டிபென்ஸ் காலனி பூங்காச் சம்பவம் 

சிகந்தர்வாசி 

பெங்களூர் இந்திரா நகர் டிபென்ஸ் காலனி பூங்காவில் தினமும் மாலை நடைபழகுவது என் பழக்கம். அன்று மாலையும் அதுதான் செய்து கொண்டிருந்தேன். காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு இளையராஜா பாடல்களை கேட்டபடி சிறு கற்கள் பதித்து அமைக்கப்பட்ட டிராக்கை பல முறை சுற்றி வருவேன். கால் மணி நேரம் சுற்றி வந்திருப்பேன், அப்பொழுது பூங்காவிற்கு வெளியிலிருந்து உரக்க பல குரல்கள் கேட்டன. யாரோ சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மெதுவாக பூங்காவின் இரும்பு சுழற்கதவு பக்கம் வந்து வெளியே பார்த்தேன். ஏழு எட்டு பேர் இருப்பார்கள். அதில் ஒரு இளவயது பெண் இன்னொரு இளவயது பெண்ணைப் பார்த்து ஏதோ ஆங்கிலத்தில் கத்திக் கொண்டிருந்தாள். அவள் அருகில் ஒரு நடுத்தர வயது அம்மையார் தமிழில் ஏதோ உரக்கக் கூவிக் கொண்டிருந்தார். அவர் பக்கத்தில் வயதான அம்மையார் ஒரு நடுத்தர வயது ஆணுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். கத்திக் கொண்டிருக்கும் பெண்ணுக்கு பக்கத்தில் ஓர் இளைஞன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தான். அவன் பக்கத்தில் இன்னொரு இளைஞன் தலை குனிந்து நின்றிருந்தான். இவர்கள் யாரும் இந்த காலனிக்காரர்கள் போல் தோன்றவில்லை.

கத்திக்கொண்டிருக்கும் பெண் ரோட்டிற்கு அந்தப் பக்கம் இருந்தாள். சற்று பருமனாக இருந்தாள். மங்கலான பச்சை நிறத்தில் ஒரு சுடிதார் அணிந்திருந்தாள். முகத்தில் வியர்வைத் துளிகள் பிரகாசித்தன. அவளுக்கு நல்ல ‘பேஸ் வாய்ஸ்’ என்று நினைத்துக் கொண்டேன். ரோட்டின் இந்தப் பக்கத்தில் இருந்த பெண்ணைப் பார்த்து கையை ஆட்டி ஆட்டி, “யூ பிட்ச். வாட் டூ யூ திங்க் ஆப் யுவர்ஸெல்ப் ஸ்டூபிட் வுமன்” என்று உரக்க கூச்சலிட்டாள் அவள்.

இந்தப் பக்கம் இருந்த பெண் மிக ஒல்லியாக இருந்தாள். சைஸ் ஜீரோ என்கிறார்களே அது போல் இருந்தாள். வெள்ளை முழுக்கை ஷர்ட் நீல ஜீன்ஸ்க்குள் இன்-ஷர்ட் செய்திருந்தாள். தடிமனான கருப்பு பெல்ட் ஜீன்ஸ் இல்லாத இடுப்பில் இறுக்கமாகக் கட்டியிருந்தது. பெரிதாக இருந்த பெல்ட் பக்கிள் மாலை வெளிச்சத்தில் பளபளத்தது. அவளது வெள்ளை நிறத்தையும், உடலமைப்பையும் பார்த்தால் அவள் ஏதோ நார்த் இந்தியன் போல் தோன்றியது.

இந்தப் பெண்ணின் குரல் சன்னமாக இருந்தது என்றாலும் அதை வைத்துக்கொண்டு கத்த முயன்றாள், “வூ இஸ் எ பிட்ச். யூ ஆர் எ பிட்ச்” என்றாள்.

