சோழி

ஹரன் பிரசன்னா

முரளிதர ராவ் தனது எண்ணத்தின் கனம் தாங்காமல் எப்போது வேண்டுமானால் விழுந்துவிடுவார் போல அலைந்து அலைந்து நடந்தார். அவரது மெல்லிய உடலில் அதைவிட மெல்லிய பூணூல் காற்றில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது. பூணூலையும் அதோடு சேர்த்து தன்னைப் போர்த்தியிருந்த மேல் துண்டையும் இழுத்து, சூம்பி தொங்கிப் போயிருந்த தன் மார்பின் இரு கருநிறக் காம்புகளையும் அவர் மூடிக்கொண்டார். வழுக்கைத் தலையில் வெளிப்பட்டிருந்த ஒன்றிரண்டு வெண்மயிர்கள் மிக நீண்டிருந்தன. வழுக்கையைச் சுற்றி மயிர்கள் சீவாமல் சீரில்லாமல் படிந்து கிடந்தன. முன்நெற்றியில் அவரது நாமத்தைக் கரைத்துக்கொண்டு வியர்வை வழிந்தது. தன் தோள்துண்டால் முகத்தை அழுந்தத் துடைத்தார். நாமத்துக்கிடையே அவர் இட்டிருந்த கரிக்கோடுபட்டு துண்டு கருப்பாகியது. கண்ணாடி மாட்டிக்கொண்டு வெளுத்த உளுத்த மரக்கொம்பு ஒன்று நடந்து வருவதுபோல் அவர் நடை இருந்தது. தள்ளாத வயதிலும் மனதில் இருந்த குழப்பம் காரணமாக வேகமாக நடக்க முயன்று தோற்றுப் போனார். மீண்டும் வேகமாக நடந்தார்.

அவரது அணுக்க நண்பர் ராகவேந்திர ராவை நினைத்துக்கொண்டார். அவன் வெறும் நண்பனல்ல. ஒரு ஜோதிட நிபுணன். அவன் சொல்லி பலிக்காமல் போனது எதுவுமே இல்லை. ஒன்றிரண்டு பலிக்காமல் போயிருக்கலாம் என்ற நினைவும் சட்டென்று வந்தது. அதற்கும் தன் ராசியே காரணமாக இருக்கும் என்றும், ராகவேந்திரன் சொல்லியே தப்பிவிட்டது என்றால் தன் ராசியை புரிந்துகொள்ளலாம் என்றும் நினைத்துக்கொண்டார். ஆனால் ராகவேந்திர ராவ் ராசியெல்லாம் பார்ப்பதே இல்லை. சட்டென்று ஓர் எண்ணை சொல்லச் சொல்வார். அதிலிருந்து அவர் மனம் மளமளவென்று இரண்டாக நான்காக ஆயிரமாக விரிந்து நிற்கும். அனைத்தும் சட்டென்று கூடிநின்று நொடியில் ஒரு வாக்கு சொல்வார். அவ்வளவுதான். அதுதான் இறுதி. பின்னர் அழைத்து, ‘சோழி போட்டுப் பார்த்தேன், பிரமாதம்’ என்பார். அத்தனையும் பிறழ்ந்து வெண்ணிறம் காட்டிக்கொண்டு கிடந்தால் யோகமாம்.

இன்னும் ராகவேந்திரன் சொல்வதை தள்ளிப் போட்டுப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்தார் முரளிதர ராவ். இன்றே அந்தப் பசுவை வாங்கிவிடவேண்டும் என்று உறுதிகொள்ளவும் அவரது மனதில் வேகம் கூடியது.

“இங்க அத்தை மூத்திரத்தை அள்ளவே ஆளில்லை, இதுல பசு ஒரு கேடா,” என்று அவரது மருமகள் பேசியது நினைவுக்கு வரவும் தளர்ந்து வழியில் ஓரத்தில் இருந்த ஒரு கல்லில் உட்கார்ந்துகொண்டார். லேசாக மூச்சு வாங்கியது. தனக்கு நெஞ்சுவலி வருகிறதோ என்ற எண்ணம் வந்தது. அதற்கெல்லாம் கொடுப்பினை இல்லை என்று நினைத்துக்கொண்டார். லக்ஷ்மி போல் தானும் கிடையாகக் கிடந்து மூத்திரத்தில் ஊறித்தான் சாக எழுதியிருக்கும்.

