நாஞ்சில் நாடன் எழுதிய புதினங்களிலேயே மிக உன்னதமானது ‘சதுரங்கக் குதிரை’ என்பது என் தீர்மானமான மதிப்பீடு. 1993- ல் வெளியான இது அவருடைய ஆறாவது புதினம். சுய அனுபவங்களோ அல்லது கண்டு கேட்டறிந்தவைகளோ, அவரது ஒவ்வொரு புதினங்களும் கண்ணுக்குத் தெரியாததொரு மாயக்கயிற்றால் கட்டப்பட்டவை போல அவற்றினூடே ஓர் ஒழுங்கான தொடர்ச்சி இருக்கும், பல்வேறு காலக்கட்டத்தில் பதிவாக்கப்பட்ட ஒரு தனிநபருடைய புகைப்படங்களின் தொகுப்பைப் போல. மரத்தில் மறைந்தது மாமத யானை என்பதைப் போல எழுத்தையும் எழுத்தாளனையும் பிரித்தறிய முடியாது என்பது ஒரு நல்ல எழுத்தின் சிறப்பு. அவ்வகையில் புனைவுகள், அபுனைவுகள் என நாஞ்சில் நாடனை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு அது சிவதாணுவோ, சுடலையாண்டியோ, பூலிங்கமோ, நாராயணணோ, கும்பமுனியோ அவர்களைத் தாண்டி நாஞ்சில் நாடனை அதில் பார்க்க முடியும். இதையொரு பலவீனமாக சொல்கிறவர்களும் உண்டு. நான் பலம் என்றுதான் சொல்வேன். மற்ற புதினங்களில் இளவயதின் வேகமும் ஏக்கமும் உடைய, திருமணம் ஆகிற, அதன் சிக்கல்களை அனுபவிக்கிற நபர்கள் என்றால் அதன் பரிணாம வளர்ச்சியில், சதுரங்கக் குதிரை புதினத்தில் மணமாகாத ஒரு நடுத்தரவயதுள்ள நபரின் தனிமையுணரும் கசப்பான அனுபவங்களையும் மனச்சிக்கல்களையும் அறிய முடியும். இதன் கனிந்த தொடர்ச்சிதான் நக்கலும் குத்தலுமாக வெளிப்படுகிற சமகால கும்பமுனி.
நாஞ்சில் நாடனின் உருவாக்கும் நிலப்பரப்பின் பின்னணி பொதுவாக அவர் பிறந்து வளர்ந்த நாஞ்சில் நாட்டுப் பின்னணியிலும் தொழிலுக்காக புலம்பெயர்ந்த மஹாராஷ்டிர நகரம் மற்றும் சிற்றூர்களின் பின்னணியிலுமாக அமைந்துள்ளது. இதில் துவக்க கால எழுத்து பிரத்யேகமாக சொந்த ஊரின் பின்னணயிலும் பிறகு உருவாக இடைக்கால எழுத்து இரண்டின் கலவையாகவும் தொழிலிலிருந்து ஒய்வு பெற்ற பிறகு மறுபடியும் பிரத்யேக நாஞ்சில் பிரதேசத்திற்கு திரும்புவதையும் கவனிக்க முடியும். புதினங்களின் வரிசையை இன்னமும் துல்லியமாக வரிசைப்படுத்த வேண்டுமென்றால் கால வரிசையில் முன்பின்னாக உருவாகியிருந்தாலும் என்பிலதனை வெயில் காயும் மற்றும் தலைகீழ் விகிதங்கள் ஆகிய இரண்டு புதினங்களுக்கு இடையே பிரத்யேக நாஞ்சில் நாட்டு பின்னணியுடன் ஒரு தொடர்ச்சி உள்ளது. எட்டுத்திக்கும் மதயானை, மிதவை, சதுரங்கக் குதிரை ஆகியவற்றின் இடையே பிரதான கதாபாத்திரத்தின் படிநிலையின் வழியே உள்ள தொடர்ச்சியை கவனிக்க முடியும். அவருடைய சிறுகதைகளின் தொகுப்பையும் புனைவு காலம் முடிந்த எழுதப்பட்ட கட்டுரைகளையும் பிறகு கும்பமுனி எனும் பாத்திரங்கள் வழியே உரையாடும் மீண்டும் உருவான சிறுகதைகளையும் இவ்வாறு பிரித்துணர முடியும்.
