(Alejandro Zambra எழுதியுள்ள “Ways of Going Home” என்ற நாவலின் சில பகுதிகள்)
ஹாலில் இருக்கும் புத்தக அலமாரியைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. அது நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. “இங்கே லைப்ரரி இருப்பதால் உன் அம்மா படிக்கத் துவங்கி விட்டாள், நானும் படித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் உனக்கே தெரியும், எனக்கு சினிமா பார்க்கத்தான் பிடிக்கும்,” என்கிறார் அப்பா. அவர் கிளாடியாவைப் பார்ப்பதில்லை, மிகவும் கண்ணியமாக, கவனமாக நடந்து கொள்கிறார்.
மதியப்பொழுது, நிதானமான உரையாடலில் கழிகிறது- சில குறிப்பிட்ட கணங்களில், அது நாங்கள் குடித்துக் கொண்டிருக்கும் pisco sourகளின் ரிதத்திற்கு ஏற்ற வடிவம் எடுத்துக் கொள்கிறது. நாங்கள் கிளம்பவிருக்கும்போது என் அம்மா இறைச்சித் துண்டங்களையும் உருளைக்கிழங்குகளையும் எடுத்து வந்து டின்னர் செய்ய ஆரம்பிக்கிறாள் – மாற்று உணவாக வெஜிடேரியனும் சமைக்கிறாள்.
அம்மாவின் கேள்விக்கு, “நான் வெஜிடேரியன் அல்ல,” என்று கிளாடியா பதில் சொல்கிறாள்.
“இது வித்தியாசமாக இருக்கிறது, என் பிள்ளை எப்போதும் வெஜிடேரியன்களைதான் விரும்பியிருக்கிறான்,” என்கிறாள் அம்மா. எனக்கு கோபம் வருகிறது, ஆனால் கிளாடியா இயல்பாய், நெருக்கமாய்ச் சிரிக்கிறாள்.
அந்தச் சிரிப்புக்குப் பின்னரும், எங்கள் உறவைப் பற்றி விவரமாய் விசாரிப்பதை என் பெற்றோர் தவிர்க்கின்றனர். அவர்களுடன் போன் பேசும்போது, ஒருவரை நான் அழைத்துவரப் போகிறேன் என்று மட்டும்தான் சொல்லியிருந்தேன். என் தோழியை அறிமுகப்படுத்த விரும்புகிறேன் என்பது சுவாரசியமாகவோ இனிமையாகவோ இருந்திருக்கலாம். ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தை அப்படி பார்க்க முடியும் என்பதே எனக்குப் பிடிக்கவில்லை: பெற்றோருக்குத் தன் தோழியை அறிமுகப்படுத்தும் மகன். அது அல்ல, நாங்கள் வந்தது அதற்கல்ல. எதற்காக வந்திருக்கிறோம் என்பது எனக்குத் தெரியவில்லை, ஆனால் நாங்கள் வந்தது அதற்கல்ல.
சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து திருட்டு போய்க் கொண்டிருப்பதைப் பற்றி பேசுகிறோம். திருடன் இந்தப் பகுதியைச் சேர்ந்தவன்தான் என்று ஒரு பேச்சிருக்கிறது. எங்கள் பகுதியில் வளர்ந்த சிறுவர்களில் ஒருவன்தான் அவன். வெற்றி பெறாதவன். எப்போதும் ஏதோ திருட்டுத்தனம் செய்து கொண்டிருந்தவன். “நான் எதையும் திருடியதில்லை,” என்கிறார் என் அப்பா, திடீரென்று. “சிறுவனாய் இருந்தபோதுகூட திருடியதில்லை. நாங்கள் மிகவும் ஏழைகளாக இருந்தோம். மார்க்கெட்டில் ஒரு ஸ்டால் போட்டு காய்கறிகள் விற்றேன்.” அவர் கிளாடியாவைப் பார்க்கிறார், தன் குழந்தைப்பருவத்தின் கதையை ஆயிரக்கணக்கான தடவைகள் சொல்லியிருப்பது அவருக்கு நினைவு வருகிறது. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தான் திருடமாட்டார் என்று சொல்லிக் கொள்கிறார். அப்போது திருடுபவர்கள் சிலர் அவரது நண்பர்களாக இருந்தனர் என்று சொல்கிறார், “அவர்கள் என் நண்பர்கள். நான் அவர்களை நேசித்தேன், ஆனால் அவர்கள் இறுதியில் சிறைப்பட்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்,” என்று சொல்கிறார். “இல்லாவிட்டால் சமூகம் சீரழிந்துவிடும்.”
