மருத்துவ பாலபாடம் – சட்டியும் அகப்பையும்

விஜய்

கோவைக்கு தென்மேற்கே கேரள எல்லைக்கு அருகில் ஒரு மிஷன் ஆஸ்பத்திரியில் நான் ஜூனியர் சர்ஜனாக பணியாற்றிக் கொண்டிருந்த காலம் அது. கெஷுவால்ட்டி என்று சொல்லப்படும் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு வரும் நோயாளிகளை கவனித்துக்கொள்ள வேண்டியது என் பொறுப்பு. பெயரளவில் கெஷுவால்ட்டி சர்ஜனாக இருந்தாலும் அப்பொழுது அங்கே இருந்த சூழ்நிலையில் என் பொறுப்புகள் இன்னும் அதிகமாக இருந்தன. எம்.பி.பி.எஸ் படிப்பு முடித்து அறுவை சிகிச்சை அனுபவம் பெற எங்கள் பிரிவில் வேலை செய்துகொண்டிருந்த இரண்டு இளம் மருத்துவர்களை கண்காணிப்பதும் அவர்களுக்கு அறுவை சிகிச்சையின் நுணுக்கங்களை சொல்லிக் கொடுப்பதும் என் முழுநேரப் பொறுப்பாக இருந்தது. அனெஸ்தடிஸ்ட் இல்லாத பல சமயங்களில் நானே மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சையும் செய்திருக்கிறேன். என்னால் தனியாக சிகிச்சையளிக்க முடியாத  தருணங்களில் மருத்துவமனையின் சீனியர் சர்ஜனை அழைப்பேன். அவர் பாலக்காட்டில் உள்ள தலைமை மருத்துவமனையிலிருந்து வந்து அறுவை சிகிச்சை செய்து முடிப்பார். காயத்திற்கு தையல் போடுவது, ஒட்டுக்குடல், ஹெர்னியா, சிசேரியன் போன்ற சிக்கலில்லாத மைனர் அறுவை சிகிச்சைகள்தான் பெரும்பாலும் எங்கள் மருத்துவமனைக்கு வரும், அவற்றை என் இரண்டு உதவியாளர்களும் நானும் செய்து முடித்துவிடுவோம்.

பொள்ளாச்சிக்கும் பாலக்காட்டுக்கும் நடுவில் ஒரு கிராமத்தில் எங்கள் நிறுவனத்தின் சிறு கிளை மருத்துவமனை ஒன்று இருந்தது. அங்கே முழு நேர மருத்துவராக பொள்ளாச்சிக்காரர் மருத்துவர் முத்துராசா இருந்தார். அங்கிருந்த அடிப்படை வசதிகளுக்குமேல் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை எங்கள் மருத்துவமனைக்கோ அல்லது பாலக்காட்டு தலைமை மருத்துவமனைக்கோ ஆம்புலன்ஸில் அனுப்பி வைப்பார்.

ஒரு அதிகாலைப் பொழுது வயிற்று வலி என்று வந்திருந்த ஒருவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சிறுநீர் குழாயில் கல் இருப்பது போல் இருந்தது. அதை உறுதிப்படுத்த ஸ்கேன் செய்ய வேண்டும். மேலே தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சின்ன போர்டபிள் ஸ்கேன் மெஷினை எடுத்து வர ஆள் அனுப்பிவிட்டு காத்திருந்தேன்.

அப்பொழுது எங்கள் கிளை மருத்துவமனையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மருத்துவர் முத்துராசா பதற்றமாகப் பேசினார்: “சார், இங்க பக்கத்துக் காட்டுக்காரர் ஒருத்தரத் தூக்கியாந்திருக்காங்க, விடியால தண்ணி காட்டும்போது மாடு முட்டீருச்சாம். நல்ல கூமாச்சியான கொம்பு சார், கழுத்துலியே குத்தியிருக்கு, கொடகொடன்னு ரத்தம் போகுது சார். பார்த்தா டார்க் ரெட்டா வெயினிலிருந்து வர்ற ரத்தம் மாதிரி இருக்கு. வரும்போது முழிச்சிருந்தாரு ஆனா அரை மயக்கத்தில் இருந்தாரு, பல்ஸ் நூத்து இருபது நூத்து நுப்பது இருந்துச்சு, ப்ரெஷர் தொண்ணூறுக்கு அறுபது இருந்துச்சு.”