லக்ஷ்மி இருபது வயதில் இவருக்கு வாழ்க்கைப்பட்டு வந்தவள். இன்று படுத்த படுக்கையாகக் கிடக்கிறாள். இப்போதெல்லாம் அவளுக்கு எதுவும் நினைவில் நிற்பதில்லை. இந்த குரூரமான காலம் எல்லாவற்றையும் வெற்றுத் தாளாகத் துடைத்துப் போட்டு விடுகிறது. படுக்கையில் யாரோ ஒருத்தியெனப் படுத்துக் கிடக்கிறாள். அவளாகவே சில சமயம் சிரிப்பாள். அருகில் போனால் பாயெங்கும் மூத்திரம் பொதுமிக் கிடக்கும்.

‘என்னையும் மீறி வீட்டுக்குள்ள மாடு வந்ததுன்னு வைங்க, இனி நானில்லை’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டாள் மருமகள்.

ராகவேந்திரன் ஓர் எண்ணைச் சொல்லச் சொன்னார். சிறிது நேரத்தில் சோழி போட்டுப் பார்த்தாகவும் அவரே சொன்னார். ‘வாக்கு என்ன வருதுன்னா, இனி லக்ஷ்மியை காப்பாத்த முடியாது. இன்னொரு லக்ஷ்மி கொண்டு வா. இவ போயிடுவா’ என்று. இது என்ன கணக்கு என்று முரளிதர ராவுக்கு விளங்கவில்லை. ஆனால் இப்படி விளங்காத எத்தனையோ விஷயங்கள் ராகவேந்திரன் சொல்லி சரியாக நடந்திருக்கிறது. அதை மறுப்பதற்கில்லை.

தான் இருக்கும் நிலையில் இன்னொரு வாயில்லா ஜீவனா என்று ஒரு கணம் நிலை தடுமாறினார் முரளிதர ராவ். அவரது குடும்பமே அவரை திட்டும். வாய்க்கு சாப்பாடு வருதா, ராகவேந்திரான்னு கிடைக்கவேண்டியதுதானே என்பார்கள். அந்த ராகவேந்திரனே வந்து சொன்னதுபோல்தான் அவருக்குப் பட்டது. கூடவே சோழி பொய் சொல்லாது. அதை யார் கேட்கப் போகிறார்கள்.

முதல் நாள் இரவில் நல்ல மழைக் குளிரில் அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது லக்ஷ்மி என்னவோ புலம்புவது போல் இருந்தது. அருகில் சென்று கேட்டார். அவருக்குப் புரியவில்லை. லக்ஷ்மி லக்ஷ்மி என்றார். அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை. சிறிது நேரத்தில் மீண்டும் முனகல். பாயில் பொலிவிழந்து கிடக்கும் புடைவையைப் போல் அவள் கிடந்தது அவருக்கு கடும் ஆற்றாமையை உண்டாக்கியது. மெல்ல அவள் கண்ணைத் திறந்து பார்த்தார். புரை தட்டிப் போயிருந்த கண்களில் உயிர் இருந்தது. ஒளியில்லை. உடலெங்கும் படுக்கைப் புண் வந்திருந்தது. மறுநாள் துடைத்து மருந்து போடவேண்டும் என்று நினைத்துக்கொண்டார். இன்னும் இவள் எத்தனை நாள் அல்லாடப் போகிறாளோ என்ற எண்ணம் அவருக்குள் பயத்தை உண்டாக்கியது. அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டார். அதில் எந்த உணர்ச்சியும் இல்லை என்பது அவருக்குப் புரிந்தது.

