சமவெளியில் மழையும் வெப்பமும் அதிகமானதை அடுத்து, பெரியவர்கள் எங்களை இமாலயத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். இந்திய வரைபடத்தை எடுத்துக் கொண்டால், அதன் வடகிழக்கு மூலையில் டார்ஜிலிங் என்ற நகரைப் பார்க்கலாம். உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட்டைப் பார்த்தபடி அதற்கு எதிரில் நேருக்கு நேர் நின்று கொண்டிருக்கும் நகரம் அது.
டார்ஜிலிங்கிலிருந்து, கேராவானில் பல நாட்கள் மெதுவாக பயணம் செய்து, எங்கள் குடும்பமும் நானும் என் இரண்டு புறாக்களும் டெண்டாம் என்ற சிறிய கிராமத்தை அடைந்தோம். அது கடல்மட்டத்திலிருந்து பத்தாயிரம் அடி உயரத்தில் இருக்கிறது அக்கிராமம். அப்படியொரு உயரத்தில், அமெரிக்காவின் எந்தவொரு மலையிலோ ஆல்ப்ஸிலோ கொஞ்சமாவது பனி படர்ந்திருக்கும். ஆனால், வெப்பமண்டலத்தில் இருக்கும் இந்தியாவிலோ, பூமத்திய ரேகையிலிருந்து சுமார் முப்பது பாகை கோணங்களில் இருக்கும் இமாலயத்திலோ, பத்தாயிரம் அடிக்கு கீழே பனி உருவாவதில்லை. மிருகங்கள் நிறைந்த மலையடிவாரக் காடுகள், செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு குளிரத் துவங்கியவுடன், அதன் விலங்குகள் எல்லாம் தெற்குப் பகுதிக்கு இடம்பெயர்ந்துவிடும்.
எங்கள் இடத்தை, உங்களுக்கு கொஞ்சம் விவரிக்கிறேன். தேயிலை வளரும் பள்ளத்தாக்குகளைப் பார்த்தவாறு, கல்லும் மண்ணும் கொண்டு கட்டப்பட்ட எங்கள் வீடு இருந்தது. அதைத் தாண்டி, கரடுமுரடான ஆனால் கம்பீரமான, வரிசைத் தொடர்களாக இருக்கும் முகடுகளுக்கு இடையே, பள்ளத்தாக்குகளில் நெற்பயிரும், சோளமும் பழத்தோட்டங்களும் தெரியும். தூரத்தில் இருண்ட பசுமரக்காடுகள் போர்த்த செங்குத்துச் சிகரங்களுக்கு அப்பால், ஆயிரக்கணக்கான அடிகள் உயர்ந்து நிற்கும், கஞ்சன்சங்கா, மகாலு, எவரஸ்ட் போன்ற தூய வெண்ணிற மலைத்தொடர்கள். விடியலின் முதற் கதிரொளியில் அவை வெள்ளையாகத் தோன்றும். சூரியன் மேலே போகப் போக, அதிகரிக்கும் வெளிச்சத்தில், ஒவ்வொரு சிகரமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். அடிவானத்தில், அதிக தொலைவில் அல்ல, வானத்தின் மத்தியைக் கிழித்துக் கொண்டு உயரும், அதிலிருந்து சிந்தும் ஒளியில் ஆசீர்வதிக்கப்பட்ட ரத்தம் போல, இளஞ்சிவப்பு நிறத்தில் இச்சிகரங்கள் பிரகாசிக்கும்.
