அமெரிக்காவில் இப்பொழுது கொண்டாட்ட காலம். நன்றியறிவித்தலையொட்டி நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்து விருந்து கொடுக்கிறேன். கிறிஸ்துமஸ் விழாவையொட்டி அலுவலில் நடக்கும் களியாட்டுகளுக்குச் செல்கிறேன். ரொம்ப நாளாகத் தொடர்பில் இல்லாதவர்களையும் புத்தாண்டை முன்னிட்டு ஏதாவதொரு ஜமா சந்திப்பில் முகமன் சொல்லி சந்திக்கிறேன். கையில் போஜனம்; முகத்தில் புன்னகை; எப்பொழுதோ தொடர்பறுந்த கிரிக்கெட்டோ, யாரோ கண்டுபிடித்த ஆங்ரி பேர்ட்ஸ் நிரலியோ, ஏதோ ஒன்றை விவரித்து சாப்பாட்டை உள்ளே தள்ளுகிறேன்.
டிசம்பர் முதல் வார நியு யார்க்கரில் எட்கர் (Etgar Keret) எழுதிய ”ஒரு கிராம் குறைகிறது” (One Gram Short) இது போன்ற மனநிலை கொண்ட நாயகனையும் ஊட்டமற்ற சம்பாஷணையில் இயங்கும் வாழ்க்கையையும் சிறுகதை ஆக்குகிறது.
காபி கடையில் பணிபுரியும் பெண்ணை ஒருவன் விரும்புகிறான். அவளோடு திரைப்படம் பார்க்க ஆசைப்படுகிறான். ஆனால், “படம் போகலாம், வருகிறாயா?” என பட்டென்று கேட்டால், அது அவனது ஆசையைப் பட்டென்று போட்டு உடைத்து நிராகரிப்பிற்குக்கூட வழிவகுக்கும். அதனால், நாசூக்காக, மீசையில் மண் ஒட்டாமல் வினவ விரும்புகிறான். சினிமாவிற்கு பதில் போதை மருந்தடிக்க அழைக்க முடிவெடுக்கிறான். அவனுக்கு போதை சரக்கு எப்படி கிடைத்தது? அவள் அவனுடைய கேள்விக்கு என்ன பதில் சொன்னாள் என்பது பாக்கி கதை.
இங்கே படிக்கலாம்: One Gram Short, New Yorker
டட்ச்சு வீரம் (நெதர்லாந்து நாட்டவரின் – Dutch courage) புகழ் பெற்ற பதம். முதலாளியிடம் சம்பள உயர்வு கேட்க வேண்டுமா? நேரில் சென்று பேச பயமாக இருக்கும். கொஞ்சம் மதுவருந்திய பிறகு, அதே முதலாளியிடம் சென்று, கேட்கவேண்டிய சம்பள உயர்வை, போதையின் உதவியோடு எதிர் கொள்வதை நெதர்லாந்து நாட்டினர் போல் நடந்து கொள்கிறாய் என கிண்டலடிக்கிறார்கள்.
இங்கே டோப் அடிக்க அழைப்பதும் டட்ச்சு வீராப்புதான். “நான் அந்த மாதிரி போதை மருந்தெல்லாம் சாப்பிடுவதில்லை!” என்று சொல்லிவிட்டால், “நானும் உல்லுலுவாக்கட்டிக்குத்தான் அப்படிச் சொன்னேன்.” என மழுப்பி விளையாட்டாக்கிப் பேச்சை மாற்றி விடலாம். தன்னுடைய அழைப்பிற்கு ஒத்துக் கொண்டுவிட்டால், அதை முதல் படியாக வைத்துக் கொண்டு, காதல் கோட்டை எழுப்புவதற்கான அஸ்திவாரத்தை அமைக்கலாம்.
தமிழகக் கல்லூரிகளில் காதல் எப்படி முளைக்கிறது? தமிழ் சினிமா மட்டுமே பார்த்து வளர்ந்தவர் என்றால், பெண்களைத் துரத்துவதாலும், அவர்களின் பார்வையில் படும்படி உலாத்துவதாலும், அவர்களை பின் தொடர்வதாலும் ஆடவருக்கும் மகளிருக்கும் அன்பு பிறக்கிறது என நினைத்திருப்போம். ஆனால், உண்மையிலேயே, இந்தியாவில் காதல் எவ்வாறு அரும்புகிறது? சந்தேகாஸ்தாபமில்லாமல், சங்கோஜமில்லாமல் நட்பும், நட்பின் பின் சென்று தொடர்ச்சியான வளர்ச்சியாக காதலும் எவ்வாறு உருவாகிறது?