***
நாரயணன் சாப்பிட்டு விட்டு மாட்டுங்கா சர்க்கிளுக்கு திரும்புவதில் துவங்கும் சதுரங்கக் குதிரை புதினமானது, திருமண உத்தேச உரையாடலுக்காக ஆர்ட்கேலரி காண்டீனுக்கு அழைக்கப்பட்ட ராதா வராமல் போன காரணம் குறித்து சுய சமாதானம் செய்து கொள்ளும் இறுதிப்புள்ளி வரை வரை துணையல்லாத நாராயணனின் கடுமையான தனிமையை விவரித்துச் செல்கிறது. ஆனால் அதை சுயஇரக்கம் கோரும் வகையில் வறட்சியான மொழியிலும் கையாலாகாத தத்துவ விசாரங்களும் அல்லாமல் இயல்பான நடைமுறைக் காட்சிகளின் விவரணைகளோடு சொல்லிச் சென்றிருப்பதில் நாஞ்சில் நாடனின் எழுத்தாளுமையின் பலம் தெரிகிறது. நாஞ்சில் நாட்டின் பிரத்யேக சொல்லாட்சிகளும் உணவு வகைகளும் சடங்குமுறைகளும் என அந்தப் பிரதேசத்தின் கலாசாரக்கூறுகள் மிக இயல்பாக வெளிப்படுகின்றன. பொருளீட்டுவதற்காக எந்தெந்த பிரதேசங்களுக்கோ பெயர்ந்து கொண்டேயிருந்தாலும் நாஞ்சில் நாடனின் மனம் அவரது சொந்த மண்ணில் நங்கூரமிட்டிருப்பதை உணர முடிகிறது. அதற்காக பல வருட அமெரிக்க வாசத்திலும் பருப்பு சாம்பாரை மட்டுமே பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் கிணற்றுத்தவளைத்தனமும் அவரிடம் இல்லை. நாஞ்சில் நாட்டு உணவு வகைகளான எரிசேரி,புளிசேரி பற்றிய விவரணைகள் ஒருபுறமென்றால் புலம்பெயர் வாழ்வில் எதிர்கொள்ள நேரும் வடாபாவும் வர்க்கியும் கூட அவர் எழுத்தில் பதிவாகின்றன. கலவர நேரத்தில் பெண்களை லாரியில் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைக்கும் வரதாபாய் பற்றிய குறிப்பும் கூட போகிற போக்கில்.
நேர்க்கோட்டு பாணியில் அல்லாமல் நாஞ்சில் நாட்டின் கடந்த காலமும் மும்பை வாழ்வின் சமகாலமும் முன்னும் பின்னுமாக பயணித்தாலும் வாசிப்பின் லகுவில் துளி குழப்பமுமில்லை. தாயின் இறப்பிற்கு கூட நேரத்திற்கு சென்றடைய முடியாத பயண தூரத்தில் உள்ள நடைமுறை அவலமும் ‘அவனுக்கென்ன வெளியூர்ல கைநிறைய சம்பாதிக்கான்’ என்று பொருமும் உறவுகளும் ஒரு சென்ட் பாட்டிலை அல்பமாக பரிசளித்து விட்டு பலவித உழைப்பைச் சுரண்டிக் கொண்டு ‘பிம்ப்’ வேலையையும் பார்க்கச் செய்யும் வெளிநாட்டு தூரத்து உறவும், ராத்திரி சாப்பாட்டிற்கு ரகசிய சப்பாத்திகளை நிக்கர் பாக்கெட்டிற்குள் பொதிந்து வைத்திருந்து ‘அண்ணாச்சி, வேலை ஏதாச்சும் சொல்லுங்களேன்’ எனும் திருநவேலி தம்பியும், வேறு வேறு நிறங்களில் சாக்ஸ் அணிந்திருக்கும் கேயார்வியும் என.. விதவிதமான சூழல்களும் மனிதர்களின் சித்திரங்களும் இந்த நாவலுக்கு உயிரூட்டுகின்றன.