படபடவென்று பேசிக்கொண்டிருந்தவர் கொஞ்சம் மூச்சு வாங்க நிறுத்திவிட்டுத் தொடர்ந்தார், “ஜுகுலர் வெயின் கிழிஞ்சிருக்கும்ன்னு சந்தேகப்பட்டு அப்பவே ரெண்டு பேட் வச்சு டைட்டா கட்டி, நர்ஸை அழுத்திப் பிடிக்கச் சொல்லீட்டேன் சார், ரெண்டு ஐவி லைன் ஆரம்பிச்சு, ஒன்னுல சலைனும் இன்னொன்னுல ஹீமாக்சலும் ஆரம்பிச்சுட்டேன் சார்.

“இதெல்லாம் பண்ணி மிடிச்சிட்டு பாக்கறப்ப பல்ஸ் வீக்காயிருச்சு சார், மறுக்கா பார்க்கும்போது எளுபது சிஸ்டாலிக், டயஸ்டாலிக் கிடைக்கலை சார்.”

“இப்ப நான் இவர அங்க அனுப்பியே ஆகோணும், ஆனா ஒங்ககிட்ட வந்து சேர்றவரைக்கும் தாங்குவாரான்னு தெரியல, என்ன சார் செய்யறது?”

அவர் பேசுவதைக் கேட்கும்போதே எனக்கு பல்ஸ், ப்ரெஷர் எகிறியிருந்தது. என்னுடைய பதட்டத்தை அடக்கிக்கொண்டு, நிதானமாக அவருக்கு அறிவுரை சொல்ல வேண்டும் என்று தொடங்கினேன். “ராசா, மொத வேலையா ஓடீட்டிருக்கற சலைன், ஹீமாக்சல் ரெண்டையும் புல் ப்ளோவுல போக விடுங்க, முடிஞ்சதும் இன்னொரு  ஹீமாக்சல், ஒரு ரிங்கர்ஸ் போட்டு விடுங்க.

“ஆம்புலன்ஸ் ரெடியா இருக்கில்ல?”

“ஆமா சார், ரெடியா இருக்குது.”

“சரி, அங்கிருந்து வர கொறஞ்சபச்சம் 40 நிமிசமாவும், அதுவரைக்கும் ஹார்ட் அரெஸ்ட் ஆவாம பாத்துக்கோணும். வெண்டிலெஷனுக்கு ஈ.டி. ட்யூப் போட்டுருங்க, கொஞ்சம் பொறுப்பான நர்ஸை ஆம்பு பேக் அழுத்த கூட அனுப்புங்க.”

“சரிங்க சார்.”

“ராசா, ஈ.டி. ட்யூப் போட்டதும் முக்கியமா நீங்க இன்னொன்னு செய்யோணும்.”

“சொல்லுங்க சார்,”

“கழுத்துல அடிபட்ட எடத்துல ப்ரெஷர் பேண்டேஜ் போட்டிருக்கீங்கில்ல?”

“ஆமா சார்,”

“அதை அவுத்துட்டு சீக்கிரமா அந்தக் காயத்தை எக்சாமின் பண்ணுங்க, கூமாச்சியான கொம்பு குத்துச்சுன்னு சொன்னீங்க, சிங்கிள் பாயிண்ட் என்ட்ரியாத்தான் இருக்கும், ஜுகுலர் வெயின் கிழிஞ்சிருக்கற இடத்தைக் கண்டுபிடிக்க முடியாட்டியும், அந்த குத்தின பாதைல ஒருத்தரை விரல் வச்சு அமுத்திப் புடிக்கச் சொல்லுங்க. கண்டிப்பா ப்ளீடிங் கொறையும். ரத்தப் போக்கு கொறஞ்சப்புறம் கட்டு கூடப் போட வேணாம், அப்படியே விரலை வச்சுக்கிட்டிருக்கச் சொல்லீட்டு பேஷண்ட ஆம்புலன்ஸ்ல அனுப்புங்க. புரிஞ்சுதா?”

“சரி சார், அப்படியே பண்றேன் சார்,” என்று சொல்லி தொடர்பைத் துண்டித்தார்.

ஆம்புலன்ஸ் வருவதற்குள் எங்கள் அவசர சிகிச்சை பிரிவை தயார் செய்யும் வேலையைத் தொடங்கினேன்.