என் அப்பா எப்போது இந்த அளவுக்கு மாறிப் போனார் என்று நினைத்துக் கொள்கிறேன். அந்த எண்ணம் வந்ததும் அதை மறுக்கிறேன்: நிஜமாகவே அவர்தான் மாறியிருக்கிறாரா அல்லது எப்போதும் இப்படிதான் இருந்திருக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது. அவருக்கு கோபம் வர வேண்டுமென்று, “நான் திருடியிருக்கிறேன், நிறைய திருடியிருக்கிறேன்,” என்று சொல்கிறேன். அப்பா முதலில் சிரிக்கிறார்.
“ஆமாம், நீ என் பர்ஸிலிருந்து பணம் எடுத்தாய், ஆனால் அது திருட்டல்ல.”
“அது திருட்டுதான்,” என்று சீரியஸாக, ஒரு பிரகடனமாய்ச் சொல்கிறேன். “அப்பாவிடம் திருடினாலும் அது திருட்டுதான். அப்புறம் புத்தகங்களையும் திருடியிருக்கிறேன். ஒரு தடவை ஓரே வாரத்தில் பதினெட்டு புத்தகங்கள் திருடினேன்.” மிகை போலிருந்தாலும், உண்மை போலிருக்கும் என்பதால் பதினெட்டு என்று குறிப்பிட்டுச் சொல்கிறேன். ஆனால் உண்மையில் மூன்றுதான், குற்றவுணர்வு மிகவும் அதிகமாக இருந்ததால் அந்தப் புத்தகக்கடைக்கு நான் மீண்டும் போகவேயில்லை. ஆனால் நான் சொன்னதில் உறுதியாய் நிற்கிறேன், அதைத் திரும்பப் பெற்றுக் கொள்வதில்லை, அப்பா என்னைக் கடுமையாய் முறைத்துப் பார்க்கிறார். திருட்டுத்தனம் செய்யும் மகனை ஒரு அப்பா எப்படி பார்ப்பாரோ, அப்படி என்னை அவர் பார்க்கிறார்- ஏற்கனவே தன்னைவிட்டு விலகிப் போன மகன், ஜெயிலில் இருப்பவனை, வருகை தினச் சந்திப்பில் பார்ப்பது போல் பார்க்கிறார்.
அம்மா இந்த இறுக்கத்தைக் குறைக்க முயற்சி செய்கிறார். “வாழ்க்கையில் ஏதோ ஒரு சமயம் திருடாதவர்கள் யார்?” என்று கேட்கிறாள். கிளாடியாவைப் பார்த்துக் கொண்டே, தன் குழந்தைப்பருவ சம்பவம் ஒன்றைச் சொல்கிறாள். அவள் எப்போதாவது திருடியிருக்கிறாளா என்று கேட்கிறாள். திருடியதில்லை என்று பதில் சொல்கிறாள், கிளாடியா. ஆனால் வேறு வழியில்லை என்றால் அவள் திருடினாலும் திருடக்கூடும்.
தலை வலிக்கிறது என்று சொல்கிறாள் கிளாடியா. உள்ளே போய் படுத்துக் கொள்ளச் சொல்கிறேன். நான் குழந்தையாய் இருந்தபோது என்னுடையதாய் இருந்த அறைக்குச் செல்கிறோம். படுப்பதற்காக சோபாவை விரித்துக் கொடுத்துவிட்டு, கிளாடியாவை அணைத்துக் கொள்கிறேன்; அவள் படுத்துக் கொண்டு, கண்களை மூடுகிறாள், இமைகளில் மெல்லிய நடுக்கம். அவளை முத்தமிடுகிறேன், பரவாயில்லையாய் ஆனதும் நாம் போகலாம் என்று உறுதியளிக்கிறேன். “எனக்குப் போக வேண்டாம்,” என்று அவள் சொல்கிறாள், இதை நான் எதிர்பார்க்கவில்லை. “எனக்கு இங்கிருக்க வேண்டும் போலிருக்கிறது, நாம் இன்று இரவு இங்கே தூங்கியாக வேண்டும், ஏன் என்று கேட்காதே,” என்று சொல்கிறாள். அவள் உடம்புக்கு ஒன்றுமில்லை என்பது அப்போதுதான் தெரிகிறது. எனக்கு குழப்பமாக இருக்கிறது.