ராகவேந்திர ராவ் சொன்னார், ‘இப்படித்தானே ரொம்ப நாளா. இப்ப இன்னும் மோசம். ராகவேந்திரா சீக்கிரம் கூட்டிக்கோன்னு வேண்டிக்கோ.’ உண்மையில் அவர் அப்படி வேண்ட ஆரம்பித்து பல நாள்கள் ஆகிறது. முதலில் அப்படி வேண்டும்போது கண்ணீர் மாலைமாலையாக வழிந்தது. ஒருவேளை லக்ஷ்மி உடல்நிலை நன்றானால் அவள் முகத்தில் எப்படி விழிப்பது என்றெல்லாம் யோசித்தார். ஆனால் லக்ஷ்மி அவருக்கு அந்த கஷ்டத்தைக் கொடுக்கவில்லை.

‘இங்க ஜானகி தோட்டம்’ எங்க இருக்கு என்று ஒரு ஆட்டோக்காரரிடம் கேட்டார். அவர் வழி காட்டினார். இப்போதும்கூட திரும்பிப் போய்விடலாம். ஒன்றுமே நடக்காததுபோல வீட்டில் லக்ஷ்மியின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு காலையில் காஃபி மதியம் சாப்பாடு இரவு பால் என்று இருக்கலாம். அவ்வப்போது மருமகள் எதாவது சொல்வாள். ஆனால் சாப்பாட்டில் குறை வைக்கமாட்டாள். கொஞ்சமே கொஞ்சம் தன்மானத்தை விட்டுவிட்டால் போதும். ராஜா போல இருக்கலாம். அல்லது லக்ஷ்மியைப் போல காதில் வாங்கிக்கொள்ளக் கூடாது. லக்ஷ்மியை நினைத்ததும் ஏனோ அவருக்கு தொண்டை அடைத்தது. குத்துவிளக்கு போல் வீட்டுக்கு வந்தவள்.

ஜானகி தோட்டம் மிகக் குறுகிய வாயிலில் திறந்து மிகப்பெரிய உருவம் கொண்டு உள்ளே விரிந்து சென்றது. என்னென்னவோ பயிரிட்டிருந்தார்கள். தென்னை மரங்கள் ஐந்நூறாவது இருக்கும். ஓர் இளநீரை வெட்டிக்கொண்டுபோய் லக்ஷ்மிக்குக் கொடுக்கலாம். குடிப்பாளா என்று தெரியவில்லை. சின்ன சின்ன தேன்கூடு கட்டி அதில் தேனீயை வளர்த்துக்கொண்டிருந்தார்கள். முரளிதர ராவுக்கு ஆச்சரியமாக இருந்தது. தேன்கூட கொண்டுபோகலாம். இயற்கைத் தேன். உடலுக்கு நல்லது. இனி யார் உடலுக்கு என்ற யோசனை வரவும் மெல்ல அதைக் கடந்து சென்றார். கரும்பு பயிரிட்டிருந்தார்கள். எலுமிச்சை காய்த்துத் தொங்கியது. மெல்ல நடந்து தோட்டத்தில் இருந்த குடிசைக்கு முன் நின்று, ‘மேனேஜர் இருக்காரா’ என்றார்.

மேனேஜர் வந்து கயிற்றுக் கட்டிலில் அவரை உட்காரச் சொனார். ராகவேந்திரா என்று சொல்லி உட்கார்ந்துகொண்டார். கொஞ்சம் அமைதியடைந்து சொன்னார். ‘ராகவேந்திர ராவ் அனுப்பினார்.’ மேனேஜருக்கு எல்லாமே ராகவேந்திர ராவ் தானாம். அவர் சொல்லி எதையும் செய்யாமல் விட்டதில்லையாம். அவர் சொல்லாமல் எதையும் செய்ததில்லை என்றார். ராகவேந்திரனை ராவ்ஜி என்றுதான் மேனேஜர் அழைத்தார். அவர் நடமாடும் ஞானவான் என்றார் மேனேஜர். சின்ன வயதில் தன்னுடன் கிணற்றில் குதித்து விளையாடிய ராகவேந்திரன் இன்று எத்தனை உயர்ந்து நிற்கிறான் என்ற பெருமிதம் வந்தது முரளிதர ராவுக்கு. நல்ல மனைவி, நல்ல மருமகள், அது ஒரு வரம் என நினைத்துக்கொண்டார். தனக்கும் நல்ல மனைவிதான், நல்ல மருமகள்தானே என்ற எண்ணமும் இணை சரடு போல அவருக்குள் ஓடியது. எல்லாமே ஒரு குழப்பமாகவே தனக்கு எஞ்சுவது ஏன் என்று அவருக்குப் புரிந்ததே இல்லை.