மீதி நாள் முழுக்க மேகங்களால் சூழப்பட்டிருப்பதால், அதிகாலையில் மட்டுமே ஒருவரால் இமாலயத்தை துல்லியமாக காண முடியும். தெய்வ பக்தி மிகுந்தவர்களான இந்துக்கள், அழகான மலைகளை நோக்கி இறைவனைத் தொழுவதற்காக, வெகு சீக்கிரமாகவே எழுந்து விடுவார்கள். மனிதன் அறியாத, அவனுடைய கால்பதியாத சிகரங்களைக் கொண்ட மலைகளைவிடவும் பிரார்த்தனை செய்வதற்கு உகந்ததாக வேறு ஏதேனும் இருக்கமுடியுமா? அவற்றின் குன்றாத புனிதம் விலைமதிப்பில்லாதது. அதுவே அவற்றை என்றென்றைக்கும் தெய்வாம்சத்தின் சின்னமாக வைத்திருக்கிறது. எவரஸ்டைப் போன்ற உயரங்கள், மெய்யிலே உயர்ந்த தெய்வத்தின் அடையாளங்கள். அவை கடவுளின் மர்மமும்கூட. நான் சொன்னது போல, காலையைத் தவிர நாள் முழுதும் மேகங்களால் மறைக்கப்பட்டிருப்பவை அவை. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினர் நாள் முழுக்க இந்த மலைகளைப் பார்க்க வேண்டுமென்று நினைக்கிறார்கள். ஆனால், காலையில் எவரஸ்டின் அதிகாலை பேரெழிலையும் பிரமிக்க வைக்கும் மகோன்னதத்தையும் பார்த்த எவரும் “நாள் முழுக்க பார்த்துக் கொண்டிருப்பதற்கு முடியாத உன்னத காட்சி இது. தொடர்ந்து தன் கண் முன் இது இருப்பதை யாரும் தாங்கிக் கொள்ள முடியாது,” என்றுதான் சொல்வார்கள்..
ஜூலை, மழை மாதம் என்பதால் ஒவ்வொரு நாளும் எவரஸ்டின் காலைக்காட்சி கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது. அனைத்து மலைத்தொடர்களும் பனிப்புயலின் கோரப்பிடியில் சிக்கிக் கிடக்கும். எப்போதாவது, புயல்களின் யத்தங்களுக்கு மேலே, விசையோடு விரையும் பனிப்புயல்களுக்கு அப்பால், இறுகிய பனிக்கட்டியும் வெள்ளைத் தீயும் போல சிகரங்கள் தோன்றும். சூரிய ஒளியில் அவை தகதகக்கும். அதே நேரத்தில் அவற்றின் காலடியில், தங்கள் கடவுள்கள் முன்பு பித்து ஏறிச் சுற்றிச் சுற்றி ஆடி விழும் பக்தர்கள் போல பனி மேகங்கள் சுழன்றாடி வீழும்.
வெணிற்காலத்தில், எனது நண்பன் ரட்ஜாவும் காட்டுக் கதைகள் பல எங்களுக்குப் பயிற்றுவித்த ஆசான், கோண்ட் இனப் பெரியவரும் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். ரட்ஜாவுக்கு பதினாறு வயது. அதற்குள் அவன் ஒரு பிராமண பூசாரி ஆகிவிட்டிருந்தான். கோண்ட்டை, எப்போதுமே பெரியவர் என்று அழைப்போம். ஆனால், அவருக்கு என்ன வயதென்று யாருக்கும் தெரியாது. காட்டின் ரகசியங்களையும் விலங்குகளின் வாழ்க்கையைப் பற்றியும் கற்றுக்கொள்ள, வேடர்களிலேயே சிறந்தவரான கோண்டிடம் நானும் ரட்ஜாவும் ஒப்படைக்கப்பட்டோம். அவற்றைப் பற்றி என் மற்ற புத்தகங்களில் சொல்லிவிட்டதால், இங்கே திரும்பச் சொல்ல வேண்டியதில்லை.
நாங்கள் டெண்டாமை அடைந்த உடனே, எனது புறாக்களுக்கு திசையறியும் பயிற்சி கொடுக்கத் தொடங்கினேன். தெளிவான நாட்களில், மதியம் முழுக்க ஐலெக்ஸ் மற்றும் பால்சம் காடுகள் வழியே உயரமான சிகரங்களை நோக்கி ஏறினோம். எங்கள் புறாக்களை ஏதாவது பெளத்த மடத்தின் கூரையிலிருந்தோ, பெரிய மனிதர்களின் வீட்டிலிருந்தோ திறந்துவிட்டோம். அந்தி சாயும் நேரத்தில் நாங்கள் வீடு திரும்பும் போது, நாள் தவறாது வண்ணக்கழுத்தும் அதன் அம்மாவும் எங்களுக்கு முன் வீட்டை அடைந்திருப்பதைக் கண்டோம்.
