவனுக்கு, கூடத்தில் தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்த அம்மாவைத்தான் பார்க்க முடிந்தது. அப்பா எதிரில் உட்கார்ந்திருக்க வேண்டும். நடுவில் இருந்த மேஜையில் மாமா கொண்டு வந்த ஆரஞ்சு வண்ண ஸ்வீட் பெட்டி இருந்தது. அதுதான் அப்பாவின் நரம்பை நசித்து சீண்டிக்கொண்டிருந்தது போல. அந்த ஸ்வீட் பெட்டியை எடுத்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டோ, அல்லது அன்றைக்கு செய்திருந்த மீன் குழம்பை சாப்பாடு தட்டோடு சுவரில் விசிறியடித்தோ, காண்பாரற்று படம் காட்டிக் கொண்டிருந்த டிவியை உடைத்தோ, அப்பா கொஞ்சம் ஆசுவாசமடைந்திருக்கலாம். போஸ்டல் கவர் கிழிக்கும் மொண்ணை கத்தியை எடுத்து அம்மாவைக் குத்திக் கூட இருக்கலாம். அவரே அந்த கீறலுக்கெல்லாம் மருந்துப் போட்டு ப்ளாஸ்திரி ஒட்டிவிட்டு விசிறியால் விசிறிவிட்டு சிசுருஷைகள் செய்திருப்பாரா இருக்கும். ஆனால் தொண்டையில் சிக்கிய முள்ளை விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல், கமறி கமறி இருமும் அவஸ்தையில் கத்திக் கொண்டிருந்தார்.
‘நினச்சேன். டென்ஷன் ஆவீங்கன்னு நினச்சேன். மாமா வந்துவிட்டுப் போனதையே சொல்லியிருக்க கூடாது’
‘சொல்லாதே. எனக்கு எதுவும் தெரிய வேணாம். நான் எப்பவும் போல முட்டாளாவே இருந்திடறேன். எப்படியெல்லாம் நான் அவமானப்பட்டேன்னு உனக்கு மறந்து போச்சு.’ அப்பா அரற்ற ஆரம்பித்திருந்தார்.
‘எப்பவும் இப்படித்தான் தேவையில்லாம கத்திட்டிருக்கீங்க. நரகமாயிட்டிருக்கு என் வாழ்க்கை’
‘எனக்கு வாயிருக்கு. கத்தறேன். உம்புள்ள மாதிரி நானென்ன ஊன பரம்பரையா? ‘ அப்பா டீப்பாயை விட்ட ஒரே எத்தில், வண்ணமயமான இனிப்புகள் பறந்து விழ ஆரஞ்சுப் பெட்டி தெறித்து தூரப்போய் விழுந்தது.
‘ஊமைக்குஞ்ச பாக்க ஊமயன் ஓடி வன்ட்டானாம். அதுக்கு நாமல்லாம் சுவீட்டு சாப்பிடனுமாம்.’
அம்மா அப்போதுதான் அறைவாயில் கால்மாற்றி கால்மாற்றி நின்றுகொண்டிருந்த அவனைப் பார்த்தாள். அம்மாவைப் போல அவனும் பயந்து போயிருந்தான். அடக்கமாட்டாமல் சிறுநீர் பெருகி ஓட, கூடவே அப்பாவின் புலம்பலும் ‘ஊன பரம்பரைல நான் பொறக்கல… எனக்கும் வாயடைச்சுப் போகல’ கூடமெங்கும் வழிந்தோடிப் போனது.
மறுநாள் அம்மா இல்லாத வீட்டில்தான் அவர்கள் விழித்தார்கள். ஊரெல்லாம் தீபாவளி கொண்டாட்டமாக இருக்க, அப்பாவுக்கு இரவு என்ன நடந்தது என்பது கூட நினைவில் இல்லை.
‘என்னதான் சண்டையா இருக்கட்டும். அதுக்காக எட்டுவயசுப் புள்ளய தவிக்க விட்டுட்டு போற அளவுக்கு உம்பொண்டாட்டிக்கு திமிரு கூடாதுடா’என்றார் கணேசலிங்கம் மாமா. அதற்கப்புறம் அவன் கேட்டதெல்லாம் அம்மாவைப் பற்றிய வசைகளும் மோசமான விமர்சனங்களும்தான். ‘குடும்பப் பொண்ணுக்கு இத்தன ஆங்காரம் ஆகாதுடா’. கோர்ட் கஸ்டடி, விவாகரத்து என்று எல்லாவற்றிலும் அம்மா ஓரணியிலும், மற்ற எல்லோரும் வேறு அணி.
‘அந்த டாக்டர் என்னமோ டக்-னு வேல போட்டுக் கொடுத்திட்டான்னு நினக்காத. இதில என்னமோ முன்னமேயே மேட்டர் நடந்திருக்கு. இந்த திமிரெல்லாம் குடும்பத்துக்கு ஆவாது’ என்று புதுப்புது காரணங்கள், உண்மைப் போன்ற விவரணையுடன் முழு உருவகம் பெற்று உலவ ஆரம்பித்தன. குழந்தையை விட்டுவிட்டால் அம்மாவின் டிகிரியில் ரெஜிஸ்டர் ஆகியிருக்கும் கடையும் போய்விடும் என்பதால் அப்பாவின் உறவுகள் சாமர்த்தியமாக காய் நகர்த்தி கஸ்டடியை அப்பாவிற்கு சாதகமாக வாங்கிவிட்டார். அம்மா அதை எதிர்பார்த்திருந்தாள் என்றாலும், ஒன்றும் செய்ய முடியவில்லை. வதந்திகளுக்கு மேலும் மதிப்பு கொடுக்க வேண்டாம் என சும்மாயிருந்து விட்டாளாக இருக்கும்.
