ஹௌடாச் சம்பவம்

சிகந்தர்வாசி 

 

எப்பொழுதும் போல் ஹௌராஹ் (பெங்காலியில் ஹௌடா) ஸ்டேஷனுக்கு இரண்டு மணி நேரம் முன்பே வந்து விட்டேன். எப்பொழுது கல்கத்தா சென்றாலும் அங்குள்ளவர் பீதியைக் கிளப்புவார்கள். “ஹௌடா ப்ரிட்ஜி பே ஜாம் ஹோகா” என்று சிலரும், பல மணி நேரம் முன்பே கிளம்பி ட்ரைனை அவர்கள் எப்படி கோட்டை விட்டார்கள் என்று சிலரும் ஒவ்வொரு முறையும் சொல்வதுண்டு. அதனால் நான் எப்பொழுதும் ஹௌடாவுக்கு வரவேண்டும் என்றால் இரண்டு மணி நேரம் முன்பே வந்துவிடுவேன். அப்பொழுது எனக்கு இருபத்தைந்து வயதுதான் இருக்கும், ஆனாலும் இந்த விஷயத்தில் மட்டும் ரிஸ்க் எடுக்கமாட்டேன்.

ஸ்டேஷன் வந்ததும் ஒரு அறிவிப்பு காற்றில் பறந்து வந்தது. நான் செல்லவேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் அரை மணி நேரம் தாமதமாக கிளம்பும் என்றும் அது இரண்டாவது பிளாட்பாரத்துக்கு பதில் ஐந்தாம் பிளாட்பாரத்திலிருந்து கிளம்பும் என்றும் அந்த அறிவிப்பு ஹிந்தியில் கூறியது.

எப்பொழுதும் போல் டிவி முன் உட்கார்ந்து கொண்டேன். கல்கத்தா ஸ்டேஷனில் எப்பொழுதும் டிவீயில் கால்பந்து போட்டி எதாவது ஒன்று ஒளிபரப்பிக் கொண்டிருப்பார்கள். அன்று லிவெர்பூல் மற்றும் யுவேண்டஸ் அணிகளுக்கிடையே நடந்த யுரோப்பியன் கப் போட்டியின் மறு ஒலிபரப்பு. அந்தப் போட்டியை உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் அந்தப் பெண்மணி வந்திருக்க வேண்டும், கவனிக்கவில்லை.

ஏதோ ஒரு விளம்பரம் வந்தபொழுதுதான் கண்ணை டிவி பெட்டியைவிட்டு அகற்றினேன். எல்லா ரயில் நிலையங்களிலும் உள்ள கூட்டம்தான் இங்கும் இருந்தது. மக்கள் பேசும் சப்தம், டிவியில் விளம்பர சத்தம், ஒலிபெருக்கியில் அறிவிப்பு, சாய் விற்பவனின் குரல் என்று எங்கும் சப்தமயமாக இருந்தது. அழுக்கு வேட்டியில் பலர், காட்டன் புடவையில் பலர். இவர்கள் மத்தியில் எனக்கு இடதுபுறம் பெஞ்சில் உட்கார்ந்திருந்த பெண்மணி தனித்து தெரிந்தார்.

அவரைப் பார்த்தாலே அவர் ஒரு தமிழ்ப் பெண் என்று தெரிந்தது. தமிழ் இல்லையென்றாலும் தெற்கு தேசத்தவர் என்பது நிச்சயமாக தெரிந்தது. நடுத்தர வயது, குள்ளமாகவும் பருமனாகவும் இருந்தார். இவர் ஒரு குடும்பத் தலைவி என்று சொல்லவைக்கும் தோற்றம். சாதாரண புடவை ஒன்று கட்டியிருந்தார். கருப்பாக இருந்த தலைமயிர் ஆங்காங்கே செம்பட்டையாகவும் இருந்தது. மருதாணி மகிமையாக இருக்கும்.

அவருடன் அவர் மகன் இருந்தான். அவனுக்கு ஒரு பத்து வயது இருக்கும். ஒரு காக்கி அரை ட்ரௌசரும் வெள்ளை அரைக்கைச் சட்டை போட்டிருந்தான். பார்ப்பதற்கு சாதுவாக இருந்தான்.

நான் அவர்களைப் பார்த்துவிட்டு மறுபடியும் டிவி பார்க்க ஆரம்பித்தேன். பத்து நிமிடம் ஆகியிருக்கும், என் முன்னால் யாரோ நிற்பது போல் இருந்தது. தலையைத் தூக்கிப் பார்த்தால் அந்தப் பெண்மணி நின்று கொண்டிருந்தார். நான் குழப்பத்துடன் அவரைப் பார்த்தேன்.

