குமரன் கிருஷ்ணன்
நீங்கள் வசதியானவரென்றால் உங்களுக்கே உரித்தான குளுகுளு காரிலோ, அல்லது நீங்கள் நடுத்தர வர்க்கத்தின் திரிசங்கு சொர்க்கத்தில் திரிபவரென்றால் சொகுசு பேருந்திலோ ரயிலிலோ செல்லும் பொழுது, பரந்து விரிந்திருந்தாலும் வறண்டு கிடக்கும், காவிரியையோ, கொள்ளிடத்தையோ, தாமிரபரணியையோ கண் கொட்டாமல் பார்க்கும் பொழுது, கையிலிருக்கும் “cauvery” “vaigai” போன்ற லேபிள்கள் ஒட்டிய மினரல் வாட்டர் பாட்டில் உங்கள் மனசாட்சியை இம்சித்தால், நீங்கள் நாஞ்சில் நாடனின் வாசகராக இருக்கக்கூடும் இல்லையேல் அவரின் வாசகராகக் கூடிய மனப்பொருத்தம் உங்களுக்கு(ம்) உண்டு. ஆதங்கம்…நம்மைப் போன்ற ஒரு சாமானியனிடம் பிரதிபலிக்கக்கூடிய அதிகபட்ச ஏமாற்றமும் எதிர்ப்பும் கலந்த உணர்வு ஆதங்கம் தானே! அதை ஒவ்வொரு பக்கத்திலும் எழுத்து முலாம் பூசிய கண்ணாடியாய் நம் முன் வைத்து நம்மை பார்க்கச் சொல்லும் பொழுது, அதை நம்முடைய பிம்பமாய் மட்டுமின்றி ஒட்டு மொத்த சமூகத்தை பீடித்த துன்பமாய் உணர வைக்கும் உக்கிரமும், அதிக காரத்தை மட்டுப்படுத்த உப்பு சேர்ப்பதைப் போல, அந்த உக்கிரத்தின் மீது ஆங்காங்கே தூவப்பட்ட நக்கல் நடையழகும் அவரின் எழுத்துப் பாணி…”உண்மை உணர்வுகள் மறந்தால் அவர் மண்ணுக்குத் தேவையில்லை” என்பது நாஞ்சில் நாடனின் “தலைகீழ் விகிதங்கள்” நாவலின் திரை வடிவமான “சொல்ல மறந்த கதை” படத்தில் வரும் ஒரு பாடல் வரி. அவரது எழுத்தின் வேரை உரித்துக் காட்ட போதுமான வரி!
மொழி, பண்பாடு, கலாச்சாரம் என அனைத்து முகங்களிலும் இரட்டைத் தன்மை கொண்டுள்ள நம் சமூகம் அதன் வேர்களுக்கு வெந்நீர் ஊற்றும் விவேகமற்ற தன்மையை விளாசும் கட்டுரைகள் மூலமாகவே நாஞ்சில் நாடனை தேடித் தேடி வாசிக்கும் வழக்கம் எனக்குள் பீடித்தது…கருத்தாக்கத்தின் விசால பரப்பும் ஒழுங்கமைவும் அவரது கட்டுரைகளின் தலையாய பண்புகள் எனலாம். ஒழுங்கமைவு என்பதே ஒரு அருமையான சொல் இல்லையா? இயல்பான அமைப்பில் இருக்கும் ஒழுங்கே ஒழுங்கமைவாக இருக்க இயலும். அப்படியானால், நேர்த்தியின் இழைகளால் கோர்த்த கருத்தாக்கத்தின் ஆழ அகல நீளம் கூடக் கூட ஒழுங்கமைவு என்பது உண்டாக்கவும் பராமரிக்கவும் மிகவும் கடினமான ஒன்றாக மாறும் தன்மையுடையதாகிறது. ஆனால், நாஞ்சில் நாடன் இத்தகைய