வலைத்தள கட்டுரைகள், ஃபேஸ்புக் பதிவுகள், தொலைக்காட்சி நேர்முகங்கள் என்று இடையறாது மும்முரமாக செயலாற்றிக் கொண்டிருப்பவரிடம், புத்தக கண்காட்சியை முன்னிட்டு உரையாட இயலுமா என்று கேட்டதும் தயங்காது திறந்த மனதுடன் பேட்டி அளித்தார். கிழக்கு பதிப்பகத்தின் நீண்ட பயணத்தின் ஒரு சிறு பரிமாணத்தை பத்ரி சேஷாத்ரியின் சொற்களில், பதாகை வாசகர்களுக்காக –
பதாகை: புனைவு, கவிதை, இலக்கிய விமரிசனக் கட்டுரைகள் விஷயத்தில் கிழக்கு பதிப்பகத்தின் தேர்வுக் கொள்கை என்ன? அதாவது, எந்த அடிப்படையில் என்பதை விட, எந்த நோக்கத்தில்- லட்சியம் என்றே சொல்லலாம்- புத்தகங்களைப் பதிப்பிக்கத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?
பத்ரி சேஷாத்ரி: நாங்கள் பதிப்பிப்பவை பெரும்பாலும் (1) மறு பதிப்பு (2) நன்கு அறியப்பட்ட மூத்த எழுத்தாளரின் நூல்களின் முதல் பதிப்பு (3) அதிகம் அறியப்படாத எழுத்தாளர்களின் சோதனை முயற்சிகள் என்பதற்குள்ளாகவே அடங்கும். முதல் இரண்டிலும் ஆள்களைத் தேர்வு செய்துவிடுவதால் எழுத்துகளைத் தேர்வு செய்யவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகிறது. மூன்றாவதில் மிக மிகச் சில முயற்சிகளை மட்டுமே வெளியிடுகிறோம். அதில் பெரிதாக கொள்கைகள் எதையும் வைத்துக்கொள்வதில்லை. இந்த மூன்றாவதில் நாவல்கள் மட்டுமே வரும். அது முடிந்த அளவு வெகுஜன வாசகர்களை ஈர்க்கக்கூடியவையாக இருக்கவேண்டும். அவ்வளவுதான்.
பதாகை: இலக்கிய நூல்களின் விற்பனைச் சாத்தியம் எப்படி இருக்கிறது? எதிர்காலத்தில் இவ்வகை நூல்களின் வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்பு என்ன?
பத்ரி: இலக்கியம் மிகக் குறைவாகத்தான் விற்கும் – அடுத்த பத்தாண்டுகள் இதுதான் நிலை. வெகுசில எழுத்தாளர்கள் பெரும் பிராண்டுகள் ஆகும் நிலை உள்ளது. உதாரணம் ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோர். அவர்கள் குறிப்பிட்ட வகை வாசகர்களை ஈர்த்து, அவர்கள் அனைவரும் தம் புத்தகங்களை வாங்குமாறு செய்கிறார்கள். மேலே குறிப்பிட்ட மூவரும்கூட இதனை வெவ்வேறு அளவில், தளத்தில், செயல்பாடுகளில் செய்கிறார்கள். இப்படியெல்லாம் செய்தாலும் விற்பனை ஆயிரங்களில் மட்டுமே உள்ளது. ஏதோ ஒரு கட்டத்தில் இது பத்தாயிரம் என்ற நிலையைத் தாண்டும். அப்போதுதான் நாம் அடுத்த கட்டத்துக்குச் செல்கிறோம். அங்கிருந்து லட்சத்தை எட்டுவதுதான் லட்சியமாக இருக்கவேண்டும். இது முழுக்க முழுக்க எழுத்தாளரின் கையில்தான் இருக்கிறது. ஒரு பதிப்பாளர் புத்தகத்தைப் பல இடங்களிலும் கிடைக்குமாறு செய்துவிடலாம். ஆனால் அதனை வாங்கிப் படித்து மகிழுமாறு ஓர் எழுத்தாளரால் மட்டுமே செய்ய முடியும்.
