பதாகை இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளைப் பதிப்பித்திருந்தாலும், முதல் முறையாக எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் வாயிலாய் பதாகையில் வெளிவரும் சிறுகதைகளுக்கு முழுமையான முதல் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ‘தமிழ் சிறுகதையின் பத்து முகங்கள்‘ என்ற கட்டுரையில் எஸ். ராமகிருஷ்ணன், இணைய இதழ்களில் வரும் சிறுகதைகளை தான் வாசிப்பதாய் எந்தச் சலிப்பும் இல்லாமல் சொல்லிக் கொள்வதோடல்லாமல், பதாகையில் எழுதும் காலத்துகள் சிறுகதைகள் குறித்து, “பதாகை இதழில் இவரது சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். இவர் யார் என்று தெரியவில்லை. அசோகமித்ரன் பாணியில் சிறப்பாகக் கதைகளை எழுதுகிறார். வேதாளத்தின் மோதிரம் என்ற சிறுகதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது“, என்று எழுதியிருக்கிறார்.
யார் எவரென்றே தெரியாத ஒருவரை முன்னணி எழுத்தாளர் ஒருவர் வாசிப்பதில் தமிழ் இலக்கியத்தின் இனிய முகமொன்று வெளிப்படுகிறது- பாராட்டுகள் யாருக்குமே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் என்றாலும், மூத்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எந்த கோரிக்கையும் இல்லாமல் தன் கதைகளை வாசிப்பதாய்க் குறிப்பிடுவதற்கு மேல் புதிதாய் எழுத வருபவனுக்கு வேறென்ன அங்கீகாரம் வேண்டும்? எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு பதாகை மற்றும் காலத்துகளின் மனமார்ந்த நன்றிகள்.
எஸ். ராமகிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கும் பத்து முகங்களில் இன்னொரு முகமான ஹரன் பிரசன்னாவும் பதாகையில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார்- ஹரன் பிரசன்னா குறித்து, “… வித்தியாசமான கதைகளை எழுதுகிறார். மெல்லிய பகடியுடன் கூடிய சரளமான எழுத்து. சில கதைகள் ஆதவனை நினைவூட்டுகின்றன. குரலை உயர்த்தாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது இக்கதைகளின் சிறப்பு,” என்று குறிப்பிடுகிறார் எஸ். ராமகிருஷ்ணன்.
ஹரன் பிரசன்னா பதாகையில் எழுதிய, ‘சோழி’ என்ற சிறுகதை இப்படி துவங்குகிறது–
“முரளிதர ராவ் தனது எண்ணத்தின் கனம் தாங்காமல் எப்போது வேண்டுமானால் விழுந்துவிடுவார் போல அலைந்து அலைந்து நடந்தார். அவரது மெல்லிய உடலில் அதைவிட மெல்லிய பூணூல் காற்றில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது. பூணூலையும் அதோடு சேர்த்து தன்னைப் போர்த்தியிருந்த மேல் துண்டையும் இழுத்து, சூம்பி தொங்கிப் போயிருந்த தன் மார்பின் இரு கருநிறக் காம்புகளையும் அவர் மூடிக்கொண்டார். வழுக்கைத் தலையில் வெளிப்பட்டிருந்த ஒன்றிரண்டு வெண்மயிர்கள் மிக நீண்டிருந்தன. வழுக்கையைச் சுற்றி மயிர்கள் சீவாமல் சீரில்லாமல் படிந்து கிடந்தன. முன்நெற்றியில் அவரது நாமத்தைக் கரைத்துக்கொண்டு வியர்வை வழிந்தது. தன் தோள்துண்டால் முகத்தை அழுந்தத் துடைத்தார். நாமத்துக்கிடையே அவர் இட்டிருந்த கரிக்கோடுபட்டு துண்டு கருப்பாகியது. கண்ணாடி மாட்டிக் கொண்டு வெளுத்த உளுத்த மரக்கொம்பு ஒன்று நடந்து வருவதுபோல் அவர் நடை இருந்தது. தள்ளாத வயதிலும் மனதில் இருந்த குழப்பம் காரணமாக வேகமாக நடக்க முயன்று தோற்றுப் போனார். மீண்டும் வேகமாக நடந்தார்.”
‘குரலை உயர்த்தாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது இக்கதைகளின் சிறப்பு,’ என்று எஸ். ராமகிருஷ்ணன் மிகச் சரியாகவே சொல்கிறார். இந்த முதல் பத்தியில் நமக்குக் கிடைக்கும் சித்திரம் சிறிது புன்னகைக்க வைக்கிறது, கூடவே இக்கதையின் மிக முக்கிய இயல்பான நிலையின்மை, கதையின் துவக்கத்திலேயே வந்து விடுகிறது. முதல் வாக்கியத்தில் அலைந்து அலைந்து என்று அலைதல் இரு முறை வருகின்றன- இந்தத் தடுமாற்றம் எண்ணத்தின் கனம் தாங்காமல் ஏற்பட்ட ஒன்று, எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடுவார் போல் அலைந்து அலைந்து நடந்தார் என்று வாசிக்கும்போது தடுமாறிச் செல்லும் அவரது நடையின் கூடவே எண்ணங்களின் சுமையால் அழுந்திய அவரது முகமும் நம் கண் முன் தோன்றுகிறது- இந்த வாக்கியத்தில் மட்டுமல்ல, இந்தப் பத்தியில் அவரது முக பாவனை சொல்லப்படவே இல்லை. ஆனால், முரளிதர ராவின் முகத்தில் ஆடும் உணர்ச்சிகளைக் காண புற விவரணைகளே போதுமானதாய் இருக்கின்றன.