பழைய குடும்பப்படங்கள் கொண்ட ஆல்பங்கள் இருக்கும் சின்ன ஷெல்புக்குச் செல்கிறேன். இதற்குத்தான் இந்த ஆல்பங்கள் இருக்கின்றன, என்று நினைத்துக் கொள்கிறேன்: நாம் குழந்தைகளாய் இருந்தபோது சந்தோஷமாக இருந்தோம் என்று நம்மை நம்ப வைப்பதற்காக. நாம் எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம் எனபதை ஒப்புக் கொள்ளும் விருப்பம் நமக்கில்லை என்பதைக் காட்டுவதற்காக. அதன் பக்கங்களை மெல்லப் புரட்டுகிறேன். என் அப்பா ஒரு விமானத்திலிருந்து இறங்கும் மிகப் பழைய படம் ஒன்றை கிளாடியாவுக்குக் காட்டுகிறேன், அவரது தலைமுடி நீளமாய் வளர்ந்திருக்கிறது. மிகவும் கனமான, கண்களை மறைக்கும் லென்ஸ்கள் அணிந்திருக்கிறார்.
“டேபிளுக்குப் போ,” என்று சொல்கிறாள் கிளாடியா, அல்லது கேட்டுக் கொள்கிறாள். “நான் சில மணி நேரம் தனியாய் இருக்க வேண்டும்.” அவள் கொஞ்ச நேரம் என்றோ சிறிது நேரம் என்றோ சொல்வதில்லை. தான் சில மணி நேரம் தனியாய் இருக்க வேண்டும் என்று சொல்கிறாள்.
அம்மா மைக்ரோவேவில் மீண்டும் உணவைச் சுடவைக்கிறாள், அப்பா ரேடியோவில் கிளாசிக் ம்யூசிக் வாசிக்கும் ஸ்டேஷனைத் தேடிக் கொண்டிருக்கிறார்- எப்போதும் அதை அவர் விரும்பியதில்லை, ஆனால் டின்னர் சாப்பிடும்போது கேட்பதற்குத் தகுந்த இசை என்பது அவர் எண்ணம். ரேடியோவின் குமிழைத் திருகிக் கொண்டு அதனருகில் நிற்கிறார்; அவருக்கு மனம் சரிய்ல்லை, என்னைப் பார்க்கப் பிடிக்கவில்லை. “உட்காருங்கள் அப்பா, நாம் பேச வேண்டும்,” என்கிறேன், திடீர் அதிகாரத்துடன்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது 1985ஆம் ஆண்டு பூமி அதிர்ச்சியின் இரவு அவர்களுக்கு நினைவு இருக்கிறதா என்று என் பெற்றோரைக் கேட்கிறேன், எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் ரால் ஞாபகத்தில் இருக்கிறாரா என்று கேட்கிறேன். அம்மா பக்கத்து வீட்டுக்காரர்களையும் அவர்களது குடும்பங்களையும் குழப்பிக் கொள்கிறார், அப்பா ராலை துல்லியமாக நினைவு வைத்திருக்கிறார். “அவன் ஒரு கிறிஸ்டியன் டெமோக்ரட் என்று நினைக்கிறேன்,” என்கிறார், “அதைவிடத் தீவிரமான ஏதோ ஒரு விஷயமாக அவனைப் பற்றி வதந்திகள் இருந்தன”
“என்னது?”
“தெரியவில்லை. அவன் சோஷல்ஸ்டோ என்னவோ போலிருக்கிறது, கம்யூனிஸ்டாகக்கூட இருந்திருக்கலாம்.”
“தாத்தா மாதிரி அவரும் கம்யூனிஸ்டா?”
“என் அப்பா கம்யூனிஸ்ட் அல்ல. அவர் ஒரு தொழிலாளி, அவ்வளவுதான். ரால் அதைவிட ஆபத்தானவனாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இல்லை, எனக்குத் தெரியவில்லை. எப்படிப் பார்த்தலும் அவன் அமைதியானவனாகத்தான் இருந்தான். பினேரா தேர்தலில் ஜெயித்தால், ரால் கதை முடிந்தது. ஊழலும் குழப்பமுமான இந்த அரசாங்கப் பதவியில் இருந்தவர்களிடமிருந்து நிச்சயம் அவனுக்குரிய பங்கு நிறைய கிடைத்திருக்கும்”.