நியு யார்க்கரில் வெளிவந்த சிறுகதையின் பேசுபொருள் அதுவல்ல என்பதால், இந்த ஆராய்ச்சியை இன்னொரு முறை வைத்துக் கொள்வோம். ஆனால், மேலை நாடுகளில் நேசத்தைப் பகிர போதையைப் பகிர்வது சகஜமான கால்கோள் வாய்ப்பாக இருக்கிறது. சூழலை இளக்கவும், பரஸ்பரம் கைவிரல்களின் நுனிகளை இயல்பாகத் தொடவும், சொக்குப்பொடி வைத்தியமாக உதவுகிறது. அவனுக்கும் அதுதான் எண்ணம். போதை மருந்தை உட்கொள்வது சட்டப்படி குற்றம். அதை இருவரும் செய்வதன் மூலம் ஒருவருக்கொருவர் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். மதுவருந்துவதை விட இணக்கமான நிலை; அதே சமயம் பாலுறவை விட மயக்கமான நிலை.
ஆனால் இந்த மயக்க நிலை மிதமிஞ்சிப் போய் சில சமயம் டேட் ரேப் போன்ற குற்றங்களும் நடக்கின்றன, இதைப் பார்க்கும்போது, சரியான சமயத்தில் இரு பூக்கள் தோன்றி உரசிக் கொள்ளும் பார்க் பெஞ்ச் காதல் எவ்வளவோ புனிதமானது- எனவே தமிழ் சினிமாவுக்கு மாற்றாக இதை ஒரு கால்கோள் வாய்ப்பாக நம்மூருக்கும் பரிந்துரைப்பதாகக் கொள்ள வேண்டாம்
இப்படி காதலையும் போதையையும் மட்டும் பேசியிருந்தால் சாதாரண திரைப்படம் போல் இந்தக் கதையும் பத்தோடு பதினொன்றாகி இருக்கும். பசலை நோயைக் கொண்டு புனைவைத் துவங்கியபின், மின்னல் வேகத்தில் இஸ்ரேலின் அரசியல் சூழலையும், சட்டத்தின் சஞ்சலங்களையும் இணைக்கும் லாகவத்தில்தான் இந்தச் சிறுகதை முக்கியம் பெறுகிறது.
இது ஹீப்ரு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் கண்டிருக்கிறது. இவ்வாறு மொழியாக்கம் செய்யப்பட்ட படைப்பு என்பதை புத்தகத்தின் இறுதியில், நூற்குறிப்பு கொண்டு மட்டுமே அறிந்து கொள்ளூம் வகையில் சுலபமான மொழிநடையில் ஆங்கிலமாக்கம் செய்திருக்கிறார் நேத்தன் (Nathan Englander).
இஸ்ரேலில் போதை மருந்து கிடைப்பது இப்போது முன்போல் சுலபமாக இல்லை. சிரியாவில் உள்நாட்டுப் போர் மூண்டிருக்கிறது. எகிப்தில் இராணுவ ஆட்சி. இஸ்லாமிய நாடு என்னும் ஐஸிஸ் வேறு எல்லாப்புறத்திலும் முற்றுகை இட்டிருப்பதால், போதைவரத்து ஸ்தம்பித்திருக்கிறது. இந்நிலையில் பத்து கிராம் வசியமருந்து கிடைக்க இருவர் என்ன பாடுபடுகிறார்கள் என்னும் இடியாப்பச் சிக்கலை குழப்பமின்றி பதிவு செய்கிறார் கதாசிரியர்.