ஜூலை மாதம் மொத்தத்தில் தெளிந்த நாட்கள் அரை டஜன்கூட வாய்க்கவில்லை. அந்தக் குறைந்த நேரத்திலும், எல்லாம் அறிந்த கோண்ட் வழிநடத்த, ரட்ஜாவுடன் நாங்கள் நிறைய தூரம் பயணம் செய்தோம். அனைத்து விதமான மலைவாழ் மக்களையும் சந்தித்து அவர்களோடு தங்கினோம். அவர்களைப் பார்க்க பெரும்பாலும் சீனர்களைப் போல இருந்தார்கள். அவர்கள் நடத்தையில் நளினமானவர்கள். விருந்தோம்பலில் பெருந்தன்மையானவர்கள். எங்கள் புறாக்களையும் கூட்டிக் கொண்டு தான் போனோம். சில நேரம் கூண்டுகளிலும் பெரும்பாலும் எங்கள் மேற்துண்டுக்கு அடியிலும் அவை இருந்தன. அடிக்கடி நாங்கள் மழையில் நனைந்த போதிலும், வண்ணக்கழுத்தும் அவன் அம்மாவும் கவனமாக காக்கப்பட்டனர்.
ஜூலை மாத இறுதியில், நாங்கள் மூவரும் இரண்டு புறக்களும் ஒவ்வொரு பெளத்தமடாலயம், பெருந்தனக்காரரின் கோட்டைகளைக் கடந்து பயணத்தோம். சிங்காலியாவைக் கடந்து போனோம். அங்கே, பலுட்டுக்கும் இதுவரை போயிராத இடத்துக்கும் செல்லும் வழியில் இடையே அழகிய ஒரு சின்ன மடாலயம் இருந்தது. கடைசியில், கழுகுகளின் இருப்பிடத்தை அடைந்தோம். எங்களைச் சுற்றிலும், ஃபிர் மரங்களும் வளர்ச்சி குன்றிய பைன் மரங்களும் அடர்ந்த சூழலில் உயர்ந்து எழும் பொட்டல் கிரானைட் குன்றுகள். எங்களுக்கு முன்னால் வடக்கே, கஞ்சன்சங்கா, எவரஸ்ட் சிகரங்கள். இங்கே, பள்ளத்தின் நுனியில் எங்கள் பறவைகளைத் திறந்துவிட்டோம். மகிழ்வூட்டும் அந்தக் காற்றில், அவை பள்ளிக் கூடம் முடிந்து ஓடிப்போகும் சிறுவர்களைப்போல பறந்து போயின. வண்ணக்கழுத்தின் அம்மா, பையனுக்கு இன்னும் மேலான உயரங்களைக் காட்ட, தொலைதூரம் மேலே பறந்தார்.
அவை பறந்து போன பின்பு, நாங்கள் மூவரும், உயரங்களில் பறக்கும் போது அந்தப் பறவைகள் எதை எதையெல்லாம் பார்கக்கூடும் என்று பேசிக் கொண்டோம். அவற்றுக்கு முன்னே, கஞ்சன்சங்காவின் இரண்டு சிகரங்களும் நின்றிருந்தன. எவரஸ்டைவிட சற்றே சிறியதாக இருந்தாலும், எவரஸ்டைப் போலவே இதுவரை மனிதனின் கால்படாமல், களங்கமற்று தவக்கோலம் பூண்டிருந்தன. இந்த உண்மை, எங்களில் ஆழமான உணர்வுகளை உண்டு பண்ணியது. கடவுளின் முகத்தின் முன் இருக்கும் கண்ணாடியைப் போன்ற இந்த மலையை சில நிமிடங்கள் நாங்கள் நோக்கினோம். “ஏ! பவித்திரச் சிகரமே, குன்றாத அழகோடு என்றென்றைக்கும் நிற்கப் போகும் மலையே. உன்னை எந்த மனிதனும் களங்கப்படுத்தாமல் இருக்காட்டும், எந்த மனிதனின் மிகச் சிறு தொடுகையும்கூட உன் தூய்மையை மாசுபடுத்தாமல் இருக்கட்டும். என்றென்றும் தோல்வியறியாமல் இருப்பாயாக, நீயே இவ்வுலகின் முதுகெலும்பு, நித்தியத்தின் அளவுகோல்” என்று நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
உங்களை இத்தனை உயரம் கூட்டிக் கொண்டு வந்தது, மலைகளைப் பற்றிச் சொல்வதற்காக இல்லை. அங்கே எங்களுக்கு நேர்ந்த சாகசத்தைச் சொல்லத்தான். வண்ணக்கழுத்தும் அவன் அம்மாவும் பறந்து போன பிறகு, அவர்களையே பார்த்துக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, நாங்கள் பக்கத்துக் குன்றிலிருக்கும் கழுகுக் கூட்டைத் தேடிப் போனோம். இமாலய கழுகு, பழுப்பு நிறத்தில் பொன்னிற பளபளப்புடன், பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். அழகையும் பலத்தையும் சம அளவில் கொண்டவையாக இருந்தாலும், அவை ஒரு கொடூர விலங்கினம்.