ரோட்டுக்கு அந்தப் பக்கம் இருந்த பெண் வேகமாக ரோட்டை கடந்து வந்து ஒல்லியான பெண்ணைத் தாக்க ஆரம்பித்தாள். அவளோ குனிந்து கொண்டு தன் இரு கைகளால் தலையைப் பாதுகாத்துக் கொண்டாள். பச்சை நிற சுடிதார் அணிந்த பெண் இவள் முதுகில் ஓங்கிக் குத்தினாள். ஆத்திரத்தில் கத்திக் கொண்டு அவள் முதுகில் ஓங்கி அடித்துக் கொண்டிருந்தாள். இதைப் பார்த்த நடுத்தர வயது பெண் ரோட்டுக்கு இந்தப் பக்கம் வந்து அவளும் சேர்ந்து கொண்டு ஒல்லியான பெண்ணை அடிக்க ஆரம்பித்தாள்.

அவர்களுடன் இருந்த நடுவயது ஆள் ஒருவர் ஓடி வந்து இவர்களை விலக்கினார். “ஏம்மா அம்மாவும்பொண்ணும் இப்படி ரோட்ல சண்ட போடறீங்க,” என்று கடிந்து கொண்டார்.

“அது என்ன சொல்லுது பாரு. தேவடியா முண்ட. என்ன பாத்து பிட்ச்ன்னு சொல்லிச்சு,” என்று இவருக்கு பதில் கூறிவிட்டு, ஒல்லியான பெண்ணைப் பார்த்து, “ஐ வில் கில் யூ இப் யூ கம் திஸ் சைடு” என்று கத்தினாள்.

“யூ கெட் லாஸ்ட்” என்றாள் ஒல்லியான பெண்.

“பார் பாட்டி எப்படி பேசுதுன்னு” என்றாள் முதிய பெண்மணியைப் பார்த்து. “இத்த போயி இவன் சப்போர்ட் பண்றான் பாரு,” என்றாள் தலை குனிந்து கொண்டிருந்த இளைஞனை பார்த்து.

அவன் நல்ல வாட்டசாட்டமாக இருந்தான். கரிய நிறம். ஒரு அழுக்கு ரவுண்ட் காலர் டீ ஷர்ட் மற்றும் அழுக்கு ஜீன்ஸ் அணிந்திருந்தான். டீ ஷிர்டில் ஏதோ ஒரு அமெரிக்க ராக் பாண்ட் சின்னம் இருந்தது.

இந்த இளைஞனைப் பார்த்து ஒல்லியான பெண், “நீ இங்கே வா. அவங்க சொல்றதைக் கேக்காதே.” என்று ஆங்கிலத்தில் கூறினாள். “கம் ஹியர்” என்று மறுபடியும் அழைத்தாள்.

பச்சை சுடிதாருக்குக் கோபம் தலைக்கேறியது. “கெட் அவுட் ப்ரம் ஹியர். கெட் அவுட்” என்று கத்திக்கொண்டு ரோட்டை கடக்க முயன்றாள். அதற்குள் மோட்டார் சைக்கிள் மீது உட்கார்ந்து கொண்டிருந்த இளைஞன் வேகமாக இறங்கி ஓடி வந்து அவளைப் பிடித்துக் கொண்டான். “வேணாம் விடு” என்றான்.

அதற்குள் நடுவயது மனிதர் ஒல்லியான பெண்ணிடம் சென்று, “நீ இங்க இருந்து கிளம்பு. யூ கோ” என்றார். அந்தப் பெண் அங்கேயே நிற்க மெதுவாக அவளைத் தள்ளினார். அந்தப் பெண்ணோ இஷ்டமில்லாமல் மெல்ல நகர்ந்து கொண்டே வாட்டசாட்டமான இளைஞனைப் பார்த்து, “யூ கம் வித் மீ” என்றாள். கையை அவன் பக்கம் நீட்டி அவனைக் கூப்பிடவும் செய்தாள். அந்த இளைஞன் தயக்கத்துடன் அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

“எங்கடா போற?” என்று பச்சை சுடிதார் அவனைக் கேட்டாள். அவன் பதில் சொல்லாமல் ரோட்டை கடக்க ஆரம்பித்தான். “பாரு. அவ பின்னாடி திரும்ப போறான் பாரு,” என்று அவள் தன் அம்மாவிடம் சொன்னாள். “டேய் போகாதடா” என்றாள் அம்மா. “எப்படி இருக்குறான் பாரு” என்று மோட்டார்சைக்கிள் இளைஞனிடம் சொன்னாள் பச்சை சுடிதார் பெண்.

