வளர் பிறையின் பன்னிரண்டாவது நாள். முழுமை அடையும் வேகத்தில் சந்திரன் பொலிந்து கொண்டிருந்தான். முன் ஜாமம். ஒளியைப் பாதி ஆடையெனப் புனைந்து கங்கை ஒயிலாக நடந்து கொண்டிருந்தாள்.
அடி ஆழத்து மீன்கள் எல்லாம் மனித வாடை இல்லாததால், துள்ளி மேலே குதிப்பதும், கடல் கன்னி என நீந்துவதும், நீருக்குள் ஒரு வானவில்லென பல வண்ணங்களில் பேருவகை கொள்வதுமாக விளையாடின.
காட்டில் பெருக்கெடுப்பது கங்கையின் விருப்பம். மலையரசி. எப்படி காட்டை விடுவாள்? அவிழ்த்த சடையிலிருந்து அவள் கொண்ட மோகம்தான் வேகம்! அவன் கருணைப் பெரும் துளியில் அவள் மானிடரின் முதல் உயிர்த்துளி. உலகின் காமக் களியாட்டங்களை அவள் அறிவாள். அவர்களின் ஆறாப் பெருந்துயர் அவள் உணர்வாள். அவள் காலத்தின் பெரும் சாட்சி. பனிச் சிகரத்தின் நிலா நடைத்துளி.
அன்று மாலை. கௌரவர்களும் கர்ணனுமாக அவள் மீது விளையாடினார்கள். எத்தனை உல்லாசம். எத்தனை உற்சாகம். அவளும் அவர்களுடன் ஓடினாள். போக்கு காட்டினாள். சிறு சுழல் காட்டி பயம் ஊட்டினாள். தணிந்து தணிந்து குளிர்வித்தாள். நேரம் ஆனதென்று கடைப் பயல் கூவியவுடன் அவர்கள் மனமில்லாமல் கரை சேர்ந்தனர். ஆனால், கர்ணன் காட்டில் இருளில் பயிற்சி செய்துவிட்டு வருவதாகத் தங்கிவிட்டான். ஒளியின் மானுட குழவி. இருளில் என்ன வேண்டும் அவனுக்கு? கங்கை ஓடிக்கொண்டிருந்தாள்.
குதிரையைத் தளரவிட்டு கர்ணன் மெதுவாகச் சென்றான். ஓங்கி வளர்ந்த காடு. அதில் இரவு உயிர்களின் ஓசை எழுந்து கொண்டிருந்தது. சந்திரனின் கிரணங்கள் பட்ட மரங்களின் மேல் கிளைகள், தாம் வேறு மரம் வேறாகக் காட்சி அளித்தன. காற்றின் தழுவலுக்கேற்ப அவை வளைந்து உரசும் ஒலி கேட்டது. அருகே அருகே நெருங்கி விலகி விலகிச் செல்வதாக மரங்களும், செடிகளும், புதர்களும் காணக் கிடைத்தன. காட்டிற்கே உண்டான வாசம் நாசியை நிறைத்தது.
ஆழ மூச்சினை இழுத்து கர்ணன் தன் வேதனையை வெளிப்படுத்தினான் .”நான் செய்வது சரியா? ஏன் எனக்கு குழப்பங்களே எஞ்சுகின்றன? நான் எதைத்தான் வேண்டுகிறேன்? பதவியா, அதனால் வரும் மதிப்பா, மதிப்பு தரும் தன்னிறைவா, அது கொண்டு வரும் மலர்ச்சியா, கொடுப்பதால் முழங்கப்படும் பெயரா, வரலாற்றில் நிற்கும் ஆசையா, அரசு கட்டில் தரும் போதையா, அதையும் தானே நடத்த இடம் கொடுக்காமல் பின்னின்று இயக்கும் அனைவரின் மேல் உள்ள காட்ட இயலா கோபத்தின் உள் ஊனமா, வீட்டில் காட்டப்படும் அலட்சியமா, போராடிப் போராடி முழுதாக வெற்றி பெற இயலாத சூழலா, தன் முதுகின் பின்னே கேட்கும் சிரிப்பொலிகள் காதில் விழாதது போல் தான் நடிக்கும் நாடகத்தின் வேதனையா, எது என் அமைதியைக் குலைக்கிறது?”