இந்தக் குறிப்பிட்ட மதிய வேளையில் முதலில் நாங்கள் எந்தக் கொடூரத்தையும் காணவில்லை. மாறாக மலைப்பொந்தில், புசுபுசுவென்ற இரண்டு வெண்ணிற கழுகுக் குஞ்சுகளை பார்த்தோம். பிறந்த பிஞ்சுக் குழந்தைகள் போன்ற வசீகரத்துடன் இருந்தன. தென்றல் அவற்றின் கண்களின் மீது வீசிக்கொண்டிருந்தது. ஆனால், அவை அது பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. இயல்பாகவே, இமாலய கழுகுகள் காற்று வீசும் திசையைப் பார்த்தவாறு கூடுகளைக் கட்டுவதேன்? யாருக்கும் தெரியாது. தான் மிதந்து செல்லும் காற்றை எப்போதும் உணர விரும்புகிறதோ என்னவோ.
குஞ்சுகள் பிறந்து மூன்று வாரங்கள் போல இருக்கும். பஞ்சு போன்ற ரோமங்கள் உதிர்ந்து, நிஜ இறகுகள் வளரத் துவங்கியிருந்தன. அவற்றின் நகங்கள் வயதுற்கேற்ற கூர்மையுடன் இருந்தன, அலகுகளும் கூர்மையாகவும் உறுதியாகவும் இருந்தன.
ஒரு கழுகின் மலைப் பொந்து பெரிதாகவும் பரந்ததாகவும் இருக்கும். அதன் வாசல் விளிம்பு, அதாவது கழுகு தரையிரங்கும் இடம், ஆறு அல்லது ஏழு அடி அகலமாகவும் சுத்தமாகவும் இருந்தது. ஆனால் பொந்துக்கு உள்ளே, இருட்டாகவும் குறுகலாகவும் இருந்தது. குச்சிகளும், கிளைகளும், கழுகுக்கு பலியான விலங்குகளில், குஞ்சுகள் கபளீகரம் செய்த இரைகளின் பாகங்கள் போக, எஞ்சிய ரோமங்களும் இறகுகளும் சிதறிக் கிடந்தன. பெரிய கழுகுகள், பெரும்பாலான ரோமங்களையும் எலும்புகளையும் இரைச்சியுடனேயே விழுங்கிவிடும்.
சுற்றிலும் வளர்ச்சி குன்றிய பைன் மரங்கள் தான் என்றாலும், முழுக்க முழுக்க பறவைக் கூச்சல்கள் தான். மேலும், ஃபிர் மரங்களில் ரீங்காரமிடும் ஏதேதோ பூச்சிகள். ஊதா நிற ஆர்கிட்களுக்கு மேலே படபடவென்று மினிங்கும் ஈக்கள், சில சமயம் நிலவின் அளவுக்கு பெரிதாகப் பூக்கும் பெரிய பெரிய ரொடோடெண்டார்ன் பூக்கள். அவ்வப்போது, கத்திக் கொண்டிருக்கும் காட்டுப் பூனை. தன்னுடைய மதியத் தூக்கதில் உளறுமாக இருக்கும்.