என்னைக் கோபப்பட வைப்பதற்காகவே இதைச் சொல்கிறார். அவரைப் பேச விடுகிறேன். அற்பத்தனமான, கசப்பான சொற்களை அவர் பேச விடுகிறேன். “இத்தனை வருஷங்களாக அவர்களுடைய கைகள் எங்கள் பாக்கெட்டுகளில் இருந்தன,” என்று சொல்கிறார். “Concertaciónல் இருப்பது ஒரு திருட்டுக் கூட்டம்,” என்கிறார். “கொஞ்சம் ஒழுங்கு வருவது இந்த நாட்டுக்கு நல்லது.”. இதன்பின் நான் காத்துக்கொண்டிருந்த, பயங்கரமான அந்தச் சொற்கள் வருகின்றன, நான் தாண்டிச் செல்லக் கூடாது என்று வைத்திருக்கிற, தாண்ட அனுமதி மறுக்கும் கோடு. “பினோஷே ஒரு சர்வாதிகாரி அது இது என்பதெல்லாம் சரிதான், அவர் சிலரைக் கொன்றார், ஆனால் அப்போது ஒரு ஒழுங்கு இருந்தது”.
அவரது கண்களைப் பார்க்கிறேன். எப்போது, என்று கேட்டுக் கொள்கிறேன், எப்போது என் அப்பா இப்படியானார்? அல்லது எப்போதும் இப்படிதான் இருந்தாரா? கடுமையான, வலிக்க வைக்கும் நாடகீயத்தன்மையுடன் இதைத் தீவிரமாக நினைத்துப் பார்க்கிறேன்: அவர் எப்போதும் இப்படிதான் இருந்தாரா?
அப்பா இப்படிச் சொல்வதை என் அம்மா ஏற்றுக் கொள்வதில்லை. உண்மையில், அப்பா சொல்வதை அவள் பெருமளவு ஒப்புக் கொள்கிறாள். ஆனால் இந்த மாலைப் பொழுது மோசமடைவதைத் தடுக்க ஏதேனும் செய்யப் பார்க்கிறாள். “உலகம் இப்போது எவ்வளவோ நன்றாக இருக்கிறது,” என்கிறாள். “எல்லாம் நன்றாக இருக்கிறது. மிஷெல் தன்னாலானதைச் செய்து கொண்டிருக்கிறாள்”.
அந்த ஆண்டுகளில் அவர் பினோஷே ஆதரவாளராக இருந்தாரா என்று என் அப்பாவிடம் கேட்பதைத் தவிர்க்க முடிவதில்லை. என் பதின்பருவம் துவங்கி இந்தக் கேள்வியை நூற்றுக்கணக்கான முறை கேட்டிருக்கிறேன், இப்போது பதில் எதிர்பார்க்காமல் கேட்கப்படும் கேள்வியாகவே இது ஆகிவிட்டது, ஆனால் அவர் அதை ஒப்புக் கொண்டதேயில்லை- ஒப்புக் கொண்டால்தான் என்ன? என்று தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகளாக ஏன் இதை மறுக்க வேண்டும், இன்னமும் ஏன் மறுக்க வேண்டும்?
என் அப்பா, மௌனமாய் குமுறிக்கொண்டு, ஆழ்ந்த அமைதியில் அமர்ந்திருக்கிறார். கடைசியாக, இல்லை என்று சொல்கிறார். அவர் பினோஷே ஆதரவாளர் அல்ல. யாரும் நம்மைக் காப்பாற்றப் போவதில்லை என்பது அவருக்கு குழந்தையாய் இருந்தபோதே புரிந்துவிட்டது.
“எதிலிருந்து காப்பாற்ற வேண்டும்?”
“காப்பாற்ற வேண்டும். உண்ண உணவு கொடுக்க வேண்டும்”.
“ஆனால் நீங்கள் சாப்பிட உணவு இருந்தது. நமக்கு சாப்பாடு இருந்தது”.
“அதைப் பற்றி ஒன்றுமில்லை,” என்கிறார்.
* * *
இந்த உரையாடல் தாளமுடியாததாய்ப் போகிறது. கிளாடியா என்ன செய்கிறாள் என்று பார்க்கச் செல்ல எழுந்திருக்கிறேன். அவளைத் தீவிரமாக உற்றுப் பார்க்கிறேன், ஆனால் அவள் கவனிக்காததுபோல் பக்கங்களைத் திருப்பிக் கொண்டிருக்கிறாள். இதற்குள், ஆல்பங்களில் பாதியைப் பார்த்து முடித்துவிட்டாள்.. அவள் அதன் பிம்பங்களைப் பார்வையால் உறிஞ்சுகிறாள், பெரும்பசியாய் உண்கிறாள். சிலசமயம் சிரிக்கிறாள், சில சமயம் அவள் முகம் அவ்வளவு இறுக்கமாவதில் என்மேல் சோகம் கவிகிறது. இல்லை, நான் உணர்வது சோகமல்ல; அச்சத்தை உணர்கிறேன்.