“நீங்கள் கோரமண்டல் எக்ஸ்பிரசுக்காக காத்திருக்கிறீர்களா?” என்று ஆங்கிலத்தில் கேட்டார்.

“ஆமாம்,” என்றேன் நான்.

“அது இப்பொழுது ஐந்தாம் பிளாட்பார்மிலிருந்து கிளம்பும். மாற்றிவிட்டார்கள்,” என்றார். “இந்த டிவீயில் பழைய நம்பர் போடுகிறார்கள். மாறியதைப் போடவில்லை” என்றார். அவர் சரளமாக ஆங்கிலம் பேசினார்.

“நான் அறிவிப்பைக் கேட்டுவிட்டேன்.”

“ஓ,” என்று கூறிவிட்டு எனக்கு இரண்டு சீட் தள்ளி உட்கார்ந்தார். என் பக்கத்தில் அவர் மகன் உட்கார்ந்தான்.

கொஞ்சம் நேரம் கழித்து, “நீங்கள் தமிழா?” என்றார்.

“ஆமாம்”

“மெட்ராஸ் போறீங்களா?”

“இல்லை ஹைதராபாத். விஜயவாடாவில் இறங்கி வேறு ட்ரைன் மாறிவிடுவேன்”

எனக்கு ஏனோ அவருடன் பேச கூச்சமாக இருந்தது. அவர் எங்கு செல்கிறார் என்பதைக் கேட்கவில்லை. அவருக்கு பதில் சொல்லிவிட்டு மறுபடியும் டிவி பார்க்க ஆரம்பித்தேன்.

“விஜயவாடா எப்போ வரும்?”

“ஒரு ஒன்பது மணிக்கா வரும்ன்னு நினைக்கிறேன். நான் எப்போவும் ஈஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்லதான் போவேன். இதுதான் கோரமண்டலில் முதல் தடவை”

அவர் ஏதோ சொல்ல வேண்டும் போல் ஆரம்பித்தார். ஆனால் தயங்கினார். நான் எதுவும் பேசவில்லை. டிவியில் மறுபடியும் ஏதோ விளம்பரம் வந்தது. நான் அங்கும் இங்கும் பார்த்து மறுபடியும் அவரை பார்த்தேன். அவர் மெதுவாக, “எனக்கு ஒரு ஹெல்ப் வேணும். என் பர்ஸ் தொலைந்து விட்டது. எனக்கு எதாவது கொஞ்சம் பணம் கொடுத்து உதவி பண்ண முடியுமா?”

எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. ஸ்டேஷனில் இது போல் பலர் உதவி கேட்டிருக்கிறார்கள். இவர்களில் எவ்வளவு பேர் நிஜமாகவே பணத்தை தொலைத்திருக்கிறார்களோ, தெரியவில்லை. எனக்கு இவர்கள் எல்லாம் ஏமாற்றுபவர்கள் என்று ஓர் எண்ணம் வேறு வலுவாக இருந்தது.

“இல்லை. நான் ஆபிஸ் டூர்ல வந்திருக்கேன். என்கிட்ட அதிகம் பணம் இல்லை. ஆபிஸ்ல கொடுத்த அட்வான்ஸ்தான். இது ட்ராவல் பண்ண சரியா இருக்கும்”

“உங்களால் எவ்வளவு முடியுமோ கொடுங்கள். கையில் பணம் இல்லை,” என்று ஆங்கிலத்தில் கேட்டார்.

நான் சற்று தயங்கினேன். பிறகு, “நிஜமாகவே கொடுப்பதற்கு என்னிடம் கையில் பணம் இல்லை. ஐ யாம் சாரி,” என்றேன்.

“இட்ஸ் ஓகே” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்தார். அவர் மகனும் எழுந்தான். இருவரும் வேறெங்கோ நடந்து சென்றார்கள். நான் அவர்கள் செல்வதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். நான் ஏதோ பெரிய தவறு செய்துவிட்டது போல் இருந்தது. ஓடிப் போய் அவருக்கு ஒரு நூறு ரூபாய் கொடுத்துவிடலாமா என்று அப்போது ஒரு கணம் தோன்றியது. ஆனால் நான் அங்கிருந்து நகரவில்லை. இன்றைக்கு நினைக்கும்பொழுதும் அவர்கள் இருவரையும் நான் அனாதையாக விட்டு விட்டது போல் தோன்றுகிறது.

ஒளிப்பட உதவி- James Lucas, Wotartist

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.