திடீரென்று கோண்ட், ஓடிப்போய் பக்கத்திலிருந்த புதரில் மறைந்து கொள்ளுமாறு சொன்னார். நாங்கள் புதரில் மறைந்து கொண்டதுதான் தாமதம், சுற்றியிருந்த சத்தங்கள் அனைத்தும் அடங்கத் துவங்கின. அடுத்த அறுபது நொடிகளில், பூச்சிகள் தங்கள் ரீங்காரத்தை நிறுத்தின, பறவைகள் தங்கள் அழைப்புகளை நிறுத்தின. மரங்கள் கூட ஏதோ எதிர்பார்ப்புடன் அசையாமல் நின்றுவிட்டன போல் தோன்றின. காற்றில், ஒரு மெல்லிய விசில் போன்ற சத்தம் உயர்ந்தது. சில நொடிகளில் அந்தச் சத்தம் குறைந்துவிட்டது. அதன் பிறகு கிறீச்சிடுவதைப் போன்றொரு சத்தம் கேட்டது. ஒரு பெரிய பறவை, கழுகின் மலைப்பொந்தில் இறங்கியது.
காற்று இன்னமும் அதன் இறக்கைகளில் சத்தமிட்டுக் கொண்டிருந்தது. அதன் அளவைப் பார்த்து, அது அந்தக் குஞ்சுகளின் அம்மாவாக இருக்கும் என்றார் கோண்ட். கழுகுக் குஞ்சுகள் தங்கள் பொந்துக்குள்ளே போகும்வரை, அது காற்றிலேயே நிலையாகப் பறந்து கொண்டிருந்தது. அதன் நகங்களுக்கு இடையே, நல்ல நிறம் கொண்ட முயல் போல எதுவோ ஒன்று தோலுரிக்கப்பட்டு, தொங்கிக்கொண்டிருந்தது. தன் இரையை விளிம்பில் போட்டுவிட்டு கழுகு தரையிறங்கியது. அதன் இறக்கைகள் விரிந்த நிலையில், இந்த ஓரத்திலிருந்து அந்த ஓரம் வரை சுமார் ஆறடியாவது இருக்கும். மனிதர்கள் செய்தித்தாளை மடிப்பது போல, தன் இறக்கைகளை மடித்துக் கொண்டது. குஞ்சுகள் தன்னை நோக்கி வருவதைக் கண்டு, தனது நகங்களை உள்ளிழுத்துக் கொண்டது. இல்லையென்றால், அவற்றின் பிஞ்சுச் சதைகளைப் பிய்த்துவிடும். இப்போது அம்மா கழுகு ஒரு முடவன் போல, நொண்டி நகர்ந்தது.
இரண்டு குஞ்சுகளும், அம்மாவின் பாதி திறந்த இறக்கைகளுக்குள் சென்று காணாமல்போயின. அவை பயங்கர பசியில் இருந்தன. அவற்றுக்கு இப்போது கொஞ்சல் தேவையில்லை. எனவே, அவற்றை இறந்த முயலுக்கு அருகில் அழைத்துக் கொண்டு போய், கொஞ்சம் சதையைக் கிழித்து, அதில் ஒட்டிக் கொண்டிருந்த எலும்புகளை நீக்கிவிட்டு, குஞ்சுகளுக்குச் சாப்பிடத் தந்தது. கீழிருந்த பறவைகளும் பூச்சிகளும் மீண்டும் சத்தமிடத் துவங்கின. நாங்கள் மறைந்து கொண்டிருந்த புதரிலிருந்து வெளிவந்தோம். இந்தக் குஞ்சு கழுகுகள் பெரிதாக வளர்ந்திருப்பதைக் காண, எங்களை மீண்டும் அழைத்துக் கொண்டு வர வேண்டும் என்று கோண்டிடம் நானும் ரட்ஜாவும் சத்தியம் வாங்கிக் கொண்டு வீடு நோக்கி நடக்கத் தொடங்கினோம்.