பதாகை: பதிப்புத்துறையின் எதிர்காலம் எந்த அளவுக்கு மின்நூல்கள் சார்ந்ததாக இருக்கும் என்று இப்போது சொல்ல முடியுமா?
பத்ரி: என் கணிப்பில் பத்தாண்டுகளுக்குப் பின், மின் நூல்கள் விற்பனைதான் எண்ணிக்கையில் 50%-க்குமேல் இருக்கும். அதாவது மொத்தம் விற்பனையாகும் நூல்களில் பாதிக்கு மேல் மின் நூலாக இருக்கும். ஆனால் வருமானத்தில் மின் நூல்கள் குறைவான தொகையைக் கொண்டுவரும். அதற்கடுத்த பத்தாண்டுகளில் அச்சு 20%-க்கும் கீழாகச் சுருங்கிவிடும்.
பதாகை: நூல்களின் தயாரிப்பு மற்றும் விநியோக முதலீடுகள் மின்வடிவில் செய்யும்போது ஒப்பீட்டளவில் அச்சைவிடக் குறைவானவை- இது இலக்கியப் படைப்புகள் மேலும் அதிக அளவில் பதிப்பிக்கப்பட உதவும் என்று கருதுகிறீர்களா? கிழக்கு பதிப்பகம் இலக்கிய நூல்களை மின்வடிவில் மட்டும் பதிப்பிப்பது குறித்து ஏதேனும் உத்தேசித்திருக்கிறதா?
பத்ரி: நிச்சயமாக. இலக்கியப் படைப்புகளைப் பெருமளவு கொண்டுவருவதற்கு இது ஊக்கமாக அமையும். இதுநாள்வரை நாங்கள் செய்யாத விஷயங்களையெல்லாம் இனிச் செய்யக்கூடும். இதுவரை அறிமுக எழுத்தாளர்களின் புனைவுகளை நாங்கள் சொல்லிக்கொள்ளும் அளவு பதிப்பித்ததில்லை. அதனைச் செய்வோம். மின் நூலாக மட்டுமே பதிப்பிக்கக்கூடியவாறு (+ பிரிண்ட் ஆன் டிமாண்ட்) பல இலக்கியப் புத்தகங்களைக் கொண்டுவருவோம்.
பதாகை: இந்திய ஆங்கில எழுத்துலகில், நிறைய நாவல்கள் வெளிவருகின்றன. கச்சாத்தனமாக இருந்தாலும், அவற்றுக்கென ஒரு சந்தை இருக்கிறது. ஆனால் கிழக்கு என்றில்லை, தமிழின் முன்னணி பதிப்பகங்கள் இது போன்ற நூல்களை வெளியிட ஏன் தயங்குகின்றன? இப்புத்தகங்கள் பலரை தீவிர வாசிப்பு வட்டத்திற்கு இழுத்து வரக்கூடுமல்லவா?
பத்ரி: அப்படி ஒரு சந்தையும் தமிழில் இல்லை. எல்லொரும் பாக்கெட் நாவல்கள் குறித்துச் சொல்கிறார்கள். அவற்றின் சந்தை பெருமளவு குறைந்துபோயுள்ளது. அதில் சிரமமும் அதிகம். சந்தை இருந்தால் பலர் அதில் இறங்கியிருப்பார்களே? தமிழைப் பொருத்தமட்டில் பல்ப் நாவல்கள்கூட 25 ரூபாய்க்குக்கீழ் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஆங்கில பல்ப் நாவல்கள் 100 ரூபாய்க்கு மேல் உள்ளன.