கர்ணன் குதிரை கனைப்பதைக் கேட்டு தன் அம்பினை கையில் எடுத்தான். ”அங்க தேசத்து அரசரே, வில்லிற்கு இப்பொழுது தேவையில்லை” என்றது ஒரு பெண் குரல். காட்டில், இந்த நேரத்தில், ஒரு பெண் என்பதே அவனை வியப்பூட்டியது. அவள் கையில் எரிதழல். இவன் முகத்திற்கு எதிராகப் பிடித்திருந்தாள். அவளது உருவம் ஒரு கோடாகத் தெரிந்ததே தவிர முகம் தெளிவாகத் தெரியவில்லை.
“யார் நீ?’ என்றான் அதட்டும் குரலில்.
“துரியன் தந்த அரசை ஆள்பவனுக்கு இத்தனை ஆணவமா?” என்று அவள் சிரித்தாள்.
முதலில் அங்க தேசம் என்றாள், இப்பொழுது அந்த அரசு வந்த வழியையும் சொல்கிறாள். இவள் நம்மைப் பற்றி அறிந்து கொண்டே சீண்டுகிறாள்.
“சொல், இந்தக் காட்டில் உனக்கு இந்த நேரத்தில் என்ன வேலை? உன் தீப்பந்தத்தை சற்றுக் கரம் மாற்றி உன் முகத்தைக் காட்டு.” என்றான் அவன் கடும் குரலில்.
அவள் அப்படியே நின்றிருந்தாள். ”பெண்ணே, உன்னைக் கொல்வது எனக்கு எளிது. உன்னைக் கொல்லாமல் சிறை பிடிப்பதும் எனக்கு முடியும். “
“அப்படிச் சொல், அஸ்தினாபுரியின் உணவல்லவா உள்ளே செல்கிறது உனக்கு. பெண்ணைக் கொல்வது உனக்கு வழி முறை சொத்தல்லவா? உங்கள் பிதாமஹரின் கொடை”, கசப்புடன் சிரித்தாள் அவள்.
“என்னைப் பழித்தாய்; இப்பொழுது எங்கள் அரசை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் நீ? எந்தப் பெண்ணை எங்கள் பீஷ்மர் கொன்றார்?”
அவள் சிரித்தாள். ”உயிரைக் கொன்றால்தான் கொலையா? மனதைக் கொன்றாலும், காதலை அழித்தாலும் அதுவும் கொலைதான். என்னைப் பார், இப்பொழுதும் நான் யாரென்று தெரியவில்லை அல்லவா?” என்றாள் அவள்.
கரம் மாற்றி அவள் பிடித்த பந்தத்தால் இப்பொழுது பார்க்க முடிந்தது. மரவுரி தரித்திருந்தாள் முகத்தில் கடும் தவத்தின், பழியின், செஞ்சுடர் கூத்தாடியது. தீயின் சுடரில் அவள் முகம் மனதின் எரிதழலைக் காட்டியது. பெண்ணின் நளினமற்று, இறுகக் காய்ந்த தவ உடல்.தசைகளின் முறுக்கும், தினவும் அவளின் போர்ப்பயிற்சியைக் காட்டின. சடை விழாத அவள் செம்பட்டைக் குழலும், அவள் குரலும், கண்களும்தான் அவளைப் பெண் எனக் காட்டின. அவளைப் பணிய தன் உள்ளம் ஏங்குவதை கர்ணன் அதிசயித்தான்.
“நான் தனித்து உன்னிடம் பேச நினைத்தேன். நீங்கள் அனைவரும் நீர் விளையாடுகையில் உன்னை எப்படி தனித்து அழைப்பது என்று தவித்தேன்.”
“சொல்லுங்கள். என்னிடம் என்ன பேச வேண்டும்? நீங்கள் யார் என்று அறிந்தால் அல்லவோ நான் ஏதும் செய்யக் கூடும்?” என்றான் கர்ணன்.
“கர்ணா, உன் குருவிடம் நான் ஒரு நீதி கேட்டேன். அதன் பயனாக ஒரு உயிரும் கேட்டேன். ஆனால் அவரால் அது இயலவில்லை. உன்னால் முடியும். உன் பேர் சொல்லும் நிகழ்வாக அது இருக்கும். உன் வீரத்தைப் போற்றிக் கொண்டே இருக்கும், நீதிக்காக பாட்டனை வதைத்தவன் என்று”
“அம்மா, நீங்கள் சொல்வது பரசுராமரையும், இருங்கள், இருங்கள் பீஷ்மரையுமா? பீஷ்மர் எனக்கு தாத்தாவா? அது எப்படி? குலம் அற்று மனம் நொந்து வாழுகிறேன்- என் பிறப்பை நீங்கள் அறிவீர்களா? என் தாய் யார் அம்மா?”