விசாலமான ஒழுங்கமைவை தன் ஒவ்வொரு கட்டுரையிலும் ஆழ்மனப் பார்வைக்கும் சிந்தனை கோர்வைக்கும் நம் முன் வைக்கிறார். உதாரணமாக, “சங்க இலக்கியத் தாவரங்கள்” கட்டுரையை எடுத்துக் கொள்வோம். புத்தகங்கள் வாங்க தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் செல்கிறார் நாஞ்சில் நாடன். செப்டம்பரில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளுக்கு 50% சதவீதம் கிடைக்கும் மற்ற எந்த சிறப்பு நாள் கழிவும் 25% கழிவுதான் என்கிறார் புத்தகம் விற்பவர். செம்டம்பர் மாதம் வரலாம் என்று நினைத்ததை எழுதும் ஆசிரியர், அதன் உவமையாக சட்டென்று “அப்பம் தின்னவோ அலால் குழி உண்ணவோ” என்று எழுதுகிறார். நம் மனம் மணோன்மணீயம் காலத்திற்கு பிந்திப் பாய்கிறது. அங்கிருந்து பதிப்புத்துறை செல்லும் நாஞ்சில் நாடனுக்கு ஒரு திருக்குறள் நினைப்புக்கு வருகிறது. அக்குறளை எழுதி, செம்மொழித் தமிழ்க்குடிமகனுக்கு திருக்குறள் பொருள் விளங்குவது அரிது என்பதால் அதற்கான ஆங்கில மொழி பெயர்ப்பும் அந்த புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதையும் சொல்கிறார். தஞ்சை தமிழ் பல்கலைகழகத்திலேயே “சங்க இலக்கியத் தாவரங்கள்” கிடைக்காத கதையைச் சொல்லி, அப்புத்தகத்தை பற்றி விரிவாக எழுதுகிறார். அப்புத்தகத்தில் குறிப்பிடப்படும் தாவரங்கள் பலவற்றை தன் பல்வேறு வயதுகளில் கண்டு ஏற்பட்ட சிலிர்ப்பை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் நாஞ்சில் நாடன், “இந்நூல் கிடைப்பதும் கிடைக்காததும் உங்கள் ஊழ்வினை” என்று கட்டுரையை முடிக்கிறார். இக்கட்டுரை படித்து முடித்த பின்பு, சாலையில் மிஞ்சியிருக்கும் சொற்ப மரங்களை நாம் கடக்கும் ஏதோ ஒரு பொழுதிலோ, பெயர் தெரியாத மரங்களின் இலையோ பூவோ நம்மீது இறங்கி வரும் நொடியிலோ “சங்க கால நிழல்” நம் மீது படிந்து நகர்வதை நமக்கு நாமே உள்நோக்க இயலும்.