நண்பருக்குத் தெரிந்த வக்கீலிடம் சென்றால் போதை மருந்து கிடைக்கும். வக்கீலுக்கு எப்படி போதை மருந்து கிடைத்தது? வக்கீலுடைய வேலைக்காரருக்கு புற்றுநோய். வேலைக்காரருக்கு வலி தெரியாமலிருக்க, வக்கீல் மூலமாக, போதை மருந்தை படியளக்கிறது அரசாங்கம்
வேலைக்காரருக்குக் கொடுக்க வேண்டிய போதை மருந்து, வக்கீலின் கை மாறி, எப்படி கதையின் நாயகனுக்கு வந்து சேரும்? அதற்கு வக்கீலுக்கு சாதகமாக நடக்க வேண்டும். அன்றைய தினத்தில் வக்கீலின் கட்சிக்காரர், நஷ்ட ஈடு கேட்டுத் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தின் முன் வருகிறது. பத்து வயதுச் சிறுமியை பாலஸ்தீனியனின் கார் மோதிக் கொன்றுவிட்டது. பாலஸ்தீனியனுக்கு ஆதரவாக அவனுடைய குடும்பமே அணி திரண்டு கோர்ட்டுக்கு வருகிறது. ஆனால், விபத்தில் இறந்த பத்து வயதுச் சிறுமிக்கு, பெற்றோர் இருவரைத் தவிர எவரும் ஆஜராகவில்லை. கதாநாயகனும் அவனுடைய நண்பனும் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும். “அந்த பச்சிளம் குழந்தையைக் கொல்ல உனக்கு எப்படிடா மனசு வந்தது!?” என்று அராபியனைப் பார்த்து கண் சிவக்க, நரம்புகள் புடைக்க வசனம் பேச வேண்டும். நீதிபதியின் மனம் உருக வேண்டும்.
ஒழுங்காக நடித்தால் பத்து கிராம் போதை இனாம். கேஸ் தோற்றுவிட்டால், போதை மருந்து கிடைக்காது.
கடமைக்கு கத்துகிறார்கள். கொடுத்ததிற்கு மேல் கூவுகிறார்கள். பெருத்த தொகை தீர்ப்பாகிறது. போதை மருந்தும் கைமாறுகிறது.
ஆரம்பித்த இடத்திற்கே வருகிறேன். பார்ட்டிகளில் அளவளாவும்போது உள்ளார்ந்து உரையாடுகிறோமா? கதையின் நாயகனும் எதையும் ஆத்மார்த்தமாகச் செய்வதில்லை. கோர்ட்டில் நியாயத்திற்காக சத்தம் போடுவது போல் தோன்றினாலும், பின்னர் கிடைக்கப் போகும் பரிசுப் பொருளுக்காகவே வேஷம் போட்டு உரக்க கோஷமிடுகிறான். காபிக்கடையில் தனக்குப் பரிமாறும் பெண்ணுடன் சினிமாவுக்கு உல்லாசமாகப் போக எண்ணமிருந்தாலும், அதை வெளிப்படையாகக் கேட்காமல், “போதை மருந்து வைத்திருக்கிறேன்… சேர்ந்து அடிக்கலாமா?” என்றுதான் பேச்சைத் துவங்கத் திட்டமிடுகிறான்.
நம்முடைய அசல் கேள்விகள் வேறு எங்கோ ஒளிந்திருக்கின்றன. நிஜமாகச் சொல்ல வேண்டியதை முக்காடு போட்டு ஓரத்தில் நிறுத்திவிட்டு முஸ்தீபுகளில் காலம் கடத்துகிறோம். ”இன்றைக்கு செம மழை இல்ல…!” என்று பேச்சைத் துவக்குகிறோம். “இந்தச் செய்தியைப் பார்த்தியா..?” என்று மின்னஞ்சல் போடுகிறோம். “உனக்கு நெட்ஃப்ளிக்ஸில் மார்க்கோ போலோ பிடிக்கும்.” என்று குறுஞ்செய்தி அனுப்புகிறோம்.
