வண்ணக்கழுத்து பகுதி 10அ: தொடரும் போர்ப் பயிற்சி

மாயக்கூத்தன்

நாள் மாறி நாள் வர புதிதாய்ச் சேர்ந்த புறாக்கள் மெதுவாக வீட்டிலிருந்து கொஞ்சம் தொலைவாக பறக்கக் கற்றுக் கொண்டன. ஒரு மாதம் முடியும் போது அவை வீட்டிலிருந்து ஐம்பது மைல்களுக்கும் மேல் தொலைவில் கொண்டு செல்லப்பட்டு, விடுவிக்கப்பட்டன. தங்களுடையை முந்தைய முதலாளியிடமே திரும்பப் பறந்து போய்விட்ட இரண்டைத் தவிர மீதி அனைத்தும் வண்ணக்கழுத்தின் தலைமையில் என்னிடம் திரும்பிவிட்டன.

யாரும் மறுக்க முடியாத தலைமை என்பது அத்தனை எளிதாக தீர்மானித்துவிடக் கூடியதல்ல. உண்மையில், வண்ணக்கழுத்துக்கும் இரண்டு புதிய பெடைகளான ஹிரா மற்றும் ஜகோரேவுக்கும் இடையே தீவிரமான யுத்தம் நடந்தே இதைத் தீர்மானிக்க வேண்டியிருந்தது. இதில் ஜகோரே சுத்தமான கருப்பு டம்ப்ளர். அதன் சிறகுகள் கருஞ்சிறுத்தையின் தோலைப் போல் மின்னும். ஜகோரே மென்மையானது, கடுமையானது அல்ல. ஆனாலும், வண்ணக்கழுத்தை மொத்த கூட்டத்தின் தலைவனென்று ஏற்றுக்கொண்டு பணிய மறுத்தது. தூதுப் புறாக்கள் எத்தனை சண்டைக்காரர்கள் என்றும் எவ்வளவு பெரிதாகத் தங்களை காட்டிக் கொள்பவை என்றும் உங்களுக்குத் தெரியும். எங்களுடைய கூரைக்கு மேல் அத்தனை ஆண் தூதுப் புறாக்களும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை உள்ள அனைத்தும் தங்கள் ஆளுகைக்குட்பட்டது என்று நினைத்துக் கொண்டு கம்பீர நடை போட்டுக் கொண்டு கத்திக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கும். வண்ணக்கழுத்து தன்னை மாவீரன் நெப்போலியன் என்று நினைத்துக் கொண்டிருந்தது என்றால், சூரியனின் மையப்பகுதியைப் போன்ற வெண்மையான ஹிரா, தன்னை மாவீரன் அலெக்ஸாண்டர் என்று நினைத்துக் கொண்டிருந்தது. தூதுப் புறா இல்லை என்றாலும் கருப்பு வைரமான ஜகோரே தன்னை ஜூலியஸ் சீசரும் மார்ஷல் ஃபோவும் உருக்கிச் செய்யப்பட்டதாக அறியவைத்துக் கொண்டிருந்தது. இந்த மூன்றைத் தவிர வேறு சில கர்வம் பிடித்த ஆண் புறாக்களும் இருந்தன. ஆனால், அவை இந்த மூன்று புறாக்களில் ஏதோ ஒன்றால் தோற்கடிக்கப்பட்டிருந்தது. இப்போது ஒட்டுமொத்த கூட்டத்திற்கும் யார் தலைவன் என்ற கேள்விக்கு சண்டை தேவை.