“பார்த்தாயா, என்னைப் பற்றி விட்டுவிட்டாய். உன் பிறப்பின் நிழலை நீ வெட்டி எறியப் பார்க்கிறாய். நான் சிகண்டி. அந்த பீஷ்மன் உலகிற்கே பிதாமஹன் அல்லவா?”
“அப்படியென்றால் நீங்கள் அரசி அம்பையா? என்ன தவம் செய்தேன் உங்களைப் பார்ப்பதற்கு? அம்மா, சொல்லுங்கள் என் தாய் யாரென்று?” கர்ணன் அவள் காலடியில் பணிந்தான்
அவன் தோள் தொட்டு ஆசி வழங்கிய அம்பை,” கர்ணா நான் இப்பொழுது சிகண்டி. அம்பையின் பழி தீர்க்க வந்த சிகண்டி. என் அவிசை அளிப்பவன் யார்? என் மனதைக் குளிர்விப்பவன் யார்? காட்டிலும் ,மேட்டிலும் திரியும் ஒரு அனாதை நான்”
“அம்மா, இப்பொழுதே என்னுடன் வாருங்கள். என் அரண்மனையின் இராஜ மாதா நீங்கள். உங்கள் ஒரு சொல்லிற்கு அனைவரும் கட்டுப்படுவோம்.”
“கர்ணா, எனக்கு வேண்டுவது ஒன்று தான்—அந்த பீஷ்மனின் அவமானம்— அவன் உயிர்.”
“தாயே, நான் அஸ்தினாபுரிக்கு கட்டுப்பட்டவன்.
அவர் அதன் அரியணை தாங்கும் சிம்மம். என் அன்பிற்குரிய துரியனின் பிதாமகர். அவர் நினைத்தால் மட்டுமே அவர் உயிர் பிரிய இயலும்.”
“அப்படியென்றால் அவரின் எந்த அநீதியையும் யாரும் கேட்க மாட்டீர்களா? பெண்ணின் அழிந்த வாழ்வு உங்களுக்கு ஒரு பொருட்டில்லை அல்லவா?”
“தாயே, உங்கள் நிலை கண்டு என் மனம் அழுகிறது. ஆனால்,உங்களுடைய இந்த நிலைமைக்கு தாங்களும் ஒரு காரணமில்லையா?” என்றான் அவன்
“என்ன சொன்னாய்? நான் காரணமா? அந்த பீஷ்மன் தருவதாகச் சொன்ன பிச்சை சோற்றை உண்டு வாழ்ந்திருக்க வேண்டுமா?”
“அம்மா, சினம் கொள்ளாதீர்கள். பிதாமகர் தெரிந்தே தவறு செய்யவில்லையே?’ என்றான் கர்ணன்.
“என்ன சொன்னாய்? உன் உயிர் மீது ஆசையில்லையா?”
“கோபித்துக் கொண்டாலும் உண்மை பொய்யாகி விடுமா? நீங்கள் சுயம்வரத்திற்கு ஏன் வந்தீர்கள்?”
“என் காதலனுக்கு மாலையிட”
“மணாளனைத் தேர்ந்தெடுத்த பின் சுயம்வர மண்டபம் வரலாமா?”
“என்ன சொல்கிறாய் நீ?”
“அம்மா, நீங்கள் உங்கள் தந்தையிடம் சொல்லி திருமணத்தை முடித்திருக்க வேண்டும். மாறாக, சுயம்வரத்தை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு உங்கள் திருமணத்தை செய்யப் பார்த்தீர்கள்.”
“கர்ணா, சால்வன் பேரரசன் இல்லை. என் தந்தையிடம் சொல்வதை விட சுயம்வர மண்டபம் வந்து அவருக்கு மாலையிட நினைத்தேன்.”
“அதை அறியாமல் பீஷ்மர் தவறாக உங்களையும் கவர்ந்து வந்து விட்டார்.”
“நல்ல கதை. இதை அந்தக் கிழவன் சொன்னானா? ப்ரும்மச்சாரி என்று சபதம் செய்துவிட்டு அவன் சுயம்வரத்திற்கு வருவான். கன்னிகைகளைக் களவாடுவான். செய்த தப்பிற்கு பிராயச்சித்தமும் செய்ய மாட்டான். நான் அந்த மண்டபத்திற்கு வந்ததுதான் தவறோ?”