ஒரு கட்டத்தில் நாங்கள் 50 ரூபாய்க்கு நிறைய பல்ப் நாவல்கள் கொண்டுவரவேண்டும் என்று திட்டமிட்டு அதில் இறங்கினோம். ஒவ்வொன்றும் 10,000 பிரதிகள் விற்றால்தான் அது ஒத்துவரும். ஆனால் அது நடக்காது என்று தோன்றிப்போனது. எனவே முயற்சிகளை நிறுத்திவிட்டோம். இப்போது 50 ரூபாய்க்குக் கொடுக்கவேண்டும் என்றால் 20,000 பிரதிகளாகவது விற்கவேண்டும். இல்லையென்றால் 75 ரூபாய் என்ற இடத்துக்கு எடுத்துச் செல்லவேண்டும்.
எனவே இதற்குபதில், முற்றிலும் மின் நூலாக ரூ. 10-க்குப் பல ‘பல்ப்’ நாவல்களைக் கொண்டுவரலாம் என்று இருக்கிறோம்.
பதாகை: ஒரு சமயம் கிழக்கு நிறைய வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எளிமையாக வாசிக்கக்கூடிய content உடைய நூல்களையும் வெளியிட்டு வந்தது. இப்போது, வாழ்க்கை வரலாறுகள் குறைந்த விட்டமாதிரி தெரிகின்றன. அதே வேளை கிழக்கு அதிக அளவில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடுவதாகத் தெரிகிறது. இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன?
பத்ரி: எங்கள் “product mix”-இல் மாற்றம் வந்துள்ளது. ஆனால் அது சிறிய மாற்றம்தான். பெரிதாகத் தோன்றக் காரணம் நாங்கள் அச்சிடும் புத்தகங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதுதான். வாழ்க்கை வரலாறுகளை மேலும் அதிக எண்ணிக்கையில் வெளியிடவேண்டும் என்பதுதான் என் விருப்பம். உதாரணமாக, அறிவியல்/கணித அறிஞர்கள் பலரது வாழ்க்கையைக் கொண்டுவரவேண்டும் என்று நினைக்கிறேன். கலீலியோ, நியூட்டன், ஆய்லர், கௌஸ், ஐன்ஷ்டைன், டார்வின், ஷ்ராடிங்கர், ஹெய்சன்பர்க், பௌலிங், இப்படி. ஆனால் இதற்கு அச்சில் வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறது. எனவே மின் நூலாக மட்டுமே இவற்றைக் கொண்டுவரவேண்டியிருக்கும்.
பதாகை: பதாகையில் மொழிபெயர்ப்புகளை வெளியிடும்போது நண்பர் ஒருவரிடமிருந்து வந்த கேள்வி- இன்றைக்கு தமிழில் வாசிக்கக்கூடியவர்களில் பலருக்கு நல்ல ஆங்கிலப் பரிச்சயம் இருக்கிறது. இருந்தும், மொழிபெயர்ப்புகளை – குறிப்பாக அபுனைவுகளை – தமிழில் வெளியிட வேண்டிய தேவை இருக்கிறதா? கிழக்கின் மொழிபெயர்ப்புகளுக்கு என்ன மாதிரியான வரவேற்பு இருக்கிறது?
பதில்: இது உண்மையே அல்ல. இன்று வெறும் பதிவுகளை ஆங்கிலத்தில் எழுதினாலே, தமிழில் எழுதச் சொல்லிக் கோரிக்கை வருகிறது. ஆங்கிலம் படித்துப் புரிந்துகொள்ளக்கூடியவர்கள் வெகு குறைவு. இந்த எண்ணிக்கையில் ஒரு நூறாண்டுகள் கழித்தும் பெரிய மாற்றம் இருக்கப்போவதில்லை. ஆங்கில மீடியம் என்பது வெறும் மாயை. மிகச் சிலரே ஆங்கிலத்தில் சரளமாகப் படிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். மீதி சிலர் தங்களுக்குச் சிறந்த ஆங்கிலப் புலமை இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டிருப்பார்கள். நாங்கள் புத்தகம் கொண்டுவருவது இவர்களுக்காகவே அல்ல.
பதாகை: வணிகப் பதிப்பகங்கள் இலக்கியப் பதிப்பகங்கள் என்ற வரையறையைப் பற்றித் தங்கள் கருத்து என்ன? வணிகப் பதிப்பகங்களுக்கு இருக்கும் நெருக்கடிகள் என்ன?