ஒருநாள் ஹிரா தன் சிறகுகளைக் கோதிக் கொண்டே, திருமதி ஜகோரே முன்னிலையில் ஏதோ உளறிக் கொண்டிருந்தது. திருமதி ஜகோரே, சுத்தக் கருப்பு. ரத்தக்கல் போல சிவப்பான கண்கள். இது கொஞ்ச நேரம் கூட தொடர்ந்திருக்காது, எங்கிருந்தோ ஜகோரே பாய்ந்து வந்து ஹிராவின் மேல் விழுந்தது. ஹிராவும், பயங்கர கோபத்தில் ஒரு பேயைப் போல சண்டையிட்டது. மூக்கும் மூக்கும், காலும் காலும், இறக்கையும் இறக்கையும் மோதிக் கொண்டன. இரண்டு ஆண்களும், ஒன்றை ஒன்று புடைத்துக் கொண்டிருக்கும் இடத்திலிருந்து மற்ற எல்லா புறாக்களும் பறந்து ஓடின. வண்ணக்கழுத்து அவர்களுக்கு மேலே, ஒரு டென்னிஸ் நடுவரைப் போல் சாந்தமாய் உட்கார்ந்திருந்தது. அரை டஜன் முறை மாறி மாறி தாக்கிக்கொண்டபின் , ஹிரா வென்றது. பெருமையின் எல்லைக்கே சென்ற அது, தன் நெஞ்சை விரித்துக் கொண்டு திருமதி ஜகோரேவிடம் போய் “மேடம், உன் வீட்டுக்காரன் ஒரு கோழை. நான் எவ்வளவு நன்றாய் இருக்கிறேன் பார். பக், பக்கூம், கும்கும்” என்று சொல்வது போல நின்றது. திருமதி ஜாகோரே, ஹிராவின் மீது ஒரு கேவலமான பார்வையை வீசிவிட்டு, தன் கணவனோடு இணைய இறக்கையை அடித்துக் கொண்டு தன் வீட்டிற்குச் சென்றுவிட்டது. ஹிரா, அசிங்கப்பட்டு வாடிப் போய்விட்டது. பிறகு திடீர்க் கொந்தளிப்பில், கடுங்கோபத்துடன் வண்ணக்கழுத்தின் மீது பாய்ந்தது. இதை எதிர்பார்க்காத வண்ணக்கழுத்து கடுமையான முதல் தாக்குதலில் கிட்டத்தட்ட தோற்றுவிட்டது. வண்ணக்கழுத்துக்கு மயக்கம் வரும் அளவிற்கு ஹிரா கொத்தவும் இறக்கைகளால் அடிக்கவும் செய்தது. அதனால் வண்ணக்கழுத்து தப்பி ஓடியது. கூடவே இந்தப் பைத்தியமும் துரத்திக்கொண்டு ஓடியது. பம்பரங்கள் போல இரண்டும் வட்டமிட்டு ஓடின. எது துரத்துகிறது எது துரத்தப்படுகிறது என்றே என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவை போன வேகத்தில் ஓட்டத்தை நிறுத்தி ஒன்றை ஒன்று கொத்தி அடித்துக் கொண்டிருந்ததை என்னால் பார்க்கக் கூட முடியவில்லை. இறக்கை இறக்கையை அடிக்கும் ஓசை அச்சுறுத்தும் இரைச்சலாக காற்றை நிறப்பியது. இப்போது எல்லாத் திசைகளிலும் சிறகுகள் பறக்கத் துவங்கின.

திடீரென்று, மூக்கோடு மூக்கு வைத்துக் கொண்டு, நகத்தோடு நகம் கோர்த்துக் கொண்டு இரண்டும் குஸ்தி போட்டுக் கொண்டு தரையில் உருண்டன. இரண்டும் கடுங்கோபத்தின் ஒற்றை உருவமாய் உருமாறின. அந்த வழியில் எந்த முடிவையும் அடைய முடியாது என்பதை உணர்ந்து வண்ணக்கழுத்து தன் எதிரியின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு காற்றில் உயரே பறந்தது. ஹிராவும், தன் இறக்கையை வேகமாக அடித்துக்கொண்டு அதைத் தொடர்ந்தது. தரைக்கு மூன்று அடிக்கு மேலே, வண்ணக்கழுத்து தன் நகங்களை கழுகின் நகங்களைப் போல ஹிராவின் மூச்சுக் குழாயைச் சுற்றிப் போட்டு, மேலும் மேலும் இறுக்கிப் பிடித்தது. அதே நேரத்தில், தொடர்ந்து பயங்கரமாக தன் இறக்கையைக் கொண்டு அடித்தது. முட்கதையை போன்ற அந்த இறக்கைகள், எதிரியின் உடம்பிலிருந்து பனியைப் போன்ற சிறகுகளைப் பொழியச் செய்தது. இப்போது, பொழியும் சிறகு மழையில் மறைந்து இரண்டும் தரையில் உருண்டு, பித்தேறிய பாம்புகள் போல தீவிரமாக ஒன்றை ஒன்று கொத்திக் கொண்டன. கடைசியில் ஹிரா விட்டுவிட்டது. கிழிந்த வெள்ளை மலர் போல வாடி தரையில் வீழ்ந்தது. அதன் ஒரு கால் வேறு பிசகிவிட்டது. வண்ணக்கழுத்திற்கோ, கழுத்திலும் தொண்டையிலும் சுத்தமாக சிறகுகள் எதுவுமே இல்லை. ஆனால், ஏதோ ஒரு வழியில் சண்டை முடிந்ததில் அவனுக்குச் சந்தோஷம். ஹிரா மட்டும் தன் பாதி சக்தியை ஜகோரேயுடனான சண்டையில் செலவிட்டிருக்காவிட்டால், தன்னால் ஜெயித்திருக்க முடியாது என்று வண்ணக்கழுத்துக்கு நன்றாகவே தெரியும். எப்படியிருந்தாலும், நல்ல வகையில் முடிவதெல்லாம் நன்மைக்கே. ஹிராவின் காலுக்கு நான் கட்டு போட்டுவிட்டு, மேலும் அவசியமானதைச் செய்தேன். அடுத்த முப்பது நிமிடங்களில், புறாக்கள் அனைத்தும் அந்நாளின் கடைசி உணவை உண்டு கொண்டிருந்தன. சமீபத்தில் என்ன நடந்தது என்பதை அவை முழுமையாக மறந்துவிட்டது போலிருந்தன. அவற்றின் ரத்தத்தில் எந்த வித பிணக்கோ காழ்ப்புணர்ச்சியோ இல்லை. அவையெல்லாம் நல்ல குடும்பத்திலிருந்து வந்தவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவற்றில் சிறிய புறாக்களில் கூட நல்ல விதமான வளர்ப்பு இருந்தது. ஹிரா, தன்னுடைய தோல்வியை பண்பான மனிதனைப் போல் ஏற்றுக் கொண்டது என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