அவர் அலைவது போதாதென்று, அவரது மெல்லிய உடலில் தரித்த பூணூலும் காற்றில் அலைகிறது- கதை நெடுக ஒரு தீர்மானமான முடிவுக்கு அலையும் முரளிதர ராவ், இங்கு அலையும் பூணூலை மட்டுமல்ல, சூம்பித் தொங்கிக் கொண்டிருக்கும் மார்க்காம்புகளையும் மேல் துண்டு கொண்டு மூடிக் கொள்கிறார் (தொங்குவதால், அவையும் ஆடுகின்றன என்று நினைக்கிறேன்). இது போதாதென்று வழுக்கைத் தலையில் ஒன்றிரண்டு வெண்மயிர்கள் மிக நீண்டிருந்தன என்ற குறிப்பு வேறு – அவையும் காற்றில் அலைகின்றன என்று தோன்றுகிறது. வழுக்கைத் தலையில் இருக்கும் பிற மயிர்களோ சீவாமல் சீரில்லாமல் படிந்து கிடக்கின்றன – அவை ஓய்ந்து விட்டன போலிருக்கிறது. கதையின் சீரற்ற தன்மையை மேலும் உணர்த்தும் வகையில் வியர்வை வழிந்து அவரது நாமத்தைக் கரைக்கிறது, அதைத் துடைக்கும் துண்டோ நாமத்துக்கிடையே உள்ள கரிக்கோட்டை அழித்து கறுப்பாகிறது. தள்ளாத வயது, மனக்குழப்பம் அவரை வேகமாய்ச் செலுத்துகிறது, அவர் தோற்றுத் துவண்டு விரைகிறார் என்று துவங்குகிறது கதை.
ஹரன் பிரசன்னா இது போலவே எழுதிக் கொண்டு சென்றால் அவர் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். பாத்திர விவரணைகள், உரையாடல்கள் என்று இருக்க வேண்டியது எல்லாம் மிகச் சரியாக இருக்கின்றன. ஆனால், அவரிடம் உள்ள ஒரு குறை, அதிபுத்திசாலித்தனம்தான் (இதைத்தான் எஸ். ராமகிருஷ்ணன், “சில கதைகள் ஆதவனை நினைவூட்டுகின்றன” என்று எழுதுகிறார் என்று நினைக்கிறேன்). ஒரு நல்ல கதை என்பது எலிப்பொறி போலிருக்க வேண்டும். மசால் வடை வாசனைக்கு ஓடி வரும் எலி, தன் மீது பொறியின் கதவுகள் விழுவதை மிகத் தாமதமாகத்தான் தெரிந்து கொள்கிறது. இங்கு மசால் வடை மறைத்து வைக்கப்பட்டிருந்தாலும் அது மணக்கிறது என்பதால் அதுவல்ல, அதைச் சுற்றியுள்ள பொறிதான் பூடகம். கண் முன் முழுசாக இருந்தாலும், புலன்களின் மயக்கத்தில் பொறி காணப்படுவதில்லை- வேலையைக் காட்டும்போதுதான் அது புலனாகிறது.
எது முழுமையாய் விவரிக்கப்படுகிறதோ, அதன் இயல்பு இறுதி வரை மறைந்திருப்பதில் ஒரு கலை இருக்கிறது. வாசகன் மனதில் தெறிக்கும் ஸ்ப்ரிங்தான் பூடகமே தவிர, கதை வெளிப்படை. ஹரன் பிரசன்னா இதை மிகச் சிறப்பாய்ச் செய்யக்கூடியவர். ஆனால் அவர் வைக்கும் பொறிகளோ அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் வரும் மூத்த சகோதரனின் பொறிகள் போல் சிக்கலானவை, கண்கள் நிலைகுத்தி நிற்கச் செய்பவை- எலிப்பொறி போல் எளிமையானவையாய் இல்லாத அவரது பொறிகள் ஒரு தேர்ந்த தோட்டக்காரனின் maze போன்றவை: பொறி விழுந்து விட்டது என்று தெரிந்தாலும் நாம் எங்கேயிருக்கிறோம், நம் மீது விழுந்த பொறி எப்படிப்பட்டது என்பதில் ஒரு குழப்பம் இருக்கிறது: “கதை நல்லா இருக்கு ஸார், ஆனா என்ன ஆச்சு?” என்று கேட்கிறோம்.
சோழி கதை சிறப்பான கதையாக இருந்தாலும் அப்படிப்பட்ட கதைதான். படித்துப் பாருங்கள் – சோழி, ஹரன் பிரசன்னா.