டேபிளுக்குத் திரும்புகிறேன்; வனில்லா ஐஸ் கிரீம் என் தட்டில் உருகிக் கொண்டிருக்கிறது. தாழ்ந்த, ஆனால் வேகமான குரலில் அவர்களிடம் பேசுகிறேன். நான் சொல்லும் விஷயங்கள் புரிந்து கொள்ள முடியாமல் போகிற அளவு வேகமாய் பேசுகிறேன். ராலின் மகள்தான் கிளாடியா என்பதைச் சொல்கிறேன், ஆனால் இத்தனை ஆண்டுகளாக அவள் அவரது சகோதரனின் பெண் என்று நடித்துக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. ராலின் நிஜப் பெயர் ராபர்ட்டோ என்று சொல்கிறேன். என்ன எதிர்பார்ப்பில் இதைச் சொல்கிறேன், தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது, எதையோ தேடுகிறேன்.
* * *
மிக நீண்டதாய் இல்லாத ஒரு சிறு அமைதிக்குப்பின், “இது கொஞ்சம் சிக்கலான கதை, ஆனால் நல்ல கதை,” என்கிறார் என் அப்பா.
“என்ன, கிண்டலா செய்கிறீர்கள்? இது என்ன நல்ல கதையா? இது ஒரு துயரக்கதை.”
“இது துயரக்கதைதான். ஆனால் அதெல்லாம் முடிந்துவிட்டது. கிளாடியா உயிரோடு இருக்கிறாள். அவளது பெற்றோர் உயிரோடு இருக்கிறார்கள்.”
“அவளது பெற்றோர் இறந்துவிட்டனர்,” என்கிறேன்.
“சர்வாதிகார ஆட்சியின்போது கொன்று விட்டார்களா?”
“இல்லை.”
“அப்படியானால் எப்படி இறந்தார்கள்?”
“மூளையில் ரத்தக்குழாய் வெடித்து அவளது அம்மா செத்துப் போனாள், அவளது அப்பா புற்றுநோயால் இறந்தார்.”
“கிளாடியா பாவம்,” என்கிறாள் என் அம்மா
“ஆனால் அவர்கள் அரசியல் காரணங்களுக்காகச் சாகவில்லை,” என்கிறார் என் அப்பா.
“ஆனால் அவர்கள் செத்துப் போய் விட்டார்கள்.”
“ஆனால் நீ உயிரோடு இருக்கிறாய்,” என்கிறார். “இவ்வளவு நல்ல கதையை நீ ஒரு புத்தகத்தில் பயன்படுத்திக் கொள்வாய் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்”.
“நான் அவர்களைப் பற்றி எழுதப் போவதில்லை. உங்கள் இருவரையும் பற்றி எழுதப் போகிறேன்,” என்கிறேன், என் முகத்தில் வித்தியாசமான சிரிப்பு. இப்போது இப்படி நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை. மீண்டும் மீண்டும் தன் பெற்றோரைக் குற்றம்சாட்டும் மகனாய் நான் இருப்பதை வெறுக்கிறேன். ஆனால் என்னால் இதைத் தவிர்க்க முடியவில்லை.
அப்பாவை நேருக்கு நேர் பார்க்கிறேன், அவர் தன் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார். பக்கவாட்டில் தெரியும் அவரது முகத்தைப் பார்க்கும்போது, அவர் அணிந்திருக்கும் காண்டாக்ட் லென்ஸ் ஒளிர்வதைப் பார்க்கிறேன், சற்றே சிவந்த அவரது வலக்கண்ணைப் பார்க்கிறேன். எனக்கு அந்தக் காட்சி நினைவிருக்கிறது, என் குழந்தைப்பருவத்தில் எண்ணற்ற முறை திரும்பத் திரும்ப நடந்ததுதான்: மண்டியிட்டிருக்கும் அப்பா, அப்போதுதான் கீழே விழுந்த காண்டாக்ட் லென்ஸைத் தவிப்புடன் தேடிக் கொண்டிருக்கிறார். அதைத் தேடிக் கண்டுபிடிக்க நாங்கள் அனவைரும் உதவுவோம், ஆனால் தானாகவே தேடி எடுப்பதை விரும்பினார். அதற்கு அவர் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது.