கெஷுவால்ட்டியில் அப்போது என்னுடைய ஜூனியர்களில் ஒருவரான சுசீலா என்ற இளம் மருத்துவர் மட்டும்தான் இருந்தார். அவரிடம் “சுசி, மொத ராஜேஷ் எங்க இருக்கான்னு கண்டுபிடிச்சு ஒடனடியா இங்க வரச்சொல்லு, அப்புறம் வில்லேஜ் க்ளினிக் லேபுக்கு போன் போட்டு அங்கிருந்து நமக்கு இப்ப அனுப்பியிருக்கும் பேஷண்டோட பிளட் குரூப் என்னான்னு கேளு. ராசா ரெண்டு ஐ.வி. லைன் ஆரம்பிச்சிருக்கார், கண்டிப்பா லேப் டெஸ்ட்டுக்கு பிளட் சேம்பிள் அனுப்பியிருப்பார்.”

“சரிங்க சார்,” என்று சுசீலா தொலைபேசியைக் கையில் எடுத்தார்.

இன்னொரு எக்ஸ்டென்ஷனை நான் கையில் எடுத்து இரண்டாவது மாடியிலிருக்கும் ஆபரேஷன் தியேட்டர் எண்ணை அழுத்தினேன்.

“குட் மார்னிங், ஓ.டி., சொல்லுங்க,” என்றது சிஸ்டர் ரீனாவின் இனிமையான குரல்.

“குட் மார்னிங் ரீனா சிஸ்டர், டாக்டர் மதன் பேசறேன், நம்ம வில்லேஜ் க்ளினிக்லேர்ந்து ஒரு எமர்ஜன்சி கேஸ் வருது, ஜுகுலர் வெயின் கிழிஞ்சிருக்கற மாதிரி இருக்கு, உடனடியா சர்ஜரி பண்ணோணும். தியேட்டர் 2 ரெடி பண்ணுங்க. பிளட் குரூப் இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடும், சுசி கூப்பிட்டு சொல்லுவாங்க. அஞ்சாறு யூனிட் தேவைப்படும். குரூப் தெரிஞ்சதும் பிளட் பாங்க்ல சொல்லி ஏற்பாடு பண்ணுங்க.”

“ஓகே சார்.”

அதற்குள் சுசி அவளுடைய சக ஜூனியர் மருத்துவர் ராஜேஷை கண்டுபிடித்து செய்தியைத் தெரிவித்துவிட்டாள்.

“சார், ராஜேஷ் இன்னும் பத்து நிமிஷத்துல குவார்ட்டர்ஸ்லேர்ந்து வந்தர்றேன்னு சொன்னான்,” என்று என்னிடம் சொன்னாள்.

சுமார் முக்கால் மணி நேரம் கழிந்து வெகு விரைவாக மருத்துவமனையின் அவசர சிகிச்சை வாசலில் ஆம்புலன்ஸ் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. சில நிமிடங்களில் நான்கு பணியாளர்கள் சூழ ஒரு ஸ்ட்ரெச்சர் கெஷுவால்ட்டிக்குள் வந்தது.

இரு பணியாளர்கள் ஸ்ட்ரெச்சரைத் தள்ளிக்கொண்டு வந்தார்கள். நோயாளியின் மூக்கில் ஈ.டி. ட்யூப் இருந்தது. ஒரு நர்ஸ் அதில் இணைக்கப்பட்டிருந்த ஆம்பு பையை அழுத்திக்கொண்டிருந்தாள். ஒரு ஆண் செவிலியர் நோயாளியின் நெஞ்சை அழுத்திக்கொண்டிருந்தார்.

சில கண நேரத்தில் இவை அனைத்தையும் கவனித்த நான் இன்னும் இரண்டு விஷயங்களையும் கவனித்தேன்.

ஒன்று- ஸ்ட்ரெச்சரிலிருந்த நோயாளியின் கழுத்தின் இடது பக்கம் பாழென்று விரிந்திருந்த காயத்தைப் பார்த்தேன்.

இரண்டு – அந்தக் காயத்தில் இரத்தக்கசிவு எதுவும் தென்படவில்லை.

ஆம்பு போட்டுக்கொண்டிருந்த நர்ஸிடம், “அங்கேர்ந்து கெளம்பும்போது காயத்துல ப்ளீடிங் இருந்துச்சா சிஸ்டர்?” என்றேன்.

“இருந்துச்சு சார்,” என்றாள் அந்த இளம் நர்ஸ். நான் அவளையும் நோயாளியின் நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்த இளம் ஆண் செவிலியரையும் இன்றுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன். புதிதாக வேலைக்கு சேர்ந்திருப்பார்கள் போல.

ரைட்டு. சொதப்பல் எங்கே தொடங்கியது என்று புரிந்துகொண்டேன்.

அடுத்து, “ப்ளீடிங் எப்ப நின்னுச்சு, சிஸ்டர்?” என்றேன் அவளிடம்.