ஈனாத மாடுகளை அடிமாட்டுக்கு விற்பதே ஒரே வழி என்றார் மேனேஜர். கேரளாவில் அடிமாட்டுக்கு நல்ல வரவேற்பாம். ராகவேந்திரா என்றார் முரளிதர ராவ். அவர் அடிவயிற்றுக்குள் ஒரு நெருப்புப் பந்து அடைத்து நின்றது. குறைந்த விலையில் ஒரு பசுவை வாங்கித் தரச் சொல்லி ராகவேந்திரனிடம் சொல்லி இருந்தார் முரளிதர ராவ். ‘ராவ்ஜி சொன்னார். அதான் அடிமாட்டுக்கு கொடுக்கிறதை உங்களுக்கு கொடுக்கலாம்னு’ என்றார் மேனேஜர். அதற்கு அதிகம் புண்ணாக்கு வைக்கவேண்டியதில்லை, அதிகம் புல் போடவேண்டியதில்லை. தருவதைத் திங்கும். கத்தாது. கடைசி குட்டி போட்டு நான்கு வருடங்களாகிவிட்டது. கண் பார்வையும் மங்கிவிட்டது. ஆனால் அதுதான் இந்த பண்ணையின் முதல் பசு. அதனால்தான் அதை அடிமாட்டுக்கு விற்காமல் வைத்திருந்திருக்கிறார்கள். இப்போது முரளிதர ராவ் கேட்பதால், அங்கே அது உயிரோடு இருக்கும் என்பதால் தருகிறார்களாம். அதுவும் ராகவேந்திர ராவ் சொன்னதால்தானாம். இரண்டாயிரம் ரூபாய் போதும் என்றார். அடிமாட்டுக்கே ஐயாயிரம் வரைக்கும் போகுமாம். தோலுக்கு நல்ல விலையாம். இதெல்லாம் வேண்டாமே என்றார் முரளிதர ராவ் மெல்ல நடுங்கும் குரலில். மேனேஜர் சிரித்தார். ஸாரி சாமி என்றார்.

கிளம்பும்போது, மாட்டுக்கு ஒரு கொம்பு உடைந்துவிட்டதாகவும், அதில் சீழ் வைத்து புழுக்கள் நெளிவதாகவும், அதற்கான மருந்தையும் தருவதாகச் சொன்னார். தினம் ஒரு தடவை போடவேண்டுமாம். மருமகளின் நினைவு வந்தது. என்ன சொல்வாள் என்று அவருக்குத் தெரியும். ‘உங்களையும் அந்த மாட்டோடு நாற விட்டுருவேன்.’ அவருக்குள் அவள் குரல் ஒலித்தது.

‘இப்ப எப்படி மாட்டை கொண்டு போவீங்க’ என்றார் மேனேஜர். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முரளிதர ராவ் ‘பக்கத்திலதான்’ என்றார். மேனேஜர் சிரித்துக்கொண்டு, ‘நீங்க போங்க, நான் அனுப்பி வைக்கிறேன்’ என்றார். அந்த மாட்டை ஒரு தடவை பார்க்கவேண்டும் என்று கேட்டார் முரளிதர ராவ். யாரையோ அழைத்து, ‘லக்ஷ்மியை இவருக்கு காட்டு’ என்று சொல்லிவிட்டுப் போகவும், பக்கத்தில் இருந்த குடிசையின் மரக்கம்பைப் பிடித்துக்கொண்டு ராகவேந்திரா என்றார். அந்தப் பையனிடம் ‘அப்புறம் பாத்துக்கறேன்ப்பா’ என்றார்.