“சிறுமீன் சினையிலும் நுண்ணிது” கட்டுரை மற்றுமொரு உதாரணம். ஆலமர விழுதுகளாய் மனதில் அசையும் அது சார்ந்த நினைவின் பொழுதுகளை சொல்ல வரும் நாஞ்சில் நாடன் கட்டமைக்கும் கட்டுரையின் போக்கு அலாதியானது. ஆலிலையில் துயின்ற கண்ணனில் தொடங்கும் அவர், திருப்பாணாழ்வார், பெரியாழ்வார், குலசேகராழ்வார், திருமழிசை ஆழ்வார் போன்றோர் பாடிய ஆலின் நிழலில் நம்மை சற்று நேரம் அமர்த்தி பின், புறநானூறு வழியே ‘ஆல் அமர் கடவுள்” அறிமுகப்படுத்தி, பெரு மற்றும் சிறு காப்பியங்களில் கண்ட ஆல் பற்றியனவற்றை மேற்கோள் காட்டி ஒரு அற்புதமான பாடலின் வழியே பெருமிதமும் ஆதங்கமும் சேர்ந்து கட்டிய உணர்வின் உச்சிக்கு நம்மை இட்டுச் செல்கிறார். ‘தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒரு விதை…” என்னும் அப்பாடலை படிக்கையில் எப்பேர்பட்ட இலக்கிய வேரில் கிளர்ந்தெழுந்த சமூகத்தின் வழிவந்தவர்கள் நாம் என்ற பெருமிதமும் அப்படிப்பட்ட புதையல் சீண்டுவாரின்றி சீரழிந்து கொண்டிருக்கிறதே என்ற ஆதங்கமும் ஒரு சேர நமக்குள் எழும். அந்த ஆதங்கத்தின் மீது தனது ஊர் ஆலமரத்துடன் தான் வளர்ந்த அனுபவத்தை அமர்த்தி, அந்த மரம் வீழ்ந்த பின் முதியவராய் அதன் மிச்சமான அடிமரத்து வெட்டுப்பரப்பில் உட்கார்கையில் சிறுவயதில் சித்தியின் மடியில் அமர்ந்த ஞாபகம் வருவதாய் சொல்லி “கடவுள் ஆலம்” என்று முடிக்கையில் நம் தொண்டையில் ஏதோ உருள்வது போல் உணரக்கூடும். நினைப்பும் இழப்பும் சேர்த்து பிசைந்த உணர்வுருண்டையோ அது?
ஒரு யதார்த்த நிகழ்வின் வழியே நாம் “தொலைத்தவற்றை”ச் சொல்லி, அதன் பக்க விளைவாக, சிந்தனையை செம்மைப்படுத்தத் தக்க வினையாக, தறி கெட்டு ஓடிக் கொண்டிருக்கும் தற்கால வாழ்க்கை பரபரப்பில், அவசியமில்லை என்ற அறிவின்மையால் அற்பம் என்றாகிப் போன அற்புதங்களை நமக்கு அறிமுகப்படுத்துவதே அவரின் பெரும்பாலான கட்டுரைகள்.
ஒரு படைப்புக்கு, அதன் தலைப்பே கவிதையின் எழிலுடன் பொருட்பொலிவுடன் இருக்க வேண்டும் என்பது நாஞ்சில் நாடனின் அவா. அதனை ஆழமாகச் சொல்ல “எனக்கும் என் தெய்வத்துக்குமான வழக்கு” என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரையே எழுதியுள்ளார் அவர். தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் தான் கண்ட அட்டகாசமான தலைப்புகளை இக்கட்டுரையில் பட்டியலிட்டு விளக்குகிறார். இப்படிப்பட்ட எதிர்பார்ப்பு உள்ள ஒருவரின் படைப்புகள் எத்தகைய தலைப்புகள் கொண்டதாக இருக்கும்? “நதியின் பிழையன்று நறுப்புனல் இன்மை” என்பது அவரின் கட்டுரைத் தொகுப்பு ஒன்றின் தலைப்பு.
“நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை” இராமயண வரிதான். ஆனால் தனது கட்டுரைத் தொகுப்பு ஒன்றின் தலைப்பாக அதை வைத்த நாஞ்சில் நாடன், அந்த வரியின் இராமாயணப் பொருளை முற்றிலுமாக மாற்றி நெறியாள்கிறார். இன்று வறண்டு கிடப்பது நதிகளின் நீராதாரம் மட்டுமா? மனிதத்தின் ஜீவனே அல்லவா வறண்டு கிடக்கிறது? இலக்கியத்தை ஒதுக்கி வைத்து, ஜீவனற்ற மொழி பேசி, ஜீவனற்ற இசை கேட்டு, அச்சிடப்பட்டவற்றில் பணத்தாள் மட்டுமே படிக்கத் தெரிந்த அறிவார்ந்த தலைமுறைகள் வளர்த்து, உலர்ந்து போன அன்புடன், உடைந்து போன உறவுவகைகளுடன், உண்மையற்ற உணர்வுகளுடன் ஊருக்காய் வாழும் போலித்தனம் மிகுந்த சமூகத்தின் ஜீவன் வேறெப்படி இருக்கும்? வறண்டு தான் கிடக்கும். அந்த வறண்டு போன சமூக நதியில் நம் அக மலத்தை அள்ளி அள்ளிக் கொட்டி சாக்கடையாக்கிய நம் பொறுப்பின்மையின் நாற்றத்தை நாமே நுகர்ந்து கொள்ள வைக்கும் பேசுபொருளே “நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை”… நம் அன்றாட வாழ்வின் அங்கங்கள் ஒவ்வொன்றையும் உரித்து ஊற வைத்து உப்புகண்டம் போட்டு தொங்க விடும் அதன் ஒவ்வொரு கட்டுரையிலும் சமூக பிரக்ஞையை நம்முள் ஏற்றுகையில், ஊவா முள்ளெடுத்து உடல் முழுக்க குத்தியது போல் நாளாக நாளாக நமக்குள் வலியெடுக்கும்…நம் சமூக, வாழ்க்கை நதி நறும்புனலாய் இல்லாமல் மாறக் காரணம் நாம் தானே?
அடுத்த தலைமுறையின் அடிவேர் என்று நாம் கருதும் பள்ளி கல்லூரி படிப்புகளில் தமிழ் மெல்ல தலைகுனிந்து நடந்து பின் தலைமறைவாகிப் போய் கொண்டிருக்கும் அவலத்திலிருந்து தப்பிய எண்பதுகளில் பயின்ற என்னைப் போன்றோருக்கும் அதற்கு முந்தைய தலைமுறையினருக்கும் “தகுதி வழக்கு” என்னும் இலக்கணப் பகுதி நினைவில் இருக்கக்கூடும். யதார்த்த பயன்பாட்டிற்கு வெகு அருகில் அமைந்ததாலோ என்னவோ, நாஞ்சில் நாடன் பாஷையில் சொன்னால், “மூலத்தில் குருதி கொப்பளிக்க வைக்கும்” இலக்கண விதிகள் போல் அல்லாது எளிமையாக மனதில் பதியக் கூடியது…மங்கலம், குழூஉக்குறி, இடக்கரடக்கல் என்பவை தகுதி வழக்கின் கூறுகள். இந்த மூன்றையும் சேர்த்து ஒரு தலைப்பாக்கி நாஞ்சில் நாடன் எழுதியிருக்கும் கட்டுரை நாம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. தகுதியற்ற மாந்தர்கள் பெருத்து கொழுத்து பெரும்பானமை ஆகிப்போன சமூகத்தின் மீது தன் வழக்கை பதிவு செய்யத் தான் தகுதி வழக்கின் பகுதிகளையே தலைப்பாய் வைத்தாரோ நாஞ்சில் நாடன்? பெண்களின் ஊன் ஒன்றையே காணும் பொருளாக்கி நடுவீடு வரை வந்து நமக்கு ஊட்டும் ஊடகங்களை ரசித்தபடியே அவ்வப்போது தலைப்புச் செய்திகளாகும் நிர்பயாக்களுக்கு “வாட்ஸ் அப்களில்” ஆவேசமும் வருத்தமும் தெரிவித்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போகும் சமூகம் கொண்டிருக்கும் உள்ளத்தின் கள்ளத்தை, இரட்டைத் தன்மையை, குணக்கேட்டின் “அமங்கலத்தை”, மலின ரசனைக்கு [“செல்ஃப்பி புள்ள” போன்ற புல்லரிக்கும் சொற்தொடர்களே நம் செவிக்கு இன்பம் பயக்கும் என்றாகி விட்ட போது மொழியின் செவ்வியல் எல்லாம் யாருக்கு வேண்டும்?] கும்பலாய் அடிமையான “குழூஉக்குறியை” சொல்லாமல் சொல்வது தான் நாஞ்சில் நாடன் அந்தக் கட்டுரையின் அடியில் வைத்த “தகுதி வழக்கு”.