கிளாடியா ஆசைப்பட்டது போலவே நாங்கள் என் பெற்றோர் வீட்டில் தங்கினோம். காலை இரண்டு மணிக்கு எழுந்து காப்பி போடப் போகிறேன், ஹாலில் அம்மா mate குடித்துக் கொண்டிருக்கிறாள். அவள் எனக்கும் கொஞ்சம் தருகிறாள், நான் எடுத்துக் கொள்கிறேன். இதற்குமுன் இதுவரை அவளுடன் சேர்ந்து mate குடித்ததே இல்லை. அதில் சேர்க்கப்பட்டிருக்கும் இனிப்பின் சுவை எனக்குப் பிடித்தமில்லை, ஆனால் ஸ்ட்ராவை நன்றாக உறிஞ்சுகிறேன்; நாக்கைச் சுட்டுக் கொள்கிறேன்.
“நான் அவனைப் பார்த்து பயப்பட்டேன்,” என்கிறாள் என் அம்மா.
“யார்?”
“ரிக்கார்டோ. ரொடோல்போ”
“ராபர்ட்டோ”
“அவன்தான், ராபர்ட்டோ. அவன் அரசியல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருந்தான் என்பதை ஊகிக்க முடிந்தது”
“நாம் எல்லாரும் அரசியலில் சம்பந்தப்பட்டிருக்கிறோம் அம்மா. நீங்களும்தான். நீங்கள் இருவரும்கூடத்தான். விலகியிருந்த காரணத்தால் நீங்கள் சர்வாதிகாரத்தை ஆதரித்தீர்கள்.” என் பேச்சில் எதிரொலிகள் இருந்ததை என்னால் உணர முடிகிறது, அதன் வெறுமைகளை உணர்ந்து கொள்ள முடிகிறது. ஏதோ ஒரு நடத்தைக் குறிப்பேட்டில் சொல்லப்பட்டதற்கு ஏற்ப நான் பேசிக் கொண்டிருப்பதாய் உணர்கிறேன்.
“ஆனால் நாங்கள், உன் அப்பாவும் நானும், ஆலண்டேவுக்கோ அல்லது பினோஷேவுக்கோ ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ இருந்ததேயில்லை”.
“ராபர்ட்டோவைப் பார்த்து எதற்காக பயப்பட்டீர்கள்?”
“அது பயம்தானா என்று தெரியவில்லை. ஆனால் அவன் ஒரு தீவிரவாதியாய் இருந்தான் என்று இப்போது சொல்கிறாய்.”
“அவர் தீவிரவாதியல்ல. அவர் பதுங்க இடம் கொடுத்தார், ஆபத்தில் இருந்தவர்களுக்கு உதவி செய்தார். தகவல்களைத் திரட்டித் தரவும் உதவி செய்தார்”.
“உனக்கு அது ஒன்றும் பெரிதாய் இல்லை?”
“குறைந்தபட்சம் செய்யக்கூடியத்தை அவர் செய்திருக்கிறார் என்று தோன்றுகிறது”.
“ஆனால் அவரிடம் பதுங்கியிருந்தவர்கள் தீவிரவாதிகள். அவர்கள் குண்டு வைத்தார்கள். அவர்கள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தினார்கள். பயப்பட இந்தக் காரணம் போதும்.”
“சரிம்மா, ஆனால் சர்வாதிகார அரசுகள் ஏதோ சும்மா தாமாய் வீழ்வதில்லை. போராட்டத்துக்கான தேவை இருந்தது.”
“அதைப் பற்றியெல்லாம் உனக்கு என்ன தெரியும்? ஆலண்டே ஆட்சியில் இருந்தபோது நீ பிறக்கக்கூட இல்லை. அதெல்லாம் நடந்தபோது நீ ஒரு குழந்தையாய் இருந்தாய்”
* * *
இந்த பதிலை பலமுறை கேட்டிருக்கிறேன். நீ பிறக்கக்கூட இல்லை. இம்முறை இது காயப்படுத்துவதாக இல்லை. ஒரு வகையில் அது என்னைச் சிரிக்கச் செய்கிறது. அப்போதுதான் ஏதோ இதற்கும் அதற்கும் தொடர்பு இருப்பதுபோல் அம்மா என்னைக் கேட்கிறாள்:
“உனக்கு Carla Guelfenbein பிடிக்குமா?”