பத்ரி: இந்த வரையறையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நாண் இன்று, சிறிய பதிப்பகம், பெரிய பதிப்பகம் என்ற அளவிலேயே இவற்றைப் பார்க்க விரும்புகிறேன். அவரவர், அவரவர் விரும்பும் புத்தகங்களை மட்டுமே பதிப்பிக்க விரும்புகிறார். இலக்கியப் பதிப்பகங்கள் பதிப்புக்கும் அனைத்துப் புத்தகங்களும் இலக்கியமல்ல, வணிகப் பதிப்பகங்கள் என்று கருதப்படுபவை பதிப்பிக்கும் அனைத்தும் மித அல்லது கீழ் தரத்தில் இருந்து, வணிகத்தில் கொழிப்பவையும் அல்ல.
அனைத்துப் பதிப்பகங்களும் லாப நோக்கு கொண்டவையாக இருக்கவேண்டும். யாரும் கைக்காசை இழந்து வறுமையில் வாடவேண்டும் என்று நாம் விரும்பலாமா?
எல்லாப் பதிப்பகங்களுக்குமான ஒரே நெருக்கடி பண நெருக்கடிதான். Working capital என்பது மிகத் திண்டாட்டம் தரக்கூடிய ஒன்று. அனைவருக்கும்.
பதாகை: புத்தக விலையைக் குறைப்பதைப் பற்றி ஒரு பதிப்பாளராக உங்கள் நிலைப்பாடு என்ன?
பத்ரி: கட்டாயம் புத்தக விலையைக் குறைக்க விரும்புகிறேன். ஆனால் அது என் கையில் இல்லை. அது அச்சடிக்கும் volume-ல்தான் உள்ளது. புத்தகங்கள் அதிகம் விற்கும் என்றால் விலையைக் கடுமையாக என்னால் குறைக்க முடியும். அதேபோல மின் புத்தகம் என்றாலும் விலையைக் குறைக்க முடியும். இந்த இரண்டு வழிகளிலும் எது சாத்தியமோ அதில் விலையைக் கடுமையாகக் குறைப்பேன்.
பதாகை: கடந்த 50 ஆண்டுகளில் புத்தக வாசிப்பை மேம்படுத்த உண்மையிலேயே பதிப்பகங்கள் முயன்றுள்ளனவா? உண்மையில் புத்தக வாசிப்பை மேம்படுத்துவது பதிப்பகங்களின் வேலைதானா? இதைப் பற்றியெல்லாம் யோசித்து உங்கள் பதிப்பகம் மூலம் ஏதேனும் முக்கியமான செயல்பாடுகளைச் செய்திருக்கிறீர்களா?
பத்ரி: புத்தக வாசிப்பை மேம்படுத்தப் பலர் பாடுபடவேண்டும். அறிவுஜீவிகள், பெற்றோர்கள், சமூக சீர்திருத்தவாதிகள், ஆசிரியர்கள், அரசு ஆகிய அனைவரும் இதில் இறங்கவேண்டும். பதிப்பகங்கள் அவர்களுக்குத் துணைபுரியவேண்டும். பதிப்பகங்கள் இருப்பதனாலேயே வாசிப்பு மேம்பட்டுள்ளது என்பது உண்மையே. ஆனால் அடுத்தடுத்த தளங்களுக்கு வாசிப்பை எடுத்துக்கொண்டுபோக பதிப்பகங்களால் முடியாது. அது தனி மனிதர்களாலும் இயக்கங்களாலும்தான் முடியும். அவர்கள் பதிப்பகங்களைத் தங்கள் நண்பர்களாக ஆக்கிக்கொண்டு, அவர்களையும் சேர்த்து இழுத்துக்கொண்டு போகவேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக என் வீட்டில் என் மனைவியையும் என் மகளையும் புத்தகங்களை வாசிக்கவைக்க முடிந்ததில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. இப்போது சிறிது நாள்கள் என் வீட்டுக்கு வந்திருக்கும் என் தாயிடம் ‘பொன்னியின் செல்வன்’ கொடுத்துப் படிக்க வைத்திருக்கிறேன். ஒரே நேரத்தில் வீட்டில் நாங்கள் நான்கு பேரும் உட்கார்ந்துகொண்டு அவரவருக்குப் பிடித்தமான புத்தகத்தைப் படித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போதே மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. இது எளிதில் நடந்துவிடவில்லை. இதற்காக நான் மிகவும் போராடவேண்டியிருந்தது. டிவியை ஒழித்துக்கட்டவேண்டியிருந்தது. ஒவ்வொருவருக்கும் பிடித்தமான புத்தகங்களை வாங்கி அறிமுகம் செய்யவேண்டியிருந்தது.