இரண்டாயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு ராகவேந்திரனை போனில் அழைத்து நன்றி சொன்னார் முரளிதர ராவ். திடீரென்று ராகவேந்திர ராவ் ‘பத்துக்குள்ள ஒரு நம்பர் சொல்லு’ என்றார். முரளிதர ராவ் என்ன சொல்வதென்று தெரியாமல் ‘நாலு’ என்றார். ‘நாலுன்னா நாலேழு மூவாறு ஈரைந்து… அப்படீன்னா…’ என்று சொல்லிவிட்டு ஒரு கணம் நின்றார். வேறு ஒரு எண்ணை சொல்லி இருக்கலாமோ, அவசரப்பட்டுவிட்டோமோ என்று முரளிதர ராவ் நினைக்கும்போது, ‘பிரச்சியினையில்லை, எல்லாமே நல்லா நடக்கும்’ என்றார் ராகவேந்திர ராவ். சிறிது நேரத்தில் வழக்கம்போல அவரே திரும்பவும் கூப்பிட்டு, சோழியும் அதுவே சொல்வதாகச் சொன்னார்.

வீட்டுக்குள் நுழையவும் மருமகள் கத்தவும் சரியாக இருந்தது. ‘எங்க போயிருந்தீங்க என் உயிரை எடுக்கறதுக்குன்னே, போன் அடிச்சாலும் எடுக்கறதில்லை. அத்தை ஒடம்பெல்லாம் ஜில்லிட்டு போயிருக்கு’ என்றாள். ராகவேந்திர ராவுக்கு தலை சுற்றியது. அவருக்கு போன் பண்ணிருக்கேன் என்றாள் மருமகள். மகன் வந்து லக்ஷ்மியை ஒரு காரில் மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு போனான்.

இங்க முரளிதர ராவ் வீடு இதுதானே என்று கேட்டுக்கொண்டே ஒருவன் கையில் மாட்டோடு வந்தான். மாட்டை அப்போதுதான் வீட்டுக்குள்ளிருந்து முரளிதர ராவ் பார்த்தார். உடல் வற்றி மடிக்காம்புகள் ஒடுங்கி முக எலும்பு துருத்தி நிற்க ஒரு கொம்பு உடைந்து பரிதாபமாக அந்த மாடு அவரைப் போலவே நிலையில்லாமல் அங்குமிங்கும் நோக்கிக்கொண்டிருந்தது. எங்க கட்ட என்று கேட்டான். மருமகள் பொங்கிக்கொண்டு முரளிதர ராவை நோக்கி, மறுநொடி உடைந்து, ‘என் கழுத்துல கட்டி வைங்க’ என்று சொல்லிவிட்டு தலையிலடித்துக்கொண்டு நடு வீட்டில் உட்கார்ந்துகொண்டு அழுதாள். யாரும் தன் சொல்லை மதிப்பதில்லை என்றும் தனக்கு ஒரு நாதியும் இல்லை என்று சொல்லி மருமகள் அழுதபோது, கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டோமோ என்று முரளிதர ராவுக்குத் தோன்றியது.