எப்படி பதில் சொல்வதென்று தெரியவில்லை. இல்லை என்று சொல்கிறேன். “அவர் எழுதும் புத்தகங்கள் எனக்குப் பிடிக்கவில்லை, அந்த மாதிரியான புத்தகங்கள் பிடிக்காது,” என்கிறேன்.
“சரி, நம் எல்லாருக்கும் ஓரே மாதிரியான புத்தகங்கள் பிடித்திருக்க வேண்டியதில்லை. அவரது நாவல், The Other Side of the Soul, எனக்குப் பிடித்திருந்தது. அதன் பாத்திரங்களோடு என்னை அடையாளப்படுத்திக் கொள்ள முடிந்தது. அது மனசுக்கு நெகிழ்வாக இருந்தது”.
“அம்மா, அது எப்படி முடியும்? வேறொரு சமூகத்தைச் சார்ந்த பாத்திரங்களோடு நீ எப்படி உன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும், உன் வாழ்க்கையில் உனக்கு பிரச்சினைகளாக இல்லாத, இருக்கவே முடியாத பிரச்சினைகளோடு உன்னை எப்படி நீ அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்?”
நான் சீரியஸாக, மெய்யாகவே தெரிந்து கொள்ளும் அக்கறையில் கேட்கிறேன். இவ்வளவு சீரியஸாகப் பேசக்கூடாது என்று தோன்றுகிறது. இது பொருத்தமல்ல. என் பெற்றோர் தங்கள் கடந்த காலத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ளச் செய்து நான் எதற்கும் தீர்வு கண்டுவிடப் போவதில்லை. ஒரு புத்தகம் பற்றி தன் கருத்தை சுதந்திரமாய்ப் பேச என் அம்மாவுக்கு இருக்கும் உரிமையைப் பறித்துக் கொண்டு நான் எதையும் சாதிக்கப் போவதில்லை. கோபமும் கருணையும் கலந்த உணர்ச்சிகளோடு அம்மா என்னைப் பார்க்கிறாள். கொஞ்சம் அலுப்பாகவும்.
“நீ சொல்வது சரியில்லை,” என்கிறாள். “அது எனது சமூகமாக இல்லாமல் இருக்கலாம், சரிதான். ஆனால் சமூகங்கள் நிறைய மாற்றம் கண்டிருக்கின்றன, எல்லாரும் அப்படிதான் சொல்கிறார்கள். அந்த நாவலைப் படித்து முடித்தபின், ஆம், இதெல்லாம் என் பிரச்சினைகள் என்பது போல் உணர்ந்தேன். நான் சொல்வது உனக்கு உறுத்தலாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்கிறேன், ஆனால் உனக்கு இன்னும் கொஞ்சம் சகிப்புத்தன்மை இருக்க வேண்டும்.”
“எனக்கு அந்த நாவல் பிடிக்கவில்லை என்றுதான் சொன்னேன். வேறொரு சமூகத்தைச் சேர்ந்த பாத்திரங்களுடன் நீ உன்னை அடையாளப்படுத்திக் கொள்வது வினோதமாக இருக்கிறது என்று சொன்னேன்.”
“அப்படியானால் கிளாடியா?”
“கிளாடியாவுக்கு என்ன?”
“கிளாடியா உன் சமூகத்திலிருந்து வந்தவளா? சொல், நீ எந்த சமூகத்திலிருந்து வந்தவன்? அவள் maipuவில் வளர்ந்தாள், அவள் இங்கிருந்து வந்தவள் அல்ல. அவள் நாகரிகமாக இருக்கிறாள். நீயும் எங்களைவிட நாகரிகமாக இருக்கிறாய். யாரும் உன்னை எங்கள் மகன் என்று சொல்ல மாட்டார்கள்.”
நான் அவள் கேள்விக்கு பதில் சொல்லும்முன் “மன்னித்துக் கொள்,” என்கிறாள் என் அம்மா, எப்படியும் என்னால் அந்தக் கேள்விக்கு பதில் சொல்லியிருக்க முடியாது. அவள் எனக்கு இன்னும் கொஞ்சம் mate ஊற்றுகிறாள், ஓரே தீக்குச்சியால் இரு சிகரெட்டுகளைப் பற்ற வைக்கிறாள். “உன் அப்பாவுக்குப் பிடிக்காது என்றாலும்கூட நாம் இந்த அறையில் சிகரெட் புகைக்கப் போகிறோம்.” எனக்கு ஒரு சிகரெட் கொடுக்கிறாள்.
“அது உன் தப்பில்லை,” என்கிறாள். “நீ சீக்கிரமே, உன் இளவயதில் வீட்டைவிட்டு வெளியே போய் விட்டாய், இருபத்து இரண்டு வயதில்”.