இதை ஒரு பதிப்பகத்தால் செய்ய முடியாது. தனி நபர்களால் மட்டுமே செய்ய முடியும். அவ்வாறு செய்வதில் அவர்களுக்கு ஒரு stake இருக்கவேண்டும். ஒருவரைப் புத்தகம் படிக்கவைத்தால் அதனால் அவருக்குப் பெரும் நன்மையைப் பெற்றுத்தர முடியும் என்று ஒருவர் உணரவேண்டும். அப்போது அவர் அதனை விரும்பிச் செய்வார். ஒரு பதிப்பகத்தால் இதனை எப்படிச் செய்ய முடியும்?
நான் பெரம்பலூர் கலெக்டரிடம் 10,000 புத்தகங்கள் கொடுத்து பள்ளிக் குழந்தைகளுக்குக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவர் எடுத்துக்கொண்ட முயற்சியின் விளைவாக புத்தகங்கள் மாணவர்களுக்குச் சென்றுசேர்ந்தன. அதேபோல் திருநெல்வேலி கலெக்டரிடம் பேசி அவரிடமும் 10,000 புத்தகங்களைக் கொடுத்தோம். ஆனால் இதனால் மாணவர்கள் படித்தார்களா, தெரியாது. வாசிப்பு வளர்ந்ததா? தெரியாது.
எனவே புத்தகங்களைக் கொடுப்பதால் மட்டும் பயன் இல்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.
பதாகை: நீங்கள் பபாஸியில் இருக்கிறீர்கள். பபாஸி மூலம் ஏதேனும் இனியும் புதிதாகச் சாதிக்க முடியும் என்று நீங்கள் நினைப்பது என்ன?
பத்ரி: முடியும். ஆனால் வேகமாக எதுவும் நடக்காது. மிக மெதுவாக, மிக மிக மெதுவாக மாற்றம் வரும். ஏனெனில் சுற்றிலும் சூழல் மாறிக்கொண்டே இருக்கிறது. விநியோகஸ்தர்கள் தொழில் கடுமையாக அடிவாங்கியிருக்கிறது. சில்லறை வியாபாரிகளின் பிசினஸ் இன்னும் சில ஆண்டுகளில் கடுமையாக அடிவாங்கும். பதிப்பாளர்களில் பலர் மூடவேண்டியிருக்கும். பலர் வயதான காரணத்தால், அடுத்த வாரிசு வேறு துறைக்குச் சென்றுவிட்ட காரணத்தால் மூடிவிடுவார்கள். இருப்பவர்கள் தங்களை பத்திரப்படுத்த ஏதேனும் செய்யவேண்டியிருக்கும் அல்லவா?
பதாகை: சென்னையைப் போல மற்ற இடங்களில் புத்தகக் கண்காட்சிகள் வளர்ச்சி அடையாததற்கு என்ன காரணம்? சென்னையிள்ள உள்ளது போன்ற வாசகர்கள் மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி போன்ற ஊர்களில் கூட இல்லை என்பது உண்மைதானா?