‘ஃபேன்கள் காற்றை உலைக்கும் ஓசை, வெயிலில் காயும் தோட்டு உளுந்தின் மீது கட்டையை உருட்டும் போது ஏற்படுவது போன்று ஒன்பது டைப்ரைட்டர்களின் தொடர்ச்சியான ஓசை, மெல்லிய பேச்சொலிகள், தொலைபேசியில், இண்டர்காமில் உரையாடல்கள், தூரத்து கேபின் ஒலிக்கும் பஸ்ஸர், டேபிள் பெல்லை கோபத்துடன் யாரோ அடிக்கும் சத்தம், நாற்காலியை பின்னோக்கி நகர்த்தும் அரவம், பேப்பர் கத்தைகளின் சலசலப்பு’ என்றொரு சிறிய விவரணையின் மூலமே ஓர் அலுவகத்தின் இயக்கத்தை வாசகனின் கண்முன்னே காட்சியாக விரியச் செய்யும் வலிமையை நாஞ்சில் நாடனின் எழுத்து கொண்டிருக்கிறது. குறிப்பாக பயணம் பற்றிய துல்லியமான விவரணைகளை, சூழல்களை நாஞ்சில் நாடன் அளவிற்கு வேறெந்த தமிழ் எழுத்தாளராவது பதிவு செய்திருப்பாரா என்று ஆச்சரியமாக இருக்கிறது.
பல்வேறு காரணங்களால் திருமணமாகாமல் நிற்கும் முதிர்கன்னிகளின் துயரங்களைப் பற்றி சிலபல இலக்கியப்பதிவுகள் உண்டெனினும் ஏறத்தாழ அதைப் போலவே நிற்க நேரும் ஒற்றைச் சேவல்களைப் பற்றிய பதிவுகள் குறைவு. பெருமாள்முருகன் எழுதிய ‘கங்கணம்’ எனும் சமீபத்திய நாவல், திருமணம் ஆகாத கொங்கு சமூகத்து இளைஞன் ஒருவனின் மனச்சிக்கல்களைப் பற்றி பேசுகிறது. என்றாலும் திருமணம் எனும் நிறுவனத்தின் மூலம் மட்டுமே காமத்தை அடைய முடிகிற பண்பாட்டுச் சூழலைத்தாண்டி உடலின் உந்துதலால் அதிலிருந்து இடறுகிற, தவிர்க்கிற சந்தர்ப்பங்களைப் பற்றிய நாராயணனின் அனுபவங்களும் கூட யோக்கியமாகவே இந்நாவலில் பதிவாகியிருக்கின்றன. முறையான வயதில் திருமணம் செய்ய முடியாமல் போகிற அத்தைப் பெண்ணை, சில வருடங்கள் கழித்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாக, அவள் குளித்து விட்டு வருகிற ஒரு மாலை வேளையில் பார்க்கிற நேரும் போது ஏற்படும் ரகசிய மையலும் பின்னொரு சமயத்தில் அது விநோதமானதொரு கனவின் புணர்ச்சியில் முடியும் ஆழ்மனகுழப்பமும் சங்கடமும் என நிறைவேறா காமத்தின் வெளிப்பாடுகளும் மிக நுட்பமான பகுதிகள்.
நாராயணனின் பயணம் மேற்கொள்ளும் விவரணைங்களின் துல்லியம் அவருடன் வாசகனும் பயணம் செய்யும் அனுபவத்தை நிகழ்த்துகிறது. தாயின் இறப்பிற்காக செல்லும் பயண அனுபவங்களுடனே கூடவே ஊரில் நிகழும் பிரதேச முறைசடங்குகளை, உறவுகளின் உடல்மொழியை மனக்கண் காட்சிகளின் மூலமாக split screen உத்தியில் இணையாக விளக்கிச் செல்லும் பகுதிகள் அருமை. திராவிடக் கட்சிகள் விதைத்த பிராமண வெறுப்பும் சக உறவுகள் உதவி செய்யாத நிலையில் அயல் சமூக மக்கள் எத்தனை நட்புணர்வுடன் இருக்கிறார்கள் என்கிற புரிதலும். ஓரின ஈர்ப்பு குறித்த ஒவ்வாமை கூட சிறு தடயமாக பதிவாகியிருக்கிறது.