பிறகு அப்பாவின் உலகம் முழுவதும் அவருடைய நண்பர்களும், குழந்தையாக இருந்த அவனும் என சுருங்கிப்போனது. அம்மாவின் புகைப்படங்கள், புடவை, நகை, சீப்பு, ஸ்டிக்கர் பொட்டு என்று எதுவுமே இல்லாமல் மொத்தமாக ஒழித்துப் போட்டுவிட்டார். ஆனால் அவர் அம்மாவைத்தான் எல்லா இடங்களிலும் பார்த்துக் கொண்டேயிருந்தார் என்று அவனுக்குத் தோன்றியது. அவனிடம் தங்கிப் போன ஒரே படமும், அம்மா ஜேஎஸ்ஸை திருமணம் செய்துகொண்டபோது பத்திரிகையில் வெளிவந்த படம்தான்.
‘இங்க பார் எட்வர்ட் முன்ச்சோட ஸ்க்ரீம் பத்தில்லாம் Hand-outs போட்டிருக்காங்க. அந்தப் படத்த மொதமொதல்ல பாத்தப்ப வீடு முழுசும் அதை மாட்டி வைக்கனும்னு நினச்சேன்’ காதைப் பொத்திக் கொண்டு அம்மா சொன்னாள்.
இன்னொரு ஜியாமெட்ரிகல் அப்ஸ்ட்ராக்ஷன் படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது நந்தினியிடமிருந்து நாற்பத்தைந்தாவது டெக்ஸ்ட் மெசேஜ் வந்தது. ‘நான் வீட்டுக்கு வந்தாச்சு. நீ எப்போ வர்ற’
மிக அருகே ‘அட் யுர் சர்வீஸ் மேடம்’ என்று குரல் கேட்க, திடுக்கிட்டு திரும்பினால், அம்மாவின் அருகில் புன்சிரிப்போடு நின்றிருந்தார் ஜேஎஸ்.
‘நீங்களா? முத்துகிருஷ்ணன் வரலயா? அவனத்தானே காரெடுத்துகிட்டு வரச் சொன்னேன்’ என்றவளை அமைதிபடுத்தும் வகையில் மெலிதாக அணைத்துக் கொண்டவர் ‘உனக்காக வருவது என்பது என் பாக்கியம் டியர்’ என்றார். அம்மா சிரித்தாள்.
அம்மா வீட்டைவிட்டு கிளம்பிப் போன தீபாவளிதான் ஜேஎஸ் மருத்துவமனைகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்த தீபாவளி. அவருக்கிருந்த மருத்துவமனை தொடர் கனவுக்கு உயிர்வந்ததற்கு பலவகையிலும் அம்மா ஒரு காரணம்.
‘டைவர்ஸ் ஆர்டர் வந்த ரெண்டே மாசத்தில் கல்யாணம் பண்ணனும்னு என்ன அவசரம்னேன்? பங்காளிங்க செத்துப் போனாக்கூட தீட்டு, தெளிப்புன்னு ஆறுமாசமாவது வெயிட் பண்ண மாட்டாங்க.’ நந்தினியின் கேள்விகளுக்கு அவன் என்னவென்று பதில் சொல்ல.
ஸ்டேண்டட்டின் இரண்டு மீள் உருவாக்கப்பட்ட ஓவியங்களை விலைபேசிவிட்டு ஜே எஸ்ஸும் அம்மாவும் கிளம்பினார்கள்.
‘நந்தினிக்கு என் அன்பை சொல்’ என்றாள் அம்மா. அப்படியொரு வாய்ப்பு அமைந்தால் சொல்லிவிடலாம்தான் என்று நினைத்துக் கொண்டான். கேலரியின் வாயிலைக் கடக்கும்போது கைப்பையில் எதையோ சோதித்துக் கொண்டிருந்தவள் திரும்பி அவனை ஒருமுறை பார்த்து சிரித்தாள். கையைக் காட்டி கூப்பிட்டால் அவனும் அப்படியே போயிருப்பான்.
அந்த சபிக்கப்பட்ட தீபாவளியின்போது நனைந்த நிஜாருடன் அவன் இருந்தபோது அம்மா கூப்பிட்டது அவன் நினைவுக்கு வந்தது. அன்று அவன் போகவில்லை. சோபாவில் சரிந்திருந்த அப்பாவிடம் ஒண்டிக் கொண்டு நின்றுவிட்டான். ஒருவேளை அன்று அம்மாவோடு அவன் கிளம்பிப்போயிருந்தால் இன்று நந்தினியின் இத்தனை கேள்விகளுக்கும் அவனே விடையாகி போயிருப்பான். இனி அடுத்த தீபாவளிவரை நந்தினியின் கேள்விகளும் அம்மாவின் தரப்பிற்காக அவன் சொல்லாத விடைகளும் அவனோடுதான் இருக்கும்.
The irony of the story lies in the handicapped boy choosing to stand by his father even though he was criticized by his own father. Might be that he chose to love the hater rather than hate the lover his mother. Very nice.