“ஆம்புலன்ஸ் கெளம்பி பத்து நிமிஷம் இருக்கும் சார், அப்பவே ப்ளீடிங் நின்னிடுச்சு,” என்று சொன்னாள்.

அந்த நொடியில் முடிவு தெரிந்துவிட்டது.

“ஆம்பு, செஸ்ட் கம்ப்ரெஷன் ரெண்டையும் நிறுத்துங்கப்பா,” என்று அவ்விரண்டு வேலைகளை செய்துகொண்டிருந்த பணியாளர்களிடமும் சொல்லிவிட்டு திரும்பினேன்.

“சுசி, ஒரு டெட் ஆன் அரைவல் டெத் சர்டிபிகெட் ரெடி பண்ணும்மா, அப்படியே பாடிய மார்ச்சுவரிக்கு அனுப்பீரு,” என்று சொன்னேன்.

 சுசி சற்றே அதிர்ந்தவளாக, “என்ன சார்…” என்று இழுத்தாள்.

இதுக்கு சட்டி அகப்பை பழமொழியத்தான் சொல்லோணும். ஒடம்புல இருக்கறது அஞ்சு லிட்டர் ரத்தம்,” என்று அவளைப் பார்த்து சொல்லிவிட்டு, ஸ்ட்ரெச்சரில் கிடந்த சடலத்தை ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டுத்  தொடர்ந்தேன். “தடுக்க எதுவும் செய்யாம இருந்தா எந்த ரத்தப் போக்கும் நிக்கத்தான் செய்யும். கடைசில.”

பி.கு.

 ஆங்கில மருத்துவப் பதிவுலகில் பாங்கி (Bongi) என்ற புனைப் பெயரில் எழுதிவரும் பதிவர் மிகப் பிரபலமானவர். தென் ஆப்பிரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் ஒரு சிறு நகரத்தில் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றிவரும் பாங்கி அவருடைய பணி அனுபவங்களை சிறுகதைகள் போல் வலைப்பதிவில் சில ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறார். மருத்துவப் பதிவுலகில் அறிமுகமாகி அதன் பின் வந்த பல சமூக ஊடகங்களில் நாங்கள் இருவரும் நண்பர்களாக உள்ளோம். சில மாதங்களுக்கு முன் அவருடைய வலைப்பதிவில் உள்ள கதைகளில் சிலவற்றை தமிழில் மொழிபெயர்த்து என் வலைப் பதிவில் வெளியிட அனுமதி கேட்டேன். அவர் உடனடியாக சம்மதித்தார். அவர் பதிவில் உள்ள தென் ஆப்பிரிக்க சூழலில் நடக்கும் கதைகளை அப்படியே மொழிபெயர்ப்பதைவிட நம் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி எழுதினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். இது அப்படிப்பட்டமுதல் மொழிபெயர்ப்பு/ தழுவல் முயற்சி.

மூலக் கதையை ஆங்கிலத்தில் படிக்க விரும்புபவர்கள் பாங்கியின் பதிவைப் படிக்கலாம். Surgical Principle Number 3: All Bleeding Stops  

3 comments

  1. It is a sad ending , but the Doctor tried his best to arrange everything.
    ஆமா அந்த சட்டி அகப்பை பழமொழியத்தான் கொஞ்சம் விபரமாக சொல்லுங்களேன்..

    சபா

  2. சூப்பரா இருக்கு! செமையா தமிழாக்கம் பண்ணியிருக்கீங்க! ஜாக்கிசான் படங்கள் சன்டிவியில் தமிழில் நாம் ரசிக்கும்படி டப்பிங் செய்திருப்பார்கள். அதே மாதிரி அருமையா எழுதியிருக்கீங்க. Reads like watching a House episode in a blog post form!

    amas32

  3. மொழிநடை நன்றாக இருந்தது. நிறைய எழுதுங்கள். முடிந்தால் கொஞ்சம் மகிழ்வான முடிவாக வையுங்கள், அப்படி மாற்றி எழுதினால், வெறும் மொழிபெயர்ப்பு என்று சொல்வதற்கு பதில் “வருவித்த மொழிபெயர்ப்பு (derived translation ?) ” என்று சொல்லிக் கொள்ளலாம்.

    ஆனால் பாடமாக எடுக்க வேண்டுமென்றால், இத்தகைய அதிர்ச்சி அளிக்கக் கூடிய முடிவுகள்தான் உதவுமோ !

Leave a reply to Saba-Thambi Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.