oOOo
இந்தக் கதையை எழுதியவர் சொல்கிறார்-. Haaretz
நான் ஹிட்லரின் நாஜி ஜெர்மனியில் இருந்து துரத்தப்பட்டோரின் மகன் – நிஜமாகவே ஹோலோகாஸ்ட் அழித்தொழிப்பில் பாதிப்புக்கு உண்டானோர் அல்ல; ஆனால், அந்த மனநிலையில் இருப்போரின் மகன். தாங்கள் உயிரோடு வசிப்பதற்கு இடம் இருக்கிறது என்று மகிழ்ச்சியோடு ஒவ்வொரு நாளும் துவக்குபவர்களின் அரவணைப்பில் வளர்ந்தவன். தன்னுடைய மூதாதையர்கள் பிறந்த இனத்திற்காக தான் துன்பப்படும் சூழல் இல்லை என எண்ணிக் கொண்டாடுபவர்கள் அவர்கள். சொந்த மொழியைப் பேசுவதால் விலக்கிவைக்கப்பட மாட்டோம் என நம்பிக்கையோடு வசிக்கிறார்கள். இஸ்ரேலின் தேசிய கீதமான “ஹத்விகா”வில் இந்த சொற்றொடர் உண்டு: ’எங்கே அவர்கள் சுதந்திர மக்களாக இருக்க முடியுமோ, அந்த நம்முடைய பூமி!’ (Where they could be a free people in our land). எனக்கு இது முக்கியமாகப் பட்டது. இந்த இடத்திற்கு வருவதற்கு என்னுடைய தாய், தந்தையர் ரொம்பவேக் கஷ்டப்பட்டார்கள்.
…
ஹீப்ரு மொழியில் என்னுடைய ’கெரட்’ என்ற பெயருக்கான அர்த்தம் ‘சவால்’. நான் பிறந்ததே பெரிய வெற்றிதான். இந்த மண்ணில், இந்த இனத்தில், இவ்வளவு அடக்குமுறையைத் தாண்டி உயிர் கொண்டதே சவாலை ஜெயித்த மாதிரி. நான் விடிகாலை ஆறு மணிக்கு அப்பாவை எழுப்பினால் கூட, அவரின் ஓய்வை புறந்தள்ளிவிட்டு, மகிழ்ச்சியோடு என்னோடு விளையாடுவார்.
இதே உரிமை சக பாலஸ்தீனியர்களுக்குத் தரப்படாமல், தாய் மண்ணில் தன்னுடைய புறத்தோற்றத்திற்காக சிமிழுக்குள் முடக்கப்படுவது கதையில் பூடகமாக வெளிவந்துள்ளது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் உள்ள உறவு குறித்து புகழ்பெற்ற நகைச்சுவை உண்டு. இஸ்ரேலில் சட்டம் படித்து முதலாம் வகுப்பில் தேறி பட்டம் வாங்கிய பாலஸ்தீனியன் இஸ்ரேலின் முக்கிய இடமான டெல் அவிவ் நகரத்தின் புகழ்பெற்ற நிறுவனத்தில் வேலை கேட்டுச் செல்கிறான். அந்த நிறுவனத்தின் தலைவர், அவனை வரவேற்று, “இதுதான் உன்னுடைய ஜாகை. பிடித்திருக்கிறதா?” என்று ஐம்பதாவது மாடியில் ஜன்னலோரமாக இருக்கும் பிரும்மாண்டமான அலுவல் அறையை அவனுக்குக் காட்டுகிறார்.
அவனால் நம்ப இயலவில்லை. “நம்பிக்கையில்லையா… இந்தா கார் சாவி. அதோ இருக்கும் லாம்போர்கினி உன்னுடையது. இப்போவாது ஒகேயா?” என்கிறார். அவன் ஸ்தம்பித்துப் போய் “நீங்கள் என்னுடன் விளையாடுகிறீர்கள்!” என்கிறான். கம்பெனி தலைவரும், “வேலை கேட்க வந்து, நீதானே முதலில் ஜோக் அடிக்க ஆரம்பித்தாய்!” என்றாராம்.
இதே காமெடியை பாகிஸ்தான் – இந்தியர் என்று கூட மாற்றலாம். அரசியல் சூழலிலும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளிலும் சக மனிதரின் நாணயத்தின் மேல் விசுவாசமின்மையும் கொண்ட சமயங்களில் வாழ்கிறோம். இதன் பின்னணியிலேயே இனப் பாகுபாடு தோன்றுகிறது. இனவெறி மிகுந்து வன்முறை வளர்கிறது. கதையின் நடுவில், அந்த ஓட்டுனரை “நீ ஒரு தீவிரவாதி!” என்கிறான் நாயகனின் நண்பன். கொள்கையில் தீவிரமாக இருப்பவரை ‘தீவிரவாதி’ எனலாம். பயங்கரமான செயல்களில் துணிந்து இறங்குபவரை ‘பயங்கரவாதி’ எனலாம். ஆனால், இஸ்லாமைச் சார்ந்த ஒருவரை, அல்லது பாலஸ்தீனியர் என்ற காரணத்தால் ஒருவரை, ‘தீவிரவாதி’ என்னும்போது அர்த்தமே மாறி ஒலிக்கிறது என்பதை உணர முடிகிறது.