மருத்துவமனையிலிருந்து லக்ஷ்மியை வீட்டுக்குக் கூட்டி வந்திருந்தார்கள். சர்க்கரை அளவு குறைந்துபோய் உடல் சில்லிட்டுவிட்டதாம். அந்த பாயில் அதேபோல் படுத்திருந்தாள் லக்ஷ்மி. இது எந்தக் கவனமும் இல்லாமல் வீட்டு வாசலில் கம்பி கேட்டில் கட்டப்பட்டிருந்த பசுவை இனி என்ன செய்வது என்று புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தார் முரளிதர ராவ். ‘இப்ப இந்த மாட்டை என்ன பண்றது’ என்றாள் மருமகள். முரளிதர ராவ் நடுங்கும் குரலில் ‘அது பேரு லக்ஷ்மி’ என்றார். பதிலுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் மருமகள் பார்க்க, ‘மேனேஜரே புல்லு புண்ணாக்கெல்லாம் தரேன்னு சொல்லிருக்கான்’ என்றார். எல்லாம் தன் தலையெழுத்து, தனக்கு சாவு வந்தால்தான் விடிவுகாலம் என்று சொல்லிவிட்டுப் போனாள்.

மீண்டும் ராகவேந்திரனுக்கு போன் அடித்தார். தான் அவசரப்பட்டு பசுவை வாங்கிவிட்டோமோ என்று தோன்றுவதாகச் சொன்னார் முரளிதர ராவ். ‘உனக்கு கஷ்டம்னா நான் வேணா மேனேஜர்கிட்ட பேசி அவன்கிட்டயே திரும்பி வாங்கிக்க சொல்லவா?’ என்றார். முரளிதர ராவ் ‘பணம் போனால் போகட்டும். மாட்டையும் அவனே வெச்சிக்கட்டும்’ என்றார். சோழி போட்டுப் பார்த்துச் சொன்ன முடிவு என்று சொல்லிப் பார்த்தார் ராகவேந்திர ராவ். முரளிதர ராவின் குரலில் தெரிந்த பயத்தைக் கண்டுகொண்டு, சரியென்று ஒப்புக்கொண்டு தான் பேசிப் பார்ப்பதாக சொன்னார். வீட்டுக்கு வெளியே வந்து அந்த மாட்டின் பக்கத்தில் நின்று மெல்ல தடவிக் கொடுத்தார். என்னவோ நினைவு வரவும் வீட்டுக்குள் போய் அந்த மேனேஜர் கொடுத்த மருந்தைக் கொண்டுவந்து அந்தக் கொம்பில் தடவினார். பீழை பீடித்திருந்த கண்களில் லக்ஷ்மி மெல்ல தலையாட்டியது. கீழே கிடந்த புல்லை எடுத்து அதற்கு முன் நீட்டினார். அதற்கு அது கண்ணில் படவே இல்லை. மெல்ல மூக்கருகே கொண்டு சென்றார். அது அதை நுகர்ந்து பார்த்து மெல்ல நாக்கை நீட்டி உண்டது.

அன்றிரவு மருமகளும் மகனும் வெடித்துவிட்டார்கள். இந்த வீட்டில் மாட்டை வளர்ப்பதெல்லாம் எப்படி சாத்தியம் என்று மீண்டும் மீண்டும் அவரைக் கேட்டார்கள். எதைச் செய்தாலும் தங்களிடம் ஒரு வார்த்தை கேட்கவேண்டாமா என்ற கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. ‘ராகவேந்திரன் சொன்னான், அதான்’ என்றார் அவருக்கே கேட்காத குரலில். மருமகள் உரத்த குரலில் ‘அவர் ஒரு பிராடு. அவருக்கு ஏத்த ஜோடி நீங்க. மாடு வந்தா அத்தைக்கு சரி ஆயிடுமா? என்ன கணக்கு இது? சொல்றவன் ஆயிரம் சொல்வான். உங்களுக்கு யோசனை வேண்டாம்’ என்றாள். ஒன்றும் சொல்லாமல் முரளிதர ராவ் தன் இடத்திற்குச் சென்று படுத்துகொண்டார்.

மறுநாள் காலையில் மருமகள் சத்தமாக கத்திக்கொண்டே மகனை எழுப்பினாள். சத்தம் கேட்டு முரளிதர ராவ் வெளியில் வந்து பார்த்தார். லக்ஷ்மி புல்லுக்கு நடுவே நான்கு கால்களும் விரைத்து வாயில் நீர் வழிய செத்துக் கிடந்தது.

ஒளிப்பட உதவி- SML3000

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.