பத்ரி: பல மாற்றங்கள் தேவை. சராசரி வருமானம் இவ்வூர்களில் சென்னை அளவுக்கு இல்லை. முக்கியமாக மேல் நடுத்தர, நடுத்தர வர்க்க மக்களிடையே. காஸ்மோபாலிடன் உணர்வு இல்லை. பலதையும் படித்துப் பார்ப்போம் என்கிற சோதனை முயற்சி இல்லை. புதிதாகப் பணம் சம்பாதிக்கும் பலரும் ஃப்ரிட்ஜ், டிவி போன்றவற்றுக்குச் செய்யும் அளவுக்குப் புத்தகத்தில் செலவழிப்பதில்லை. அதற்கான காரணங்கள் அவர்களுக்கு வலுவாகச் சென்றடையவில்லை. இது நடக்கும்போது இந்த ஊர்களிலும் புத்தகச் சந்தை பெரிதடையும்.
பதாகை: புத்தக வாசிப்பையும் சூழலையும் மேம்படுத்த அரசு மேற்கொள்ளவேண்டிய உடனடியான திட்டங்கள் என்றால் எவற்றைச் சொல்வீர்கள்?
பத்ரி: அரசின்மீது எனக்கு நம்பிக்கையில்லை. என் பொருளாதாரக் கொள்கைகளின் பின்னணியில், அரசு வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்தாலே போதும் என்றுதான் நினைக்கிறேன். அரசு நுழைந்தால் தரமற்ற செயல்கள், லஞ்ச லாவண்யம் ஆகியவை மட்டுமே நிகழும். இப்போது நூலகங்களுக்குப் புத்தகம் வாங்கும் கூத்துதான் உங்களுக்குத் தெரியுமே. வெட்கமில்லாமல் கை நீட்டி லஞ்சம் வாங்குகிறார்கள். இத்தனைக்கும் நூலக ஆணைக்கான பட்ஜெட்டே மிக மிகக் குறைவு. அதிலும் பணம் பார்க்கவேண்டும் இவர்களுக்கு! இவர்கள் யாருக்கும் படிப்பு கிடையாது. நூல்கள் பற்றிய புரிதல் கிடையாது. நூலகத்தின்மீது மரியாதை கிடையாது. மக்கள்மீது பரிவு கிடையாது.
மக்கள், தங்களுக்கு நூல்கள் அவசியம் என்றால், தாங்களேதான் செலவு செய்யவேண்டும். யாரையும் நம்பி இருக்கக்கூடாது.
பதாகை: அலமாரி புத்தகங்களுக்கான ஒரு முழு இதழாக உருவாகும் என்று நினைத்தோம். ஆனால், இரண்டு வருடங்களாகியும் எந்த மாற்றங்களும் இல்லையே?
பத்ரி: அலமாரியின் நோக்கம் இப்போது அது எந்த முறையில் வருகிறதோ அது மட்டும்தான். இது விற்பனையை முதன்மை நோக்கமாகக் கொண்ட ஓர் இதழ். பல புத்தகங்களை அறிமுகப்படுத்தவேண்டும். அவ்வளவுதான் நோக்கம். இதற்கு என்று தனி அலுவலர்கள் கிடையாது. நாங்கள் இதற்கெனச் செலவழிக்கும் தொகையும் குறைவு. அதிகமாகப் போனால், கொஞ்சம் எழுத்தாளர் நேர்காணல்கள் வரலாம். அவ்வளவுதான்.
2011 உலகக் கோப்பை கிரிக்கெட்டின்போது ‘உளவுக்கோப்பை கிரிக்கெட்’ என்ற திரில்லர் வெளியிட்டீர்கள். நன்றாகவே இருந்தது. இப்ப 2015ல் அடுத்த உலகக் கோப்பையே வந்தாச்சு. இன்னொரு திரில்லர் வெளியிடலாமே? கிரிக்கெட் பற்றியதாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை. ஏதோ ஒரு நல்ல திரில்லர். மதி நிலையம் வெளியிட்ட ராம்சுரேஷின் அல்வா, பதறாதே… போல.