“அம்மா, யாரும் எதிர்பாராமல் ஏதேதோ நடந்துவிடுகிறது. நான் சொல்ல வந்தது ஒரு சிறு விதி மீறலின் விளைவுகள் பற்றி. இன்றுவரை அது உங்களை பாடுபடுத்துகிறது, பீஷ்மரும் மனதளவில் மகிழ்வோடில்லை.”
சிகண்டி பெருமூச்சுடன் ”விதி” என்றாள்.
“அம்மா,போனது போகட்டும். இனியாவது அமைதி கொள்ளுங்கள். என்னுடன் வாருங்கள்.”
“இல்லை கர்ணா ஊழ் என்னைச் செலுத்துகிறது. என் பகையை அழிக்காமல் எனக்கு அமைதியில்லை. நீ என்னைப் புரிந்து கொள்வாய் என நினைத்தேன்; எனக்காக அந்தக் கிழவனை வதைப்பாய் என மனப்பால் குடித்தேன். பாண்டவர்கள் அவனை எதிர்க்கும் மனம் இல்லாதவர்கள். துரியனின் தந்தை எனக்காக பீஷ்மரை கொல்லத் துணியமாட்டான். நீ உனக்குப் பொருந்தாத இடத்தில் அமைதியற்று இருக்கிறாய். உனக்கு என்ன வேண்டும் என நான் அறிவேன். உன் திறமைக்காக மட்டுமே உலகம் உன்னை மதிக்க வேண்டும் என விழைகிறாய். அரசின் மூலம் பெற்ற அங்கீகாரம் உன் இதயத்தை வாள் கொண்டு அறுக்கிறது. “வில்லுக்கு விஜயன்” என்ற புகழ் உன்னை ஏங்கச் செய்கிறது- ஏன் என் திறமை இவர்கள் கண்ணில் படவில்லை என கொதிக்கிறாய். எல்லாமிருந்தும் ஏதும் இல்லையென தவிக்கிறாய்”
“அம்மா, உண்மைதான் நீங்கள் சொல்வது”
“அதனால்தான் சொல்கிறேன். நீ அந்த பீஷ்மனுக்கு அறைகூவல் விடுத்தாயானால், அர்ச்சுனன் உன்னோடு மோதுவான். உன் கரம் வெல்லும். உன் பெயர் நிலைக்கும். உன் பிறப்பைப் பற்றி நான் அறிந்த ஒன்றையும் உனக்குரைப்பேன்”
“அம்மா, நான் இந்த வகையில் உங்களுக்கு உதவமுடியாது. துரியனுக்கு நான் கடமைப்பட்டவன். அவன் என்னைத் தோழனாக நடத்துகிறான், உயிரினும் மேலாக நினைக்கிறான். ஆனால் நான் அவனிடம் அந்த அளவு நட்பு கொள்ளாமல் ஒரு படி கீழே என்னை வைத்துள்ளேன். அவனுக்கு நான் செய்யும் நல்லதெல்லாம் அவன் சொற்படி கேட்பது என்றுதான் நினைக்கிறேன். இதிலும் எனக்கு மனப் போராட்டமே எஞ்சுகிறது. இந்த நிலையில் அவன் பிதாமகரை என்னால் எப்படி எதிர்க்க முடியும்?அம்மா, என் பிறப்பைப் பற்றிச் சொல்லுங்கள். உங்கள் பெயர் வெளிப்படாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.”
“நீ புரிந்து கொள்வாய் என நினைத்தேன். இல்லை, உன்னால் அது இயலவில்லை நான் வருகிறேன்’
“அம்மா, பீஷ்மர் எனக்கு தாத்தாவா? உங்களுக்குத் தெரியுமா? என் குணமும், பிறப்பும் என்னை இரு திசைகளுக்கு இழுக்கின்றன.”
“கர்ணா, இந்த கங்கை அறிவாள் அதை. அதைப் போல் நானும் அறிவேன். யாரிடம் அவள் சொல்லியிருக்கிறாள், நான் சொல்வதற்கு?அந்த பீஷ்மன் யூகத்தால் அறிவான். துவாரகை அரசன் முற்றும் அறிவான். யார் அதைச் சொல்ல வேண்டுமோ அதை அவர்கள் உன்னிடம் சொல்வார்கள், காலம் கனிகையில். உன் கானல் கனல் அப்பொழுதுதான் அடங்குமோ என்னமோ?” சொல்லிக் கொண்டே அவள் காட்டில் மறைந்தாள். கர்ணன் சிலையென அமர்ந்திருந்தான்.