கருப்பர்களை இன்ன சொல் கொண்டு அழைக்கக் கூடாது என்பது போல்… யூதர்களை இப்படி விளிக்கக் கூடாது என்பது போல்… பிராமணர்களை ‘பாப்பான்/ பாப்பாத்தி’ எனச் சொல்வது வசையாவது போல்… சில வார்த்தைகளும் வழக்குமொழிகளும் சந்தர்ப்பத்திற்கேற்ப, அழைக்கப்படுபபவருக்கேற்ப தகாத சொல்லாக மாறிவிடுகிறது. இந்தப் பகுதி இந்தக் கதையின் உச்சகட்டம்.
போதை மருந்து உட்கொள்வதோ, வைத்திருப்பதோ, வாங்குவதோ, விற்பதோ – சட்டப்படி குற்றம். ஆனால், அதே நாட்டில், முஸ்லீமைப் பார்த்து, சட்டத்தை இரட்சிக்கும் நீதிமன்றத்தில் வைத்து, “தீவிரவாதி!” என முழங்குவது குற்றமேயல்ல என்று நம்முடைய எண்ணம் மரத்துப் போயிருக்கிறது.
இப்படி எல்லாம் கதை முகத்திலறைந்தாற்போல் பேசுவதில்லை. சுவாரசியமாகப் பறக்கிறது. கதையின் போக்கில், வாசிக்கும்போது இதெல்லாம் நெருடலாக, பிரச்சாரமாகத் துருத்திக் கொண்டு நிற்கவில்லை. சம்பவங்கள் வருகின்றன. மனிதர்களின் குணாதிசயங்கள் தெரிகின்றன. அவ்வளவுதான். ஆனால், இதெல்லாம் வாசகரின் புரிதலுக்கே வைத்துவிடுவதில்தான் கதாசிரியரின் சாமர்த்தியம் தெரிகிறது.
இதே ஸ்டைலை இதே வகையில் இன்னொரு துறையில் கையாள்பவர்கள் கோயன் (Coen) சகோதரர்கள். அவர்களின் பார்ட்டன் ஃபின்க் (Barton Fink) திரைப்படத்தையும் இந்தக் கதையையும் ஒருங்கே வைத்துப் பார்க்கலாம்.
பார்டன் ஃபின்க்கில் பல திரைப்படங்களுக்கான குறியீடுகள் ஒளிந்து கொண்டிருக்கும். அந்தந்தப் படங்களைப் பார்த்திராவிட்டாலும், பார்ட்டன் ஃபின்க் சுவாரசியமாகவே இருக்கும். இன்னொரு முறை பார்ட்டன் ஃபின்க் பார்த்தால், வேறொரு உள்ளர்த்தமும் சூட்சுமம் பிடிபடும். இந்த நியு யார்க்கர் சிறுகதையும் அவ்வாறே அமைந்திருக்கிறது.
கோயன் சகோதரர்களின் திரைப்படங்களைப் பார்க்கும்போது ‘அழுவதா? சிரிப்பதா!’ என்னும் குழப்பம் எழும். பார்ட்டன் ஃபின்க் போன்ற கதாபாத்திரங்களின் தாற்காலிக வெற்றிகளுக்காக அவர்களின் நிர்த்தோஷமின்மை மெல்ல இறப்பதையும் உணர முடியும். இந்தக் கதையின் நாயகனும் தன்னுடைய வீரத்தழும்பைக் கொண்டு காதலில் அடியெடுத்து வைக்கும் அர்த்தமின்மையை உணர முடிகிறது.
ஆங்கிலத்தில் கேட்டு ரசிக்க- Soundcloud
புகைப்பட உதவி – விக்கிபீடியா