“அப்போது இருபது வயது, அப்பா”
“இருபது, இருபத்து இரண்டு, ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை. மிகவும் இளைய வயதில் போனாய். நீ வீட்டில் இருந்திருந்தால் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று சிலசமயம் நினைத்துப் பார்க்கிறேன். சில பையன்கள் இங்கேயே இருக்கிறார்கள். திருடும் அந்தத் பையன், உதாரணத்துக்கு அவனைச் சொல்லலாம். அவன் இங்கேயே இருந்தான், திருடனாகி விட்டான். மற்றவர்களும் இருந்தார்கள், அவர்கள் இப்போது என்ஜினியர்களாக இருக்கிறார்கள். அதுதான் வாழ்க்கை: நீ திருடனாகலாம், என்ஜினியராகலாம். ஆனால் நீ என்ன ஆனாய் என்பதை என்னால் நிஜமாகவே புரிந்து கொள்ள முடியவில்லை.”
“என் அப்பா என்ன ஆனார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை,” என்கிறேன், அந்தக் கேள்வி தன்னிச்சையாய் வந்து விடுகிறது.
“உன் அப்பா எப்போதும் தன் குடும்பத்தை நேசிப்பவராகவே இருந்திருக்கிறார். அப்படிதான் அவர் இருந்தார், அப்படிதான் அவர் இருக்கிறார்.”
“அம்மா, நான் இங்கு இருந்திருந்தால் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்?”
“தெரியவில்லை.”
“மோசமாக இருந்திருக்கும்,” என்று பதில் சொல்கிறேன்.
ஆம், என்று அம்மா தலையசைக்கிறாள். “நாம் தூரத்தில் இருப்பதே நல்லதாக இருக்கலாம்,” என்கிறாள். “நீ இப்படி இருப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. உன் நம்பிக்கைகளை நீ தக்க வைத்துக் கொள்வது எனக்குப் பிடித்திருக்கிறது. அந்தப் பெண், கிளாடியா, அவள் உன் சமூகமில்லை என்றாலும், உனக்காக அவளையும் எனக்குப் பிடித்திருக்கிறது.”
அவள் படுக்கப் போவதற்குமுன் சிகரெட்டை கவனமாய் அணைத்துவிட்டு, ஆஷ்ட்ரேவைக் கழுவி வைக்கிறாள். கதவைத் திறந்து, நிலையில் அமர்கிறேன். இரவைப் பார்த்துக் கொண்டிருக்க விரும்புகிறேன், நிலவைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும், ஊற்றிக் கொண்டு வந்த விஸ்கியை நீண்ட மடக்குகளில் விழுங்கி முடிக்க வேண்டும். என் பெற்றோரின் காரில் சாய்ந்து நிற்கிறேன், அது புதிய ஒரு ஹூண்டாய் ட்ரக். அதன் அலாரம் சத்தம் போடுகிறது, அப்பா எழுந்து வருகிறார். பைஜாமாவில் இருக்கும் அவரைப் பார்ப்பது மனதுக்கு நெகிழ்ச்சியாய் இருக்கிறது. நான் குடித்திருக்கிறேனா என்று கேட்கிறார். “கொஞ்சம்,” என்று தீனமாகச் சொல்கிறேன், “கொஞ்சம்தான்”
மிகவும் தாமதமாகிவிட்டது, காலை ஐந்து மணி. என் அறைக்குச் செல்கிறேன். கிளாடியா தூங்கிக் கொண்டிருக்கிறாள். அவள் அருகில் படுத்துக் கொள்கிறேன்; தூக்கத்திலிருந்து அவளை எழுப்ப நினைத்து நான் அசைந்து படுக்கிறேன், கொஞ்சமல்ல; நிறைய குடித்திருக்கிறேன். அறை ஏறத்தாழ முழு இருட்டில் இருந்தாலும் அவள் பார்வையை என் நெற்றியிலும் நெஞ்சிலும் உணர முடிகிறது. அவள் என் பின்னங்கழுத்தைத் தடவிக் கொடுக்கிறாள், நான் அவள் தோளைக் கடிக்கிறேன். “இந்த வாய்ப்பை நாம் விட்டுவிடக் கூடாது,” என்கிறாள், “உன் பெற்றோரின் வீட்டில் காதல் செய்வோம் வா.” அவளது உடல் இருளில் அசைகையில் வானம் வெளுக்கிறது.