விவசாயத்திற்கு சொற்ப நிலமும் ஒரு வீடும் இருந்தாலும் வறுமையைக் கடக்க மும்பைக்கு புலம் பெயரும் நாராயணன் மனம் முழுக்க ஊர் நோக்கியே இருக்கிறது. உறவுகள் கைவிடுவது முதல் எத்தனையோ காரணங்களால் அவனது திருமணம் தொடர்ந்து தட்டிப் போகிறது. ஒருநிலையில் அவனே அதில் ஆர்வமிழந்து போகிறான். இது இயல்பானதுதான். ஆனால் ஒரு நெருடலான விஷயம். புலம்பெயர்ந்த சூழலில் இருந்து ஏன் அவனால் வேறு துணையைத் தேடிக் கொள்ள முடியவில்லை? தன்னுடைய பிரதேசம் குறித்த சாதி குறித்த அழுத்தமான பிரக்ஞையோடு அவன் இருக்கிறானா என்று தோன்றுகிறது. நாவல் முடியும் இடத்தில் சக பணியாளப் பெண்ணை அவன் திருமண உத்தேசத்துடன் அணுகுவதற்குக் கூட அவள் தன்னுடைய சமூகத்தைச் சார்ந்தவளா என்றறியாத நிலையிலும் தன்னுடைய ‘ஊர்க்காரி’ என்கிற பரவசம்தான் காரணமாக இருக்கிறது. ஏறத்தாழ இவனுடைய நிலையிலேயே இருக்கும் சக பணியாளனான ‘குட்டினோ’விற்கு கூட தன்னுடைய காதலியை சேர முடியாத ஏக்கமாவது ஒரு காரணமாக இருக்கிறது. ஆனால் நாராயணனுக்கு அதுகூட இல்லை.
ஆனால் இதுவொரு கோணம்தான். ஏனெனில் நாராயணன் அத்தனை சுருங்கிப் போன மனமுடையவனாகவும் இல்லை. மண்ணைப் பிரியும் ஏக்கத்துடன் அகத்தால் அல்லாவிட்டாலும் செல்லுமிடங்களில் எல்லாம் பெளதீக சூழலுக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் குணாதிசயமும் சாமர்த்தியமுள்ளவனாகத்தான் இருக்கிறான். கடுமையான வெயிலில் வறட்சியான பயணத்தின் போது கூட லாரியில் பயணம் செல்லும் சிறுமி புன்னகையுடன் எறியும் கரும்புத் துண்டு அவனுடைய கசப்புகளை தற்காலிகமாவாவது கடக்கத் துணியும் மலர்ச்சியை தருகிறது.
***
புறநகர் ரயில் பயணம் ஒன்றில் செய்தித்தாளுக்காக நாராயணன் அணுகும் ஒரு சிறுவன் தன்னுடைய பிரதேசத்தைச் சார்ந்தவன் என்பதும் சில்லறைப் பணிக்காக புலம் பெயர்ந்தவன் என்றும் தெரிகிறது. அந்த உரையாடல் இப்படியாகப் போகிறது.
“தம்பி திருநவேலியா?”
“திருநவேலிக்குப் பக்கத்திலதான். நாங்குநேரி.. வந்திருக்கேளா?”
“நான் நாகர்கோயிலு. நாங்குநேரி தாண்டித்தான் போகணும்”
“இங்க கம்பெனில வேலை பாக்கேளா?”
“ஆமா… சேல்ஸ்மேனா இருக்கேன்”.
“எனக்கு ஒரு வேலை இருந்தாச் சொல்லுங்களேன்..பத்தாங் கிளாஸ் பாசாகி இருக்கேன். இங்க வந்து எட்டு மாசம் இருக்கும். அந்த அண்ணாச்சிதான் கூட்டியாந்தாரு. .. ரயில்வே கேன்டீன்ல கிளீனர் பாயா இருக்கேன். முன்னூறு ருவா சம்பளம். வாரம் ஒரு நாள் லீவு உண்டும். ஊருக்கு ஓடிராலாம்னு இருக்கு. ..”
“ஊரிலே போயி என்ன செய்வே?”
“அங்க போனா ஆடுதான் மேய்க்கணும். ஒரு வீம்புலதான் இங்க கெடக்கேன்”
***
அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல. நாராயணனேதான். கோடிக்கணக்கான நாராயணன்களின் ஓர் இளமைச் சித்திரம்.