நடுத்தர வயது மனிதர் ஒல்லியான பெண்ணை தள்ளிக்கொண்டே சென்றார். அவள் தலையைப் பின்புறம் திருப்பி அந்த இளைஞனைப் பார்த்தபடியே நகர்ந்தாள். அந்த இளைஞன் அவர்கள் பின்னால் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தான். மற்றவர்கள் அவன் பின்னால் சென்று கொண்டிருந்தார்கள். மொத்தத்தில் இவர்கள் ஏழு பேர். அந்த பெண் ஒருத்திதான். நடுத்தர வயது மனிதர் ஒல்லியான பெண்ணிடம், “இனி நீ இங்கு வராதே. நேராக உன் வீட்டிற்குப் போ” என்று சொல்லிக்கொண்டே வந்தார்.

இப்பொழுது எல்லோரும் சி.எம்.எச். ரோடை அடைந்தோம். இது மெயின் ரோடு. டிராபிக் அதிகமாக இருந்தது. நடுத்தர வயது மனிதர் ஒரு ஆட்டோவை நிறுத்தினார். பெண்ணை ஆட்டோவில் ஏறச் சொன்னார். ஆனால் அந்தப் பெண்ணோ இளைஞன் பக்கம் சென்றாள். அவன் கையை பிடித்து, “கம் வித் மீ. நாம் சேர்ந்து போகலாம்” என்றாள். இதற்குள் பச்சை சுடிதார் பெண் இளைஞனின் இன்னொரு கையை பிடித்து இழுத்தாள். “நீ எங்கயும் போவாத”. பெண்ணின் தாயார் ஒல்லியான பெண்ணின் கையைப் பிடித்து இழுத்தார். அவருடன் பாட்டியும் சேர்ந்துக்கொண்டாள்.

இதைப் பார்த்த இளைஞன் தெம்பிழந்து விட்டான். அங்கேயே ஒரு பெரிய கல்லின் மேல் உட்கார்ந்துகொண்டு, “இவர்கள் நம்மை ஒன்றாக இருக்க விடமாட்டார்கள். நீ இங்கிருந்து போய் விடு” என்று ஒல்லியான பெண்ணிடம் கூறினான். ஆனால் அவள் சளைக்கவில்லை. “நோ. யூ கம் வித் மீ” என்று மறுபடியும் அவனைப் பிடித்து இழுத்தாள். இம்முறை நடுத்தர வயது மனிதர் ஓங்கி அவள் தலையில் அடித்தார். நானும், ஆட்டோ டிரைவரும் குறுக்கிட்டு, அவரைத் தடுத்தோம். அவர் ஆட்டோ டிரைவரை பார்த்து, “இது தில்லி பொண்ணு. அந்த பையன மயக்கிடுச்சு. நல்லா இருந்த குடும்பத்த ரெண்டாக்கிடுச்சி பாரு.”

ஒல்லியான பெண் அந்த இளைஞனை இழுத்துக் கொண்டிருந்தாள். அவன் மெதுவாக எழுந்தான். பச்சை நிற சுடிதார், அம்மா மற்றும் பாட்டி அவனைத் தடுக்க பார்த்தார்கள். ஆனால் அவனோ அந்த ஒல்லியான பெண்ணுடன் ஆட்டோவில் ஏறினான். ஆட்டோ கிளம்பியது.

பச்சை நிற சுடிதார் மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்துகொண்டு ‘அவங்க பின்னாடி போ’ என்றாள். அம்மா, பாட்டி மற்றும் நடுத்தர வயது மனிதர் வேறொரு ஆட்டோவில் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள். எல்லோரும் சென்றுவிட கூடியிருந்த கூட்டம் கலைந்தது.

அதற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் நானும் வாக்கிங் செல்லும் பொழுது இவர்கள் யாராவது கண்ணில் படுவார்களா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை ஒருத்தரையும் காணோம்.

ஒளிப்பட உதவி- India Outside My Window, A Walk in the Park

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.