எழுதும் பொருளில் நேர்மையும் எழுதுபவரின் அக நேர்மையும் சரிவிகிதத்தில் சமன்பாடு கொள்ளும் போது அந்தப் படைப்பின் இயல்புத்தன்மையும் உண்மையும் நமக்குள் ஊடுருவத் தவறுவதில்லை. நாஞ்சில் நாடனின் அகநேர்மைக்கு ஒரு சான்றாக, “காப்பிய இமயம்” கட்டுரையில் தன் பம்பாய் வாழ்க்கையில் “நேர் வாசல்” வழியாக கம்ப இராமயணம் கற்ற அனுபவம் பற்றி விவரிக்கையில், “…அப்போது நான் தீவிர நாத்திகனும், பார்ப்பன எதிர்ப்பாளனும், வடமொழி எதிரியுமாக இருந்ததால் வால்மீகியை பொருட்படுத்தவில்லை. காலம்போன காலத்தில் இப்போது ஆதிகவி ஒருவரையும் ஆதி காவியத்தையும் அலட்சியப்படுத்திய கழிவிரக்கம் வதைக்கிறது” என்று எழுதுகிறார். இதைப் போன்று ,அவரின் எழுத்து நேர்மைக்கான அத்தாட்சியங்கள் பல கட்டுரைகளிலும் பரவலாக காணக் கிடைக்கிறது…
இலக்கை இயம்புவது இலக்கியம் என்பார்கள் சான்றோர்கள். ஒரு சமூகம் இலக்கின்றி திரியும் அவலத்தை இயம்புவதும் இலக்கியமே!
ஐம்புலன் அவிக்கச் சொல்லிய குறள் தந்த சமூகம் இன்று ஐம்புலனை அழிக்கச் செய்யும் ரசனைகளுடன், வாழ்க்கையே சந்தைப்படுத்தப்பட்டுவிட்ட தந்திரத்தை அறிந்து கொள்ளும் ஆர்வமற்ற, அனுபவமற்ற இயந்திரமாய், பல்லுயிர்க்கும் இப்பூமியில் வாழ சம பங்குண்டு என்பதை மறந்து இவ்வுலகம் தன்னுயிர்க்கு மட்டுமானது என்ற சுயநல அறிவீனத்தில் திளைக்கும் மானுட மந்தையின் அவலத்தை ஆற்றாமையுடன் எடுத்துரைக்கும் நாஞ்சில் நாடனின் கட்டுரைகளும் இலக்கியமே! இனிப்பின் சுவை நாக்கில் இலகுவாய் உருகி நடுத்தொண்டையில் வழிந்தோடுவது போன்றதில்லை கசப்பின் சுவையும் காரத்தின் சுவையும்…நாக்கின் வழிச்செல்லும் போது துவங்கி நாடி நரம்பெங்கும் சுண்டி எரிக்கும் தன்மையுடைத்து கசப்பும் காரமும். அவலம் புசிக்கும் ஆழ்மனம் அத்தகைய உணர்வைத்தான் அடைகிறது. அதனால் தான் “எத்தனை காலம்தான் கசப்பை உள்வைத்துக் கொள்வது?” என்று கேட்கிறார் நாஞ்சில் நாடன். அந்தக் கசப்பின் படிமத்தை கலை வடிவமாய் கொண்ட அவரின் கட்டுரைகளும் இலக்கியமே! புத்தகம் இல்லா வீட்டில் நீர் அருந்த வேண்டாம் (“கசப்பை” போக்கும் நீர் தான் புத்தகமோ?) என்று எழுதும் நாஞ்சில் நாடனை வாசித்தல், நம் மனதில் இன்னும் எங்கேனும் ஒரு ஓரத்தில் மீதமிருக்கும் மனிதத்தின் வேரிலும் சமுக அக்கறையின் மீதிலும் நீரூற்ற நல்லதொரு வாய்ப்பு!