இப்போது ஜனவரி மாதம் பிறந்துவிட்டிருந்த்து. குளிர்ந்த வானிலையும், தெளிவான வானமும் இருக்க புறாக்களுக்கான பரிசுப் போட்டி துவங்கியது. ஒவ்வொரு மனிதனுடைய பறவைக் கூட்டமும் மூன்று வகைகளில் சோதிக்கப்பட்டன. அவை, குழு ஒற்றுமை, தொலைதூரம் பறத்தல் மற்றும் ஆபத்துக்கிடையில் பறத்தல். முதல் வகைமையில் நாங்கள் முதற்பரிசு வாங்கிவிட்டோம். அதன் பிறகு நடந்த ஒரு சோகமான சம்பவத்தால் அடுத்த இரண்டு போட்டிகளில் எங்களால் பங்கெடுக்க முடியவில்லை. அது என்ன என்பதை அதற்குரிய இடத்தில் நீங்கள் அறிவீர்கள்.

குழு ஒற்றுமைப் போட்டி இப்படித்தான் இருக்கும். வெவ்வேறு புறாக் கூட்டங்கள் அவரவர் வீடுகளிலிருந்து மேலெழும்பிப் பறக்கும். தங்கள் எஜமானர்களின் சீட்டிகள் மற்றும் அவர்களை உணர்த்தும் வேறு சப்தங்கள் கேட்காத தூரத்திற்குச் சென்றவுடன், தனித்தனியான குழுக்கள் ஒன்றிணையும். பிறகு அவை அனைத்தும் எதற்கு தகுதியுண்டு என்று நினைக்கின்றனவோ அந்த புறாவின் தலைமையில் பறக்க ஒப்புக்கொள்ளும். புறாக்களின் புத்தியும் உள்ளுணர்வும் மேலோங்கியிருக்கும் ஆகாயத்தில் இவையனைத்தும் நடக்கும். எந்தப் பறவை முன்னால் பறக்கிறதோ, எது வழிநடத்த அனுமதிக்கப்படுகிறதோ அது தனக்கு அளிக்கப்பட்ட கெளரவத்தின் இயல்பையும் காரணத்தையும் உணராமலேயே வழிநடத்தும்.

வெப்பம் நாற்பத்தைந்து ஃபேரன்ஹீட்டுக்கு இறங்கிவிட்டது. இந்தியாவின் எங்கள் பகுதியில் அதுவொரு நல்ல குளிர்ந்த காலை. உண்மையில், அது அந்த வருடத்திலேயே குளிர்ச்சியான நாள். மேலே வானம், வழக்கமாய் குளிர்காலத்தில் இருப்பதுபோல மேகங்களற்று, வடிவமில்லா நீலமாணிக்கக் கல் போல இருந்தது. வெளிர்சிவப்பு, நீலம், வெள்ளை, மஞ்சள் வண்ணங்களில் இருந்த நகர வீடுகள், விடியலின் பலவண்ணப் பள்ளத்திலிருந்து எழும் ராட்சதர் படை போல இருந்தன. தொலைவில், அடிவானம் பழுப்பு மற்றும் ஊதா நிறங்கள் கொண்டு எரிந்தது. தேன் நிறத்திலும் ஊதா நிறத்திலும் உடையணிந்த ஆண்களும் பெண்களும் தங்கள் காலைப் பிரார்த்தனைகளை முடித்துவிட்டு, வீட்டு மாடிகளில் கைகளை உயர்த்தி சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருந்தார்கள். நகரத்தின் சப்தங்களும் வாசனைகளும் இரவின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டன. பருந்துகளும் காகங்களும் தங்கள் குரல்களால் காற்றை நிறப்பின. அந்தச் சத்தத்திலும் புல்லாங்குழல் வாசிப்பவர்களின் பாடலைக் கேட்க முடிந்தது. போட்டி தொடங்கியதற்காக சமிக்ஞை சீட்டி அடிக்கப்பட்ட அந்த நொடியில், ஒவ்வொரு புறா வளர்ப்பாளரும் தன் வீட்டின் கூரையிலிருந்து வெள்ளைக் கொடியை அசைத்தார்கள். உடனடியாக எங்கிருந்தோ எண்ணற்ற புறாக் கூட்டங்கள் வானத்தில் உயர்ந்தன. கூட்டம் கூட்டமாக, வண்ண வண்ணமாக, அவற்றின் படபடக்கும் இறக்கைகள் அவற்றை நகரத்திற்கு மேலே கொண்டு சென்றன. காகங்களும், சிவப்பும் பளுப்புமான பருந்துகளும், பத்தாயிரக் கணக்கான டம்பளர்களும் தூதுப் புறாக்களும் இடியைப் போல வான்புகும் முன்பே, ஓடி மறைந்துவிட்டன. சீக்கிரமே, காற்றாடி போன்ற வடிவத்தில் பறந்து கொண்டிருந்த ஒவ்வொரு கூட்டமும், பெரிய காற்றுச் சுழியில் சிக்கிக் கொண்ட பல மேகங்கள் போல வானத்தில் வட்டமடித்தன. ஒவ்வொரு நொடியும் அவை மேலே ஏறிக் கொண்டே இருந்தாலும், வெகு நேரம் ஒவ்வொரு புறா உரிமையாளரும் தன் கூட்டத்தை மற்றவருடையதில் இருந்து தனித்து அறிய முடிந்தது. கடைசியில் தனித்தனி கூட்டங்கள் ஒன்றாகக் கலந்து இறக்கைகளால் ஆன கெட்டியான சுவர் போலப் பறந்தபோதும், அவை பறந்த விதத்தைக் கொண்டே, என்னால் வண்ணக்கழுத்து, ஹிரா, ஜகோரே மற்றும் இன்னும் அரை டஜன் புறக்களை அடையாளம் காண முடிந்தது. ஒவ்வொரு பறவைக்கும் தனிப்பட்ட குணாதிசயங்கள் உண்டு, அவை பறக்கும்போது அதைக் காண முடிந்தது. ஒவ்வொரு உரிமையாளரும் ஒரு குறிப்பிட்ட புறாவின் கவனத்தைப் பெற, உரத்த சீட்டியை பிரத்யேக நிறுத்தங்களோடு அடிப்பார். சத்தம் கேட்கும் தூரத்தில் இருந்தால், அந்த பறவையின் கவனத்தை ஈர்க்கும்.

கடைசியில் மொத்த கூட்டமும் எந்தவொரு புறா விரும்பியும் முரசு கொட்டினால் கூடக் கேட்காத உயரத்தை அடைந்துவிட்டன. இப்போது அவை வட்டமிடுவதை நிறுத்திவிட்டு ஒருபக்கமாக நகரத் துவங்கின. தலைமைக்கான போட்டி தொடங்கிவிட்டது. அவை வானத்தின் ஒரு திசையிலிருந்து மற்றொன்று நோக்கி நகர, உரிமையாளர்கள் நாங்கள், புறாக்ககள் தங்களை வழிநடத்த அனுமதிக்கும் புறாவின் குணாதிசயங்களை கவனிக்க மேலே பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரு சமயம் என்னுடைய ஜகோரே வழிநடத்தும் போல் இருந்தது. ஆனால், அது கூட்டத்தின் முன்பகுதியை அடைந்த சில நேரங்களிலேயே, எல்லாப் புறாக்களும் வலப்பக்கம் திரும்பிவிட்டன. அது பின்தொடர்ந்து பறப்பவர்களிடையே குழப்பத்தைக் கொண்டுவந்தது. குதிரைப் பந்தயக் குதிரைகள் போல வகைவகையாய் பெயர் தெரியாத புறாக்களும் முன்னால் வந்தன. ஆனால், சிறிது நேரத்தில் அவை ஒவ்வொன்றும் மீதி கூட்டத்தால் பின்னுக்குத் தள்ளப்பட்டன. இப்படி அடிக்கடி நடக்க, போட்டியில் ஆர்வத்தை இழக்கத் துவங்கிவிட்டோம். ஏதோவொரு அறியப்படாத புறா, அதிகம் பலராலும் விரும்பப்பட்ட தலைமைக்கான பரிசை தட்டிச் செல்லும் என்று தோன்றியது.

(தொடரும்…)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.